கடவுளை மற..மனிதனை நினை..

29 March 2010

டரியல் (29-மார்ச்-2010)

7:46:00 AM Posted by புலவன் புலிகேசி 40 comments

சனிக்கிழமை நடந்த "தமிழ் வலைபதிவர்கள் குழும" விவாதத்திற்கு சில காரணங்களால் என்னால் செல்ல இயலவில்லை. மறுநாள் கேபிளாரிடம் பேசியும், சிலரது வ்லைப்பூ மூலமும் அங்கு நிலவிய குழப்பங்களையும், இறுதியாக எடுக்கப் பட்ட முடிவையும் தெரிந்து கொண்டேன். என்னைப் பொறுத்த வரை இந்தக் குழு மக்களுக்கு பயன்படும் நல்ல விடயங்களையும், உதவிகளையும் தன் பணிகளாக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குழுமத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள்

மின்னஞ்சல் செய்ய வேண்டிய முகவரி: tamilbloggersforum@gmail.com
தமிழ் வலைப்பதிவர்கள் கூகுல் குழுமம் tamizhbloggersforum@googlegroups.com

புகைப்பட உதவி: சுகுமார்
---------------------------

என் நண்பன் ஒருவன் சென்னையின் முக்கியமானப் பகுதியில் போக்குவரத்து காவல் அதிகாரியாக (டிராஃபிக் எஸ்.ஐ) பணியாற்றி வருகிறான். நண்பர்களில் சிலர் அவனது துடிப்பான பணியையும், நேர்மையையும் கவனித்திருக்கிறார்கள். அவன் பணியில் இருந்ததால் பேசாமல் வீடு திரும்பியிருக்கிறார்கள். ஒரு எஸ்.ஐ தனியாக சாலையில் நின்று விதி மீறுபவர்களைப் பிடித்துக் கொண்டிருப்பது ஆச்சர்யமளித்ததாகவும் சொன்னார்கள். அதன் பின் ஒரு நாள் என் அறைக்கு வந்தான். அவனுக்கு லஞ்சம் பெறுவதில் விருப்பமில்லாததால் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஏட்டுகள் அவனுடன் வருவதில்லையாம். லஞ்சம் இல்லை என்றால் பணி செய்ய அவர்கள் தயாராக இல்லை என்பது புரிந்தது. இவர்கள் எல்லாம் சேர்ந்து என் நண்பணை மாற்றாமல் இருக்க வேண்டும். காவல் துறை என்றாலே லஞ்சத் துறை என்றாகிப் போனதற்கு இது போன்றவர்கள்தான் காரணம்.

---------------------------

மூன்றாண்டுகளுக்குப் பிறகு நான் முன்னர் பணி செய்த நிறுவனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது. கையில் குழந்தையுடன் வந்திருந்தார். ஆனால் வேறு ஒரு தோழியின் மூலம் விபரமறிந்தேன், பத்து ஆண்டு காலம் காதலித்து திருமணம் செய்து பிள்ளை பெற்றிருக்கிறார்கள். இப்போது திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் "விவாகரத்து" செய்ய முடிவெடுத்து வின்னப்பமிட்டிருக்கிறார்கள். இந்தக் காதலின் அர்த்தம் எனக்கு இன்று வரை சரிவரப் புரிந்ததில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

---------------------------

சென்னையில் பல இடங்களில் பாலங்கள் கட்டப் பட்டு சாலைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் சென்னையின் முக்கிய சாலையில் ஐ.ஐ.டி க்கு அருகில் உள்ள சாலையின் நிலை கவலைக்கிடமானது. வகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே கடந்து செல்கின்றனர். புதிய சாலைகள் அமைப்பதில் கிடைக்கும் லஞ்சம் பழையவற்றை புதுப்பிப்பதில் கிடைக்கவில்லையோ?

---------------------------
இந்த வாரப்பதிவர்: திசைக்காட்டி ரோஸ்விக்


இதனை சிலர் தமிழாக்கம் செய்து ரோசாப்பொய்முடி என கலாய்ப்பார்கள். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் வாழ்வியல் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே இருக்கும். உறவுகள் பற்றியும் அழகாக சொல்லியிருப்பார்.

