கடவுளை மற..மனிதனை நினை..

31 December 2009

அஜீத் விஜய்க்கு முன்

6:43:00 AM Posted by புலவன் புலிகேசி 34 comments

நான் இந்த பதிவுலகில் நுழைந்து 4 மாதகாலம் முடிவடையும் நிலையில் புத்தாண்டு பரிசாக என்னுடைய இந்த 50வது பதிவு. இந்த நான்கு மாத காலத்தில் என் பதிவை தொடரும் நண்பர்கள் 102(எனக்கு கிடைத்த பரிசு) பேருக்கும் (எவ்வளவு பேர் படிக்கிறாங்கன்னு தெரியல), தொடராமல் படித்து புன்னூட்டமிட்டும், இடாமலும் ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

49 படங்களில் எந்த ஒரு வித்தியாசமும் காட்டாமல் நடித்து(?) குழந்தைகளை ஏமாற்றி வரும் விஜய், வித்தியாசப்படுத்தும் திறமை இருந்தும் கதைத் தேர்வில் கோட்டை விட்டு தோல்விகள் பல சந்தித்து போராடி கொண்டிருக்கும் அஜீத் இவர்கள் இருவரும் 50 நோக்கி பயணித்து கொண்டிருக்கும் நிலையில் நான் உங்கள் ஆதரவில் 50 அடைந்தே விட்டேன் (அடக் கொடுமையேன்னு நெனைக்கிறது தெரியுது).

நான் பதிவெழுத வந்த கதை:

என் நண்பன் ஊடகன் பதிவெழுத துவங்கிய பின் வாசகனாக மட்டுமிருந்த எனக்கும் பதிவெழுத ஆசை வந்தது. அதன் விளைவுதான் இன்று இந்த 50 (ஊடகனை யாரும் கல்லால் அடிக்க வேண்டாம்). ஆரம்பித்த காலத்தில் நண்பர்கள் உதவியுடன் தமிழிஸ் பற்றி தெரிந்து கொண்டு அதில் இணைத்த பின் நண்பர்கள் கூட்டம் அதிகரித்தது.

அதன் பின் நண்பர்கள் பாலாசி, பிரபாகர் உதவியில் தமிழ்மணத்தில் இணைத்த பின் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. அதன் பின் உலவு, நம்குறள் என்று திரட்டிகளின் வரிசை நீண்டது. 50க்கு உதவி புரிந்த திரட்டிகளுக்கும் நன்றி.

பதிவெழுதும் போது சில கவிதைகள் கதைகளை வெளியிடும் முன் "இளமை விகடனுக்கு" அனுப்பியதில் அங்கும் அங்கீகாரம் கிடைத்தது. இந்த பங்களிப்பிற்காக இளமை விகடன் 3 புத்தகங்களை பரிசாக அளிப்பதாக கூறியுள்ளது. அதன் பின்னர் என் சில பதிவுகள் இளமை விகடனால் சிறந்த பதிவுகளாக (குட் பிளாக்) தேர்ந்தெடுக்கப் பட்டு வெளியிடப் பட்டது. விகடனுக்கு என் நன்றிகள்.

நல்ல பல பதிவுகளை படிக்க துணை புரிந்த இந்த வலைப்பூ உலகிற்கும், முழு உறுதுணையாக இருந்து வரும் கூகுள் குழுமத்திற்கும் என் நன்றிகள். என் பதிவுகளில் வரும் எழுத்து பிழைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி திருத்தி வரும் குணசீலன் மற்றும் கதிருக்கும் நன்றிகள்.

இந்த பதிவுலகில் பல பதிவுகளை பாராட்டியும் சில பதிவுகளுக்கு எதிர் கருத்து தெரிவித்தும் (இதைத்தான் சண்டைன்னு சொல்றாரு நம்ம வெண்ணிற இரவுகள் கார்த்தி) வாசகனாகவும், பதிவராகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். என்னை கவர்ந்த பதிவுகளை பற்றி எழுத ஆசை, ஆனால் அதுக்கு இந்த பதிவு பத்தாது என்பதால் அதை பற்றி டரியல் போல் வாரம் ஒன்றாக எழுதலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.

அனைத்து நண்பர்களுக்கும் (மைனஸ் ஓட்டு போடுறவங்களும்தான்) என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஊக்கம் தொடரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து உங்கள் நண்பன் "புலவன் புலிகேசி". அனைவருக்கும் புதுவருட நல் வாழ்த்துக்கள்.

30 December 2009

வாழ்க்கை பயணத்தில் பாரதியுடன் நானும்

3:48:00 AM Posted by புலவன் புலிகேசி 17 comments

தாய் அழ தந்தை
துடிக்க பிறந்த பின்
இருவருடன் உறவினர்
சிரிக்க நீ மட்டும்
அழுது கொண்டு
அரவனைத்து பராமறித்து
வளர்க்கப் பட்டு பின்

உறவும் நட்பும் பெருகி
நீயும் தாயாகவோ தகப்பனாகவோ
மாறி அதே பணியை
தொடர இறப்பு வந்து
பலர் அழ சிலர் மகிழ
முடியுமிந்த வாழ்க்கை உனக்கு
வேண்டாம்

எதிர்காலத்தில் எனக்கு திருமணமாகி பிறக்க போகும் என் குழந்தைக்கு நான் சொல்ல போகும் பாடமிது (ஒரு 4 வருசம் ஆகும்).

நாம் அனைவரும் இந்த சாதாரன வாழ்க்கைக்காகத்தான் போராடி கொண்டிருக்கிறோம். இந்த பிறப்புக்கும் இறப்புக்குமிடையில்தான் எத்தனை மகிழச்சி, துக்கம், சண்டைகள். பெரும் பணம் சேர்க்கும் கடமை எனக்கிருக்கிறது. என் சந்ததிக்காக அல்ல. எனக்கு கிடைத்த இந்த சாதாரண வாழ்க்கை கூட கிடைக்க பெறாமல் சாலையோரத்தையும், அனாதை இல்லத்தையும் இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வரும் என்னை போன்ற மனிதனுக்காக.

