கடவுளை மற..மனிதனை நினை..

29 July 2010

வலைச்சரத்தில் மூன்று மற்றும் நான்காம் நாட்கள்

8:13:00 AM Posted by புலவன் புலிகேசி 3 comments
மூன்று

சமூகம் என்பது மக்கள் கூட்டமாக சேர்ந்து வாழும் பகுதி என்பதோடு நின்று போய் விட்டது. கூட்டமாக வாழுமிடத்தில் பிரிவினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் ஒரு பிரிவினருக்கு பிரச்சினை என்றால் மற்றப் பிரிவினர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்குத்தானே பிரச்சினை நமக்கு வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை மட்டுமே மக்களிடம் விஞ்சியிருக்கிறது.

சமூக அமைப்பு என்பது ஒன்று கூடி வாழ்தல் என்று வரும் போது, நம்மில் ஒருவர் பாதிக்கப் படும் போது ஒன்று கூடி குரல் கொடுக்கவும் வேண்டும். இன்றைய அளவில் இன்னொருவனது பிரச்சினையாகப் பார்க்க படுவது நாளை நமக்கும் வரும் என்பது தோன்றல் வேண்டும். இது தனிமனித பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல பொது பிரச்சினைகளுக்கும் பொருந்தும். பொதுவில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் நம்மில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் காரணமானவர்களாகவே இருக்கிறோம். ஆனால் அது புரியாமல் விலகிச் செல்கிறோம்.

சரி இன்றைய மூன்றாவது நாளில் சமூகத்தின் மீது அக்கரை கொண்ட பதிவுகளைப் பற்றி பேசலாம்.


நான்கு

இன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல தொன்றுதொட்டே கவிதை என்றதும் அடுத்து நினைவுக்கு வருவது காதல். இதுவரை எழுதப்பட்ட பெரும்பாலான கவிதைகள் காதலை நோக்கியே பயனித்திருக்கின்றன. சமூகம் சார்ந்த கவிதைகளை அவர்களால் எழுத முடியாது என்பது அதற்கு காரணமில்லை. அவர்களுக்கு காதலில் உள்ள ஈடுபாட்டை விட சமூகத்தின் மீதான ஈடுபாடு குறைவாக உள்ளது. இதற்கு ஏதோ ஒன்று காரணம் என சொல்லி தப்பி விட முடியாது.

இவர்களை போன்றவர்களுக்கும் சமூகப் பொறுப்பும், அதன் மீது காதலும் இருக்கிறது. அவற்றை எப்படி கவிதையாக்கலாம் பலருக்கு சொல்லலாம் என்பதை ஆக்கப்பூர்வமாக யோசித்து செயல் பட்டால் நிச்சயம் சமூகத்திற்கான எழுத்தாய் அது மாற்றம் பெறும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் வேண்டாம்.

கவிதைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் பலரது கவிதைகள் படிப்பவர்களுக்க்கு புரியாது. இங்கு நான் தொகுத்திருக்கும் கவிதைகள் அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் இருக்கும்.



27 July 2010

உணர்வுகள் - வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

7:01:00 AM Posted by புலவன் புலிகேசி 3 comments
இன்று வலைச்சரத்தில் இரண்டாம் நாள். நேற்று வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறி இன்றைய இரண்டாம் நாளைத் துவக்குகிறேன். மனிதன் என்ற உயிரினத்தைப் பொறுத்த வரை உணர்வு என்பது சாதி, மதம், தேசம், மொழி போன்றவற்றையே முன்னிருத்துகிறது. இவற்றையெல்லாம் கடந்த மனிதம் என்ற உணர்வு அற்றுப் போனவர்களாகவே இச்சமுதாயத்தில் நாம் திரிகிறோம். எது நடந்தாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு மூன்று வேலை உணவும் இன்ன பிற இத்யாதிகளும் கிடைக்கின்றன.

இன்னொருவனுக்கு கிடைக்காவிடில் அதற்கு நானா பொறுப்ப்பு? என வினா எழுப்பி தப்பிச் செல்பவர்கள் தான் இவ்வுலகில் பெரும்பான்மையினர். இன்னொரு பிரிவினர் இன்னொருவனுக்குக் கிடைக்காத போது கொடுத்து உதவுபவர்கள். இவைத் தற்காலிகமானது. அதை வைத்து இவர்கள் செய்தது சரி என நியாப் படுத்த முடியாது.

அதில் மனிதமிருந்தாலும் சில வினாடிகளில் மறைந்து போகும் ஒன்றாகவே இருக்கிறது. அவனுக்கு ஏன் கிடைக்கவில்லை? என மூலமறிந்து எதிர்க்க இன்று யாருமில்லை. இதுவரை என்னைக் கவர்ந்த சிறுகதைகள் உணர்த்திய உணர்வுகளை உங்களிடம் இன்று பகிரவிருக்கிறேன்.

வலைச்சரம் வந்து படியுங்கள்: உணர்வுகள்

26 July 2010

வலைச்சர ஆசிரியராய் நான்

5:52:00 AM Posted by புலவன் புலிகேசி , 19 comments
நண்பர்களுக்கு வணக்கம்,

26-07-2010 இன்று தொடங்கும் வாரத்திற்கு சீனா ஐயா அவர்கள் என்னை வலைச்சர ஆசிரியராய் நியமித்திருக்கிறார். இந்த வலைச்சரத்தின் மூலம் பல பதிவர்கள் அறிமுகம் பெற்றவன் நான். என்னை அறிமுகப் படுத்திய பதிவர்களும் உண்டு.

நான் ஆசிரியராக இருக்கும் இந்த வாரத்தில் என்னால் முடிந்த அளவு பல நல்ல பதிவர்களின் பதிவுகளை அறிமுகம் செய்வதுடன், அவற்றை சிறப்பாக தொகுத்து வழங்கும் முயற்சியிலும் ஈடு பட்டிருக்கிறேன்.

என்னுடைய சுயமுகம் இதுதான் என்று என்னால் அவ்வளவு எளிதில் கூறி விட முடியாது. பலமுறை சுயநலம் எனும் மாயையில் சிக்கிக் கொண்டு குற்ற உணர்ச்சியில் தவித்திருக்கிறேன். அந்த மாயையை விட்டு வெளிவரும் முயற்சியில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். இதுவே என் சுயத்தேடலாகவும் இருந்து வருகிறது.

சுயமுகம் - வலைச்சரத்தில் என் முதல் நாள்


நண்பர்கள் அங்கும் வந்து தங்கள் கருத்ஹ்டுரைகளைத் தெரிவிக்குமாறு கோருகிறேன்.

24 July 2010

பதிவர்களின் உதவி தேவை

2:20:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 22 comments

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நான் உங்களிடம் கேட்கப் போவது பண உதவியோ, பொருளுதவியோ அல்ல. முற்றிலும் மனிதத்திற்கான உதவி. நான் மற்றும் சில நண்பர்கள் போபாலில் நடந்த அநீதி குறித்து எழுதிக் கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் பதிவேற்றுவதின் நோக்கம் விளம்பரமோ அல்லது பிரபலமடையவோ அல்ல. அங்கு நடந்த அநீதிகள் அனைத்து மக்களுக்கும் புரிய வைக்கப் பட வேண்டும் என்பதற்காக மட்டுமே.

நண்பர் வெண்ணிற இரவுகள் கார்த்தி சமீபத்தில் சில பதிவுலக நண்பர்களை போபால் குறித்து தொடர்பதிவு எழுதுமாறு கேட்டிருந்தார். ஆனால் அவர்களில் வால்பையனைத் தவிற வேறு யாரும் விருப்பம் தெரிவித்ததாகத் தெரியவில்லை. இந்த போபால் விட(ய)ம் முடிந்து போன ஒன்றல்ல. வெறும் ஆரம்பம் அவ்வளவுதான். இது நம் மக்களை அழிக்க உருவெடுத்திருக்கும் முதலாளித்துவத்தின் முதல்படி.

இதற்கே 23000 பேர் பலி என்றால் யோசித்துப் பாருங்கள். பின் வரும் காலங்களில் நாமோ அல்லது நம் உறவினர்களோ இது போன்ற பட்டியல்களில் இடம் பெறப் போவதாக ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறது இந்த போபால் பிரச்சினை. இப்போது பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதைத் தவறவிடுவதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை.

அதற்கான முயற்சியாய் இந்த போபால் பிரச்சினைக்காக ஒரு புதிய வலைப்பூவை பதிவுலகின் குரலாய் ஆரம்பித்து வைக்கிறேன். இங்கு தினமும் பதிவர்கள் இந்த போபால் மற்றும் அதன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து தினம் ஒரு பதிவாய் அவர்கள் விருப்பப்படி வெளியிடலாம்.

இந்த வலைப்பூவின் நோக்கம் இந்த போபால் போன்ற பிரச்சினைகள் குறித்து பதிவர்கள் மற்றும் வசகர்கள் கலந்துரையாடி ஒரு புரிதலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே. இங்கு இந்த போபால் பிரச்சினைக் குறித்து பதிவர்கள் யார் வேண்டுமானாலும் பதிவுகளை எழுதலாம். நண்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம்

* உங்களுக்கு இந்த பிரச்சினை குறித்து குரல் கொடுக்கும் எண்ணம் இருந்தால் bhopal.public@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்களின் கீழ்காணும் விபரங்களை அனுப்பி வையுங்கள்

பெயர், தொடர்பு எண்(விருப்பமிருந்தால்), மின்னஞ்சல், வலைப்பூ முகவரி -(இவை எதுவும் வெளியிடப் படா)

* நான் மற்றும் என் நண்பர்கள் இந்த விடயம் குறித்து உங்களுக்கு எடுத்துக் கூறி தெளிவு ஏற்படுத்த தயாராக இருக்கிறோம்.

* உங்களுக்கு ஒரு புரிதல் வந்ததும் அதைப் பற்றி எழுதுங்கள். அதை bhopal.public@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். அது உங்கள் பெயருடன் (அ) புனைப்பெயரில் இந்த தளத்தில் வெளியிடப் படும். உங்களுக்கு விருப்பமிருப்பின் அந்தப் பதிவை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு இணைப்பு கொடுத்தால் உங்கள் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க ஏதுவாக இருக்கும்.

* நீங்கள் முன்னரே இந்த விடயம் குறித்து எழுதியிருந்தாலும் அதை அனுப்பி வைக்கலாம். அதை இங்கு வெளியிட்டு விவாதம் செய்வோம்.

* பதிவை எழுதியவர் மட்டும்தான் விவாதங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என எண்ணாமல் நண்பர்கள் அனைவரும் விவாதத்தில் ஈடுபட வேண்டும்.

இந்த விடயத்தில் நாம் ஒருங்கிணைந்து செயல் படுவோம். நாம் சினிமா, முரளிதரனின் 800 விக்கெட்டுகள் பற்றியெல்லாம் பதிவெழுதுகிறோம், அவைகளுக்கு வாக்களித்து ஆதரவு தெரிவிக்கிறோம். இது நமக்கான இடம். இங்கு நம் ஆதரவை ஒருமித்து வெளிப்படுத்துவோம்.

நாம் அடிமையாகிக் கொண்டிருப்பதை அனைவருக்கும் புரிய வைப்போம்.


23 July 2010

சவுக்கு சங்கர் கைது - கண்டணம் தெரிவிப்போம் வாருங்கள்


"பதிவர் சவுக்கு சங்கர் கைது" என்ற செய்தியை வினவு தளத்தில் படித்தேன். யார் இந்த சவுக்கு சங்கர்? எதற்காக கைது செய்யப் பட்டார்? எனப் பார்த்த போது அவரது வலைத்தளம் கண்டு வியந்தேன். எவ்வளவு ஊழல் விடயங்களை அம்பலப் படுத்தியிருக்கிறார். அதனால் அவர் மீது கடுப்பெடுத்த அரசியல் வியாதிகளால் பின்னப் பட்ட வலைதான் இந்தக் கைது நடவடிக்கை.

இந்த சங்கர் ஒரு நபரைத் தாக்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு சித்தரிக்கப் பட்டு சிறையிலடைக்கப் பட்டிருக்கிறார். ஆனால் இந்த நிலையிலும் சவுக்கு வலைத் தளத்தில் "ஊழலுக்கு எதிரான சவுக்கு தன் வேலையை நிறுத்தாது" என ஒரு பதிவிட்டு அவர்களது தைரியத்தை வெளிப் படுத்தியிருக்கிறார்கள்.