இவரது வலைப்பூ: திசைக்காட்டி

---------------------------

இந்த வார டரியல், இந்த வாரப் பதிவர் ரோஸ்விக் எழுதிய "பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்)...". தேவையானப் பதிவு. உலக அழிவில் நம் பங்கு என்ன என்பதை சொல்லியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

---------------------------

26 March 2010

சென்னை வலைப்பதிவர் சங்கம் ஆரம்பம் - அனைவரும் வாரீர்

7:23:00 AM Posted by புலவன் புலிகேசி 22 comments

வலைப்பதிவில் எழுதி வரும் சென்னை மக்களுக்காக ஒரு குழுமம் ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறார்கள் அதற்காக லோகோக்கள் உருவாக்கப் பட்டு கருத்துக்களும் கேட்கப் பட்டிருக்கிறது. எனது தெரிவு இந்த லோகோ.

அப்பறம் உண்மைத்தமிழன் சொன்னது போல் எழுத்தாளர் என்ற வார்த்தை நமக்கு வேண்டாம் என நினைக்கிறேன். அதை மட்டும் இந்த லோகோவில் மாற்றம் செய்து வெளியிடலாம் எனக் கருதுகிறேன். சென்னை என்றில்லாமல் அனைத்து வலைப்பதிவர்களும் வரவேற்கப் படுகிறார்கள்.


நிகழ்ச்சி நிரல்:

நாள் : 27/03/10

கிழமை ; சனிக்கிழமை

நேரம் : மாலை 6 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6. முனுசாமி சாலை,
மேற்கு கே.கே.நகர்.
சென்னை:

தொடர்புக்கு
மணிஜி :9340089989
M.M.Abdulla -9381377888
cablesankar -9840332666
லக்கிலுக்: 9841354308
நர்சிம் ; 9841888663
பொன்.வாசுதேவன் : 9994541010

25 March 2010

ஐ.பி.எல் எதிர்க்கப் பட வேண்டிய ஒன்று

12:27:00 AM Posted by புலவன் புலிகேசி 37 comments
இந்தியாவைப் பொறுத்த வரை கிரிக்கெட் என்பது ஒரு அரசியல் விளையாட்டாகத்தான் இருந்து வருகிறது. இன்று அதை மேலும் ஒரு வியாபாரமாக்கி மக்களை மயக்கும் வித்தைதான் இந்த ஐ.பி.எல். இங்கு சூதாட்டம் மட்டுமே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அந்த மாய வித்தையில் மக்களின் கண்கள் மறைக்கப் பட்டு ஏமாற்றப் ப்டுகிறார்கள். அதோடில்லாமல் அங்கு திரைப்படங்களின் குத்துப் பாடல்கள் போல் பெண்களின் கவர்ச்சி நடனம்.

ஐ.பி.எல்லில் விளையாடும் வீரர்கள் காசுக்காக ஏலம் விடப்படுகின்றனர். அவர்களின் ஏலத் தொகை பல கோடிகளைத் தாண்டி மக்களை வியக்க வைத்திருக்கிறது. சமீபத்தில் புதிதாக சேர்க்கப் பட்ட இரண்டு அணிகள் கூட ஆயிரத்து ஐநூறு கோடிகளுக்கு மேல் ஏலம் விடப் பட்டிருக்கிறது.

இவ்வளவு விலைக் கொடுத்து இதை வாங்குபவர்களின் வியாபாரத்தில் லாபம் எப்படி வரக்கூடும் எனக் கேட்டால் கிடைக்கும் காரணங்கள்

டிக்கெட் விற்பனை

விளம்பரங்கள்

ஸ்பான்சர்கள்

இவற்றிலிருந்து லாபம் கிடைத்து விடுகிறது என மக்களை நம்ப வைக்க முடியாது. நிச்சயம் அங்கு சூதாட்டம் பெரும்பங்காற்றக் கூடும். இல்லையென்றால் அதை இவ்வளவு சிறப்பான வியாபரமாக செய்வதென்பது அசாத்தியமான ஒன்று. இது மக்கள் அனைவரும் அறிந்ததே.

ஐ.பி.எல் அணிகள் பந்தயக் குதிரைகள் போன்றவை. அதிகம் பணம் கட்டப் பட்ட குதிரையை தோற்க வைப்பதுதான் போட்டி நடத்துபவர்களின் குறியாக இருக்கும். இந்த சூதாட்டத்தில் பலர் ஜெயித்திருக்கலாம். காரணம் அவர்களால் பந்தயம் கட்டப் பட்ட குதிரை விலை மதிப்பில் குறைவாக இருந்திருக்கும்.

