கடவுளை மற..மனிதனை நினை..

19 April 2010

டரியல் (19-ஏப்ரல்-2010)

6:43:00 AM Posted by புலவன் புலிகேசி 24 comments
ஒரு வழியாக பழைய நிறுவனத்திலிருந்து விடைபெற்று புதிய நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வாரமாயிற்று. பணி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இனி நிச்சயம் அவ்வப்போது வலைப்பூவில் தலையைக் காட்டுவேன்.

------------------------------------
"தமிழ்ப் பட பாடல்களில் ஆங்கிலம் கலந்து எழுதுவதாக சிலர் குறைபட்டுக் கொண்டனர். அப்படியெல்லாம் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. நான் துட்டுக்கு பாட்டு எழுதும் கவிஞன். தமிழை வளர்க்க நான் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அது தன்னாலேயே வளரும் தன்மை கொண்டது..."

எனக் கவிஞர் வாலி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

------------------------------------
தாயார் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை:


"விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல."

அப்புடிங்களா சுவாமி, அப்ப இங்க ஆட்சியில இருக்குறவங்க எல்லாம் இந்தியர்கள் தானா? அவங்கல்லாம் வந்துத் தங்க அனுமதிப்பீங்க, ஒரு தமிழ் மூதாட்டி வரக்கூடாது. வாழ்க உமது மனித நேயம்.

------------------------------------

நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் விடுத்து பதி விரத பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார் அந்த கொச்சைத்(பச்சை) தமிழன். இவரை முதல்வர் என்கிறோம். இது போன்ற விசயங்களில் இவர்தான் முதல்வர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
------------------------------------
இந்த வாரப் பதிவர்: சிறகுகள் "பாலவாசகன்"


திடீர் திடீர் என இவர் எழுதும் காதல் கவிதைகள் மிக அழகாகவும், அருமையாகவும் இருக்கும். புகைப்பட விரும்பி. அவ்வப்போது தான் தன் அலைபேசியில் எடுத்தப் படங்களை வெளியிடுவார்.

இவரது வலைப்பூ: சிறகுகள்

------------------------------------

இந்த வார டரியல் நண்பர் அகல் விளக்கு எழுதிய "கடவுளும், நானும்". இவரும் கடவுளைக் காண்பதில் என் வரிசையில் சேர்ந்து விட்டார். படித்துப் பாருங்கள் புரியும் அவர் கடவுளை எங்கே கண்டார் என.

17 April 2010

சொந்த பந்தங்கள் - 5

8:04:00 PM Posted by புலவன் புலிகேசி , 19 comments
நண்பன்



சுமந்து பெற்று சீராட்டி
வளர்த்த பெற்றோரை விட
என்னை நன்கறிந்தவ(ள்)ன்

இன்பமோ துன்பமோ இரண்டிலும்
பங்கெடுத்து உறுதுணையாய்
இருப்பவ(ள்)ன்

அடித்துப் பிடித்து சண்டையிட்டாலும்
அடுத்த நிமிடம் அருகில்
நிற்பவ(ள்)ன்

என் பிழைகளைத் தனிமையில்
திருத்தி என் பெருமைகளை
மற்றவரிடம் சொல்பவ(ள்)ன்.......

16 April 2010

அங்காடித்தெருவில் நான்

9:00:00 AM Posted by புலவன் புலிகேசி , , 19 comments

அங்காடித்தெருத் திரைப்படம் பார்த்து பல நாட்கள் ஆனாலும் இன்றும் மனதை விட்டு நீங்கவில்லை. இப்படி ஒரு திரைப்படத்தைத் தந்த வசந்தபாலனுக்கு என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும். இப்படத்தைப் பற்றி பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்து விட்டன.

ஆனால் எப்படிப் பட்ட விமர்சனமாக இருந்தாலும் இப்படத்தை அவர்களால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை என்பது அவர்களின் விமர்சனன்களை முழுமையாகப் படித்த பின் தெரிந்தது. பலர் விமர்சனங்களில் சொல்லியிருந்தது "படத்தில் சிலக் காட்சிகள் மிகைப் படுத்த்டப் பட்டுக் காட்டப் பட்டிருந்தது" என்று.