அதுவும் அனைத்து ஊழல்களுக்கும் ஆதரப்பூர்வமாக எழுதி வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இதை எழுதாமல் நிறுத்த லஞ்சம் கொடுக்கும் முயற்சி நடை பெற்றதாகவும், அவற்றை வாங்க மறுத்ததாலும் இத்தகைய வேலையை செய்திருக்கிறது காவல் துறை.

இப்படி உண்மைகளை அம்பலப் படுத்தி வந்த காரணத்தை மனதில் கொண்டு செய்யப்பட்ட இந்தக் கைது நடவடிக்கைக்கு நாம் அனைவரும் ஒன்று கூடி கண்டணம் தெரிவிக்க வேண்டியத் தருணமிது. வாருங்கள் பதிவுலக தோழர், தோழிகளே நம் எதிர்ப்பை பதிவு செய்வோம்.

சவுக்கில் எழுதப்பட்ட ஊழல் குறித்தக் கட்டுரைகள் வாசிக்க: சவுக்கு

ஆந்திராவில் நடந்த பயங்கரவாதம்

9:49:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 6 comments



நிலங்களை அழித்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கலாச்சாரம் இப்போதெல்லாம் பெருகிப் போய் விட்டது. அணல் மின் நிலையங்கள் அமையுங்கள், அடுக்ககங்கள் அமையுங்கள் மக்கள் சந்தோஷமாக இருப்பார்களா? ஒரு வேலை உணவுக்கு கூட நாம் அனைவரும் அந்நிய நாட்டிடம் கையேந்தப் போவது உறுதி.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் "நாகர்ஜீனா கட்டுமான நிறுவனம்" என்ற தனியார் நிறுவனத்திற்கு 2,640 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையம் அமைக்க அனுமதி அளித்தது அரசு. இதற்காக அங்குள்ள நிலங்களை உப்யோகமற்ற நிலம் என பொய்யுரைத்து அவற்றை கையகப் படுத்தும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

ஆனால் அந்த நிலங்கள் விவசாய நிலங்கள். அவர்கள கையகப் படுத்த எண்ணும் இடங்களை நம்பி வாழ்க்கை நடத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 50,000க்கும் மேல். அவர்கள் செய்யும் தொழில் விவசாயம் மற்றும் மீன் பிடித்தல். எப்படி இவ்வளவு பேர் பயன் பெறும் இடங்களை உபயோகமற்றவை எனப் பொய்யுரைத்து தனியார் முதலாளிக்கு கொடி பிடிக்கிறார்கள்? இந்த அரசியல் வியாதிகள்.

32-கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், மீனவர்களும் இந்தத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர். அடிக்கல் நாட்டு விழா அன்று குழுமிய இவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி நான்கு பேரைக் கொன்றது. செத்தவர்கள் என்ன தீவிரவாதிகளா? அவர்கள் என்ன அப்படி குற்றம் செய்து விட்டார்கள்? சுடும் அளவிற்கு.


செத்து போனவர்கள் ஏழை விவசாயிகளும், மீனவர்களும் தான். அவர்கள் எந்த தீவிரவாத அமைப்பினர்ரும் அல்ல. இந்த அணல் மின் நிலையம் அங்கு அமைக்கப் பட்டால் அந்த ஊர் முற்றிலும் அழிக்கப் படுவது உறுதி.

"இவர்கள் அமைக்கப் போகும் கோல்-ஃபயர் ப்ளான்ட் என்பது உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என சுற்றுச்சூழல் அறிவியலாளர் பாபு ராவ் கூறியிருக்கிறார்."

இந்த பிரச்சினைக் குறித்து சட்டசபையில் பேசிய உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி "அந்தப் பகுதியில் 300 போலீசார் மட்டுமே இருந்தனர். அவர்களை எதிர்த்து பொது மக்கள் கோசமிட்டனர். திடீரென்று அவர்கள் மீது வெறித்தனமாகத் தாக்கினர். அதனால் போலீஸ் தற்காப்புக்காக தடியடி நடத்தியது. அதன் பின்னும் கூட்டம் கலையாததால் துப்பாக்கி சூடு நடத்ட்ட வேண்டியதாயிற்று" என்றார்.

என்ன ஒரு மனிதாபிமானமுள்ள பதில். பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர் குழு அங்கு சென்றிருக்க வேண்டும். பொது மக்களுக்கு விருப்பமில்லாமல் அங்கு அந்த நிலையம் அமைக்க அனுமதி வழங்கப் பட்டிருக்க கூடாது. அதுதானே ஜனநாயகம். ஆனால் காங்கிரஸ் அரசுக்குத்தான் அதெல்லாம் தெரியாதே தனியார் நிறுவனம் முதலாளிக்கு விசுவாசம் காட்டி அப்பாவி மக்கள் 4 பேரை சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.

இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். பொது மக்களை விட தனியார் முதலாளிகளுக்கு இவ்வளவு பாதுகாப்பா? இப்பவும் உங்களால் சொல்ல முடியுமா? நாங்கள் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோம் என்று. த்ண்டகாரண்யா பிரச்சினையும் இப்படி ஆரம்பித்த ஒன்றுதான் இன்று அந்த மக்களுக்கு பெயர் நக்சல் எனும் தீவிரவாதிகள்.

வாழ்க இந்த ஜன(பண)நாயகம்!


22 July 2010

சுதந்திரமாம்(?)

7:37:00 AM Posted by புலவன் புலிகேசி , 12 comments

அமெரிக்க நிறுவனங்கள்
உன் மீது விடம்
கக்கும்

எதிர்த்து வழக்காட உனக்கு
உரிமை இல்லை

அவனால் உன் உயிர்
போனால் கால் நூற்றாண்டு
கடந்து 23ரூ கொடுக்கும்
இந்திய அரசாங்கம்

அதில் 10ரூ லஞ்சம்
போக 13ரூ மட்டும்
உனக்கு மிஞ்சும்

ஆங்கிலேயனிடம் பெற்ற
சுதந்திரத்தை அமெரிக்கனுக்கு
அடிமை சாசனமாய் எழுதிக்
கொடுத்து விட்ட பின்

இன்னும் என்னடா
சுதந்திர நாட்டில் வாழ்கிறோம்?



20 July 2010

இந்திய மக்கள் உயிர்களின் மொத்த விலை 2300 கோடி


காங்கிரஸ் அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருக்கும் "அணுசக்தி கடப்பாட்டு மசோதா" (Civil Nuclear Liability Bill) பற்றி நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்? நமக்குத் தெரிந்ததெல்லாம் மதராசப்பட்டினமும், நடிகர், நடிகையரின் குத்தாட்டங்களூம் தான். இந்த மசோதாவால் பாதிக்கப் படப் போவது யாரோ நமக்கு வேண்டப் படாதவர்கள் அல்ல. முற்றிலும் நாமாகிய ஒட்டு மொத்த இந்தியர்களும் தான்.

போபால் கொடுமைக்கு கால் நூற்றாண்டுக்குப் பின் வழங்கப் பட்ட (அ)நீதி அனைவரின் நெசையும் உலுக்கிய ஒன்று. ஒரு வேலை இவர்கள் உண்மையில் மக்களுக்கான அரசாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? இனி இம்மாதிரி நம் மக்களுக்கு நிகழக் கூடாது. இது போன்றவற்றைத் தடுக்க என்ன செய்யலாம்? என யோசித்து அதற்கான செயல்பாடுகளில் இறங்கியிருக்க வேண்டும்.

ஆனால் நடந்து கொண்டிருப்பது முற்றிலும் நேரெதிரான ஒன்று. இந்த மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசுத் தயாரித்திருக்கும் "அணுசக்தி கடப்பாட்டு மசோதா" நிர்ணயித்திருக்கும் ஒட்டு மொத்த இந்தியர்களின் உயிர்களின் விலை 2300 கோடி ரூபாய். சென்ற நவம்பரில் மன்மோகன் அரசால் ஒப்புதல் தெரிவிக்கப் பட்ட இம்மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுடன் காதும் காதும் வைத்தாற்போல் நிறைவேற்ற முயற்சித்து தோற்றுப் போனது அந்த அரசு.

சரி இந்த மசோதாவின் நோக்கங்கள் என்ன?

1) போபால் வழக்கு யூனியன் கார்பைடுக்கு ஏற்படுத்தியத் தொந்தரவுகள் இனி வேறெந்த அமெரிக்க நிறுவனங்களுக்கும் வந்து விடக் கூடாது. இந்திய மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? அமெரிக்க முதலாளிகளுக்கு குடைப் பிடிக்கதான் நாங்கள் ஆட்சியமைத்திருக்கிறோம் என்பது போல் உள்ளது இச்செயல்.

2) இம்மசோதா சட்டமாக்கப் பட வில்லையென்றால் வெளி நாடுகளிலிருந்து அணு உலைகளோ, யுரேனியமோ நம்மால் வாங்க முடியாது என ஒரு பொய்த் தகவல் வேறு பரப்புகிறார்கள். இப்படி ஒரு சட்டம் இயற்றப் பட வேண்டுமென யுரேனியம் விற்பனை செய்யும் நாடுகள் (Nuclear suppliers group) கோரவில்லை. இச்சட்டமில்லாமலே ரஷ்யாவும், பிரன்சும் நமக்கு அணு உலைகளை விற்பனை செய்துள்ளன.

3) ஜெனரல் எலக்ட்ரிக், வெஸ்டிங்ஹவுஸ் போன்ற அமெரிக்க அணு உலைத் தயாரிப்பு நிறுவனங்கள் போபால் போல ஒரு பிரச்சினை தங்களுக்கு வந்து விடக்கூடாது என கொடுத்து வரும் நிர்பந்தங்கள் தான் இம்மசோதாவின் மூலக் காரணம்.

4) இவர்களிடமிருந்து இறக்குமதி செய்யப் படும் அணு உலைகளை இயக்கப் போவது நம் இந்திய அணுசக்தி கழகமே. ஒரு வேளை எந்திரத்தின் கோளாறு அல்லது வடிவமைப்பின் கரணமாக விபத்து நேர்ந்தால் பொது மக்கள் அந்நிறுவனங்களீன் மீது வழக்கு போட முடியாது. இந்திய அணுசக்தி கழகம் மட்டுமே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். ஏன் விபத்தின் காரணம் எந்திரம் தான் என நிரூபிக்கப் பட்டாலும் இந்திய அணுசக்தி கழகம் கூட அவர்களிடம் இழப்பீடு கேட்க முடியாது. விற்பனை ஒப்பந்தப் படி என்ன இழப்பீடோ அது மட்டுமேக் கிடைக்கும். இதைக்கூட நீர்த்து போக வைக்கும் திருட்டுத் தனமானத் திருத்தங்களும் இச்சட்டத்தில் செய்யப் பட்டிருக்கின்றன.

5) அணு உலை விபத்து ஏற்பட்டு அதனால் நாம் பாதிக்கப் பட்டால் நம்மில் யாரும் அமெரிக்க நீதி மன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியாது. இவையனைத்தும் இந்திய நீதி மன்றத்தால் மட்டுமே விசாரிக்கப் பட வேண்டும் என்கிறது இம்மசோதா.

6) இதையும் மீறி யாராவது வழக்குத் தொடுத்தால் என்ன செய்வது? என யோசித்து அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் திட்டமாக சர்வதேச அணுசக்தி முகமையின் ஈட்டுத்தொகை தொடர்பான ஒப்பந்தத்திலும்(IAEA's Convention on Supplementary Compensation) இந்திய அரசு கையொப்பமிட முடிவெடுத்திருக்கிறது. இதில் கையொப்பமிடும் நாடுகளுக்கு விபத்து ஒன்றுக்கு சுமார் 30கோடி டாலரை வழங்குவார்கள் என்பதால் அந்நாட்டு மக்கள் வேறு எங்கும் வழக்குத் தொடுக்கும் உரிமையை இழக்க வேண்டும்.