இது போன்ற மனிதர்களை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். நம்மில் சிலர் அவர்கள் மீது பரிதாப பட்டு காசோ உணவோ வழங்கியிருப்போம் அவ்வளவுதான். இன்று பல பெரும்பணம் படைத்த நிறுவன அதிபர்கள் சேர்க்கும் பணமெல்லாம் தாங்கள் தான் உலகின் முதன்மை பணக்காரன் என்ற பட்டத்தை அடையும் நோக்கமாகவே இருக்கிறது.

சிலர் மனமுவந்து சேவைகளும் செய்கின்றனர். பலர் இன்னும் அனாதையாகவோ பிச்சைகாரராகவோ இருப்பதற்கு காரணமும் இதுதான். அவர்களின் தேவை ஒரு வேலை உணவு அல்ல. நிரந்தரமான உணவும் இருப்பிடமும். இது கிடைக்க அவர்கள் கல்வியறிவும், வேலைவாய்ப்பும் பெற வேண்டும்.

பணம் இதை கண்டு பிடித்த பின்தான் ஏற்றதாழ்வுகளும் உருவாகி மனித மனங்கள் சுருங்கி மனிதன் மனிதத்தை மறந்து சுயநலவாதியாக மாற்ற பட்டான். நான் முன்னரே ஒரு பதிவில் சொல்லியதுதான் "என்னுடைய இந்த வாழ்க்கை பயணம் முடியும் முன் குறைந்தது ஒரு ஆதரவற்ற மனிதனாவது என்னால் கல்வி பெற்று திறமை கொண்டு வேலை பெற்று சாதாரண மனித வாழ்க்கை எய்த வேண்டும்" என்பது என் இலட்சியமாக உள்ளது. நிச்சயம் அதற்காக உழைப்பேன். இதையே என் சந்ததிக்கும் போதிப்பேன்.

பாரதி சொன்னது போல்

தேடிச் சோறு நிதம் தின்றுபல
சின்னஞ் சிறுகதைகள் பேசிமனம்
வாடித் துன்பமிக உழன்றுபிறர்
வாடப் பலசெயல்கள் செய்துநரை
கூடிக் கிழப்பருவ மெய்திகொடுங்
கூற்றுக் கிறையெனப்பின் மாயும்பல
வேடிக்கை மனிதரைப் போலேநான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

என் சந்ததிக்காக வாழும் இந்த சாதாரண வாழ்வியலில் இருந்து விடுபட்டு ஒரு மாறுபட்ட மனிதனாக என்னை உருவகப்படுத்தி கொள்ள இந்த முயற்சி நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில்........

28 December 2009

காமம்தான் காதலா?

2:39:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments

காதல் கொண்டேன் எனை
காதலியுடன் சேர்த்து வை
எனக் கதறிய நண்பனுக்காய்

அப்பெண்ணை பெற்றவன் பிரித்து
உற்றவன் இவன் எனக்
கூறி இணைத்து வைத்தேன்

அறுபதும் முப்பதும் முடித்து
பிரிந்து வந்த அப்பெண்ணை
வேண்டாம் என பெற்றவனும்

இவள் இனி தேவையில்லை
என உற்றவனும் உதறி
தள்ள அனாதையாய் அவள்

காரணம் நானோ என்ற
குழப்பத்தில் நண்பனை கேட்டேன்
காமம்தான் காதலா?

27 December 2009

காதலி(யி)ல்லா நண்பன்

4:33:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments

அலுவல் களைப்பில் அயர்ந்து
உறங்கிய அந்த ஞாயிறில்
கால்களை எட்டி மிதித்து
எழுப்பிய நண்பனை பார்த்ததும்
வந்த கோபம் மாறியது
புன்னகையாய்

அதன் பின் சென்ற
உணவகம் மாலை நேர
மெரீனா அரட்டை இரவு
நேர திரையரங்கம் இவை
அனைத்தும் சாத்தியமானது
எங்களுக்கு காதலி இல்லாததால்

26 December 2009

டரியல் (26-திசம்பர்-09)

2:28:00 AM Posted by புலவன் புலிகேசி 26 comments
இந்த வாரம் நான் எழுதிய "வறுமையில்" என்ற கவிதை இளமை விகடனில் வெளிவந்துள்ளது.


என் பதிவில் இக்கவிதை

-------------------------------

பதிவர் "வெண்ணிற இரவுகள்" கார்த்தி கடைசி பதிவு என்று எழுதிய பின் அவரை சமாதானப் படுத்தி மீண்டும் எழுத சொன்னேன். அதன் பின் பலரும் அதையே சொன்னதால் எழுதினார். கார்த்தி கோபங்களை விடுத்து எந்த முடிவாக இருந்தாலும் பக்குவமாக யோசித்து எடுங்கள்.

-------------------------------

அவதார் திரைப்படம் பார்த்தேன். அப்பப்பா என்ன ஒரு தொழில்நுட்பம். பல கோடி ரூபாய் செலவு. ஆனால் டைட்டானிக் படத்தின் வசூல் சாதனை முறியடிக்கப் படும். இது போல் ஒரு படம் பார்த்து பல வருடமாயிற்று. பன்டோரா என்ற பூமி போன்ற ஒரு இடத்தில் வசிக்கும் "நவி" இனத்தை அங்கிருந்து விரட்டி அங்குள்ள வளங்களை பூமியில் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளும் மனிதர்கள். அதற்காக நவி உடலில் கூடு பாய்ந்து நவிகளுடன் உலவு பார்க்க செல்லும் நாயகன் அவர்களின் குணாதிசயங்களையும், மனிதர்களின் பேராசையயும் பார்த்து பின் நவிகளுக்காக போராடும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்று இறுதியில் நவியாகவே மாறுகிறான். இங்கு பயன்படுத்த பட்டுள்ள கணிப்பொறி நுட்பங்கள் (CG) வியக்க வைக்கின்றன. பாக்கலைன்னா போய் பாருங்க. சத்யம் திரையரங்கில் வியாழக் கிழமை வரை நுழைவு சீட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாம்.

