கடவுளை மற..மனிதனை நினை..

30 January 2010

டரியல் (30-சனவரி-2010)

6:36:00 AM Posted by புலவன் புலிகேசி 26 comments
நண்பர் சினிமா புலவன் தன் சினிமா புலவன் வலைப்பூவுக்கு என்னையும் ஆசிரியராக இருக்கும் படி அழைத்தார். முன்னர் அவர் எழுதிக் கொண்டிருந்தவை எல்லாம் சினிமா செய்திகளாகவே இருந்து வந்தது. இருவரும் இணைந்த பின்பு திட்டமிட்டு பேசி தினம் ஒரு பிரிவில் சினிமா நிகழ்வுகளை பதிய முடிவு செய்து தொடங்கினோம். இதன் விளைவு அந்த வலைப்பூ இப்போது பலரால் ரசிக்கப் பட்டு வருகிறது.

அதிலும்
"தமிழ் சினிமா உருவான வரலாறு - 1" தொடர் கட்டுரை திரைத்துரையின் பல அரிய தகவல்களை வழங்கப் போகிறது. நண்பர்கள் நேரமிருந்தால் சென்று படித்து உங்கள் கருத்துக்களை அங்கே தெரிவியுங்கள்.

----------------------

இந்த வார பதிவர்

அப்புறம் என் 50வது பதிவில் வாரம் ஒரு பதிவர் பற்றி எழுதப் போவதாக சொல்லியிருந்தேன். நீண்ட தாமதத்திற்கு பின் இந்த வாரம் முதல் துவக்குகிறேன்.


வானம்பாடிகள் பாலா ஐயாவத்தான் மொதல்ல சொல்லனும்னு எப்பவோ முடிவு பன்னிட்டேன். ஐயா ஒரு நகைச்சுவை நாயகன்னு முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். ஐயாவோட அனுபவப் பகிர்வுகளை படிச்சீங்கன்னா உங்களுக்கே தெரியும். அவரை நகைச்சுவையாளர்னு மட்டும் தப்பா நெனச்சிராதீங்க. அவரோட "நறுக்குன்னு நாலு வார்த்தை" பதிவுகளை படிச்சா மனுசன் எவ்வளவு பெரிய கோவக்காரர்னு உங்களுக்கே தெரியும்.

நிறைய நகைச்சுவை மற்றும் சிந்தனைகளை வழங்கி வரும் ஐயா வானம்பாடிகள் பின்னூட்டமிடுவதில் வல்லவர். இவருக்கு மட்டும் எப்புடித்தேன் நேரம் கிடைக்குதோ. பல சமயங்களில் கலகலாவின் பதிவுகளில் இவரின் பின்னூட்டங்களிலும் அந்த நகைச்சுவையும் கோவமும் கொப்பளிக்கும்.
இவரின் வலைப்பூ பாமரன் பக்கங்கள்
நன்றி வானம்பாடிகள் ஐயா
----------------------

நம்ம இந்திய அணி ஜாகீர்கான் புண்ணியத்துல(?) வங்கதேசத்தோட மோதி கோப்பையை தட்டி வந்திருக்கு. ஜாகீர்கான் ஆட்ட நாயகனாவும், தொடர் நாயகனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுருக்காரு. ஏம்பா ஜாகீரு எதாவது பச்ச புள்ள கெடைச்சா வெளுத்து வாங்குற நீ பெரிய ஆளுங்க கிட்ட சோடை போயிடுறியேமா.

----------------------

தபால் நிலையத்துல 1.45 கோடி ஊழலாம். அடா அடா அடா என்ன ஒரு சாதனை. திண்டுக்கல் வேடச்சந்தூர் தபால் நிலையத்துல பொதுமக்கள் சிறுசேமிப்பில் போட்டு வச்சிருந்த பணத்துல 1.45 கோடியை ஆட்டய போட்டாங்களாம். இதுக்காக அங்க சி.பி.ஐ விசாரனையும் சோதனையும் பன்னி கிட்டிருக்கு. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சேமிப்புக்கு நம்பும் தபால் துறையிலேயே இப்படி ஒரு முறைகேடு நடந்திருக்கிறது. என்ன கொடுமைங்க.

----------------------
இந்த வார டரியல் நம்ம சித்ரா அவர்களின் "காதல், கல்யாணத்தில் "முடிஞ்சிருச்சா"?" அருமையான பதிவு பாக்கலைன்னா போய் பாத்துருங்க

29 January 2010

யார் சொன்னது நான் நாத்திகன் என்று?

5:43:00 AM Posted by புலவன் புலிகேசி 33 comments
இந்த பொங்கல் முடித்து வெளியிட்ட டரியலில் பொங்கலின் போது ஊரில் நான் சில நல்லுள்ளம் படைத்த மனிதர்களை சந்தித்ததாக சொல்லியிருந்தேன். அது பற்றியதுதான் இந்த பதிவு. ஆம் இதில் சில முறை மட்டுமே சந்தித்த மூன்று நபர்களை பற்றிதான் கூற விழைகிறேன்.

கணேசன் (மாமா என அழைப்போம்)

என் பால்ய நண்பன் ஒருவன் மூலமாக இவரின் அறிமுகம் சில வருடங்களுக்கு முன் கிடைத்தது. என் நண்பனும் இன்னும் சிலரும் அவரை செல்லமாக மாமா என்று அழைப்பதால் நானும் அவரை அவ்வாறே அழைப்பேன். இந்த பொங்கலின் போது வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியை மேய்ந்துகொண்டு (பொங்கலையும்தான்) இருந்த போது என் நண்பனிடமிருந்து என் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது "உடனே புறப்பட்டு மாமா கடைக்கு வா" என்றான்.

கணேசன் ஒரு நகை செய்யும் தொழில் செய்பவர். மேலும் குடிப்பழக்கம் உள்ளவர். என்ன குடித்தாலும் அவரின் நற்குணங்கள் இதுவரை குன்றியதில்லை என்பதுதான் உண்மை. நானும் வாகனத்தை எடுத்து கொண்டு அவர் கடைக்கு சென்றேன். அங்கே நண்பனும் கணேசனும் ஒரு கட்டு கரும்புகளை துண்டாக வெட்டி கட்டி கொண்டிருந்தனர். நான் சென்றதும் அந்த ஆஸ்ரமத்துக்காக வாங்கினேன் போய் குடுத்துட்டு வரதான் கூப்பிட்டேன் என்றார். கரும்புகளோடு சேர்த்து சில பிஸ்கட் பாக்கெட்களையும் வாங்கி வைத்திருந்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர் வீட்டில் பொங்கல் வைப்பதற்கு போகாமல் இதை கொண்டு அந்த குழந்தைகளிடம் சேர்ப்பதில் குறியாக இருந்தார். கொண்டு சேர்த்துவிட்டு வந்தோம்.