7) விபத்துக்கான ஈட்டுத் தொகையை மதிப்பிடுகின்ற அதிகாரத்தை சுற்றுச்சூழல், சுகாதாரத் துறைகளிடமிருந்து பிடுங்குகிறது இம்மசோதா. இனி அம்மதிப்பீடுகள் முழுதும் "அணுசக்தி பாதிப்பு இழப்பீட்டு ஆணையர்" என்பவரால் நிர்ணயிக்கப்படும். அந்த ஆணையரின் முடிவை எதிர்த்து வழக்குப் போட யாருக்கும் உரிமை கிடையாது.

8) கதிர்வீச்சினால் விபத்து நேரிட்டால் அதிலிருந்து 30 ஆண்டுகளுக்கு அங்கு நடக்கும் அனைத்து பாதிப்புகளுக்கும் அந்நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்பது வியன்னா மற்றும் பாரிஸ் கன்வென்சன்களின் முடிவு செய்யப் பட்ட சர்வதேச நெறிமுறை. ஆனால் இம்மசோதா சொல்வது என்னவென்றால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்த இழப்பீடும் வழங்கப் பட மாட்டாது.

9) ஒரு வேளை போர், உள்நாட்டு போர், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப் பட்டு அதனால் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டு மக்கள் பாதிக்கப் பட்டால் அதற்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப் பட மாட்டாது.

10) அணு உலை விபத்து ஏற்பட்டு எத்தனை லட்சம் உயிர்கள் போனாலும் அதிக பட்ச இழப்பீட்டுத் தொகை 45 கோடி டாலர் மட்டுமே. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின் படி 2300 கோடி ரூபாய். ஆனால் அமெரிக்காவில் இத்தகைய விபத்து ஏற்பட்டால் அங்கு இழப்பீட்டுத் தொகை 10 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 50ஆயிரம் கோடி ரூபாய். இதிலிருந்து 20 இந்தியனின் உயிர் 1 அமெரிக்க உயிருக்கு சமம் என்கிறது இம்மசோதா.

இது போன்றொரு சட்ட மசோதா உலகின் எந்த ஒரு நாட்டிலும் இயற்றப் படவில்லை. இதன் மூலம் இவர்கள் இந்திய மக்களின் உயிர்களுக்கு உச்சவரம்பு விதிக்கின்றனர். அமெரிக்க முதலாளிகளுக்கு சொறிந்து விட்டுக் கொண்டு இந்திய மக்களை புதை குழியில் தள்ளி கொன்று குவிக்கும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படலாமா? இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியவர்கள் பொது மக்களாகிய நாம்தான்.

பி.கு: இங்கு நான் நிறைய விவாதங்களை எதிர் பார்க்கிறேன். படிக்கும் அனைவரும் விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு கோருகிறேன்.

நன்றி: புதிய ஜனநாயகம்

19 July 2010

முற்றிலும் அரசியலாகிய இரயில்வேத் துறை

11:22:00 PM Posted by புலவன் புலிகேசி , , 5 comments

ராம் விலாஸ் பாஸ்வான்: ரயில்வே துறை தொடர்பான எதிலுமே அக்கறை காட்டாமல் தொடர்ந்து மெத்தனமாக செயல்படுகிறார் மமதா பானர்ஜி. ஒன்று அவர் ரயில்வே அமைச்சராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை விட்டு விட்டு மேற்கு வங்கத்தோடு இருந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பதவி உங்களுக்கு வேண்டும் அப்படித்தானே?

ராம் விலாஸ் பாஸ்வான்: இது மாவோயிஸ்ட் தாக்குதல் எல்லாம் இல்லை. அப்படி மமதா கூறினால் அவர் மக்களை திசை திருப்புகிறார் என்றுதான் அர்த்தம். ரயில்வே துறையின் அலட்சியப் போக்கும், கவனக்குறைவுமே இந்த விபத்துக்குக் காரணம்

அடச்சே! த்ண்டவாள்ம் டேமேஜ் ஆயிருந்தா நேரடியா அந்த நக்சலைட்டுகள் மேலப் பழியைப் போட்டிருக்கலாமே. இப்ப நம்ம எடத்தப் புடிக்க வர்றவங்களுக்கு என்ன ப்தில் சொல்றது?

இவ்வளவு நாள் ஆதாரமே இல்லாமல் அந்த நக்சல்கள் மீது பழி போட்டு இன்று அவர்களை அழிக்கும் அளவிற்கு வந்து விட்டீர்கள். ஏன் இதை மட்டும் அவர்கள் மீது போடவில்லை. உங்களுக்கு அரசியல் நடத்த ஒரு ஆதாயம் தேவை இல்லையா?

லல்லு: முன்னாள் ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், தொடர்ந்து இப்படிப்பட்ட கோர விபத்துக்கள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது. ரயில்வே அமைச்சர் இதுகுறித்து கவனக்குறைவுடன் செயல்படுவதை ஏற்க முடியாது.

மக்களின் உயிர்களை மயிர்களாக நினைக்கும் இந்த அரசியல்வியாதிகளுக்குக் கருத்துத் தெரிவிக்க என்னத் தகுதி இருக்கிறது. இந்தக் கருத்துக்கள் எல்லாம் மக்கள் உயிர்கள் மீதுள்ள அக்கரையால் வருபவை இல்லை. "அண்ணன் எப்பக் கெளம்புவான் திண்ணை எப்ப காலியாகும்"-னு ஒரு பழமொழி இருக்கு அந்தக் கதைதான்.

மம்தா: விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் கூறுகையில்; இந்த சம்பவம் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

என்ன விசாரனை? என்ன சந்தேகம்? எப்படியாவது ஒரு போலி ஆதரத்தைத் தயார் செய்து நக்சல்கள் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ள வேண்டும். அதானே! ஆமாம் ஒரு வேளை அந்த ரயில்வே அதிகாரிகளை நக்சல்கள்-னு சொல்லுவாங்களோ!

செய்தி: கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நின்றிருந்த ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 60 பேர் பலியாயினர். இன்று அதிகாலையில் நடந்த விபத்தில் மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது

நிவாரணத் தொகையைக் குறைத்து சுருட்டிக்கிறதுக்காகப் பொய்க் கணக்கு சொன்னாலும் சொல்லுவாங்க.

முற்றிலும் கவனக் குறைவு மட்டுமல்லாமல் அரசியல் தந்திரங்களும். மக்களின் உயிர்களை வைத்து அரசியல் நடத்தும் மிருகங்கள். தாங்கள்த் தப்பிக்க நக்சல்கள் மீது திசைத் திருப்பல். இதெல்லாம் தெரிந்திருந்தும், புரிந்திருந்தும் மக்கள் அடுத்த தேர்தலிலும் இவர்கள் அல்லது இன்னொரு கொள்ளைக் கும்பலை ஆட்சியிலமர்த்தத் தவறப் போவதில்லை.

வாழ்க ஜ(பண)ன நாயகம்!

மனிதம் இருந்தால் படியுங்கள் - 5

8:34:00 AM Posted by புலவன் புலிகேசி , 1 comment
இதை நேற்றேப் பதிவிட்டு விட்டேன். இருந்தாலும் நேற்று விடுமுறையாதலால் பலர் படிக்காமல் விட்டிருக்கக் கூடும். இவை நிச்சயம் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்பதால் அதற்கான சுட்டியை இங்கேத் தருகிறேன். தவறாமல் படித்து விவாதம் செய்ய அழைக்கிறேன்.

இதோ என் முந்தையப் பதிவின் சுட்டி: யார் இந்த டௌ கெமிக்கல்ஸ்?

நன்றி

18 July 2010

மனிதம் இருந்தால் படியுங்கள்(யார் இந்த டௌ கெமிக்கல்ஸ்?)-5

10:26:00 AM Posted by புலவன் புலிகேசி , 9 comments

பல்லாயிரம் பேரைக் கொன்றுக் குவித்த யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் கையகப் படுத்தியிருக்கும் இந்த டௌ கெமிக்கல்ஸ் யார்? என்ற வரலாற்றைப் பார்ப்போம்.

### வியத்நாம் மீது நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் கம்யூனிஸ்ட் கொரில்லாப் படையை எதிர்கொள்ள இயலாமல் "ஏஜந்த் ஆரஞ்சு" என்ற கொடிய ரசாயனத்தை 210லட்சம் காலன் அளவுக்கு விமானப்படை மூலம் காடுகளில் பொழிந்தது அமெரிக்க இராணுவம். இந்த ஏஜண்ட் ஆரஞ்சுடன் டையாக்ஸின் என்ற கொடிய நஞ்சையும் கலந்து அமெரிக்க இராணுவத்திற்கு வழங்கிய நிறுவனங்களுள் முக்கியமானது இந்த டௌ கெமிக்கல்ஸ்.

48 லட்சம் வியத்நாம் மக்கள் பாதிக்கப் பட்டனர். 5 லட்சம் குழந்தைகள் ஊணத்துடன் பிறந்தன. அதோடில்லாமல் இதை தெளித்த அமெரிக்க சிப்பாய்களும் கடுமையான நோய்க்கு ஆளாயினர். 1984ம் ஆண்டு இவர்களுக்கு 18கோடி டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த ஏஜெண்ட் ஆரஞ்சு மூலம் பாதிக்கப் பட்ட மக்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை எதிர்த்து நிவாரணம் தர முடியாது என மறுத்துக் கொண்டிருக்கிறது இந்த டௌ.

### ஜெல்லியைப் போல கொழகொழப்பானதும் தோலில் பட்டவுடன் தீயாய் எரியக் கூடியதுமான நாபாம் குண்டுகளும் இந்த டௌ கெமிக்கல்ஸின் தயாரிப்புதான்.

வியத்நாமில் இந்த குண்டுகளை வீசிய அமெரிக்க இராணுவ அதிகாரி "இந்த டௌ கெமிக்கல்ஸ் பசங்க கில்லாடிங்க முதல்ல அந்த குண்டுல பாலைஸ்டரின் கலந்து அனுப்பினாங்க. ஆனா அவனுங்க(வியத்நாம் மக்கள்) தண்ணில குதிச்சித் தப்பிச்சிட்டானுங்க. அப்பறம் பாஸ்பரஸ் கலந்து அனிப்பி விட்டாங்க. த்ண்ணிலயும் இது எரியும். ஒரு சொட்டுப் பட்டா எலும்பு வரைக்கும் போயி சாவு நிச்சயம்." என டௌ கெமிக்கல்ஸை சிலாகித்து பேசியிருக்கிறார்.

### முதல் உலகப் போரின் போதே விசவாயுக் குண்டுக்குத் தேவையான இரசாயணப் பொருட்களை டௌ தயாரித்து விற்றது. டௌ கெமிக்கல்ஸின் ஜெர்மன் கூட்டாளியான ஐ,ஜி. பார்பென் நிறுவனம் ஆஸ்விட்ஸ் கொலைக்கூட்டத்துக்குத் தேவையான ஹைட்ரஜன் சயனைடு என்ற விசவாயுவைத் தயாரித்து ஹிட்லருக்கு கொடுத்தது. "போபால் மக்களின் உடலில் கண்டு பிடிக்கப் பட்டதும் இந்த ஹைட்ரஜன் சயனைடு தான் என்பது குறிப்பிடத் தக்கது."

இதனைத் தயாரித்தக் குற்றத்துக்காகஓட்டோ அம்புரோஸ் என்ற அதிகாரி 8 ஆண்டுகள் சிறை வைக்கப் பட்டான். தண்டனைக் காலம் முடிந்ததும் தன் நிறுவனத்தில் பணியாற்ற அவனை அழைத்ஹ்டுக் கொண்டது இந்த டௌ.

### இன்று உலகெங்கும் தடை செய்யப் பட்டிருக்கும் டி.டி.டி எனும் பூச்சிக் கொல்லி மருந்தை "மனிதர்களுக்கு எவ்விதத்திலும் தீங்கல்ல" என்று விளம்பரம் செய்து விற்பனை செய்தது டௌ.

### டர்ஸ்பன் என்ற பெயரில் பயன் படுத்தப் ப்டும் வீட்டு உபயோக பூச்சிக் கொல்லி மருந்தும் டௌவின் தயாரிப்புதான். இது குழந்தைகளுக்கு நரம்பியல் நோய்கள், பார்வையிழப்பு, மனநோய், புற்றுநோய் ஏற்படுத்தும் என கண்டறியப் பட்டு 1999-ல் அமெரிக்காவில் தடை செய்யப் பட்டது.