-------------------------------

ஈரோடு பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடை பெற்றிருக்கிறது. முக்கியமாக ஒரு மிகப்பெரும் பதிவர் சந்திப்பாக நடந்திருக்கிறது. அதில் கலந்து கொள்ள இயலாதது மிகவும் வருத்தமளிக்கிறது. மக்கா அடுத்த சந்திப்பின் போது சொல்லுங்க, நிச்சயம் வாரேன்.

-------------------------------

என் இளங்கலை படிப்பின் போது கிடைத்த நண்பர்கள் அனைவரும் ஒருங்கினைந்து ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து வருகிறோம். இது எங்கள் சந்திப்பின் 7வது ஆண்டு. இந்த ஆண்டும் எங்கள் ஊரிலுள்ள ஒரு அனாதை ஆசிரமத்திற்கு நண்பர்கள் சார்பாக எதாவது உதவலாம் என முடிவெடுத்திருக்கிறோம்.

-------------------------------

பையா படத்தின் பாடல்கள் கேட்டேன். அதன் மெட்டுக்களில் சில முன்னரே கேட்டது போலிருந்தாலும் அனைத்து பாடல்களும் அருமை. குறிப்பாக "துளி துளி துளி மழையாய்" மற்றும் யுவன் குரலில் "என் காதல் சொல்ல நேரமில்லை" மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. நா. முத்துகுமாரின் பாடல் வரிகள் அழகு.

-------------------------------

இந்த வார டரியல் கணவர் ஹரி மீது அளவு கடந்த காதல் கொண்ட தோழி திவ்யாஹரியின் "நீ" என்ற கவிதை. இவரின் ஒவ்வொரு கவிதையிலும் ஹரி மீதான பாசம் தெரிகிறது. வாழ்த்துக்கள் ஹரி.

-------------------------------

24 December 2009

யார் அவன்?

5:31:00 AM Posted by புலவன் புலிகேசி 36 comments
கந்தசாமி மிகப்பெரும் அரசியல்வாதி. அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவன் என்று கட்சி தலைமையில் அவன் மீது ஒரு அபிப்ராயம். அவன் யார் மீதும் நம்பிக்கையில்லாதவன் ஒருவனை தவிர. உண்மையில் சொன்னால் கந்தசாமி ஒரு அரசியல்வியாதி.

ஆம் இந்த இருபது ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவன் குடும்பத்திற்காக மட்டுமே சேவை செய்திருக்கிறான். மக்களை பற்றி தேர்தல் நேரத்தில் மட்டுமே கவலைப் படும் வழமையான அரசியல்வியாதிகளுள் அவனும் ஒருவன். அவனுக்கு துணையாக கூட்டாளியாக அந்த ஒருவனும்.

கந்தசாமிக்கு அவன் இருக்கிறான் என்ற எண்ணம் தான் இத்தனை தவறுகளையும் செய்ய தூண்டியது. இவன் எது செய்வதாக இருந்தாலும் அவனிடம் சொல்லி விட்டுதான் செய்வான். எவ்வளவு லஞ்சம் கிடைத்தாலும் நேர்மையாக(?) அவனுக்கும் பங்கு கொடுத்து விடுவான்.

ஆனால் கந்தசாமிக்கு துணையாக நிற்பவன் மீது மக்களில் பலருக்கு நல்லவன் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் தகுதியற்றவன் அவன் என்பது அதே மக்களில் சிலரின் அபிப்ராயம்.

அடுத்த சட்டசபை தேர்தல் நெருங்கியது. கந்தசாமி இந்த முறையும் தான் தான் வெற்றி பெற வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தான். அந்த ஒருவனின் இல்லத்தில் வைத்து அவன் உதவியுடன் தொகுதி மக்களுக்கு பணமாகவும் பொருளாகவும் லஞ்சம் பட்டுவாடா செய்தான்.

தேர்தல் நாள் அன்று எதிர்கட்சிக்காரனும் கந்தசாமி ஆட்களும் மாறி மாறி கள்ள வாக்குகள் செலுத்தினர். கந்தசாமி செலவு செய்த பணத்தாலும் போட்ட கள்ள வாக்குகளாலும் வெற்றி பெற்றான். அன்றுடன் அந்த மக்களையும் மறந்து விட்டான்.

ஆனால் அந்த ஒருவனுக்கு மட்டும் மறவாமல் அவன் தொகுதியில் ஒரு வீடு கட்டி கொடுத்தான். மக்களும் மகிழ்ச்சியாக அந்த இல்லத் திறப்பு விழாவிற்கு வந்து விழாவை சிறப்பித்தனர். கந்தசாமி செய்தது நல்ல விடயம் என்று பாராட்டினர்.

அதோடு முடித்து கொண்டு மீண்டும் குடும்பத்தை முன்னேற்றுவதில் குறியாயிருந்தான். வழக்கம் போல் மக்களுக்கும் கந்தசாமி மீது கெட்ட அபிப்ராயம் தோன்றி அவன் மீது கோபம் வர வைத்தது. ஆனால் இந்த கோபத்தை எல்லாம் தேர்தலின் போது மட்டும் பணம் கொடுத்து சரிசெய்து விடலாம் என்ற அரசியல் தந்திரம் தெரிந்தவன் கந்தசாமி.