கணேசனின் அப்பாவும் அம்மாவும்

அடுத்து நானும் என் நண்பனும் அருகிலிருக்கும் ஆடுதுறை சென்று என் சித்தி மற்றும் சகோதரிகளையும், தம்பியையும் பார்த்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தோம். அன்று மாட்டு பொங்கல். வரும் வழியில் திருவாடுதுறை எனும் இடத்தை நெருங்கியபோது நண்பன் சொன்னான் "இங்கதான் மாமாவோட அப்பாவும் அம்மாவும் இருக்காங்க. பார்த்து விட்டு வரலாம்" என்று. நான் இதற்கு முன் அவர்களை சந்தித்ததில்லை. அவர்கள் வீடு அந்த கிராமத்தில் ஒரு சிறிய குடிசை வீடு. வீட்டிற்கு இன்னும் மின்சார இணைப்பு கூட கொடுக்கப்படவில்லை.

நாங்கள் சென்று வாகனத்தை நிறுத்திய போது கணேசனும் அங்கு வந்திருந்தார். வீட்டு வாசலை அடைந்த போது அவரின் அம்மாவும் அப்பாவும் ஓடிவந்து "வாப்பா நல்லா இருக்கியா?" என என்னை தெரிந்தவன் போல் விசாரித்தனர். கணேசனின் தந்தை நெருங்கிய சொந்தக்காரனை விசாரிப்பது போல் என் குடும்பம் சகிதம் நலம் விசாரித்து முடித்து தன் மனைவியிடம் "புள்ளைங்களுக்கு காபி கொடுடி" என்றார். காபி கொடுத்தார்கள். அதன் பின் அவரின் தாயார் "இன்னைக்கி கவிச்சி குழம்பு இருந்து சாப்பிட்டுட்டுதான் போவனும்னாங்க" (எங்கள் வீட்டில் அனைவரும் சைவம் என்னை தவிர. இருந்தாலும் அம்மா கையால சாப்பிட்டு பல நாளானதால்தான் மறுத்தோம்).

எதையோ சொல்லி வேணாம்னு சொல்லிட்டோம். அப்புறம் அவரின் தாயர் நடந்து கொண்டவிதம் என்னை நெகிழச் செய்தது. என்னை உள்ளே அழைத்து "இப்பதான மொதோ தடவ வர வந்து வீட்டைப்பாருன்னு" சொல்லி அந்த குடிசையை ஒரு பெருமிதத்துடன் சுற்றி காட்டினார். அப்போது அந்த குடிசை நகரத்தின் உயர்ந்த அடுக்ககங்களை விட உயர்வாக இருப்பது போல் தோன்றியது எனக்கு.

நகரத்தில் கட்டிடங்கள் உயர்ந்து மனித மனங்கள் சுருங்கி போயிருக்கிறது. ஆனால் இது போன்ற இடங்களில் வெறும் குடிசையில் மனிதம் நிறைந்து கிடக்கிறது.

என்னைக் கேட்டால் இது போன்ற மனிதம் வாழும் இல்லத்தை கோவில் என்றும் அவர்களை கடவுள் என்றும் சொல்வேன். யார் சொன்னது நான் நாத்திகன் என்று?

27 January 2010

சொந்த பந்தங்கள் - 1

6:30:00 AM Posted by புலவன் புலிகேசி , 25 comments

தாத்தாகைத்தடி தாங்கி நடக்கும்
தள்ளாத வயதிலும்
பேரனை தூக்கி நடந்தார்
பள்ளிக் கூடத்திற்கு

பாட்டி


தள்ளாத வயதிலும் பாடம்
முடித்து வரும் பேரப்பிள்ளைக்காக
பனியில் காத்து கிடக்கும்
இன்னொரு தாய்

25 January 2010

புலிக்குகைக்கு போன கதை

8:09:00 AM Posted by புலவன் புலிகேசி 26 comments

நேற்று மதியம் அறை நண்பர்களுடன் கலந்து கோவளம் கடற்கரை செல்லலாம் என முடிவெடுத்து புறப்பட்டோம். திருவான்மியூர் வழி செல்லாமல் ஓ.எம்.ஆரில் செல்லலாம் என நான் சொன்ன யோசனையை அனைவரும் ஏற்று கொண்டனர். இங்கதான் ஆரம்பிச்சது வினை.

பழைய மகாபலிப்ரம் சாலையில் திரும்ப வேண்டிய சோழிங்கநல்லூர் மற்றும் கேளம்பாக்கம் என இரண்டு இடங்களிலும் திரும்பாமல் நேரே நீண்ட தூரம் சென்று விட்டோம். செல்லும் வழியில் மகாபலிபுரம் 17கி.மீ என்ற பலகையை பார்த்ததும் புரிந்தது ஆஹா பாதை மாறி வந்துட்டோமுடா, எப்புடி சமாளிக்கிறதுன்னு.

அப்புறம் அறை நண்பர்களிடம் ஒருவழியாக சமாளித்து மகாபலிபுரமே போலாமுன்னு சொல்லி போய் 1 கி.மீ முன்னாடி நிறுத்தி பாத்தா மணி 4:40. சரி இதுக்கப்புறம் அங்க போனா நேரம் பத்தாதுன்னு சொல்லி முட்டுக்காடு போலாமுன்னு புறப்பட்டோம். போற வழியில புலிக்குகைன்னு ஒரு அறிவிப்பு பலகையை பார்த்தோம். பல முறை பார்த்திருந்தாலும் உள்ளே போனதில்லை.

வாகனத்தை அருகிலிருந்த தேநீர் நிலையத்தில் நிறுத்தி நண்பர்கள் தேநீர் அருந்தி முடித்ததும் உள்ளே சென்றோம் (நுழைவுக் கட்டணம் இருக்குமோன்னு நெனைச்சோம் ஆனா அதெல்லாம் இல்லை). பலர் காரிலும் இரு சக்கர வாகனத்திலும் வந்திருந்தனர். அப்படி என்ன சிறப்பான இடம் என உள் நுழைந்தோம்.

ஒரு பெரிய திடல் போன்ற இடத்தில் ஆங்காங்கே அழகிய பாறைகள். பாறைகள் குறைவாக இருந்தாலும் புல்வெளியில் ஆங்காங்கே காணப்படுவது திரைப்படங்களுக்கு அரங்கம் அமைத்தாற்போல் இருந்தது. இந்த இடத்தின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக அங்கே எந்த ஒரு விளக்கமும் வைகப்படவில்லை(நாங்க தேடுனது அவ்வளவுதானோ என்னவோ). நுழைவாயிலில் இந்த இடம் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கப் படுவதாகவும், இது வரலாற்று நினைவுச் சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளதாகவும் பலகை ஒன்றில் எழுதப்பட்டிருந்தது.