1998-ல் இந்த மருந்தை அமெரிக்க மாணவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் மீது சோதனை செய்து "இது பாது காப்பானது" எனப் பொய்யாக விளம்பரம் செய்தது. இந்தக் குற்றத்திற்காக 2003-ம் ஆண்டு நியூயார்க் மாநில அரசுக்கு 2 மில்லியன் டாலர் அபராதம் கட்டியது.

ஆனால் இதே மருந்து பாதுகாப்பானது என விளம்பரம் செய்து இன்றும் இந்தியாவில் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

### 1979-ல் அமெரிக்காவில் தடை செய்யப் பட்ட டி.பி.சி.பி என்ற அபாயகரமான பூச்சிக் கொல்லி மருந்தை நெமகான், ப்யூமோசோன் என்ற பெயர்களில் மத்திய அமெரிக்க நாடுகளில் விவசாயிகளுக்கு டௌ விற்பனை செய்தது. இதனால் பல்லாயிரம் பேருக்கு ஆண்மையிழப்பு ஏற்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர்கள் மீது பொய்யான வழக்கு என கூறி மானநஷ்ட வழக்கைத் தொடுத்து 1700 கோடி டாலர் கேட்டது இந்த டௌ

ஆனால் ஜூலை 23, 1958 என்ற தேதியிட்ட டௌ கெமிக்கல்ஸின் ரகசிய ஆவணத்திலேயே "இந்த மருந்து விரை வீக்கத்தையும், ஆண்மைக்குறைவையும் ஏற்படுத்தும்" எனக் குறிப்பிடப்பட்டது அம்பலமாகியிருக்கிறது.

### அபாயகரமான இரசாயண, அணுக் கழிவுகளை 136 இடங்களில் கொட்டி வைத்திருப்பதற்காக 40 கோடி டாலர் அபராதத் தொகையை அமெரிக்காவிடம் கடனாக வைத்திருக்கிறது இந்த டௌ.

### 1996-ல் டௌ கெமிக்கல்ஸ் இந்திய அதிகாரிகளுக்கு 2 லட்சம் டாலர் லஞ்சம் கொடுத்திருப்பதை அமெரிக்க அரசின் கடனீட்டு பரிமாற்றக் கழகம் கண்டு பிடித்தது. தடை செய்யப் பட்ட பூச்சிக் கொல்லிகளை இந்தியாவில் விற்பதற்காக இந்திய அதிகார்களுக்கு மீண்டும் லஞ்சம் கொடுத்த டௌ-க்கு பிப்-2007ல் 3,25,000 டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கடனீட்டுக் கழகம்.

ஆனால் இந்தியாவில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இந்திய அரசால் எடுக்கப் படவில்லை.

### இந்த டௌ நிறுவனத்துக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிசேக் மனு சிங்விதான் வழக்குரைஞர்.

நன்றி: புதிய ஜனநாயகம்

16 July 2010

மனிதம் இருந்தால் படியுங்கள் - 4

8:34:00 AM Posted by புலவன் புலிகேசி 7 comments

### வாரன் ஆண்டர்சன் நீதி மன்றத்தில் ஆஜராகாமல் புறக்கணித்து வந்ததால் யூனியன் கார்பைடின் பங்குகளை முடக்க தலைமைப் பெருநகர மன்றம் முடிவு செய்தது. இதையடுத்து சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பங்குகளை விற்று வரும் பணத்தில் போபால் மருத்துவமணைக் கட்டி அதில் தனது வழக்குரைஞர் சர் இயான் பெர்சிவல் தலைமையில் ஒரு டிரஸ்ட் அமைக்கப் படும் என அறிவித்தார் ஆண்டர்சன்.

ஆனால் இதை அந்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்து பங்குகளை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதை எதிர்த்து ம.பி உயர் நீதி மன்றத்தில் யூனியன் கார்பைடு வழக்குத் தொடுத்தது. ஆனால் இங்கும் அவர்களுக்கு எதிராகவேத் தீர்ப்பளிக்கப் பட்டது. அதன் பின் உச்ச நீதி மன்றத்தின் மூலம் தங்களுக்கு சதகமானத் தீர்ப்பைப் பெற்றது யூனியன் கார்பைடு.

யூனியன் கார்பைடின் பங்குகள் விற்கப் பட்டு வந்த பணம் முழுதும் சிறுகசிறுக யூனியன் கார்பைடு உருவாக்கிய டிரஸ்டிடமே போய் சேர்ந்தது.

### பத்து ஆண்டு சிறை தண்டனை பெறும் வகையில் வழக்குத் தொடுக்கப் பட்டிருந்த இந்தியக் குற்றவாளிகள் 9 பேரும் உச்ச நீதி மன்றத்தை அனுகினர்.அதில் தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம்

"சம்பவம் நடந்த அன்று நிர்வாகிகளா ஆலையை இயக்கினார்கள்? அன்று விபத்து நடக்கப் போவதை அவர்கள் என்ன அறிந்தா இருந்தார்கள்?" போன்ற மனிதமற்ற கேள்விகளுடன் அவ்வழக்கை சாதரண சாலை விபத்து போன்ற வழக்காக மாற்றினர். வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனைப் பெறும் வழக்க்காக அது மாற்றப் பட்டது

### இதன் பின் 2001-ம் ஆண்டு டௌ கெமிக்கல்ஸ் யூனியன் கார்பைடு கார்பரேஷனைக் கைப் பற்றியது. போபால் ஆலையையும், அதன் சுற்றியுள்ளப் பகுதிகளையும் சுத்தப் படுத்த டௌ கெமிக்கல்ஸுக்கு உத்தரவிட வேண்டும் என போராட்ட அமைப்பினரால் ம.பி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது. 2005-ம் ஆண்டு இந்திய அரசின் இரசாயணத் துறையும் இவ்வழக்கில் இணைந்து கொண்டு டௌ கெமிக்கல்ஸ் முதல் கட்டமாக 100கோடி ரூயை நீதி மன்றத்தில் கட்ட வேண்டும் என மனு செய்தது.

இந்திய அரசின் இரசாயணத் துறை இவ்வழக்கிலிருந்து விலகிக் கொண்டால் 1000 கோடி ரூ அளவிற்கு இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக அமெரிக்கர்களால் பேரம் பேசப் பட்டது. அப்போது முதலீடு கழகத் தலைவரான ரத்தன் டாட்டா டௌ கெமிக்கல்ஸை இவ்வழக்கிலிருந்து விடுவித்தால் இந்திய முதலாளிகளே பணம் போட்டு சுத்தப் படுத்தும் பணிகளை செய்வதாக கூறினார்.

அப்போதைய நிதியமைச்சர் பா.சிதம்பரம் இதற்கு ஆதரவுக் கடிதம் எழுதினார். அதன் பின் அர்ஜீன் சிங் தலைமையில் நடைபெற்று வந்த அமைச்சர்கள் குழுவைக் கலைத்து விட்டுப் புதிதாக அமைப்பதென்றும், நிவாரணப் பணிகளையும், சுத்தப் படுத்தும் பணிகளையும்மேற்பார்வையிடுவதென முடிவு செய்தனர். இதன் பொருள் டௌ கெமிக்கல்ஸை அப்பொறுப்புகளிலிருந்து கழட்டி விடுவது என்பதே.

### இந்த கொடூரக் கொலைகளுக்கு 25 வர்டங்கள் கழித்து இந்தியக் குற்றவாளிகள் 7 பேருக்கு வெறும் 2 ஆண்டுகள் சிறை த்ண்டணை மட்டுமே விதிக்கப் பட்டது. அதே சமயம் அவர்களை ஒரு மணி நேரம் கூட சிறையிலடைக்காமல் 25,000 ரூ பெற்று பிணையிலும் விட்டு விட்டது இந்தத் தீர்ப்பு.

தீர்ப்புகள், தீர்வுகள் எல்லாம் முதலாளிகளுக்கு மட்டுமே சாதகமாகி போன நிலையில் பொது மக்களைப் பற்றியோ, மனிதம் பற்றியோக் க்வலைப் பட எந்த அரசியல் வியாதிகளும் முன் நிற்க வில்லை. மாறாக டௌ கெமிக்கல்ஸின் சொம்பு தூக்கிகளாக மாறிப் போயிருக்கிறார்கள்.

யார் இந்த டௌ கெமிக்கல்ஸ்? என்ற வரலாற்றை அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.

நன்றி: புதிய ஜனநாயகம்

பி.கு: புதிய ஜனநாயகம் பி.டி.எஃப் டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக்கவும்.

15 July 2010

மனிதம் இருந்தால் படியுங்கள் - 3

7:59:00 AM Posted by புலவன் புலிகேசி , 5 comments
முதல் இரண்டு பகுதிகள்: பகுதி-1
பகுதி-2

1984-ல் நடந்த இந்த கொடூரக் கொலைகள் குறித்த வழக்குகள் எவ்வாறு கையாளப் பட்டிருக்கின்றன எனப் பார்த்தால் அது ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக தான் சென்று முடிந்திருக்கிறது.

### இந்த வாரன் ஆண்டர்சன் எனும் பண முதலையை நம் அரசியல் வியாதிகள் தப்பிக்க வைத்து வழியனுப்பி வைக்கும் போது அவ்ர் மீது பதியப் பட்டிருந்த வழக்குகள் ஆயுள் தண்டனை வரை அளிக்கக் கூடிய சதி, கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றம் (Culpable homicide) உள்ளிட்ட 7 வழக்குகள். இவற்றுள் பிணையில் வெளி வர முடியாத வழக்குகளும் இருந்தன.

ஆனால் மத்யபிரதேசப் போலீசார் ஆண்டர்சனுக்கு சட்ட விரோதமாக பிணை வழங்கி அரசியல் வியாதிகளின் உத்தரவில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர். அந்த செயலை எதிர்த்து அப்போதே பாதிக்கப் பட்ட மக்கள் சார்பாக வழக்குகள் தொடுக்கப் பட்டன.

### இதன் பின் 1985ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசு இந்திய நாடாளு மன்றத்தில் "போபால் வாயுக் கசிவு பேரழிவு" சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டம் பாதிக்கப் படவர்கள் தனிப் பட்ட முறையில் வழக்குத் தொடுக்கவும், தங்களுக்கென ஒரு வழக்குரைஞரை வைத்துக் கொள்ளவும், நீதி பெறவும் இந்திய சாசனச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டிருந்த உரிமைகளைத் தட்டிப் பறித்தது. மேலும் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லும் வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் என்பதையும் மறுத்தது.

### இச் சட்டத்தை எதிர்த்து பாதிக்கப் பட்டவர்கள் நடத்திய வழக்கில் உச்ச நீதி மன்றம் "ஒரு பெரிய நல்ல காரியம் செய்யும் போது அதில் சிறிய தவறுகள் செய்வது அனுமதிக்கத் தக்கதுதான். சூழ்நிலைகளின் தேவையையொட்டி இயற்கை நீதிய மறுதலிக்கலாம். இந்திய அரசு பாதிக்கப் பட்டவர்களுக்கு தந்தையாக இருந்து இந்த சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது" என தத்துவம் பேசி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

### பாதிக்கப் பட்ட மக்களால் அமெரிக்க நீதி மன்றங்களில் தொடுக்கப் பட்டிருந்த நட்ட ஈடு கோரும் வழக்குகள் இந்தியாவிற்கு மாற்றப் பட்டன. இதையடுத்து போபால் மாவட்ட நீதி மண்றம் யூனியன் கார்பைடு நிறுவனம் இடைக்கால நட்ட ஈடாக 350 கோடி வழங்க உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இந்த விபத்துக்கு யார் பொறுப்பு எனத் தெரியாத நிலையில் நட்ட ஈடு தர முடியாது என்ற வாதத்தை முன்வைத்தது யூனியன் கார்பைடு.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் பாதிக்கப் பட்டவர்களின் நலன் கருதி நிவாரணமாக 250 கோடி வழங்குங்கள் என கேட்டுக் கொண்டது. இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது யூனியன் கார்பைடு.இதன் பின் பேசப் பட்ட பேரத்தில் 47 கோடி நட்ட ஈடாகக் கொடுக்க சம்மதித்தது அந்நிறுவனம். ஆனால் அது இடைக்கால நட்ட ஈடு அல்ல, ஆயுட்கால நட்ட ஈடாகப் பெற முடிவு செய்யப் பட்டது.

### பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் அமைப்புகள் இப் பேரத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இதை விசாரித்த நீதிமன்றம்

"இந்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களைக் கலந்து ஆலோசிக்காமல் நட்ட ஈடுத் தொகையை முடிவு செய்தது சரிதான். போபால் வாயுக்கசிவு பேரிடர் சட்டம் அரசுக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது" எனத் தீர்ப்புக் கூறியது. மேலும் வருங்காலத்தில் நட்ட ஈடுத் தொகை போதவில்லை எனக் கோரிக்கைகள் எழுந்தால் இந்திய அரசே பரிசீலித்துக் கொடுக்கும் எனக் கூறி யூனியன் கார்பைடு சிவில் வழக்குகளிலிருந்து கழட்டி விடப் பட்டது.

பாதிக்கப் பட்ட மக்களின் கோபத்தைத் தணிப்பதற்காக, யூனியன் கார்பைடு மீது தொடுக்கப் பட்டிருந்த கிரிமினல் வழக்குகளை மீண்டும் நடத்த உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது.

### இது போன்ற பல்வேறு நீதி மன்ற இழுத்தடிப்புகளுக்குப் பின் 1992 பிப்ரவர் 1ம் தேதி போபால் தலைமைப் பெருநகர நீதி மன்றம் வாரன் ஆண்டர்சனைத் தேடப் படும் குற்றவாளியாக அறிவித்தது.

பதிவின் நீளம் கருதி இதன் பின் இவ்வழக்குகளின் நிலையையும் இறுதித் தீர்ப்பையும் அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.

நன்றி: புதிய ஜனநாயகம்

13 July 2010

மனிதம் இருந்தால் படியுங்கள் -2

8:28:00 AM Posted by புலவன் புலிகேசி , 17 comments

முதல் பகுதியைப் படிக்க: மனிதம் இருந்தால் படியுங்கள் - 1

சாதாரணமாக ஒரு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படித் தப்பிக்க வேண்டும் எனப் பெயரளவிலாவது பயிற்சி அளிக்கப் படும். ஆனால் இந்த போபாலில் வசிக்கும் மக்களுக்கு நச்சு வாயு வெளியேற்றத்தை எப்படி எதிர் கொள்வது என்பதற்கான எந்தப் பயிற்சியும் அளிக்கப் படவில்லை.

இது போன்று நச்சு வயுக்கள் வெளியேறும் போது முகத்தில் ஈரத் துணியைக் கடிக் கொண்டு தரையில் தவழ்ந்து வாயு வெளியேறும் திசைக்கு எதிர்த் திசையில் நகர்ந்தாலே போதும், மரணத்திலிருந்து காத்துக் கொள்ளலாம் என்கிற சிறிய பயிற்சியைக் கூட அளிப்பதில் ஈடுபாடு காட்டாத இந்தக் கொடியவர்களால் செய்வதறியாது இறந்து போனவை உயிர்கள் இல்லையா? அதற்கு பெயர் கொலை இல்லையா?

இந்த மெத்தில் ஐசோ சயனைடு வாயு காற்றை விட இரு மடங்கு அடர்த்தி கொண்டது. அப்படியென்றால் அதை சுவாசிப்பது எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும். அதோடில்லாமல் இந்த வாயுவிற்கு எந்த ஒரு வாசனையும் கிடையாது. இதை நுகர்ந்தவர்கள் மிளகாய்ப் பொடியை நுகர்ந்தது போன்ற எரிச்சலை உணர்ந்திருக்கிறார்கள்.

அந்த எரிச்சலால் கண்கள் பிதுங்கி வெளியே வந்து விடுவது போல் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் நுரையீரலில் நெருப்பைக் கொட்டியது போல் மக்கள் வலியில் துடிதுடித்தனர்.

பலர் செய்வதறியாது தப்பிக்கும் எண்ணம் மட்டும் கொண்டு வேகமாக ஓடியிருக்கின்றனர். எந்த அளவு வேகமாக ஓடினார்களோ அதற்கு ஏற்றார் போல் இந்த மெத்தில் ஐசோ சயனைடு வாயுவை அதிகமாக சுவாசித்து துடிதுடித்து இறந்தவர்கள் தான் இங்கு அதிகம். சாலையோரங்களில் குழந்தைகளுடன் குளிரில் நடுங்கியவாறு உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே இறந்து போயினர்.

விஷம் தாக்கியக் குளத்தில் மீன்கள் மிதப்பது போல் போபால் முழுவதும் பிணக் குவியல்கள். ஆனால் காவல்த்துறையோ மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். கதவுகளை அடைத்து உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி வீட்டோடு சமாதியாக்கியது. என்ன செய்ய வேண்டும்? எப்ப்படித் தப்பிக்க வேண்டும்? என்ற முறைகள் அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

காரணம் அரசோ, அல்லது யூனியன் கார்பைடு நிறுவனமோ இது குறித்துப் ப்யிற்சி அளிப்பதை ஒரு பொருட்டாகவேக் கருதவில்லை. இதை வெறும் அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்து என முதலாளிகளைக் காப்பாற்றி பொது மக்களின் உயிர்களைக் கேவலப் படுத்துவது எவ்வளவு கொடூரமான ஒரு செயல்?

மரணம் அவர்களை ஒன்றும் உடனே கவ்விக் கொள்ளவில்லை. இவ்வளவு சித்திரவதைகளுக்குப் பின்னர்தான் அவர்களின் உயிர் பிரிந்திருக்கிறது.

எந்தத் தவறும் செய்யாமல் மரண தண்டணையை விடக் கொடுமையான தண்டணையை அனுபவித்த இவர்களின் மரணத்திற்கு காரணமானவன் அமெரிக்காவில் சுக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதை விபத்து என்று சொல்லி அவனையும் தப்பிக்க வைத்து வழக்குகளைத் திரும்பப் பெற்ற நம் அரசியல் வியாதிகளுக்கு மனிதம் என்பதேக் கிடையாதா?

ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது இந்தியா ஜனநாயக நாடுதான். ஆனால் பொதுமக்களுக்கு அல்ல. பணம் படைத்த முதலாளிகளுக்கு மட்டும்.

1984 முதல் இப்போது வழங்கப் பட்ட தீர்ப்பு வரை இந்த வழக்கு எப்படி கையாளப் பட்டிருக்கிறது? என்பதை அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.

நன்றி: புதிய ஜனநாயகம்

11 July 2010

மனிதம் இருந்தால் படியுங்கள் - 1

12:57:00 PM Posted by புலவன் புலிகேசி , 24 comments

1984-ம் ஆண்டு திசம்பர் 2ம் நாள். அப்போது நான் பிறந்து 1 மாதம் 13 நாட்கள் ஆகியிருந்தது. ஒரு வேலை நான் போபாலில் பிறந்திருந்தால் அந்த 43வது நாளே என் வாழ்க்கை முடிந்து போயிருக்கும் என்னைப் போல் பிறந்த குழந்தைகளுடன் சேர்த்து 22,146 பேர் மரணமும் வெறும் விபத்தாகப் பார்க்கப் படுவது அபத்தமான ஒன்று.

இவையெல்லாம் முதலாளிகளின் இலாப வெறிக்கு நடத்தப் பட்ட படுகொலைகள். இவற்றை விபத்தாகப் பார்க்கும் எண்ணம் நம் மக்களிடம் பரவியிருப்பது கொடுமையான விடயம். விளம்பர ஊடகங்களை வைத்து மக்கள் உணர்வுகள் அனைத்தும் வெறும் செய்திகளாக மாற்றப் பட்டிருப்பது எவ்வளவு கொடூரமான செயல்?

தான் ஏன் இப்படி இறந்து போகிறோம்? என்பதைக் கூட உணர முடியாமல் நடு ரோட்டிலும், இரயில் நிலையங்களிலும் பிணமாகிப் போனவர்கள் விபத்தால் இறந்தவர்கள் என்று சொல்வது மனிதம் மறைக்கும் பாதக செயல். இந்த விபத்துக்கெல்லாம் முக்கியக் காரணம் கவன்க் குறைவோ அல்லது சாதாரண விபத்தோ அல்ல.

முதலாளிகளின் வெறி கொண்ட இலாப நோக்கு. இது மட்டுமேக் காரணம். போபால் ஆலையில் கார்பரில் என்ற பூச்சி மருந்து தயாரிக்கப் பட்டு "செவின்" எனப் பெயரிடப் பட்டு விர்பனைக்கு வெளிவந்திருக்கிறது. இந்த மருந்தைத் தயாரிக்க மாற்று வழிகள் நிறைய இருந்தும் "மெத்தில் ஐசோ சயனைடு" என்ற நச்சுப் பொருளை விலை மலிவு என்ற ஒரே காரணத்தை மனதில் கொண்டு இலாப நோக்கில் பயன்படுத்தியது இந்த முதலாளிகளின் குற்றமா? அல்லது விபத்தா?

ஆனால் இந்த மருந்து விவசாயிகளிடம் ஆதரவு பெறவில்லை. அதைத் தொடர்ந்து 1980-களில் நிலவிய வறட்சியின் காரணமாகவும் இந்த மருந்து தோல்வியைத் தழுவியது. இதனால் இலாபக் குறைவைத் தடுக்க அந்த முதலாளிகளால் முடிவெடுக்கப் பட்டு அங்கு உள்ள எந்திரங்களின் பராமறிப்பு செலவுகள் நிறுத்தப் பட்டன.

மேலும் சம்பவம் நடந்த அன்று இந்த ஆலையில் இந்த "மெத்தில் ஐசோ சயனைடு" வாயுவை மூன்று பெரிய கலன்களில் சேமித்து வைத்திருந்திருக்கிறார்கள். இந்த நச்சுத் திரவம் குளிரூட்டப் பட்ட இடத்திலோ அல்லது உறை நிலையிலோ பாதுகாக்கப் பட வேண்டும். ஆனால் இந்த நிறுவனம் "காஸ்ட் கட்டிங்" (செலவைக் குறைத்து இலாபத்தை அதிகரிப்பது) என்று சொல்லி குளிர் காலம் என சொல்லி குளிர் சாதனத்தை அணைத்து வைத்திருந்திருக்கிறது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த கலன்களின் அழுத்தம் சோதிக்கப் பட வேண்டும். ஆனால் இங்கு 8 மணி நேரத்திற்கு ஒரு முறை சோதிக்கப் பட்டிருக்கிறது. 10:12 மணிக்கு சோதனை செய்த போது சரியாக இருந்த அழுத்தம் 11.30 மணிக்கு குளிர் சாதனம் இயக்கப் படாததால் 0 டிகிரியில் இருக்க வேண்டிய வெப்ப நிலை 250 டிகிரியைத் தொட்டு வெடித்து சிதறி 22,146உயிர்களை கொன்று, 500000 க்கும் மேற்பட்டவர்களை முடமாக்கியதுடன் இன்றும் அங்கு பிறக்கும் குழந்தைகள் குறை பாடுகளுடன் பிறந்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் விபத்து என சொல்லி மிகக் குறைந்த அளவு நஷ்ட ஈட்டை 25 வருடங்களுக்குப் பிறகு வழங்குவதற்கு உத்தரவிட்டிருக்கும் இந்திய அரசியலமைப்பை என்னவென்று சொல்வது? முதலாளிகளுக்கு கொடி பிடித்து மக்களை கொன்று குவிக்கும் பணி சிறப்பாக நடந்து வருவது என்ன கொடுமை?

இந்த மனித ஆழிப்பு நிகழ்வுகள் எல்லாம் வெறும் செய்தியாக பார்த்து தலைப்புடன் நிறுத்தி விட்டு சினிமா செய்திப் படித்துக் கொண்டிருந்தவன் தான் நான். புதிய ஜனநாயகம் புத்தகத்தில் இது பற்றிய செய்திகளைப் படித்ததும் அதிர்ந்து போனேன். அதை என் பதிவைப் படிப்பவர்களுக்காவது புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த போபால் தொடரைத் துவக்கியுள்ளேன். இன்னும் அங்கு நடந்துள்ள நடந்து கொண்டிருக்கும் முதலாளிகளின் அக்கிரம ஆட்டத்தை அடுத்தடுத்தப் பதிவுகளில் விவாதிக்க விரும்புகிறேன்.