இப்படி கந்தசாமி மீது அடிக்கடி வரும் கோபம் மக்களுக்கு ஒரு முறை கூட அவனின் கூட்டாளியான அந்த ஒருவன் மீது வரவில்லை. என்ன மக்கள் இவர்கள். ஒருவேளை அந்த கோபம் அவன் மீது வந்திருந்தால் கந்தசாமி போன்றவர்கள் அரசியலில் இருந்து துரத்த பட்டிருப்பார்கள் என்று சிந்திக்கத் தெரியாதவர்கள்.

சரி யார் அந்த ஒருவன்? என்று கேட்பது புரிகிறது. வேற யாரு மக்களை யுகம் யுகமாக ஏமாற்றி கொண்டிருக்கும் கட்வுள்(?). இவனுக்கு கந்தசாமி மட்டும் கூட்டாளியல்ல. இது போல பல தவறு செய்பவர்கள் இவனது கூட்டாளிகள். அவனுக்கு பெயர் கடவுள். என்ன கொடுமை இது.

பி.கு: கடவுள் என்பவன் மனிதத்தில் ஒரு நல்ல குணமாக இருக்க வேண்டுமே தவிற கல்லாகவோ, கோவிலாகவோ இருந்து தவறு செய்பவர்களின் கூட்டாளியாக இருக்க கூடாது. அப்படி பட்டவன் கடவுளாக இருக்கவே முடியாது.

22 December 2009

நினைவில் நில்லாமல்

2:13:00 AM Posted by புலவன் புலிகேசி 42 comments

முதன் முதல்

தாய் கொடுத்த முத்தம்
பெயர் சூட்டிய பெருவிழா
தொட்டிலில் கண்ட கனவு
அணிந்த ஆடை

முளைத்த பல்
பார்த்த முகம்
தடுக்கி விழுந்த தளம்
ரசித்த ஒலி

ருசித்த உணவு
தந்தை அடித்த அடி
பள்ளி சென்ற நாள்
படித்த பாடம்

பிடித்த ஆசான்
கிடைத்த நண்பன்
எத்தனை முறை யோசித்தாலும்
நினைவு வராமல்...

20 December 2009

மழை பிழையா..?

7:05:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments

மழையில் நனைய ஆசைதான்
அலுவல் ஆடைமுறை அனுமதி
மறுத்தாலும்

தலைக் கவச கண்ணாடி
விலக்கி முகம் நனைத்து
மகிழ்ந்தேன்

அலுவலகம் அருகாமை சாலையில்
மழைநீர் தேங்கியிருந்தது கண்டு
கோபம்

அரசு மீது வர வேண்டியது
பகுத்து ஆராயாமையால் வந்தது
மழை மீது

19 December 2009

டரியல் (19-திசம்பர்-09)

5:39:00 AM Posted by புலவன் புலிகேசி 49 comments
பதிவுலக நண்பர்கள் கேபிள் சங்கர், வெண்ணிற இரவுகள் கார்த்திக் ஆகியோருடன் ஒரு திடீர் சந்திப்பு என் அறையில் நடந்தது. சினிமா, ஈழம், அடியாள்கள் வைத்திருக்கும் சிற்றிதழ் எழுத்தாளர் பற்றி மூவரும் கலந்துரையாடினோம்.

கேபிள் சங்கர் வயது வித்தியாசமின்றி அனைவருடனும் பழக கூடிய நண்பர். இதுதான் அவரை நான் முதன் முதல் சந்தித்தது. இவரது சினிமா வியாபாரம் ஒரு புத்தகமாக வெளி வர உள்ளது.

வெண்ணிற இரவுகள் கார்த்திக் ஒரு நல்ல சிந்தனையாளர். இவருக்கும் எனக்கும் பல விடயங்களில் வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் மிக்கவர். இவரும் கூடிய விரைவில் ஒரு புத்தகம் வெளியிடுவார். வாழ்த்துக்கள் கார்த்தி.

அன்று எடுக்கப் பட்ட புகைப் படங்கள் கீழே


இவுருதான் யூத்தாம் (கவிஞர் (?) கேபிள் சங்கர்)

யாரு கிட்ட மொக்க போடுறாரு( நானும் கேபிளாரும்)

இவுருதாங்க அந்த சிற்றாசிரியரோட அடியாளாம்(வெண்ணிற இரவுகள் கார்த்தியும் கேபிளாரும்)

அலைபேசில வெடிகுண்டு வச்சிருப்பாரோ (நாங்கள் மூவரும்)

------------------------------------

நாளை ஈரோட்டில் பதிவர் சந்திப்பு நடைபெற உள்ளது. நண்பர்கள் அழைத்தார்கள். செல்ல வெண்டும் என்று ஆசைதான். ஆனால் அலுவல் காரணமாக இயலவில்லை. மக்கா சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள். (சைவ மற்றும் அசைவ உணவுகள் வேறு உண்டாம். வடை போச்சே!!!)

------------------------------------

இந்த வாரம் அந்த சிற்றிதழ் எழுத்தாளர் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது பற்றி கேவலமாக எழுதியிருந்தார். சிறுபிள்ளை தனமாக எழுதப்பட்டிருந்தது. வெளியிடபட்ட புத்தகங்கள் பற்றி எழுதாமல் அங்கு வந்திருந்த சக எழுத்தரை சாடும் நோக்கில் எழுதியிருந்தார்.இது சின்னப்பசங்க அவன் என்னை அடிச்சிட்டான் கிள்ளிட்டான்னு சொல்ற மாதிரி இருந்துது. குறை சொல்லித் திரிபவர் போல.