கையில் புகைப்படக் கருவி எடுத்து செல்லாததால் நண்பரின் அலைபேசியின் உதவியில் சுமாராக புகைப்படங்கள் சில எடுத்தோம்.சென்னையின் மெரீனா, பெசன்ட் நகர், மகாபலிபுரம் என சுற்றி திரிந்த எங்களுக்கு இந்த இடம் ஒரு புது அனுபத்தை தந்தது. இதன் பின்புறம் ஒரு கடற்கரை இருந்தது. அங்கே சென்று சிறிது நேரம் இளைப்பாறினோம். சென்னையிலேர்ந்து 50கி.மீ தள்ளி வந்தாலும் கடற்கரையில் காதலர் கூத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை. இங்கும் ஆங்காங்கே காதலர்களை(?) காண முடிந்தது.

பின்னர் வாகனத்தை எடுத்து புறப்பட்டு முட்டுகாடு வந்தடைந்த போது மணி 6:00. இருட்டியதால் படகு சவாரி செய்யாமல் அங்கே அமர்ந்து மாலையும் இருளும் கலக்கும் நேரத்து தண்ணீரின் அழகையும் சவாரி செய்து கொண்டிருந்த படகுகளையும் ரசித்து விட்டு வீடு திரும்பினோம்.

23 January 2010

டரியல்(23-சனவரி-2009)

5:51:00 AM Posted by புலவன் புலிகேசி 21 comments
பொங்கலுக்கு ஊருக்கு போனவன் வியாழக் கிழமைதான் திரும்பி வந்தேன். கிட்டத்தட்ட 3 வருசத்துக்கப்பறம் ஊர்ல ஒரு வாரம் தாங்கினது இப்பதான். அக்காவுக்கு பெண் குழந்தை(ஃபிகரு) பிறந்து ஒரு மாசம் கழிச்சி இந்த பொங்கல்லதான் போய் பாத்தேன். ஊர்ப் பயனங்கள் சிறப்பாக முடிந்தது. ஊரில் இருந்த வரை பல பதிவுகளை படிக்க முடியல. இனிமே படிப்போம்ல. வலைச்சரத்தில் நம்ம "பொங்குமா பொங்கலை" அறிமுகப்படுத்திய நண்பர் "இராதாகிருஷ்ணனுக்கு" நன்றி.

---------------------

நான் எதிர்பார்த்த "வி்ண்ணைத்தாண்டி வருவாயா" பாடல்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சிருக்கு. ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஷ்ரேயா கோசல் குரல்களில் "மன்னிப்பாயா" பாடல் இந்த ஆண்டு இளைஞர்களின் இதயத்துடிப்பாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. தாமரையின் வரிகளில் அனைத்து பாடல்களிலும் தமிழ் மிளிர்கிறது. என்ன இந்த பிளாஸ்தான் அடிக்கடி வந்து ஆங்கில சேவை செஞ்சிட்டு போறாரு. எனக்கு இந்த ஒரு வாரம் கேட்டதில் 3பாடல்கள் மிகவும் பிடித்து போயின. அவை "மன்னிப்பாயா","ஓமனப்பெண்ணே"அப்பறம் முன்னரே ஒரு டரியலில் சொன்ன "ஓசன்னா". கேட்டு பாருங்க.

---------------------

தமிழ்மணம் விருதுகள் நிகழ்ச்சி முடிஞ்சி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டதை பார்த்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். நம்ம நண்பர்கள் சிலரும் விருது பெற்றிருந்ததை பார்த்தேன். அனைத்து வெற்றியாளர்களுக்கும் புலிகேசியின் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் வலைப்பணி.

---------------------

அப்பறம் இந்த பொங்கல்ல ஆயிரத்தில் ஒருவன் படம் மட்டும்தான் பார்த்தேன். தமிழ் சினிமாவில் இது போன்ற படங்கள் வரவேற்புக்குரியவை. படத்தின் ஒரே ஒரு குறை வக்கிரங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால் குடும்பத்துடன் பார்க்க இயலும். பலர் இந்த படத்தின் குறைகளை மட்டுமே சொல்லி வருகின்றனர். இதே படம் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருந்தால் அவதார் போல தலையில் தூக்கி வச்சி கொண்டாடிருப்பாங்கன்னு நெனைக்கிறேன். தமிழனுக்கு எதிரி தமிழனேதான். பலர் எழுதியிருந்தனர் இந்த படத்துல லாஜிக்கே இல்லைன்னு. எத்தனை ஆங்கிலப் படங்கள் லாஜிக்கோட வந்துருக்கு. ஆங்கிலத்துல எதிர்பாக்காத லாஜிக்க இங்க மட்டும் ஏன் எதிர்பாக்குறீங்க? தமிழ்ல முதல் முயற்சின்றதால சில இடங்களில் சறுக்கல்கள். மற்றபடி படம் அருமை.

---------------------

இந்திய மட்டைபந்து அணித்தலைவர் தோனி. இவரைப் பார்த்தால் எனக்கு ஒரு பழமொழி நியாபகம் வரும். "புது விளக்குமாறு நன்கு பெருக்கும்". வந்த புதிதில் அதிரடியாக விளையாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இப்பல்லாம் இவர் போடும் மொக்கை தாங்க முடியல. சரி விசயத்துக்கு வருவோம். பல நாட்களாக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இவர் அந்த இடத்தை இழக்கப் போகும் நேரமிது. நம்ம மைக் ஹசி இவரை விட 21 புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளார். ஆஸி-பாக் தொடர் முடியறதுக்குள்ள தோனியை 2க்கு தள்ளி விடுவார்.

---------------------

இந்த வார டரியல் நம்ம ஆரூரன் விசுவநாதனின் "நூறா யிரத்தில் ஒருவன்.........". நல்ல தன்னம்பிக்கை தரும் அனுபவ பகிர்வு. படிக்கலைன்னா படிச்சி பாருங்க. நன்றி ஆரூரான்.

---------------------

21 January 2010

தன்னம்பிக்(கால்)கை - ஒரு உண்மை சம்பவம்

2:39:00 PM Posted by புலவன் புலிகேசி 41 comments

எங்கள் ஊர் மயிலாடுதுறையில் உள்ளது அந்த இல்லம். அங்கு உள்ள குழந்தைகள், பெரியவர்கள் பெரும்பாலும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள்.

நான் ஊருக்கு செல்லும் போதெல்லாம் அங்கு செல்வது வழக்கம். அங்குள்ள குழந்தைகளை பார்க்க மன தைரியம் வேண்டும். அங்குள்ள குழந்தைகள் மனநிலை குன்றியவர்கள் மட்டுமல்ல. கண் தெரியாமல், நடக்க முடியாமல், கைகளற்று கஷ்ட படுபவர்கள். 2 வருடங்களுக்கு முன்பு அங்கு சென்ற போது நான் கண்ட குழந்தைதான் பாப்பு. அவளுக்கு இரண்டு கைகளும் கிடையாது.