வாருங்கள் விவாதிக்கலாம்.
நன்றி: புதிய ஜனநாயகம்

10 July 2010

பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?

12:48:00 PM Posted by புலவன் புலிகேசி , 22 comments
நண்பர் தமிழ் மகன் என்னை இந்தத் தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறார். தொடர்பதிவுகள் எழுதும் விருப்பமில்லை என்பதை நான் கடைசியாக எழுதியத் தொடர்பதிவில் கூறியிருந்தேன். இருந்தாலும் இந்தத் தொடர் பதிவில் உள்ளக் கேள்விகள் என்னை எழுதத் தூண்டின. அதனால் எழுதுகிறேன்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

புலவன் புலிகேசி

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. என் பெயர் முருகவேல். இந்தப் பெயருக்குப் பெரிதாய் ஒன்றும் காரணமில்லை. நான் பதிவெழுத வந்த காலத்தில் நடுத்தர வர்க்க சிந்தனையோடுத் தொடங்கினேன். அப்போது வெளி வந்திருந்த 23ம் புலிகேசிப் படம் எனக்குப் பிடிக்கும் அதனால் வைக்கப் பட்டதுதான் இப்பெயர்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

எனக்கு வலையுலகம் இப்ப்டிப் போய்க் கொண்டிருப்பது தெரியாத காலம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நான் மற்றும் வெண்ணிற இரவுகள் கார்த்தி ஆகிய இருவரும் நண்பன் ஊடகன் இம்ரானைப் பார்த்து ஆரம்பித்ததுதான் இந்த வலைப்பூ. ஆரம்பித்த காலத்தில் நான் பார்த்த என்னை பாதித்த விடயங்களை எழுத ஆரம்பித்து கதை, கட்டுரைக் கவிதை எனப் போய்க் கொண்டிருந்தேன். ஆனால் சமீபக் காலங்களில் சில பதிவுலகக் கட்டுரைகளையும் மற்ற சில நிகழ்வுகளின் வாயிலாகவும் அரசியல் பற்றி எதுவும் எழுதாத நான் அது பற்றி அதிகம் தெரியாத நான் அது பற்றிப் புரிதலுக்கு வர ஆரம்பித்தப் பின்னர் நம் மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அரசியலின் நிலைத் தெரிய வேண்டும். எல்லாவற்றிலும் ஒரு அரசியல் பார்வை ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நம் நாட்டின் அரசியலின் நிலைப் பாட்டையும் அவர்களின் தந்திர அரசியலையும், அமெரிக்க அரசியலுக்கு நம்மைத் தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருப்பதயும் நான் அறிந்த வரை என் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு எடுத்து சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். இது வெறும் ஆரம்பம் தான் இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதெல்லாம் தேவையா? என என்னை சிலர் தொடர்பு கொண்டு கேட்டனர். ஆனால் இதெல்லாம் தேவை என அனைவருக்கும் தோன்றினால் அப்போது தான் இந்த அரசியல் சாக்கடை சுத்தம் செய்யப் படும். திரைப் படங்களில் காண்பிப்பது போல் இந்தியனோ, அந்நியனோ, ரமணாவோ வர மாட்டான். அப்படியே வந்தாலும் முழுத் தீர்வுக் கிடைக்காது. கொலை ஒரு விடயத்தை நிர்ணயிக்காது. மக்களுக்கு ஒரு புரிதல் இது ஏன் இப்ப்டி ஆகியிருக்கிறது? என ஏற்பட வேண்டும். எல்லாவற்றையும் வெறும் செய்தியாக மட்டும் பாவிக்கும் இந்த நடுத்தர வர்க்கம் மாற்றப் பட வேண்டும். எல்லாவற்றிலும் அக்கரை எடுத்துக் கொண்டு மக்கள் அரசியல் வாதிகளை பார்க்கத் தொடங்கினால் இந்த அரசியல் இங்கு இருக்காது என்பதே என் நோக்கம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் பதிவுலகிற்கு வந்த காலத்தில் எனக்கு நீ ஓட்டுப் போட்டியா? உனக்கும் நான் போடுறேன். அது தரமோ தரமற்றதோ என ஆரம்பித்ததுதான் இந்த பிரபல ஃபார்முலா. அதே ஃபார்முலாவில் துவங்கியவன் தான் நான். ஓடிச் சென்று பல பதிவுகளைப் ஃபாலோ செய்து பின்னூட்டமிட்டு வளர்த்து வந்த எனக்குள் ஏற்பட்ட எண்ணம் தான் நாமும் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். இனி இப்ப்டி இருக்கக் கூடாது. நிறைய மாற்றங்களை இந்த வலைப்பூ மூலம் நிகழ்த்த வேண்டும் என மாறியிருக்கிறேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் பதின்மக் குறிப்பும், என்னைப் பற்றிய ஒருத் தொடர்பதிவும் பகிர்ந்திருக்கிறேன். விளைவு என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போக்கிற்காக எழுதியவன் தான். இப்போது அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் என யோசித்து சில உப்யோகமான விவாதங்களை முன் வைத்து எழுதி வருகிறேன். இதை வைத்து காசு பார்க்கும் எண்ணம் எனக்குத் துளியும் இல்லை.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

எனக்கு செம்மொழிப் பிடிக்கும் ஆனால் சமீபத்தில் நடந்த செம்மொழி மாநாடுப் பிடிக்கவில்லை. வலைப் பதிவு என்று பார்த்தால் இது ஒன்று மட்டுமே. அதுவும் தமிழில் இருக்கிறதா? என்பது சந்தேகமே. பெரும்பாலும் அரைகுறை தமிழில் தான் இருக்கிறது. அப்பறம் என் கல்லூரி நண்பர்களுக்காக ஒரு வலைப்பூ 2008-ல் ஆரம்பித்தேன். அது எங்கள் நண்பர்களின் த்கவல்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கப் பட்டது. அவ்வளவே.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை என்பதை விட பலப் பதிவர்களைப் பார்த்து வியப்படைந்திருக்கிறேன். ஒருவர் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால் குறிப்பாக பாலாசி மற்றும் கதிரை சொல்லியாகனும். இவர்களின் எழுத்துக்களில் தமிழ் பழகிக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லலாம். கோபம் என்பது வெண்ணிற இரவுகள் கார்த்தியுடன் அடிக்கடி வந்திருக்கிறது. அப்போதெல்லம் சண்டையிட்டிருக்கிறேன். பார்ப்பனீய ஆதரவாளர்கள் அனைவர் மீது அடிக்கடி வரும்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நண்பர் பாலாசி மற்றும் வெண்ணிற இரவுகள் கார்த்தி. அப்புறம் வானம்பாடிகள் ஐயா. இவர்கள் எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தருபவர்கள். இது சரி இதுத் தவறு என என்னுடன் விவாதிப்பவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் கார்த்தியும், வானம்பாடிகள் ஐயாவும். அவர்களுக்கு என் நன்றி.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப் பற்றி முன்னமே ஒரு தொடர்பதிவில் சொல்லியிருக்கிறேன். இதோ அதின் இணைப்பு... நானும் தீபாவளியும்...!!!...இதை எழுத நான் அழைப்பது நண்பர் பாலாசி மற்றும் வானம்பாடிகள் ஐயா.

09 July 2010

கல்லூரி மாணவர் கொலை - திசைத் திருப்பப் படும் விசாரனை

12:36:00 AM Posted by புலவன் புலிகேசி , 14 comments

கல்வியை அரசாங்கம் ஏற்கனவே தனியாருக்கு கூறு போட்டு விற்றாகி விட்டது. கல்வித்துறை என்ற ஒன்று பெயருக்காகவும், அரசியல்வியாதிகள் பணம் சம்பாதிக்கவும் அரசுத் துறையாக இருந்து வருகிறது. இத்தகையப் பொறுப்பற்றவர்கள் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக பணம் படைத்தவனிடமும், அரசியல் செல்வாக்கு நிறைந்தவனிடமும் கல்லூரி நடத்தும் உரிமையைக் கொடுத்து விட்டிருக்கின்றன.

அதன் விளைவாகப் பொது மக்களும் கல்வியைக் காசு கொடுத்து வாங்கும் பொருளாக பாவிக்கும் அளவிற்கு மாற்றப் பட்டிருக்கின்றனர். இப்போது இந்தத் தனியார்க் கல்லூரிகள் படிக்க வரும் மாணவர்களை ஆள் பிடிக்கும் புரோக்கர்களாகவும் மாற்றி விட்டிருக்கிறது. இடப் பிரச்சினைக்காக நில புரோக்கர்கள் கொலை என்ற செய்தியைப் படித்து வந்தவர்களுக்கு புதிதாக கல்லூரி "இட"ப் பிரச்சினைக் காரணமாக மாணவ புரோக்கர் கொலை என்ற செய்தி கிடைத்துள்ளது.

இங்கு சாதாரணமாக செய்தியாக மட்டும் படிக்கும் பல பொது மக்களின் புரிதல் என்னவாக இருக்கும்?

"படிக்கிற காலத்துல பொறுக்கித் தனமாத் திரிஞ்சா இப்புடித்தான் ஆகும்"
"காலேஜ் பசங்க அடிச்சிக் கிட்டு ஒருத்தன கொன்னுட்டாங்க."
"பணத்துக்கு ஆசப் பட்டு ஒரு பையன கொன்னுட்டானுங்க படுபாவிங்க"

இந்த மாதிரியெல்லாம் அந்த மாணவர்களை மட்டுமே இகழ்ந்து கொண்டிருப்பவர்கள் யாரும் அந்தக் கல்லூரிகளை வைத்து காசுப் பார்த்துக் கொண்டிருக்கும் கொழுத்த முதலைகளாலலும், அவர்களுக்கு கொடி பிடித்துக் காப்பாற்றும் கேடுகெட்ட அரசியலாலும் நிகழ்ந்தவைதான் இவை என்பதை அறிந்தாலும் அவர்களைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை.

சரி விடயத்திற்கு வருவோம். அந்த மாணவன் கொல்லப் பட்டதற்கு கல்லூரி நிர்வாகங்களின் பண வேட்டைக் காரணம் என்பது பொது மக்களிடையே பரவி வரும் செய்தியாக இருக்கும் நிலையில், இது குறித்து விசாரனையைத் துவக்கியுள்ள காவல்த்துறைஇப்போது இந்த வெளி மாநில மாணவர்களை மாவோயிஸ்டுகளாக இருப்பார்களோ? என்ற கோணத்தில் விசாரிக்கப் போகிறதாம்.

அதாவது சென்னையிலுள்ள இந்த பெருத்த முதலாளிகளின் கல்லூரிகளில் படிக்கும் வெளி மாநிலத்தவர்களில் பலர் பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒரிசா, அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களாம். அதனால் மாவோயிஸ்டுகள் கலந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கின்றனராம்.

இதெல்லாம் நிச்சயம் அந்த பெருத்த முதலாளி வர்க்கத்திற்கு அரசியலாளர்களால் செய்யப் படும் ஒருத் தொண்டு. விசாரனையைத் திசைத் திருப்பி கல்லூரி மாணவன் கொல்லப் பட்ட காரணம் ஆராயப் படாமல் அந்தப் பண முதலைகள் தப்பிப்பதற்கு அரசியல் போர்வையில் நடத்தப் படும் நாச வேலை.

இந்த விசாரனை இப்படித் திசைத் திருப்பப் படவில்லை என்றால் அந்த கல்லூரிகளுக்கு மூடு விழா நடத்த நேரிடும். அந்த பண வெறிப் பிடித்த முதலைகள் கம்பி எண்ண நேரிடும். இதை மனதில் நிறுத்தி அவர்களை போபால் ஆன்டர்சன் போல் தப்பிக்க வைக்க அரசியல்வியாதிகளால் இந்த விசாரனைத் திசைத் திருப்பப் ப்ட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

08 July 2010

மதம் வளர்க்கும் பொருள்!