உண்மைதான், ஆனால் யதார்த்தத்தை அப்படியே படமாக்கினால் அப்படத்தை வெற்றிப் படமாக்க மக்கள் தயாராக இல்லை. சினிமாவிற்கென சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றைத் தாண்டிப் படமெடுக்கும் இயக்குனர்கள் மிகச்சிலரே. ஆனால் அவற்றை முற்றிலும் புறக்கணித்துப் படமெடுக்க இயக்குனர்கள் இல்லை என சொல்வதை விட, ஏற்றுக் கொள்ளும் ரசிகர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் வசந்தபாலன் எடுத்த இந்தப் படமும் சேர்ந்திருக்கிறது. மனித உணர்வுகளை படமாக்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அந்த கடினமான வேலையை செய்து ஒரு வெற்றியை பெற்றிருக்கிறார் வசந்த பாலன். இந்த அளவு உணர்வுகளைப் பதிந்ததற்கே மக்களிடம் என்ன வரவேற்பு கிடைத்திருக்கிறது?

மாஸ் ஹீரோக்கள் படம் அளவிற்கு வசூல் சாதனையோ, மக்கள் கூட்ட்ம் பெருந்திரளாகவோ இல்லை. பல திரையரங்கங்களில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகள்தான் ஓடுகிறது. ஆனால் வழக்கமான மசாலா படமான "பையா" நான்கு காட்சிகள், வசூல் சாதனை எனப் பின்னியெடுக்கிறது.

இந்த நிலையில் அந்த விமர்சகர்கள் சொல்வது போல் படமாக்கியிருந்தால் வந்த சுவடு தெரியாமல் வெளியேறியிருக்கும் இந்த "அங்காடித் தெரு". இன்னும் மக்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு வரவில்லை என்பதுதான் உண்மை. இப்படம் பிடித்திருந்தாலும் குறுந்தகடுகளில் பார்க்கும் கூட்டம்தான் அதிகம்.


அப்புறம் பலர் சொல்லியிருந்தனர் "இப்படத்தின் பாதிப்பு சில மணித்துளிகளே இருக்கும்" என்று. உண்மைதான் என்றாலும் முழுமையாக ஒப்புக் கொள்ள இயலவில்லை. காரணம் இப்படத்தைப் பார்த்து விட்டு ரெங்கநாதன் தெருக் கடைகளுக்குள் நுழையும் யாருக்க்கும் அதன் ஊழியர்கள் மீது ஒரு கோபம் வரவைக்காது.

அவர்களிடம் ஒரு கணிவு கலந்த பேச்சு நிச்சயம் இருக்கும். அது அந்த ஊழியர்களுக்கு ஒரு உற்சாகத்தையும், சந்தோசத்தையும் தரக்கூடும். மேலும் இப்படம் பல ஆரோக்யமான விவாதங்களைத் தூண்டி விட்டிருக்கிறது. ஆனால் இப்படத்தின் பாதிப்பு எப்படி சில விநாடிகளோ, அதே போல்தான் அந்த விமர்சனங்களின் பாதிப்பும்.

அனைத்தும் கருத்து தெரிவிப்பதோடு நின்று விடும். வேறொன்றும் நிகழப் போவதில்லை. இலங்கைப் பிரச்சினை, உலகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துப் பழகிப் போய் விட்டோம். நம்மை சுற்றி நடக்கும் பிரச்சினைகளை மறந்து போய் விட்டோம்.

அங்காடித்தெரு - பார்க்காதவர்கள் திரையரங்கம் சென்று பாருங்கள்.

05 April 2010

பதிவுலகிலிருந்து கொஞ்ச நாள் ஓய்வு

7:30:00 AM Posted by புலவன் புலிகேசி 24 comments

நண்பர்களே,

சில நாட்களாக எனக்கு அலுவலும், சொந்த வேலைகளும் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. அதனால் பதிவுலகிலிருந்து கொஞ்ச நாள் (அப்பாடா...! ன்னு சொல்றது கேக்குது. நாள் கணக்குலதான் ஓய்வு, நிரந்தரமில்ல.) ஓய்வெடுக்க முடிவெடுத்திருக்கிறேன். அதனால் தான் உங்கள் பதிவுகளை சில நாட்களாக படிப்பதில்லை. மீண்டும் சந்திப்போம்.

நட்புடன்,

02 April 2010

தேநீர் - சிறுகதை

6:50:00 AM Posted by புலவன் புலிகேசி 19 comments

"என்னடா பயளுவ வயலுக்குப் போய்ட்டானுங்களா?" என பல் தேய்த்து கொண்டே கேட்டான் பண்ணையார் பரமசிவம். "ஐயா, எல்லாரும் போயி அறுவடை காலைல ஆறு மணிக்கே ஆரம்பிச்சிருச்சிங்க" என்று கைகட்டியவாறே சொன்னான் கணக்கன் குப்புசாமி.