பெற்றோர் விட்டு சென்றதாக சொன்னார்கள். அவளை பார்த்த பின்புதான் அங்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டேன். பாப்பு மூளை வளர்ச்சியில் குன்றியவள் அல்ல. அவள் ஒரு புத்திசாலி. அவளது தன்னம்பிக்கை நம்மை போன்ற நல்ல உடலமைப்பு பெற்றவர்களுக்கு கூட இருக்குமா என்பது சந்தேகமே.

சென்ற ஆண்டு நடந்த ஒரு நிகழ்வு: வழக்கம் போல் அங்கு நான் சென்ற போது அனைத்து குழந்தைகளும் குளிப்பாட்டப் பட்டு பராமறிப்பாளர்களால் ஆடை மாற்றமும் நிகழ்ந்து கொண்டிருந்த போது பாப்பு ஒரு ஆடையை வாயில் கவ்விக் கொண்டு ஒடி வந்து ஓரிடத்தில் அமர்ந்து தன் கால்களின் உதவியில் அந்த ஆடையை அணிய சிரமப்பட்டு கொண்டிருந்தாள். அவளுக்கு உதவ அருகில் சென்ற என்னிடம் "நாந்தான் போட்டுக்குவேன் என்னை விடு" என்றாள். அதன் பின் அந்த ஆடையை அவளே அணிந்து வந்து என்னிடம் காட்டினாள்.

அவளின் தன்னம்பிக்கைக்கு சான்றாக கடந்த பொங்கலில் நடந்த இன்னொரு நிகழ்வு என்னை நெகிழ வைத்தது. இந்த முறை அவளை சந்தித்த போது அவளிடம் என்னவெல்லாம் படித்தாய் சொல்லு என்றதும் அ, ஆ வில் தொடங்கி, A,B,C,D 1,2,3 என வரிசையாக சொல்லி முடித்தாள். அதன் பின் அவளுக்கு ஒரு முத்தமிட்டு விட்டு புறப்படும் போது யதேச்சையாக என் கைகளை ஓங்கி டாடா என சொல்லிவிட்டு சட்டென சுதாரித்து கைகளை மடக்கி கொண்டு வருத்தப்பட்டேன். ஆனால் அவள் சற்றும் கலங்காமல் கால்களை உயர்த்தி "டாடா" என்றாள். சட்டென அணைத்து இன்னொரு முத்தமிட்டு அங்கிருந்து கலக்கத்துடன் புறப்பட்டோம்.

எங்களுக்கு தன்னம்பிக்கை பாடம் பாப்புவால் கற்று கொடுக்கப் பட்டது.

பி.கு:

இந்த முறை ஒரு நற்செய்தி கிடைத்தது. அரசாங்கம் பாப்புவுக்கு மின்னியல் கைகள்(Electronic Hand) பொருத்த உதவி செய்ய முன் வந்துள்ளதாக கூறினர் அந்த இல்லத்தின் மேற்பார்வையாளர். அதற்கு ஆகும் அத்தனை செலவு மற்றும் உதவிகள் முழுவதையும் அரசே செய்வதாக உறுதியளித்துள்ளதாம்.

அந்த இல்லத்தில் பிடித்த விடயம் என்னவென்றால், நாம் பணமாக கொடுத்தால் அவர்கள் கூறுவது "இந்த பணத்தில் நீங்களே எதாவது பொருளோ பலகாரமோ வாங்கி கொடுங்கள்" என்பர்.

19 January 2010

பெற்றோர் சொத்து பிள்ளைக்கு

6:21:00 PM Posted by புலவன் புலிகேசி 36 comments


தட்டு
தண்ணீர் குவளை
படுக்கை
பெற்றோர் விட்டு சென்ற சொத்து
முதியோர் இல்லத்தில்


இரு கைகளற்ற அனாதைக்
குழந்தைக்கு டாட்டா காட்ட
ஓங்கிய வலக்கையை இடக்கை
திட்டியது காலால் டாட்டா
காட்டி தன்னம்பிக்கை காட்டினாள்
அச்சிறுமி


பி.கு: இரண்டாவது கவிதை மட்டுமல்ல. இந்த பொங்கலில் எனக்கு நேர்ந்த நான் கலங்கிய நிஜம்.

16 January 2010

டரியல்(16-சனவரி-2010)

7:00:00 PM Posted by புலவன் புலிகேசி 21 comments

புத்தக கண்காட்சியில் ஒரு பதிவர் சந்திப்பு. பல பதிவுலக நண்பர்களை சந்தித்தேன். அதற்கு சென்ற கதை ஒரு பெருங்கூத்து. கேபிளாருக்கு அலைபேசியில் அழைத்தால் அவர் எண் தொடர்பு எல்லைக்கு வெளியில். வேறு எந்த பதிவர் எண்ணும் இல்லாமல் அவதிப்பட்டு நீண்ட நேரம் (சுமார் 1 மணி நேரம்) சுற்றி சுற்றி முயற்சித்து ஒரு வழியாக பிடித்து நண்பர்களுடன் உரையாடி விட்டு வந்தேன். இது பற்றி தனியாக பதிவு போடலாம் என யோசித்து கொண்டிருக்கையில் பொங்கல் வந்து விட்டது. அடுத்த சந்திப்பில் போடறேன்.

---------------

அந்த சந்திப்பில் நண்பர் சர்புதீன் அவர்களை சந்தித்தோம். அவர் "வெள்ளி நிலா" என்ற இதழை நடத்தி வருவதாகவும், இதுவரை காயல்பட்டணம் மற்றும் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் உலக அறிவு\கல்வி போன்ற விசயங்களை சற்று அதிகமாக பரவசெய்ய வேண்டும் என்பது அதன் நோக்கமாக இருந்ததாகவும், இனி வலைப் பதிவர்களின் ஆக்கங்களை மட்டுமே இடம் பெற செய்ய போவதாகவும் கூறினார். அது குறித்த விபரம் வெள்ளிநிலா. வாழ்த்துக்கள் நண்பரே.

---------------

நமது நண்பர் "பட்டர்ப்ளை சூர்யா"அவர்களிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி என் அலை பேசிக்கு வந்தது. பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி. அவர் இந்த இதழ் சூர்யகதிரில் (16-31) உலக சினமா பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நேற்று படித்தேன். உலக சினிமா என்பது வாழ்வியலோடு ஒன்றிய ஒன்றாக இருக்க வேண்டும் என எழுதியிருந்தார். கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது. விபரங்களுக்கு இந்த மாத இரண்டாவது இதழ் பாருங்க (16-31).