------------------------------------

இந்த வார டரியல் ஆழிமழை எழுதிய "மழையாய் பொழிந்திடும் காதல்..." என்ற புனைவு. மிக அருமையாக இருந்தது (கதையாய் ஒரு கவிதை). வாழ்த்துக்கள் நண்பரே.

------------------------------------

17 December 2009

உயிர் போகும் அவசரம்

5:59:00 AM Posted by புலவன் புலிகேசி 33 comments
இளமை விகடனில் சிறந்த பதிவுகள் பகுதியில்


இது ஒரு அவசர யுகம். எப்படி நான் முந்தி சென்று முன்னேறுவது என்ற எண்ணம் தான் பலரிடம் காணப்படுகிறது. அவன் முந்துவதால் அடுத்தவன் பாதிக்கப் படுவது பற்றி சிந்தித்து கூடப் பார்ப்பதில்லை. சில சமயங்களில் இத்தகைய முன்னேற்றம் அவனறியாமல் சில பல உயிர்களை கூட பலியாக்கியிருக்கும்.

நம்மில் பலர் அலுவலகம் செல்வதற்கு இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் பயன் படுத்துகிறோம். அலுவலகத்திற்கு செல்ல 90% பேர் அவசரமாகவும், வேகமாகவும், பல சமயங்களில் சாலைவிதிகள் மறந்து கூட செல்கிறோம். இங்கு அலுவலகத்தை அடையும் சுயநலம் மட்டுமே உள்ளது. "அவசர ஊர்தி" இது தாமதமானால் என்ன நடக்கும்? பெரும்பாலும் உயிர் போகும். நாம் அலுவலகத்துக்கு தாமதமாக புறப்பட்டு சுயநலமாக செயல்படுவதால் இது போன்று பல உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய இத்தகைய அலட்சியத்தால் போக்கு வரத்து நெறிசல் ஏற்பட்டு அந்த "அவசர ஊர்தி" சரியான நேரத்திற்கு மருத்துவமனை செல்ல இயலாமல் நமக்கு பரிட்சயமில்லாத நபர் உயிரிழக்க நேரிடுகிறது. ஒரு நாள் இத்தகைய நிலை நமக்கும் நேரலாம். போக்கு வரத்து நெறிசல் இருக்கும் என நமக்கு முன்னரே தெரிந்திருந்தாலும் காலத்தை கணக்கிட்டு முன்னரே புறப்படுவதில்லை. ஒருவரை ஒருவர் முந்த முயன்று ஒருவரும் செல்ல இயலாமல் சாலையை அடைத்து விடுகிறோம்.

உயிரின் மதிப்பு நம் குடும்பத்தில் யாராவது பாதிக்கப் பட்டால்தான் தெரிகிறது. அடுத்தவனுக்கு நேர்ந்தால் அது ஒரு உயிராகத் தெரிவதில்லை. வெறும் செய்தி அவ்வளவுதான். இந்த போக்குவரத்து நெறிசலின் காரணகர்த்தாக்களில் நம்மை போன்றார்களை விட பெரும்பங்கு வகிபவர்கள் மூன்று சக்கர வாகன (ஆட்டோ) ஓட்டிகள்தான். இவர்களில் பலருக்கு சாலைவிதி என்றால் என்னவென்றே தெரியாது போல.

அடுத்து நம் அரசியல்வியாதிகள். இவர்கள் சாலையை கடந்து செல்ல பொது மக்கள் மட்டுமல்லாமல் இத்தகைய "அவசர ஊர்திகளும்" நிறுத்தப் படும். இவனுங்களுக்கெல்லாம் உயிர் மேல அவ்வளவு ஆசை. அடுத்தவன் உயிர் என்றால் அது வெறும் தூசு. இன்னொரு தரத்தினரும் இவ்வுலகில் காண முடிகிறது.

இவர்கள் எப்படி என்றால் இத்தகைய அவசர ஊர்திகளை பின் தொடர்பவர்கள். அதன் பின்னே சென்றால் விரைவாக இலக்கை அடைந்து விடலாம் என்ற சுயநலம். இன்னொரு ரகம் என்னவென்றால் இந்த "அவசர ஊர்தியை" தவறாக பயன் படுத்தி போக்குவரத்து நெறிசலில் இருந்து தப்பிக்கும் "அவசர ஊர்தி" ஓட்டுனர்கள். இது போன்ற ஓட்டுனர்களால் பொது மக்களுக்கு அவசர ஊர்தி எழுப்பும் ஒலி உண்மையா? பொய்யா? என்ற குழப்பத்தால் கூட வழி விடாமல் செல்கின்றனர்.

இத்தனை காரணங்களை வைத்து கொண்டு மற்றவரை குற்றம் சொல்லாமல் தனி மனிதனாக நான் என்னை திருத்தி கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் அலுவலகஹ்திற்கு 1 மணி நேரம் முன்னதாகவே புறப்படுகிறேன். அதனால் சாலை விதிப்படியும் அவசரமில்லாமல் சரியான நேரத்திற்கும் அலுவலகம் செல்ல முடிகிறது. அவசர ஊர்தியின் தாமதத்திற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்ற மகிழ்ச்சியும் இருக்கிறது.

இது போல் மனிதநேயம் கொண்டு ஒவ்வொரு தனி மனிதனும் முடிவெடுத்தால் நிச்சயம் பல உயிர்கள் காப்பாற்ற படுவதோடு அவரவர் வேலைகளும் சிரமமின்றி நடந்தேறும். "அவசர ஊர்தியில்" உயிருக்கு போராடி கொண்டிருக்கும் முகமறியா நண்பருக்கு இது நம்மால் செய்ய முடிந்த உதவியாக கூட இருக்கும். தனி மனிதக் கூட்டம் தான் சமுதாயம்.

15 December 2009

தன்வினை..