மொத்தமாகப் பார்க்கும் போது முப்பது பேருக்கு லாபம் என்றால் என்பது பேருக்கு நஷ்டம் இருக்கும். இவை முன்னரே முடிவு செய்யப் பட்டு விடும். இந்த முப்பது பேரின் லாபத்தை வைத்து பந்தயம் நேர்மையாக நடந்தேறியதாக தம்பட்டமடித்து மக்களின் கண்கள் மறைக்கப் படும்.

மக்களும் அந்தப் போட்டிகளுக்கு ஆதரவாக இந்தியன் என்பதை மறந்து நான் சென்னை, கல்கத்தா, மும்பை ஆதரவாளன் என்ற பிரிவினைக்குள் சிக்கி மாற்றி மாற்றி ஆதரவு என்ற பெயரில் பணத்தை வாறி இறைக்கிறார்கள். இதில் ஆரோக்கியமான போட்டி என்பது எந்த அணிகளூக்கிடையேயும் நிச்சயம் கிடையாது.

இதை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டு ரசிக்க வேண்டும் என சொல்வது மக்களை மடையர்களாக்கும் வேலை. எனக்குப் பிடித்த பல வீரர்கள் கூட இங்கே காசுக்கு விலைபோனவர்கள். இத்தனையும் தெரிந்தும் சில நண்பர்கள் தமிழன் விளையாடும் போட்டிகளை விரும்பிப் பார்ப்பேன் என்றனர். தமிழனாக இருந்தாலும் ஐ.பி.எல்-ல் என்ன காசில்லாமலா விளையாடுகிறான்.

ஐ.பி.எல் காசுக்காக மட்டுமே! அது ஒரு வியாபாராம்! வீரர்களை போல் மக்களும் அதில் விலைபோவது நிச்சயம் தவறு!

24 March 2010

பதிவுலகின் விமர்சன மேதாவிகள்

6:01:00 AM Posted by புலவன் புலிகேசி , 64 comments

விமர்சனம் என்றால் என்ன? என பொருள் தேடிப் பார்த்தால் ஒன்றின் நல்லவைக் கெட்டவைகளை ஆராய்வது என்றுதான் பொருள் இருக்கிறது.இங்கு ஒன்றின் என்று வரும் போதே அது மனிதன் போன்ற ஜீவராசிகளைக் குறிப்பதில்லை எனப் பொருள் படுகிறது. ஏனென்றால் ஒரு மனிதனை விமர்சிக்க இன்னொரு மனிதனுக்கு தகுதி இருக்கிறதா என்பது கேள்விக்குறியே(?).

இன்று திரைப்பட விமர்சனங்களை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள நல்லவைகளும், கெட்டவைகளும் பகுக்கப் ப்ட்டு விமர்சனம் செய்யப் படுகிறது. அது ஒரு ஆரோக்யமான விமர்சனம். ஆனால் ஒரு தனி மனிதனை விமர்சிக்கும் போது அவனின் நல்ல குணங்கள் பெரும்பாலும் மறைக்கப் பட்டு அவனிடம் உள்ள பிழைகளே விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது.

ஒரு மனிதன் எப்போது விமர்சனத்திற்குள்ளாகிறான்? அவன் ஒரு பிரபலமானவனாக மாற்றம் பெற்ற பின்புதான். இது ஏன் என அது போன்ற விமர்சனங்களின் ஆதரவாளனான ஒரு பதிவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் "பிரபலங்களின் தவறான செயல் அனைவரையும் பாதிக்கும் என்றார்". இது ஒரு புறமிருக்கட்டும், முதலில் பிரபலம் என்பது மக்களின் மத்தியில் தெரியப்பட்ட ஒரு மனிதனாவது. இது நல்லவை, தீயவை இரண்டிற்கும் பொதுவே.

நல்லவர்கள் மட்டும் பிரபலமடைவதில்லை. ஓசாமா போல் பிரபலமடைந்த தீயவர்களும் இருக்கிறார்கள். நான் ஓசாமாவைப் பின் பற்றுகிறேன் என எவரும் சொல்வதில்லை. காரணம் அங்கு தீமை இருகிறது. ஆனால் ஒரு பிரபலமடைந்த நல்ல குணமுடையவனிடம் இருக்கும் தீமை மட்டும் எதிர்க்கப் பட்டால், மக்களுக்கு நன்மை, தீமைகளை பகுத்தறியத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.

உண்மையில் பார்த்தால் நல்ல குணம் மட்டும் கொண்டவர் என ஒருவர் கூட கிடையாது. நன்மை, தீமை கலந்ததுதான் மனித வாழ்வு. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தவறு செய்து விட்டு தான் இறக்கிறோம். அப்படி எல்லாம் இல்லை என ஒருவரும் சொல்ல முடியாது. இப்படி இருக்கையில் இன்னொருவரின் குறைகளை விமர்சிக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது.