8:13:00 AM Posted by புலவன் புலிகேசி , 9 comments

மக்களை ஜாதி எனும்
போதைக்குள் மூழ்கடித்த
போதைப் பொருள்

மக்களை மடையர்களாக்கி
வைத்திருக்கும் பழமை நிறைந்த
அரசியல்வியாதி

லஞ்சப் பேர்வழிகளிடமே
லஞ்சம் பெற்று வளரும்
முதலாளி.

மொத்தத்தில்.............

மனிதம் அழித்து மதம்
வளர்க்கப் படைக்கப் பட்ட
ஒரு பொருள்

கடவுள்!

07 July 2010

இது தேவையா? - தமிழக மேம்பாட்டுக்கு 1903 கோடி கடனாம்

ஏற்கனவே ஒவ்வொரு இந்தியக் குடி மகனும், பிறக்கும் குழந்தைகளும் 30,000 ரூ கடனோடுதான் பிறக்கிறது என்பது மக்கள் அறிந்ததே. இந்நிலையில் தமிழகத்தின் சுகாதாரம் மற்றும் சாலை மேம்பாட்டிற்காக உலக வங்கியிடம் ரூ. 1903 கோடி கடனாகப் பெறப் போகிறோம். இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கருணாநிதி தலைமையில் கையொப்பமிடப் பட்டிருக்கிறது.

இது போன்ற திட்டங்களுக்கு நாம் நிச்சயம் உலக வங்கியிடம் கையேந்த வேண்டுமா? இந்த ஒப்பந்தமானது மூன்றாண்டுகளுக்கானத் திட்டங்களுக்காக கையெழுத்தாகி இருக்கிறது.

யோசித்துப் பார்த்தால் இந்த அரசு ஆட்சியமைத்த இத்தனை ஆண்டுகளில் தனக்குத் தானே நடத்திக் கொண்ட பாராட்டு விழாக்கள், புதிய பாலம் திறப்பு விழாக்கள், சட்ட சபை திறப்பு விழா, செட் போட்ட செலவு, திரையுலகை வளர்க்கிறேன் என்ற பெயரில் செய்த செலவுகள், செம்மொழி மாநாட்டு 400கோடி ரூபாய் எல்லாம் சேர்த்தால் இந்த கடன் வாங்க அவசியம் ஏற்பட்டிருக்குமா?

இதில் பெரும்பாலான விழாக்களும், அதற்கான செலவுகளும் ஒரு தனிமனிதனின் சுயநலத்திற்காக செலவிடப் பட்டிருக்கின்றன. புதிய சட்ட சபை கட்டிடம் அவசரமாக திறப்பதற்காக அமைக்கப் பட்ட அரங்கத்தின் செலவு எத்தனை கோடிகள்? இப்போது அது பிரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் திறப்பு விழாவிற்கு சோனியா, மன்மோகன் வருவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பாதுகாப்புக்கு ஆன செலவுகள் எவ்வளவு?

இந்த ஆட்சியில் இதுவரை அவருக்கு நடத்தப் பட்ட பாராட்டு விழாக்கள் தோராயமாக பத்துக்கு மேற்பட்டவை. இவற்றிற்கு ஆன செலவுகளும் நிச்சயம் கோடியில் இருக்கும். அதோடில்லாமல் லட்சங்களில் செலவு செய்து அமைக்கப் பட்ட பாலங்களின் திறப்பு விழாவிற்கு மட்டும் செய்யப் பட்ட செலவுகளும் லட்சங்களில் தான்.

இதையெல்லாம் விடக் கொடுமை சமீபத்தில் நடத்தப் பட்ட செம்மொழி மாநாடு விழா. இதுவும் தன் பெருமையை மட்டுமே பரை சாற்றுபவர்களுக்காக நடத்தப் பட்டது என்பது உலகறிந்ததே. இங்கு தமிழ் பற்றிப் பேசியவர்களை விட கருணாநிதியைப் பற்றிப் பெருமைப் பேசியவர்களே அதிகம்.

வாலி, வைரமுத்து என்ற இரண்டு சொம்புகள் இவரைப் புகழ்ந்து தள்ளி விட்டு நாங்கள் தமிழ்க் கவிஞர்கள் என சொல்லிக் கொள்கின்றன. இவைகள் தமிழ்க் கவிஞர்கள் அல்லர். கருணாக் கவிஞர்கள்.

இந்த விழாவிற்காக செய்யப் பட்ட பசுமைக் கொலைகள் எத்தனை? இதற்கு செலவிடப் பட்டத் தொகை 398 கோடி ரூபாய் என சொல்லப் படுகிறது. இத்தகைய செலவுகள் எல்லாம் செய்யப் படாமலிருந்தால் நாம் எதற்காக உலக வங்கியிடம் கையேந்த வேண்டும்? தன் குடும்பத்திற்கும், த்ற்பெருமைக்காகவும் நம் பணத்தை செலவு செய்து விட்டு இன்று உலக வங்கியிடம் கையேந்தி நிற்கின்றனர்.

இவர்களால் கடனாளியாக்கப் பட்ட இந்தியா மேலும் மேலும் கடனாளியாகவே மாறி வருகிறது. பிறக்கும் குழந்தைக்கு 30 ஆயிரம் கடன் என்பது எவ்வளவு கேவலமான ஒன்று.

06 July 2010

நேற்று நடந்தது போராட்டமா? இல்லைப் போட்டியா?

7:32:00 AM Posted by புலவன் புலிகேசி , , 10 comments

இது வரை எத்தனையோ முறை விலைவாசி உயர்வு நடந்தேறியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் அதை எதிர்த்து பந்த் அறிவித்திருக்கின்றன. ஆனால் நடந்தது ஒன்றும் இல்லை. பொது மக்கள் பாதிக்கப் பட்டதைத் தவிற. இது போன்ற பந்த் பொது மக்களுக்கு அரசியல் கட்சிகளின் மீது வெறுப்பையேத் தந்திருக்கின்றன.

போராட்டங்கள் அரசியல் ஆதாயத்தை நோக்கி நடத்தப் பட்டு வருகின்றன. எதிர்க் கட்சிகள் நடத்தும் போராட்டங்களை ஆளும் கட்சிகளோ அல்லது ஆளும் கட்சிகள் நடத்தும் போராட்டங்களை எதிர்கட்சிகளோ ஆதரிப்பதில்லை. இங்கு மக்களுக்காகப் போராடும் கட்சிகள் இல்லை என்பதை இதுவே புலப் படுத்தும்.

தன் கட்சியின் ஆதிக்கத்தையும், பெருமையையும் நிரூபிப்பதற்காக ஆளும் கட்சிகள் பந்த் நடத்தி அடக்கு முறைகளை கைகொண்டு அதில் வெற்றி பெறும். எதிர் கட்சிகள் பந்த் தோல்வியடையும் என்பது தெரிந்தும் தத்தமது அரசியல் ஆதாயங்களுக்காகவும், தேர்தல் கூட்டனித் திட்டங்களை மனதிற் கொண்டும் இது போன்ற போராட்டங்களை அறிவிக்கின்றன.

இது போன்ற போராட்டங்கள் எல்லாம் அரசியல் கட்சிகளின் சொத்துக்களாக மாறிப் போயிருக்கின்றன. உண்மையில் இங்கு போராட வேண்டியவர்கள் யார்? பாதிக்கப் பட்ட நம்மைப் போன்ற பொது மக்கள். இது போன்ற பெட்ரோல், டீசல் விலையுயர்வுகளால் அத்யாவசிய பொருட்களின் விலையிலும் மாற்றம் நிகழ்வது தவிர்க்க முடியாத ஒன்று.

இதனால் பாதிக்கப் படப் போவது பாமர மக்களும், நடுத்தர மக்களும் தான். ஆனால் நடுத்தர மக்களைப் பொறுத்த வரையில் அவர்களால் அந்த பட்ஜெட்டை சமாளிக்க முடியும். அதனால் இது பற்றி வருத்தம் மட்டும் அடைந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுகிறார்கள்.

அடித்தட்டு மக்களுக்கோ இது பற்றி எடுத்துக் கூறி அணித் திரட்டி போராட்டம் நடத்த யாரும் துணை நிற்பதில்லை. இது போன்ற விலையுயர்வால் நேரடியாக பெருமளவில் பாதிக்கப் படுவது அடித்தட்டு மக்களே. இதே நிலை நீடித்தால் அத்யாவசியப் பொருட்களின் விலை உயர்வு நடுத்தர மக்களை அடித்தட்டு மக்களாக மாற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை.

என்ன நடந்தா என்ன? எனக்கு மூனு வேலை சாப்பாடு இருக்கு என்ற சுய நல எண்ணத்தில் வழ்ந்து பழகிப் போய் விட்ட மாக்களாக இருந்து வருகிறோம். ஒரு வேலை சோற்றுக்கு கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களின் நிலை பற்றி யாரும் கவலைக் கொள்வதில்லை. அந்த நிலை நமக்கு வரும் நாள் வெகுத் தொலைவில் இல்லை என்பதையும் மறந்து போகிறோம்.

இந்தக் கட்சிகள் நடத்தும் போராட்டங்களின் உள் அரசியலால் அந்தந்தக் கட்சிகள் வலுப்படலாம். ஆனால் மக்கள் நலிந்தவர்களாக மாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இங்கு பெருமளவில் பாதிக்கப் படும் லாறி உரிமையாளர்கள், வணிகர்கள் சார்ந்த தொழிற் சங்கங்கள் ஒன்று கூடி எந்த அரசியல் ஆதாயக் கட்சிகளின் துணையுமின்றி மக்களைத் திரட்டி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும்.

தமிழகத்தில் செம்மொழி மாநாட்டிற்கு மக்களை ஒரு அரசியல் கட்சியால் திரட்ட முடிந்த போது ஏன் அரசுக்கு எதிராக மக்களின் நியாத்திற்காக மக்களைத் திரட்ட முடியாது? பொது மக்களின் ஓட்டுக்களைக் கொண்டு ஆட்சி நடத்தும் இவர்களை பொது மக்களால் மட்டுமே அச்சுறுத்த முடியும். நமக்கான நியாயம் நம்மால் மட்டுமே பெற முடியும்.

03 July 2010

சிறுமியை பலாத்காரம் செய்த தமிழ்நாட்டு கிழட்டு நாய்


ராமச்சந்திர நாடார் (சாதிப் பேர் ஒரு கேடு) 52 வயதான ஒரு கிழட்டு நாய். இது தமிழகத்தை சேர்ந்ததாம். மும்பையில் டியூசன் சென்டர் நடத்தி வரும் இது டிஸ்லெக்சியா(Dislexia) குறைபாடுடைய ஒரு 13 வயதுக் குழந்தையை மிருகத்தனமாய் பலாத்காரம் செய்து வந்திருக்கிறது. இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க அந்த நாய் தமிழகத்தை நோக்கி தப்பியோடி வந்து ஒளிந்திருந்திருக்கிறது.

அதத் தேடி போலீஸ் இங்க வர அது மறுபடியும் மும்பைக்கு போய் முன்ஜாமீன் வாங்க முயற்சி பண்ணிருக்கு. அந்த நேரத்துல போலீஸ் அந்த நாயைக் கைது செய்து விட்டது.

இந்த செய்தியைப் படித்ததும் பகீர் என்றது. 52 வயதாகும் ஒருவன் தன் பேரப் பிள்ளை வயதிலிருக்கும் ஒரு சிறு குழந்தையை பலத்காரம் செய்யும் அளவிற்கு காமம் கண்ணை மறைத்து விட்டதா? மனிதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாத இத்ற்கு எதற்காக மரியாதை?

சிறு குழந்தைகள் பலர் இப்போதெல்லாம் இது போன்ற பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். படிக்கும் வயதில் வேலைக்கு போகும் குழந்தைகளைப் பார்த்தாலே கண்கள் கலங்கிப்போகும் நிலையில் பலர் இருக்க இந்த நாய்களுக்கு எந்த இரக்கமும் இல்லாமல் போய் விட்டிருக்கிறதே.

இது போன்ற பாலியல் குற்றங்கள் தீவிரவாத செயல்களாக அறிவிக்கப் பட வேண்டும். அரபு நாடுகளில் பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனைகள் எவ்வளவு கடுமையானது என அனைவருக்கும் தெரியும். அந்த மாதிரி இந்த நாய்களையும் அறுத்து சாவடிக்கனும்.