4:26:00 AM Posted by புலவன் புலிகேசி 36 comments

சேலையை பார்த்து சாலையில்
நடந்தவன் தடுக்கி விழுந்தான்
சாலையோர சாக்கடையில்
மாலை வந்து விழுந்தது
அவன் புகைப்படத்தில்

காமவெறி பிடித்து கட்டற்ற
காளையாக திரிந்தான்
காலன் வந்து அழைத்துச்
சென்றான் எய்ட்ஸ் எனும்
வாகனத்தில்

பணம் சேர்க்கத் தெரிந்தவன்
மனம் சேர்க்கத் தெரியாமல்
மனநலக் காப்பகத்தில்
(பண)மன நோயாளியாய்

அதிர்ஷ்டம் எனும் மாயையை
அழைத்துக் கொண்டு முயற்சி
திறமை எனும் நண்பர்களை
விட்டு சென்றான் தோல்வி
எனும் துயர் வந்தது

12 December 2009

வாழப் ப(பு)டிக்காதவன்

10:23:00 PM Posted by புலவன் புலிகேசி 36 comments

வாழப் பிடிக்கவில்லை என்றான்
காதலில் தோற்றவன்
நீ வாழ படிக்கவில்லை
என்றேன்

போக்குவரத்து நெறிசலைக் குறைக்க
அரசு கட்டும் பாலமென்றான்
திறப்பு விழா அன்று போக்குவரத்து
நெறிசல் நிச்சயம்
என்றேன்

திரையரங்கில் வரிசையில் நின்றவன்
நான் தல ரசிகன் என்றான்
உன் மனைவி உன்னை
தறு'தல' என்றாள்
என்றேன்

சென்னையில் வீடு வாங்கப்
போகிறேன் என்றான்
கடன் வாங்கப் போகிறாயா(?)
என்றேன்

உனக்கு என்னத் தெரியுமென்றான்(?)
உனக்கு தெரிந்ததாக நீ
சொன்னவை எனக்குப் புரிந்தது
என்றேன்

பி.கு: இந்த கவிதையை உரையாடல் கவிதைப் போட்டி க்கு அனுப்பியுள்ளேன்.

11 December 2009

டரியல் (02-திசம்பர்-09)

11:28:00 PM Posted by புலவன் புலிகேசி 23 comments
சென்ற வாரம் அலுவலகப் பணி பலமாக இருந்ததால் டரியல் எழுத முடியவில்லை. அலுவலகம் அடையாறிலிருந்து எஸ்.ஆர்.பி டூல்ஸ் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனம் 8 கி.மீ அதிகமாக பயணிக்கிறது. எரிபொருள் செலவும் இனி வரும் மாதச் செலவுகளில் அதிகமாகும் (அவ்வ்வ்வ்!!).

------------------------

முந்தைய தினம் அலுவல் முடித்து வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்த போது டைடல் பார்க் அருகில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் திடீரென சலையில் உடைந்திருந்த பாதாளசாக்கடையில் வாகனம் செருகி கீழே விழுந்தனர். நல்ல வேலை அவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்ததால் தப்பித்தனர். சாலையை பழுது பார்க்க மாட்டோம் சாக்கடையை அடைக்க மாட்டோம் என்பதால் தான் அரசாங்கம் தலைக்கவசத்தை கட்டாயமாக்கியது போல. இது மட்டும் இல்லீங்க சென்னையின் முக்கிய இடமான ..டி அருகில் உள்ள சாலையின் நிலை கிராமச்சாலைகளை கூட தோற்கடித்து விடும்.

------------------------

அரசு தன் சாதனைகளாக சொல்லிக் கொள்ளும் பாலம் கட்டுதல் பணி. உண்மையில் போக்குவரத்துக்கு நல்லதுதான். ஆனால் அதை திறந்து வைக்க அவர்கள் செய்யும் அலும்பு இருக்கிறதே. உண்மையில் பொது மக்களுக்காக மட்டும் செயல் படும் சமூக சேவகனாக இருந்தால் அதை திறந்து வைக்க தான் தான் வர வேண்டும் என எண்ணியிருக்க மாட்டார். தான் வந்தால் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப் படுவர் என்ற எண்ணம் நிச்சயம் வந்திருக்கும். தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்பவரிடம் இதை எல்லாம் எதிர் பார்க்க முடியாதுதான்.

------------------------

சென்ற வாரம் எனக்கு தியா மற்றும் பித்தனின் வாக்கு ஆகியோரிடமிருந்து ஒரு விருது கிடைத்துள்ளது.விருது வாங்கி நாமளே வச்சிக் கிட்டா எப்புடி??? இதோ
இந்த விருதை இவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1) கவிதை மழை பொழியும் ஹேமா

2) ரௌத்திரம் பழகும் கலகலப்ரியா

3) நகைச்சுவை மன்னர் வானம்பாடிகள்

4) குழந்தையாகக் குமுறும் க.பாலாசி

5) டீ டைம் நண்பர் அகல் விளக்கு

6) கல்லூரியில் இணைந்த நண்பர்களின் பார்த்ததும் படித்ததும்

7) சிறகுகள் பாலவாசகன்

------------------------

சென்ற வாரம் விட்டுப் போனதால் இந்த வாரம் இரண்டு பேரை டரியலாக்கலாம் என்றிருக்கிறேன்.

1) நண்பர் பாக்தாத்திலிருந்து பூங்குன்றன் அவர்களின் “LOVE YOU DADDY- குட்டி கதை.” பாசத்தையும் கோபத்தையும் அழகாக விளக்கியிருக்கிறார்.

2) நம்ம வால் பையனின் “சோதிடமும், சந்திரனும்!”. தல என்னமா ஆராய்ச்சி பன்றாரு. நெறைய பேருக்கு புரிய வைக்க வேண்டியிருக்கு..