அந்த அழகிய கிராமத்தில் காலை பத்து மணி வரை உறங்கும் ஒரே ஆள் இந்த பரமசிவமாகத்தான் இருக்க முடியும். அங்குள்ள மனிதர்களுக்கு விவசாயம் தவிற ஒன்றும் தெரியாது. ஊரெங்கும் பசுமை நிறைந்து செழிப்புடன் இருக்கும். முழுக்க முழுக்க இயற்கையையும், உழைப்பையும் மட்டுமே நம்பியிருக்கும் ஊர் அது.

"ஏண்டா மொக்க என்னடா அருவா வச்சிருக்க, போயி அந்தக் கல்லுல தீட்டிட்டு வந்து அறுடா" என்றவாறு சுறுசுப்பாய் அறுவடையில் ஈடு பட்டிருந்தான் சுப்பையன். சுப்பையன் உழவு செய்யும் உடம்பு, உடற் பயிற்சி நிலையம் என்றால் என்னவென்றே தெரியாத அவன் உடம்பில் ஆறு அடுக்கு கட்டமைப்பு(six packs).

பல் தேய்த்து முடித்து "அடியேய் பாண்டியம்மா சுடுதண்ணி வச்சியா இல்லையா?" என கடுகடுத்தான் பரமசிவம். "இதோ வரேங்க" என ஒரு குரல் மட்டும் கேட்டது. சிறிது நேரத்தில் கந்தாங்கிச் சேலையுடன் கையில் சுடுதண்ணி பாத்திரம் சுமந்து வந்தாள் பாண்டியம்மா. "சரி சரி வச்சிட்டு போயி ஒரு டீயைப் போடு" என்றான்.

அறுவடை முடியும் வரை சுப்பையனுக்கு வேறு எது பற்றிய எண்ணமும் இருந்ததில்லை. அறுவடை முடித்து வீடு திரும்பும் போது அவனது நடை வீட்டை நோக்கி என்பதை விட குப்பாயி போடும் அந்த பாலில்லா டீத்தண்ணியை நோக்கிதான் என சொல்ல வேண்டும். செல்லும் போது வழியில் காண்போரிடம் கூட "அவன் வாய் மட்டுமே பேசும் மனம் முழுதும் அந்த டீத்தண்ணியில்தான் இருக்கும்".

சுக்கு, பனங்கல்கண்டு சேர்த்து இடித்து பாலை அடுப்பில் வைத்து அதில் கலந்து, டீத்தூள் சேர்த்து கொதிக்கும் தருவாயில் போடப்பட்ட உடைத்த ஏலத்தின் வாசனையுடன் டீத் தயாரித்துக் கொண்டிருந்தாள் பாண்டியம்மா.

ஒரு ரூபாய் சக்கரை, சுடுதண்ணீரில் போடப்பட்ட டீத்தூளுடன் தன் மூச்சுக்காற்றை ஊதி அடுப்பைப் பற்ற வைத்து காந்தல் வாசனையுடன் பாலில்லா டீத் தயாரித்துக் கொண்டிருந்தாள் குப்பாயி.

குளித்து முடித்து ஒரு வேஷ்டியை அணிந்து வந்து சாய்நாற்கலியில் அமர்ந்தான் பரமசிவம். பாண்டியம்மா கம கம வாசனையுடன் டீயைக் கொண்டுவந்து கொடுத்தாள். கையில் அன்றைய தினசரி இதழ் ஒன்றை எடுத்தவாறே டீயை அருந்தத் தொடங்கினான். "என்னடி டீப் போட்டுருக்க...ஒரே தண்ணியா இருக்கு" என டீயைக் குடிக்காமலே வைத்து விட்டான். பாண்டியம்மா உள்சென்று மீண்டும் டீ போட ஆரம்பித்திருந்தாள்.

நேரம் பதினொன்றைக் கடந்திருந்தது. டீத்தண்ணித் தேடி வீடு நுழைந்தான் சுப்பையன். சுடச்சுட குப்பாயி கொடுத்த டீத்தண்ணியை நாவில் உமிழ்நீர் சொட்ட சொட்ட ஊதி ஊதி கடைசி சொட்டு வரைக் குடித்ததும், எதோ அமிர்தம் அருந்தியது போல் இருந்தது அவனுக்கு. மீண்டும் ஒரு சுறுசுறுப்பு வந்தவனாய் எழுந்தோடி தன் இரண்டு மாடுகளையும் மேய்ச்சலுக்கு விரட்டிச் சென்றான்.

பி.கு: சென்றமாத வெள்ளி நிலா இதழில் வெளிவந்த எனது சிறுகதை.