---------------

அப்புறம் ஊருக்கு வந்து சொந்த பந்தம் நட்புகளை பார்த்து பொங்கல் நல்லபடியா முடிஞ்சி போச்சு. இந்த பொங்கலில் சில நல்லுள்ளம் படைத்த மனிதர்களை சந்தித்தேன். அவர்களை பற்றி ஒரு தனி பதிவாகவே எழுதுகிறேன். அப்புறம் எங்கள் நண்பர்கள் கூட்டம் சிறப்பா முடிஞ்சிது. ஊர் வந்து நண்பர்கள்,அரட்டை, அநாதை இல்லம்னு எல்லாம் எதிபார்த்தபடி நடந்தது.

---------------

அப்பறம் இந்த வார டரியல் நம்ம நண்பர் அகல் விளக்கு எழுதின "மண்ணோடு மரிக்கும் மனங்கள்". நம் நாட்டு விவசாய நிலையை ஆழமாக பதிந்திருக்கிறார். படிச்சி பாருங்க. நன்றி அகல்விளக்கு ராஜா.

---------------

13 January 2010

பொங்குமா பொங்கல்

4:19:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments

பெற்றோரையும் உற்றோரையும் சந்தித்து
மகிழ்ச்சி பொங்க வீட்டில்
பொங்கலும் பொங்கி நண்பர்களுடன்
அலவளாவி கழிக்கப் போகும்

இந்த தைத்திருநாளை எண்ணி
மகிழ்ந்து கொண்டிருக்கும் நேரம்
வீட்டு வாசலில் வந்து
நிற்க போகும் பிச்சைக்காரனின்

பிள்ளைக்கு என்ன செய்ய
போகிறாய் குழந்தைகளுக்கு பிச்சையிடுவது
தவறு என்ற கொள்கையை
வைத்து கொண்டு

மனம் கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லாமல் புறப்படுகிறேன்
சொந்த ஊருக்கு

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் மக்கா. ஊருக்கு போறதால எல்லார் பதிவையும் உடனடியா படிக்க முடியாதுன்னாலும் அப்பப்ப படிச்சி பின்னூட்டமிடுறேன்.

11 January 2010

மறுமணம்

6:29:00 AM Posted by புலவன் புலிகேசி 46 comments
தேன்மொழி, வயது 20 பூங்காவூர் கிராமம். பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்தாள். அதற்குமேல் படித்தால் கெட்டு போய்டுவாளாம். அப்புடின்னு தாய்மாமன் சபாநாயகம் சொன்னதால் படிப்பை நிறுத்தி விட்டனர் அவளது பெற்றோர்.

சபாநாயகம், வயது 35. ஊருக்குள் கட்ட பஞ்சாயத்து செய்து கொண்டு திரியும் முரடன். ஆனால் நல்லவன். தேன்மொழி என்றால் அவனுக்கு உயிர். ஆனால் தேன்மொழிக்கு இவனை பிடிக்காது. காரணம் அவனது முரட்டுத்தனம்.

பக்கத்து வீட்டு பங்கஜம் அம்மாள். இவர் வீடுதான் படிப்பை நிறுத்திய பிறகு தேன்மொழியின் சரணாலயம். பங்கஜம் அம்மாளின் தம்பி ரமேஷ் பொறியியல் முடித்து ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணி புரிபவன். எப்போதாவது விடுப்பு எடுத்து பங்கஜம் அம்மாள் வீட்டில் வந்து தங்குவது அவனது வழக்கம்.

அப்படி ஒரு நாளில் ரமேஷ் தொலைக்காட்சியை மேய்ந்து கொண்டிருந்த சமயம் சப்தம் கேட்டு வெளியில் ஓடி வந்தான். தேன்மொழிதான் சப்தம் போட்டு கொண்டிருந்தாள். ஆட்டுக்குட்டியை கல்லால் அடித்து விட்டானாம் காக்கையன்.அவளுக்கு ஆடு, நாய், கோழி என்றால் உயிர். அதுகளுக்கும் தேன்மொழி என்றால் உயிர்.

காக்கையனைப் பிடித்து அடித்து அழவைத்து விட்டு அமைதியானாள். அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருத ரமேஷ் புன்னகைத்தான். அவனை பார்த்ததும் ஆட்டு குட்டியை தூக்கி கொண்டு வீட்டுக்கு ஓடி விட்டாள். ரமேசுக்கு அவளை பிடித்திருந்தது. அவளுக்கும்தான். ஆனால் ஜாதி அவளை தடுத்தது. ஆனால் ரமேஷின் ஒவ்வொரு வருகையையும் எதிர்பார்த்து காத்திருப்பாள்.

ஒரு நாள் திடீரென தேன்மொழியின் பாட்டி வீட்டிற்கு வந்து "எலேய் ராசு(தேன்மொழியின் அப்பா) என் பேத்திய என் மொவன் சபாநாயகத்துக்கு குடுத்துடுடா" என்ற வார்த்தை கேட்டு ஆடிப் போனாள் தேன்மொழி. ஆனால் அவளின் பெற்றோர் கொஞ்சமு யோசிக்காமல் சம்மதம் சொன்ன போது, "மாமா எதுக்கும் தென்மொழிய ஒரு வார்த்தை கேட்டுருங்களேன்" என்றான் சபாநாயகம்.

அதுக்கு ராசு "என்னடா கேக்குறது பொட்டக் கழுதய" என்றான். தேன்மொழி கலங்கி போனாள். திருமணம் நிச்சயித்தவாறு நடந்து முடிந்தது. அதன் பின் ஒரு நாள் மீண்டும் ஊருக்கு வந்த ரமேஷ் தேன்மொழியை பக்கத்து வீட்டில் காணாமல் தவித்தான். பங்கஜத்திடம் கேட்டே விட்டான்.

"அக்கா உன்னையே சுத்தி சுத்தி வருமே பக்கத்து வீட்டு பொண்ணு எங்க காணும்?"

"அவ மாமனை கல்யாணம் பண்ணி பக்கத்து தெருவுக்கு போய்ட்டா" என்றதும் ஆடிப்போனான். உடனே புறப்பட்டு ஊருக்கு சென்று விட்டான்.

6 மாதத்திற்கு பின்னால்

அக்கா வீட்டில் ரமேஷ்.அப்போதுதான் தேன்மொழி அங்கு வந்தாள். வெள்ளை புடவையில் வந்தவளை பார்த்து திடுக்கிட்டு எழுந்தான். இவனை பார்த்ததும் கண்ணை கசக்கி கொண்டு ஓடி விட்டள். அக்காவிடம்

"என்ன ஆச்சு?"

"அவனுக்கு எதோ கேன்சர் வியாதியாம் அத மறச்சி கல்யாணம் பண்ணி வச்சி இவ வாழ்க்கைய கெடுத்து புட்டானுங்க" என்றாள்.