------------------------

10 December 2009

சோறு போடுங்க சாமியோவ்..!!!

7:54:00 PM Posted by புலவன் புலிகேசி 55 comments
மனிதன் சிந்திக்கத் தொடங்கியதால் விளைந்தது நன்மையா? தீமையா? பாப்பையாவை வைத்து பட்டி மன்றம் நடத்துனா கூட சரியான தீர்ப்பு கிடைக்காது. ஏனெனில் அந்த சிந்தனையிலிருந்துதான் மனிதன் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறான்.

மனிதன் ஆக்கத்திற்கு கண்டு பிடித்ததை விட அழிவுக்கு கண்டுபிடித்ததுதான் அதிகம். ஆக்கத்திற்கு கண்டு பிடித்ததை அழிவுக்கு பய்ன்படுத்தவும் கற்று கொடுத்தது அவனது அறிவு. விஞ்ஞானம் என்ற பெயரில் மனிதன் சோம்பேரியாக மற்றப்பட்டிருக்கிறான்.

இத்தகைய விஞ்ஞானம் இன்று நம் இந்தியாவை சோற்றுக்கு அந்நியனிடம் கையேந்த வைத்துள்ளது. உணவுப் பொருட்கள் ஏற்றுமதியான காலம் போய் இன்று இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

விளை நிலங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளாக்கப் பட்டு விட்டன. இன்று சென்னையில் வாழும் பலரது கனவு சென்னையில் ஒரு வீடு. அது 18 லகரமானாலும் சரி 50 லகரமானாலும் சரி. தன் சந்ததி தங்குவதற்கு வீடு என யோசிக்கிற எவரும் பிற்கால சந்ததியின் உணவுக்கு என்ன வழி என யோசிப்பதில்லை.

நமது அரசாங்கமும் பாலம் கட்டுவதிலும் மற்ற துறைகளிலும் காட்டும் அக்கரையை விவசாயத்தில் காட்டுவதில்லை. விளைவு இன்று விலையேற்றம். 1 கிலோ சர்க்கரை இன்று 35 ரூபாய், வெங்காயம் 50-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் குறைவான விளைச்சலும், விளையுமிடத்தின் தூரமும்.

இத்தகைய நிலைக்கு காரணம் யார்? என் நண்பனை கேட்டேன். அவன் சொன்னான், நமது அரசாங்கம் தான் என்று. அது எந்த அளவுக்கு உண்மை என யோசித்தால் 10% த்திற்கும் குறைவுதான்.

இந்த நிலைக்கு 90% காரணம் நாம் தான். நம்மை போன்றவர்கள் எப்படி பணம் சேர்ப்பது என்பதை மட்டும் தான் யோசிக்கிறோம். தேவையானது கிடைத்தாலும் இன்னும் கிடைக்குமா என தேடுகிறோம். நம்மில் எத்தனை பேருக்கு விவசாயம் பற்றி "அ...ஆ" தெரியும்? நமக்கே இப்படி என்றால் நம் சந்ததி?

இந்த நிலை தொடர்ந்தால் நிச்சயம் இந்தியாவில் மனிதனால் வாழ முடியாது என்ற நிலை நிச்சயம் வரும். என்னுடைய ஆசை என்னவென்றால் கொஞ்சம் பணம் சேர்த்து சென்னையில் வீடு வாங்காமல் மயிலாடுதுறை அருகில் ஒரு விளை நிலம் வாங்கி விவசாயம் கற்க வேண்டும். நிச்சயம் இதை செய்ய வேண்டும் என்றிருக்கிறேன்.

08 December 2009

வறுமையில் ஓர் நாள்...

8:23:00 PM Posted by புலவன் புலிகேசி 27 comments


சாலையோர உணவு விடுதியில்
10ரூபாய்க்கு கிடைத்த கோழிக்கறி
அதில் பங்கு கிடைக்குமா
என பரிதாபமாக பார்க்கும்
தெருநாய்

கொடுப்பதா வேண்டாமா என
யோசித்து நாயின் மீதுவந்த
பரிதாபத்தால் கொடுக்கப் பட்ட
சிறுதுண்டு

அதை கவ்விக் கொண்டோடும்
போது துரத்திக் கொண்டோடும்
இன்னொரு நாய்

அதை வேடிக்கைப் பார்த்து
ரசித்து கொண்டிருந்த பிச்சைக்கார
குழந்தை

தெரிந்தது வறுமையில்
ஏற்றதாழ்வு.


பி.கு: ஒரு வார காலமாக கடுமையான அலுவல் காரணமாக யாருடைய பதிவுக்கும் பின்னூட்டமிட முடியவில்லை...அதனால்தான் பதிவும் எழுதவில்லை..

02 December 2009

ஊருக்குள்ள நாங்கல்லாம்....

10:15:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments
மொக்கை கைதி எண்:506, தப்பியோடிய போது போலீசாரால் சுட்டு கொலை செய்யப் பட்டான் என்ற செய்தியை நாளிதழில் படித்தான் வஜ்ரவேலு. "டேய் கந்தா மொக்கைய சொன்ன மாதிரியே போட்டாங்கேடா. அந்த இனுசுபெட்டர் பயல வரச் சொல்லி பணம் குடுத்து அனுப்புச்சுடு".

மொக்கை - வஜ்ரவேலு குப்பத்து ரவுடியாக இருந்ததிலிருந்து அவனுக்காக நாயாக உழைத்தவன் (கொலை பன்றது, கை கால் எடுக்குறது தான்). ராசு- இவந்தான் மொக்கைக்கு நெருங்கிய நண்பன். இவனும் வஜ்ரவேலுவின் ஆள்தான். இருவரும் சேர்ந்து தான் மதுரையில வஜ்ரவேலுவுக்கு புடிக்காதவங்களை எல்லம் போட்டுத் தள்ளி கிட்டிருந்தாங்கே.