நித்யானந்தர் பிரச்சினையை படம்பிடித்து காசு பார்த்த ஊடகங்களுக்கு துணை நின்றோம். என்ன பலன் கிடைத்தது? உண்மையில் அவனை விமர்சிப்பதால் என்ன நன்மை நடந்தது. நன்மையை விட தீமைதான் அதிகம். இதன் விளைவு இன்று சிறுவயது குழந்தைக்கு கூட நித்யானந்தன் என்ன செய்தான் என தெரிந்திருக்கிறது.

உண்மையில் நித்யானந்தனால் பாதிக்கப் பட்டது யார்? அவனை முட்டாள்த் தனமாக நம்பிய மக்கள் ஏமாற்றப் பட்டனர். தவறு செய்தவனை விட, அதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவனைத்தான் நான் குற்றவாளி என சொல்வேன். நித்யானந்தனுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது யார்? முட்டாள் மக்கள் தானே? அப்போ நியாயமாகப் பார்த்தால் விமர்சிக்கப் பட வேண்டியது அவர்கள் தானே?

அரசியல்வாதியானாலும் அவனின் தனிப்பட்ட விடயங்கள் விமர்சிக்கப் பட வேண்டியதல்ல. எந்தத் துறைப் பிரபலமானாலும் சரி, மக்களை பாதிக்கும் விடயங்கள் மட்டுமே விமர்சிக்கப் பட்டு தோலுரித்துக் காட்டப்பட வேண்டும். ஆனால் அந்த வேலையை செய்ய எந்த ஊடகமாவது தயாரா?

ஊடகங்களின் சுதந்திரம் எல்லாம் அடுத்தவனின் படுக்கை அறையை நோக்கிதான். எதைக் காட்டினால் காசு கிடைக்கும் எதை மறைத்தால் பெரிய வளர்ச்சியடைய முடியும் என்ற சிந்தனை மட்டுமே அவர்களுடையது. அவ்ற்றில் மயங்கிப் போய் மங்கிப் போவது மக்களின் குணமாக இருக்கிறது.

ஒருவனைப் பிரபலம் என்று சொல்லுங்கள். அவனின் சாதனைகளைப் புகழுங்கள். அதற்குரிய மரியாதையை செலுத்துங்கள். எந்த தவறும் இல்லை. ஆனால் அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி அவனை பர்சனலாக நம்பாதீர்கள். அது அவனுக்கு தவறு செய்யும் தூண்டுகோலாக மாறக்கூடும். நம்மைப் பொறுத்த வரை அவன் ஒரு சாதனையாளன், பிரபளம். அவ்வளவே இருக்க வேண்டும்.

குறைகளை எல்லாம் நம்மிடமே வைத்துக் கொண்டு அடுத்தவனை விமர்சிக்கும் வேலையை பதிவுலகிலாவது விட்டொழிப்போம். அது போன்ற விமர்சனங்களை ஆதரிக்காமலாவது இருப்போம்.

இந்தப் புரிதல்களைப் பற்றி ஆராயாமல் சச்சின், வைரமுத்து, இளையராஜா மற்றும் பதிவர்கள் போன்றோரை விமர்சிப்பதால் என்ன பயன்? அவர்களின் குறைகளை சொல்ல விமர்சகர்களுக்கு என்னத் தகுதி இருக்கிறது?


22 March 2010

டரியல் (22-மார்ச்-2010)

5:41:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments
திருநெல்வேலியில் நூறு மற்றும் ஐநூறு ரூபாய்களை அச்சடித்த கள்ள நோட்டு கும்பல் சிக்கியிருக்கிறது. மூன்று பேரைக் கைது செய்திருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளியான சேகர் என்பவன் தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறான். வேலியே பயிரை மேய்வது ஒன்றும் நம் நாட்டிற்கு புதிதில்லையே....!

------------------------

மாயாவதிக்கு போடப்பட்ட பணமாலைக் குறித்து இந்த ஊடகங்கள் ஒளிவுமறைவாகவே செயல்படுகின்றன. அதற்கான விசாரணை என்ன ஆனது என்பது பற்றி ஊடகங்கள் எந்த விசாரணையும் செய்யவில்லை. இது போல் அரசியல்வியாதிகளை இவைகள் கண்டு கொள்ளாமல் விடுவதுதான் அவர்களின் அராஜகங்களுக்கு காரணம். இதை விட நித்யானந்தர் பிரச்சினை ரொம்ப முக்கியமானதா...? தான் பெற்ற லஞ்சப் பணத்திற்கான கணக்கு இப்படியும் காட்டப் படுமோ...?