ஒரு முடிவுக்கு வந்தவனாய் அக்காவை அழைத்து கொண்டு தேன்மொழி வீட்டுக்கு சென்றவன் ராசுவிடம் பேசினான்

"உங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றதும் கோபத்தில் கொதித்தெழுந்த ராசு

"ஏண்டா நாய என்ன தைரியம் இருந்தா வேத்து சாதிக்கார பய நீ ஒரு முன்டச்சிய பொண்ணு கேட்டு வந்துருப்ப" என்று ரமேஷை அடித்தே விட்டான்.

"அய்யய்யோ சாமிக்குத்தமாயிப் போச்சே என் பேத்திய கட்டிக்கிறேன்னு சொல்லி புட்டானே" என கத்தி கொண்டிருந்தாள் பாட்டி. இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த தேன்மொழி திடீரென ஒரு இரும்பு பெட்டியை தூக்கி கொண்டு வந்து அவர்கள் முன் நின்றாள் மஞ்சள் நிற புடவை நெற்றி நிறைய குங்குமம்.

"அப்பா நான் ரமேஷ் கூட போறேன் என்ன ஆசிர்வாதம் பன்னுங்க" என்றவளுக்கும் இரண்டு அடி விழுந்தது. அப்பாவை பிடித்து தள்ளி விட்டு பேசினாள்.

"பொட்ட கழுத பொட்ட கழுதன்னு சொல்லியே என்னய படிக்க விடாம பண்ணி ஒரு வியாதி காரனுக்கு கட்டி குடுத்து என் வாழ்க்கைய சீரழிச்சு புட்டீங்க. நான் ஒன்னும் பொட்ட கழுத இல்ல சாதாரண மனுஷி. எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கு" எனக் கத்தியவளை பார்த்து வியப்பில் வாயடைத்து போனான் ராசு.

தேன்மொழி ஒரு புதுமைப் பெண்ணாய் தெரிந்தாள் ரமேசுக்கு. அவளை கைபிடித்து அழைத்து செல்லும் போது பாட்டி கத்தினாள் "எலே ராசு இனிமே உனக்கு அவ மவ கெடையாது. அவள தல முழுகிடு. சிறுக்கி நம்ம குடும்ப மானத்த கப்பலேத்திட்டு போறா. நல்லாவே இருக்க மாட்டா" என்றாள்.

இதுதான் தேன்மொழியின் மறுமணத்திற்கு கிடைத்த வாழ்த்து.

09 January 2010

டரியல் (09-சனவரி-2009)

6:05:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments

அடுத்த வாரம் பொங்கல் வருது. சொந்த ஊருக்கு போய் அப்பா, அம்மா, அண்ணன், ஊர் நட்புகளை பார்க்க 2 மாதங்களுக்கு பிறகு வாய்ப்பு வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் எங்கள் நண்பர்கள் குழு விழாவை எண்ணியும் மகிழ்ச்சி பெருகும் வாரமாக இருக்கிறது இந்த வாரம்.

------------------------

அஜீத்தின் அசல் பட பாடல்கள் வெளிவந்திருக்கிறது. கேட்டேன் பாடல்கள் சுமார் ரகமாகத்தான் தோன்றுகிறது. படமாவது நல்லா இருந்தா சரி.

நான் எதிர்பார்த்து கொண்டிருக்கும் தாமரையின் வரிகளால் நிரப்பப் பட்ட "வி்ண்ணைத்தாண்டி வருவாயா" பாடல்கள் இன்னும் மூன்று தினங்களில் வெளிவர இருக்கிறது.எனக்கு கிடைத்த ஒரு பாடலில் தாமரையின் இரு வரிகள் இதோ,

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் கொடுப்பேன்
நீ உடைக்கவே

எப்புடி இருக்குன்னு சொல்லுங்க. கேட்டதும் சட்டென மனதில் ஒட்டிய வரிகள்.
------------------------

ஒரு காலத்தில் மட்டைபந்து வெறியனாக திரிந்த எனக்கு அதிலிருந்த ஆரவம் குறைந்து போய் விட்டது. முத்தரப்பு மட்டைபந்து போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு (?) பங்களாதேசால் கூட 300ஐ நெருங்க வைத்தது வெறுப்பை ஏற்படுத்தியது. இந்திய மட்டைபந்து குழுமம் அரசியல் பார்க்காமல் சிறந்த வீரர்களை தேர்வு செய்யும் காலம் வருமா?
------------------------

எனது முதல் இடுகை(ஆதங்கம்)யான "பிச்சை காரனின் பிள்ளைகள்......." எத்தனை பேர் படித்திருப்பீர்கள் எனத் தெரியவில்லை. ஒரு நாள் அலுவலக இடைவேளையின் போது பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகளை பார்த்ததும் மனதிற்குள் ஏற்பட்ட வலிதான் இந்த பதிவு. இந்த குழந்தைகளின் நிலை அனாதைக் குழந்தைகளை விட கொடியது.
------------------------

இந்த வார டரியல் எங்கள் ப்ளாக்கின் "மனிதம் (சொன்னது பாதி....)". மனிதம் அனிச்சை செயலாக வெளிப்பட்டிருப்பதை சொல்லியிருக்கும் பதிவு. இந்த மனிதம் எத்தனை பேரிடம் மீதமிருக்கிறது எனத் தெரியவில்லை.
------------------------

அடுத்த வார டரியல் முதல் வாரம் ஒரு பதிவரையும் அறிமுகப் படுத்தலாம் என்றிருக்கிறேன். அதில் அந்த பதிவரின் பதிவுகளில் என்னைக் அவர்ந்த சில பதிவுகளையும் சேர்த்து அறிமுகப் படுத்தவிருக்கிறேன்.
------------------------

08 January 2010

3இடியட்சும் சுப்ரமணியபுரமும்

8:48:00 AM Posted by புலவன் புலிகேசி 53 comments
சமீபத்தில்தான் 3இடியட்ஸ் படம் பர்த்தேன். என்ன ஒரு அற்புதமான படம் என வியந்து போனேன். அன்பே சிவத்திற்கு பிறகு எனக்கு முழுமையாக பிடித்த படம் இது. படங்களின் விமர்சனங்கள் எழுதுவதில் அனுபவம் இல்லை, விருப்பமும் இருந்ததில்லை.

இருந்தாலும் நம் தமிழ்நாட்டு சமுதாயத்தில் உள்ள தவறான புரிதலுக்காக இந்த பதிவு. தமிழில் திரைத்துறையில் ஆர்வமிருக்கும் பலர் சொல்வது சுப்ரமணியபுரம் ஒரு யதார்த்த சினிமா என்பதுதான். எனக்கும் சுப்ரமணியபுரம் படம் பிடிக்கும். ஆனால் அடிக்கடி யோசித்து பார்ப்பேன் இந்த படம் சரியான் படம் தானா? என்று.