"எலே ராசு எங்க்டா அந்த மொக்க்ப்பய" என்றான் வஜ்ரவேலு. "ஐயா நேத்துதான் மொக்கைக்கு கண்ணாலமாச்சுங்க". "என்னடா சொல்லவே இல்ல".

"இல்லீங்கய்யா அவன் அத்தப் பொண்ண கல்யாண மண்டபத்துலருந்து தூக்கிட்டு வந்து...." என்று இழுத்தான். "சரி இந்தா இந்த பணத்த கொண்டு போயி அவங்கிட்ட குடுத்துட்டு வா" என்றான் வஜ்ரவேலு. கடத்தி கிட்டு வந்து கட்டிகிட்டாலும் வள்ளியும் மொக்கையும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தனர்.

"ஏண்டா மொக்க தங்கச்சிக்கு உன் மேல இருந்த கோவம் போயிடுச்சா" என்றான் ராசு. "அதெல்லாம் போயி நாங்கதான் ஒன்னாயிட்டமுல்ல. அவளுக்காகத்தாண்டா இனிமே வாழ்க்கையே" என்றான் மொக்க.நண்பனை நினைத்து பெருமை பட்டு கொண்டான் ராசு. இருவரும் புறப்பட்டு வஜ்ரவேலு வீட்டுக்கு போனார்கள்.

"டேய் மொக்க நம்ம தலைவருக்காக ஒரு செய்கை செய்யனும்டா" என்றான் வஜ்ரவேலு. "சொல்லுங்கய்யா செஞ்சி புடுவோம்" என்றான் மொக்க. "நம்ம எதிர்கட்சி ராமசாமியோட சுத்திகிருப்பானே ரஞ்சித்துனு ஒரு பய..அவனத்தேன்" என்றான். "சரிங்கய்யா நாங்க பொறப்படுறோம்" என்றான் மொக்க. "டேய் ராசு அவன பாத்துக்கடா கோவக்காரப்பய எதாவது ஏடாகூடம் பன்னிடப் போறான்". "சரிங்கய்யா" என்று பதிலளித்து விட்டு இருவரும் சொன்ன 3வது நாளில் காரியத்த முடிச்சிட்டானுங்க.

ஒரு நாள் வஜ்ரவேலு மொக்கய தனியா கூப்பிட்டு "டேய் மொக்க நம்ம தலைவருக்காக இன்னொருத்தன.." என்றான். "சொல்லுங்கய்யா" என்றான் மொக்க. "நம்ம ராசுவத்தாண்டா போடனுமாம்" என்றதும் பதறிப் போனான். "என்னய்யா சொல்றீங்க" என நடுக்கத்துடன் கேட்டவனை கந்தன் உள்ளே அழைத்து சென்று

"டேய் மொக்க இன்னைக்கி நீ இல்லேன்னா அவன நாளைக்கு வேற எவனாவது போடப்போறான். அவன் ஒன்டிக்கட்டடா உனக்கு குடும்பம் இருக்கு ஐயாவ பகச்சிக் கிட்டு வெளியில போறதுக்கு இது படம் இல்லடா. உன்னைய போட்டு பொண்டாட்டிய தூக்கிடுவாங்கேடா" என்றான்.

மொக்கை அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு சென்றான். மறுநாள் ராசு வாயில் பீடியை பற்றவைத்துக் கொண்டு "டேய் மொக்க வாடா கம்மாய்க்கு போயிட்டு வருவோம்" எனக் கூப்பிட்டு இருவரும் புறப்படும் போது "ஏண்டா எங்கடா நேத்து உன்ன ஆளையே காணும்" என்றான் ராசு. சற்று கலங்கியவனாய் "ஐயாவோட தோப்புல காவக்காரன் வரலையாம் அதனால அங்கயே..." என்றிழுத்தான்.

இருவரும் கம்மாயை நெருங்கிய போது எதிர்பாராத நேரத்தில் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராசுவின் இடப்பக்க நெஞ்சில் குத்தினான் மொக்க. "என்னடா மொக்க...." என்றவாறு சரிந்தான் ராசு. அவன் நெஞ்சில் வழிந்த ரத்தத்தோடு இவன் கண்ணில் வழிந்த கண்ணீர் கலக்க "என்னய மன்னிச்சிடுடா ராசு" என ராசுவை கட்டியழுதான்.

முன்னரே அங்கு ஒளிந்திருந்த காவலர்கள் மொக்கையை கைது செய்ய, நீதிமன்றத்தில் மொக்கைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஐயா வெளியில் எடுப்பார் என்றிருந்த மொக்கையிடம் அந்த காவலன் "டேய் மொக்க ஐயா வெளிய வண்டியோட நிக்கிறாரு உன்னய தப்பிச்சி வர சொன்னருன்னு சொல்லி தப்பிக்க வச்சி போட்டுத் தள்ளிட்டான்".

எதிர்கட்சி ராமசாமி வீட்டு தொலைபேசி மணி ஒலித்தது "ஐயா நீங்க சொன்ன மாதிரியே அவனுங்க ரெண்டு பேரையும் முடிச்சாச்சு" என்றான் வஜ்ரவேலு. "கவலையே படாதடா நீதான் இந்த தேர்தல்ல உன்னோட தொகுதியில மந்திரி..ஆளுங்கட்சிக்கார பய செய்யாதத நான் உனக்கு செய்யறன்டா" என்றான்.

எதற்காக கொல்லப் பட்டோம் என தெரியாமலே ராசுவும், மொக்கையும் இறக்க இன்று வள்ளி கையில் குழந்தையுடன் நடுத்தெருவில்...........