வினவின் சமீபத்திய "பிஞ்சுகளைக் குதறிய 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரன்" கட்டுரையில் வந்த செய்தியில் தாய்லாந்து நாட்டில் சிறார் விபச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறதாம் (தாய்லாந்து மட்டுமல்ல இந்தியாவிலுள்ள சுற்றுலாத்தளங்களிலும் கூட). வயது வந்த சிறார்களுடன் உறவு கொள்ள பல வெளிநாட்டு பன்றிகள் அலைந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு அதனதன் அரசாங்கங்களும் விளக்கு பிடித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. சுற்றுலாத்துறையின் வருமானத்திற்காக இது போன்ற மாமா வேலைகளுக்கு அரசும் உடந்தையாக இருக்கின்றது.

இது போன்ற விடயங்களெல்லாம் நித்யானந்தா-ரஞ்சிதா விடயம் அளவிற்கு நமது ஊடகங்களாலும், மக்களாலும் பாவிக்கப் படுவதில்லை. மக்களுக்கு சுவாரஸ்யங்களையும், மாராட்டங்களையும் செம்மொழி மாநாடு போன்றவற்றையும் கொடுத்து கொடுத்து ஏமாற்றி சிந்திக்க விடாமல் வைத்திருக்க துணை போகும் இத்தகைய ஊடகங்களை தூ எனத் துப்பத் தோன்றுகிறது.

01 July 2010

பதிவுலக சந்தேகங்களும் அதற்கான பதில்களும்

1:46:00 AM Posted by புலவன் புலிகேசி , 37 comments
"பாலாவின் பக்கங்கள்" என்ற வலைப்பூவில் எழுதிவரும் பதிவர் பாலா பதிவுலக விவாதங்கள் குறித்து சில சந்தேகங்கள் எழுப்பியிருந்தார். அவருக்கு என்னால் கொடுக்க முடிந்த விளக்கமே இந்தப் பதிவு.

அவரின் பதிவு: பதிவுலகமும் சில சந்தேகங்களும்...


//. "ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி செய்கிறாயே?" என்று கேட்டால் வரும் பதில் என்னவாக இருக்கிறது? "அதென்ன பெண்ணாக இருந்து கொண்டு? அப்படியானால் ஆண் செய்தால் தவறில்லையா?" என்பதுதான் எதிர் கேள்வியாக இருக்கிறது. கேட்பவரின் தொனி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோக்கம் ஒன்றுதானே? இது ஆணாதிக்கமா? ஆண் என்பவன் உணர்வுரீதியாக அதிகம் சிந்திப்பதில்லை. பெண் அதிகமாக சிந்திப்பது உணர்வுரீதியாகத்தான். உணர்வு ரீதியாக சிந்திப்பவர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள். அந்த தொனியிலேயே ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்ற வார்த்தை வருகிறது.//

பெண்கள் உணர்வு ரீதியாக சிந்திப்பவர்களாகவே இருக்கட்டும். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டுதான் இது போன்ற கேள்விகள் எழுப்பப் படுகின்றனவா? என்றால் நான் அடித்து சொல்வேன் நிச்சயம் இல்லை என்று. இது போல் பெண்களைப் பார்த்துக் கேட்டவர்கள் பலர் இருக்கின்றனர். ஏன் என்னையும் கூட சேர்த்துக் கொள்ளலாம். யாருக்கும் அவள் ஒரு பெண் என்ற எண்ணமே மேலோங்கி நின்று இது போல் "பெண்ணாக இருந்து கொண்டு இப்படி செய்கிராயே" என்ற கேள்வியை எழுப்புகிறது. இது நிச்சயம் ஆணாதிக்கத்தில் ஊறிப் போன மன்ப்பான்மையே.

//இதே போல பெண்ணுக்கு சமஉரிமை என்று சொல்பவர்கள் சொல்லும் முதல் வார்த்தை நாங்களும் ஆண்களுக்கு இணையாக பல செயல்கள் செய்கிறோம் என்பது. ஒருவர் மாதிரி இன்னொருவர் செய்வது எப்படி சம உரிமை ஆகும். ஆண்கள் போல் உடை உடுத்துதல், அவர்கள் செய்யும் தம்மடித்தல், தண்ணியடித்தல் போன்ற காரியங்கள் செய்யவே இன்றைய இளம் தலைமுறையினர் சம உரிமை என்ற சொல்லை கையில் எடுக்கிறார்கள் என்பது என் கருத்து. இதனை சுட்டிக்காட்டுபவன் ஒரு ஆணாக இருந்துவிட்டால், ஆணாதிக்கமா//

இன்று ஆண்களைப் போல் தம்மும், தண்ணியும் அடிக்கும் பெண்கள் எத்தனைப் பேரை உங்களுக்குத் தெரியும்? சதவீதத்தில் சொல்ல முடியுமா? அப்படியே இருந்தாலும் தம்மோ, தண்ணியோ ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தவறுதான். ஆனால் நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் விடயத்திலேயே ஒரு ஆணாதிக்கம் தெரிகிறது. இது போன்ற செயல்களை ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யலாமா? என்பதே உங்கள் கேள்வி எனப் புலப்படுகிறது. இது தீயப் பழக்கம் இருவரும் செய்யக் கூடாது என சொல்லியிருந்தால் உங்கள் வாதம் ஒத்துக் கொள்ளக் கூடியதாய் இருந்திருக்கும். இப்போது சொல்கிறேன் நிச்சயம் உங்களை அறியாமலே ஆணாதிக்கம் உங்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது.

//என் நண்பன் ஒருவன் இருந்தான். மருத்துவராவது அவன் கனவு. ஆனால் முடியவில்லை. காரணம் அவன் பிராமணன். அவனை விட குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் கிடைத்துவிட்டது. பிராமணனாக பிறந்ததுதான் அவன் செய்த தவறா?//

நண்பரே இது நிச்சயம் ஒரு மேட்டுக்குடி சிந்தனையாகவேத் தோன்றுகிறது. மருத்துவக் கனவு யாரோ ஒரு நண்பனுக்கு போனது கண்டு எரிச்சலடையும் நீங்கள், ஒன்றாம் வகுப்பு கூட படிக்க இயலாமல் கஷ்டப் படும் குழந்தைகளைப் பற்றி சிந்தித்ததுண்டா? நிச்சயம் கிடையாது. காரணம் தனக்குத் தேவையான உணவு,உறைவிடம், கல்வி, கொஞ்சம் சொகுசு அனைத்தும் கிடைத்த நடுத்தர அல்லது மேல்த்தர வர்க்கத்தை சேர்ந்த யாருக்கும் அவர்களுக்குத் தெரியாதவர்களின் பிரச்சினைகள் வெறும் செய்தியே. அதுவே அவர்களின் உறவு அல்லது நட்பு வட்டாரத்திற்கு நிகழும் போது அது பிரச்சினையாகி விடுகிறது. பார்ப்பனீயப் பிரச்சினைகளை கையிலெடுத்து பேசக் கூடாது. ஏன் இது பற்றி விவாதிக்கிறீர்கள் என்க் கேட்பது உங்களின் அறியாமையின் அடையாளமாகத் தோன்றுகிறது. பார்ப்பனீயம் என்பது எவ்வளவு கொடூரமான தீவிரவாத செயல் என்பது ஒடுக்கப் பட்ட மக்களுக்கும், அவர்களைப் பற்றி கவலைப் படும் உள்ளங்களுக்கும்தான் தெரியும். உங்களைப் போன்றவர்களுக்குத் தெரியாமற் போனதில் ஒன்றும் வியப்பில்லை.

//"நாட்டில் நடக்கும் அத்தனை வன்முறைகளுக்கும் தீவிரவாத இயக்கங்கள் காரணம் இல்லை, அரசுதான் மக்களை திசை திருப்ப இப்படி நாடகம் ஆடுகிறது, மக்கள் மட சாம்பிராணிகள்!!!" என்று தேர்தல் அன்று ஓட்டு போட செல்லாமல் வீட்டுக்குள் உட்கார்த்து பதிவு எழுதுகிறார்களே இவர்கள்தான் நல்லவர்களா? ஒரு சினிமாவை கூட அரசியல் நோக்கோடு, உர்ரென்று பார்த்துக்கொண்டிருந்தால் மன இறுக்கம் வந்து பைத்தியம் பிடித்து விடாதா?//

இங்கு நீங்கள் யாரைத் தீவிரவாதி எனக் கூறுகிறீர்கள் எனத் தெளிவுப் படுத்த வேண்டும். எந்த பதிவரும் அஜ்மல் கசாப்பையோ, ஒசாமாவையோ ஆதரித்து எழுதியதில்லை. அவர்களின் எழுத்துக்களெல்லாம் ஒடுக்கப்படும் பாமர மக்களின் இயக்கங்களான விடுதலைப்புலிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் குறித்தே இருந்திருக்கிறது. இவர்களை நீங்கள் தீவிரவாதிகள் எனக் கருதினால் நிச்சயம் மேம்போக்காக செய்திகள்ப் படிக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தில் நீங்களும் ஒருவர் என்பதே உண்மை. தன் உரிமைக்காகப் போராடும் எந்த ஒரு அமைப்பின் போராட்டமும் அரசுக்கு எதிராகவே இருக்கும். நிச்சயம் மக்களுக்கு எதிராக இருக்காது. அவர்களை ஒடுக்குவதற்கு இந்த அரசும் பல முதலாளித்துவ நிறுவனங்களுடன் கை கோர்த்து பல செயல்களை செய்து பழியை அவர்கள் மீது போடுவது சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் அறிந்ததே. அப்புறம் யாரும் முத்லாளிகளுக்கு கீழ் பணி செய்ய வில்லையா? எனக் கேட்டீர்களே, அது ஒரு நல்லக் கேள்வி. பதிலைப் புரிந்து கொள்ளுங்கள் யாரும் முதலாளிகளுக்கு கீழ் வேலை செய்யக் கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. முதலாளிகளின் முதலாளித்துவக் கொள்கைகள் மாற வேண்டும். தொழிலாளிக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம். இது தவறு என நினைத்தால் அதுவும் நிச்சயம் நடுத்தர வர்க்க சிந்தனையே.

// கடவுள் மறுப்பாளர்கள் எல்லோருமே கடுமையான வார்த்தைகளால் கடவுளை திட்டுகிறார்களே இது எதற்காக? பொதுவான, வேரிலேயே ஊறிப்போன ஒரு அடிப்படை நம்பிக்கையை உடைக்க வேண்டுமானால் எவ்வளவு பக்குவம் பொறுமை வேண்டும்? மோசமான ஒரு தாய்க்கு பிறந்த ஒரு மகனிடம் சென்று "உங்கம்மா ஒரு தே...." என்றால் அவன் என்ன செய்வான்? அடிக்கத்தான் வருவான். நான் உண்மையைதானே கூறினேன்? என்று வாதம் செய்வது எந்த வகையில் நியாயம்? ஒரு வலைத்தளத்தில் நான் பார்த்த பெரியாரின் வாசகம் இது.//

நீங்கள் எதைக் கடவுள் என நம்புகிறீர்கள் எனத் தெரியவில்லை. முதலிலேயே சொல்லி விடுகிறேன் எனக்கு மதம் சார்ந்த எந்தக் கடவுள் மீதும் நம்பிக்கைக் கிடையாது. என்னைப் பொறுத்த வரைக் கடவுள் என்பது மனிதம் என்ற குணமாக இருக்க வேண்டும். அப்படி அல்லாத ஒன்றும் கடவுள் இல்லை. மற்றபடி நீங்கள் சொல்வது போல் கடவுளை எதிர்க்கும் எல்லோரும் கடவுளைத் திட்டுவதில்லை. அந்தக் கடவுள்களின் உண்மை நிலையை விளக்கும் பலர் உண்டு. ஆனால் சிலர் சும்மாத் திட்டிப் பதிவெழுதுவர். அவர்களின் பதிவுகளில் எனக்கும் உடன் பாடில்லை.

உங்கள் சந்தேகங்களுக்கு ஓரளவு பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். மேலும் இருந்தால் நிச்சயம் பின்னூட்டத்தில் விவாதிக்கலாம்.