3இடியட்ஸ் மற்றும் சுப்ரமணியபுரம் இரண்டுமே நண்பர்களை சுற்றி நடக்கும் கதைதான். எடுத்துக் கொண்ட கதைக்களம்தான் வேறு வேறு. ஆனால் சுப்ரமணியபுரம் படத்திலிருந்து என்ன நல்ல விடயம் மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு எனக்கு கிடைத்த பதில்கள்

"கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான்'

"நண்பனுக்காக கொலைய்ம் செய்யலாம்"

இந்த படம் முழுதும் வன்முறையை நோக்கியே பயனப்பட்டிருக்கிறதே தவிற, மேலே சொன்ன கருத்துகளுக்கு முகியத்துவம் கொடுக்கப் படவில்லை என்பதே என் கருத்து. படத்தின் இறுதியில் கத்தியை எடுக்கும் ஒவ்வொருவனும் கொலை செய்யப் படுவதும் இந்தக் கொலைகள் ஒரு தொடர்கதை போலவே முடிக்கப்ப்ட்டிருக்கின்றன. என்னைப் பொருத்த வரை இது ஒரு வியாபாரப்படம் தான்.

இதனால் மக்கள் தவறானப் பாதைக்குத் திருப்பப்ப்டுகிறார்களே தவிர ஒரு மன்னாங்கட்டி கருத்தும் இல்லை. ஆனால் 3இடியட்ஸை எடுத்துக் கொள்வோம். இதுதான் உண்மையில் ஒரு யதார்த்த சினிமா.

நம் கல்வி முறையின் குறைபாடுகள் என்ன என்பதை எவ்வளவு அழகாக யதார்த்தமாக விளக்கியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல பெற்றோருக்கு ஒரு அறிவுரையையும் வாழப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றியிருக்கிறார்கள். இந்த படத்திலிருந்து சொல்லப் பட்டிருக்கும் நல்ல விடயங்கள் என்ன? என்ற கேள்விக்கு கிடைத்த பதில்கள்

"முழுப் படமும் ஒரு நல்ல விடயத்தை நோக்கிதான் பயனப் பட்டிருக்கிறது".

ஏன் தமிழ் நாட்டு இயகுனர்கள், நடிகர்கள் இது போன்று யோசிக்காமல், யதார்த்த சினிமா என்றால் வன்முறை இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பயணிக்கிறார்கள்? என்ற கேள்வி என் மனதில் பதில் தெரியாமல் உலவிக் கொண்டிருக்கிறது.

அன்பே சிவத்திற்கு பிறகு எனக்கு தெரிந்து ஒரு நல்லப் படம் தமிழில் நேரிடையாக எடுக்கப் படவில்லை. இப்பொழுது சொல்லுங்கள் இந்த இரண்டில் உங்கள் பார்வையில் யதார்த்தம் எது என்று?

06 January 2010

சோசியக்காரன்

4:50:00 AM Posted by புலவன் புலிகேசி 37 comments

ஆறறிவு வாழ்வின் அதிர்ஷ்டத்தை
ஓரறிவு கிளியிடம் கேட்டவனுக்கு
புரியவில்லை அதிர்ஷ்டம் உழைப்பில்
உள்ளது என்று

திருமணம் நடக்க பரிகாரம்
என்ன சோசியக்காரனை கேட்டவனுக்கு
தெரியவில்லை ஜாதகத்தை தூக்கியெறிந்தால்
நடக்கும் என்று

எதிர்காலம் அறிய் கைரேகை
பார்த்தவன் அறியவில்லை
முயற்சியிருந்தால் ஒளி மயமான
எதிர்காலம் என்று

நாடித் துடிப்பை மருத்துவனிடம்
காட்டாமல் சோசியக்காரனிடம்
காட்டி கேட்டான் ஆயுள்
எப்படி என்று

04 January 2010

பெண்ணடிமைத்தனத்திற்கு பெண்களே ஆதரவு

2:11:00 AM Posted by புலவன் புலிகேசி 59 comments
விஜய் தொலைக்காட்சியிலிருந்து சுடப்பட்ட நிகழ்ச்சி என்பதால் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. ஆனால் மதுரை முத்துவின் நகைச்சுவைகள் பிடிப்பதால் அவர் பேசுவதை மட்டும் கேட்பது வழக்கம்.

அப்படித்தான் சென்ற சனிக் கிழமையும் அந்த நிகழ்ச்சியில் முத்துவின் நகைச்சுவைகளை ரசித்து கொண்டிருந்தேன். பேசி முடிக்கையில் அவர் ஒரு சிறந்த விடயத்தை பற்றி அழகாக கூறுவார். அன்று அவர் தமிழகத்தின் பெருமையாக சொன்ன விடயம் என்னவென்றால்

"தமிழ்நாட்டு பெண்கள் சிறுவயதில் திருமணம் முடித்து கணவனை இழந்தாலும் வேறு ஒருவனை நினைக்காதவர்கள்" என்றார். இதற்கு பெண்கள் உட்பட அனைத்து ரசிகர்களிடமிருந்தும் கைத்தட்டல்கள். எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது.

உண்மையில் யோசித்தால் இது கைத்தட்டப்பட வேண்டிய விடயமா? நிச்சயமாக இல்லை. சிறு வயது திருமணம் என்பதே சட்டப்படி குற்றம். அதோடில்லாமல் விதவைகள் மறுமணமும் எதிர்க்கப்ப்ட்டிருக்கிறது. ஒரு ஆண் மனைவியை இழந்தால் பெரும்பாலும் மறுமணம் செய்து கொள்கிறான். பெண் செய்து கொண்டால் அது குற்றமாம். அப்படி மறுமணம் செய்யாமல் இருப்பவள் பத்தினியாம்(கிராமப்புறங்களில் இன்றும் நீடிக்கும் நிலை இது).

இது பெண்களை அடிமைப் படுத்தும் கருத்தாகவே எனக்கு தோன்றியது. இது போன்ற சிறுவயது திருமணங்கள் நடப்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் குறைவுதான் என்றாலும் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதும் குறைந்து போய்தான் இருக்கிறது.

அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. "பெண்களே பெண் அடிமையாதலை ஆதரிக்கிறார்களா?". ஊடகங்களில் இது போன்று பிரபலமானவர்கள் அதிகம் ஆராயமல் கருத்து வெளியிடுவது பலருக்கு அதிருப்தியை தருவதோடு இது போன்ற விடயங்கள் பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையை கூட ஏற்படுத்தக் கூடும்.

அவர் சொல்ல வந்த கருத்து என்னவோ தமிழ்நாட்டு பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்பதுதான். ஆனால் அதற்கு சுட்டிய உவமை ஆணாதிக்கத்தை மிகைபடுத்தி காட்டியிருக்கிறது. கற்பு என்று ஒன்று உண்டெனில் அது இருபாலருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும்.

பெண்களுக்கு மட்டும் தினிக்கபடுவதாக இருக்க கூடாது. இதை பெருமையாக பேசி பேசியே பெண்ணடிமைத்தனம் வளர்க்கப் பட்டிருக்கிறது. ஆணின் கற்பு பற்றி அதிகம் பேச்சுக்கள் எழுந்ததில்லை. இதற்கு காரணம் அவன் கருவுறுவதில்லை. ஆணிடம் இல்லாத ஒரு இயல்பு பெண்ணிற்கு இருந்தும் அதை வைத்தே அவள் அடிமைபடுத்த படுவதுதான் கொடுமையான விடயம்.

இன்று பெண்கள் பல துறைகளில் சாதனைகள் புரிந்து வருகிறார்கள், பெண்ணடிமைத்தனம் குறைந்திருக்கிறது. இருந்தாலும் முழுமையாக நீங்காத ஒன்றாகவே இவ்வடிமைத்தனம் இருந்து வருகிறது. சாதனை புரிந்த பெண்களை கேட்டால் நிச்சயம் தெரியும் அந்த சாதனைக்கு தடைக்கலாக இருந்த ஆணாதிக்கம் பற்றி. என்று மாறும் இந்த நிலை? விடை தெரியா கேள்விகளுடன் முடித்திருக்கிறேன்.
பெண்ணே தடைகளை தகர்த்தெறி
மன்னில் நீயும் ஒரு
மனிதப்பிறவி என்பதை மறந்து
விடாதே.....

02 January 2010

டரியல் (02-சனவரி-2010)

6:08:00 AM Posted by புலவன் புலிகேசி 30 comments
இந்த வாரம் புத்தாண்டின் முதல் டரியல். 2009ன் இறுதியில் என் 50 பதிவை முடித்து 100+ நண்பர்கள் பெற்றேன். அது மட்டுமல்லாது விகடன் எனக்கு 3 புத்தகங்கள் (மின்னிதழ்) பரிசளித்துள்ளது. அவை

1) என்.எஸ். கிருஷ்ணன்
2) அம்பேத்கர்
3) தெருவாசகம்

இப்பதான் ஒன்னொன்னா படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

--------------------------------

கேபிளார் சொன்னபின் நேற்றைய தினமணி வாங்கி படித்தேன். நம் வலைப்பூக்கள் பற்றி ஒரு சிறப்பு கட்டுரை வெளிவந்திருந்தது. அதில் நம் நண்பர்கள் பலரது வலைப்பூக்கள் சுட்டப் பட்டிருந்தது. தினமணிக்கு நன்றிகள். நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது ஒரு ஆரோக்யமான வளர்ச்சி. இதை நல்ல விடயங்களுக்காக பயன் படுத்துவோம். தயவு செய்து யாரும் சாதி மதங்கள் பற்றி சண்டையிட வேண்டாம். சமீபத்திய "பர்தா" பதிவால் வந்த சர்ச்சைகளை படித்து மிகவும் வருத்தமடைந்தேன். இது போன்று யாரும் எழுதவும் வேண்டாம். இதற்கு எதிர் பதிவு எழுதி சண்டையிடவும் வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். (நான் மதம் சாதி சித்தரிப்பு கடவுள்களை நம்பாமல் மனிதத்தில் கடவுள் காண்பவன்).

--------------------------------

என் பார்வையில் சென்ற ஆண்டு தமிழ் திரையுலகம்

சிறந்த படம்: பசங்க

ஒரு அருமையான வாழ்வியல் பிரதிபலிப்பாக வெளிவந்த இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. சிறுவர்களை வைத்து முதல் முறை ஒரு முழுநீளப் படம் எடுத்து அசத்திய பாண்டிராஜீக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

சிறந்த பாடல்: துளி துளி துளி மழையாய் (பையா)

2008 வாரணம் ஆயிரம் பாடல்கள் மனதில் நின்ற அளவிற்கு 2009ல் எந்த பாடலும் நிற்கவில்லை. இருந்தாலும் அயன் படத்தின் "விழிமூடி யோசித்தால்" ரசிக்கும் படியிருந்தது. பையா படப் பாடல்கள் முன்னரே கேட்டது போல் தோன்றினாலும் வரிகள் அழகு. பல பாடல்கள் வெளிவந்த நேரம் பிடித்து அப்புறம் அலுத்து விட்டது.

சிறந்த திரைத்துரை மனிதர்: . ஆர். ரகுமான்

இரண்டு ஆஸ்கர் விருது பெற்று கொடுத்த முதல் இந்தியர். எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர். அமைதியான அடக்கமான மனிதர். 2010-லாவது நிறைய தமிழ்பாடல்களை அவரிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.

--------------------------------

கடந்து வந்த தோல்விகளை
வாறியெடுத்து சேர்த்து
கட்டிய வெற்றி மாலையுடன்
பிறந்திருக்கிறது புத்தாண்டு
மலர் உதிர்வதற்குள் முயற்சி
கொண்டு பெற்று விடுவோம்

புத்தாண்டு வாழ்த்து பதிவில் சேர்க்கலாம் என தோன்றியது. ஆனால் முன்னரே வெளியிட்டதால் சேர்க்கவில்லை.

--------------------------------

எனது தொழில்நுட்ப வலைப்பூவில் (புலிகேசியின் Microsoft .Net) Microsoft .Net and SQL () பத்தி எழுதி வருகிறேன். நடுவில் சில காலம் அதில் எழுதவில்லை. இன்று முதல் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். .Net இல்ல SQL தெரிஞ்ச யாராவது அதில் வரும் பதிவுகளில் கலந்துரையாட வாங்க.
தெரிஞ்சிக்கனும்னு ஆசை படுறவங்க வந்து பாருங்க.

--------------------------------

இந்த வார டரியல் நம்ம தோழி மலிக்காவின் "அரையடி நாக்கு" என்ற கவிதை பதிவு. யாகாவாராயினும் நாகாக்க என்பதை சுட்டும் கவிதை. படிக்கலைன்னா படிச்சிப் பாருங்க.

--------------------------------

01 January 2010

புத்தாண்டில் வெற்றி பெற

7:21:00 AM Posted by புலவன் புலிகேசி 19 comments

வெற்றியை நோக்கி பயணிப்போருக்கு
ஒவ்வொரு நாளும் புத்தாண்டு

சென்ற நாளின் தோல்விகளை
தேடிப் பிடித்து இன்று

மீண்டும் வெற்றியை நோக்கி
பயணிப்போம் புத்தாண்டு

புது நாள் ஆகிவிடும்
புத்துணர்வு பெருகும்

தோல்வி தூரமாகி விடும்
வெற்றி சொந்தமாகி விடும்

இந்த புத்தாண்டு அனைவருக்கும் பற்பல வெற்றிகளை பெற்று தர வாழ்த்துக்கள்..