------------------------

சமீபத்தில் தோழி ஒருவரின் ஆர்குட்டில் கிடைத்தது இந்த குறும்படம். மிக அருமையாகவும் சுருக்கமாகவும் எடுக்கப் பட்டிருக்கும் இப்படம் வறுமையின் நிலைபாட்டை அழகாக விளக்கியிருக்கும்.

------------------------


சில நாட்களுக்கு முன்னர் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இறந்ததாக செய்தியை தட்ஸ்தமிழ் இணையத்தில் படித்ததும் பதறிப் போனேன். படித்து முடித்த சில நிமிடங்களிலேயே அந்த செய்தி நீக்கப் பட்டு "வதந்திகள் பரப்பப் பட்டதாக செய்தியை வெளியிட்டது அந்த இணையதளம். உறுதிப் படுத்தப் படாத செய்தியை ஒரு சிறந்த செய்தி ஊடகம் வெளியிட்டது வருத்தத்திற்குரியது. தலைவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்தேன்.
------------------------

சென்ற வாரம் கூகுல் பஸ்ஸில் நான் ஓட்டியது:

நீ வீசியெரிந்த குப்பை நான்
எடுத்துக் கொண்டவளுக்குத்
தெரிந்தது அதன் கவிதை!
------------------------
இந்த வாரப் பதிவர்: வந்தே மாதரம் சசிக்குமார்


பதிவர்களுக்குத் தேவையான பல தகவல்கள் மற்றும் வலைபூவில் உள்ள தொழில்நுட்ப பிரச்சினைகள், வலைப்பூவை அழகு படுத்துதல் போன்றவற்றிகான வழிமுறைகளை தெளிவாக எழுதியிருக்கிறார். சமீப காலங்களாக சில நகைச்சுவை புகைப் படங்களையும் தேடிப் பிடித்து பதிவின் முடிவில் வெளியிடுகிறார்.

இவரின் வலைப்பூ: வந்தே மாதரம்
------------------------

இந்த வார டரியல் அன்புடன் அருணா எழுதிய மீன்களும் மீனாக்களும்!. படித்துப் பாருங்கள். வாழ்வியல் விளக்கும் சிறுகதை.
------------------------

20 March 2010

புவி வெப்பமாதலுக்கு எதிராக ஒரு போர் - 3

7:02:00 AM Posted by புலவன் புலிகேசி , 21 comments

அன்றாட பழக்க வழக்கங்களில் சிறு மாற்றம் செய்தல்

- தினசரி நாம் உபயோகிக்கும் மின்சாரம் சார்ந்த பொருட்களை சரியன முறையில் பராமரிக்க வேண்டும்

- முடிந்த வரை வீட்டிலேயே உணவு சமைத்து சாப்பிட பழக வேண்டும். இயலாத நேரங்களில் மட்டும் ஹோட்டல்களுக்கு செல்லலாம். ஹோட்டல்களில் உபயோகிக்கப் படும் கியாஸ் சிலிண்டர்களால் வெளியிடப்படும் கார்பன் - டை- ஆக்சைடு அதிக அளவு காற்று வெளிகளில் கல்ந்து காற்றை மாசு படுத்துவதோடு புவி வெப்பமாதலுக்கும் துணை நிற்கிறது.

- அசைவ உணவுகள் தயாரிப்பதற்கு ஆகும் கியாஸ் அதிகம். அதற்கு செலவிடப் படும் எனர்ஜியை திரும்பத் தயாரிக்க தேவைப்படும் கியாஸ் மூலம் காற்றுவெளி மாசடைந்து இந்த பூமியை வெப்பப்படுத்தும் காரணியாகிறது.

- முடிந்த வரை அசைவ உணவுகள் உண்ணுவதை குறைத்துக் கொள்ளலாம். அதே நேரம் சைவ உணவுகள் தயாரிக்க ஆகும் நேரமும், அதற்கு செலவிடப் படும் எரிபொருளும் மிகக்குறைவே.

- அசைவம் தவிர்க்க நிச்சயம் நம்மில் பலருக்கு மனமிருக்காது. ஆனால் குறைத்துக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

- வீடுகளுக்கு வர்ணம் பூசும் போது செய்ய வேண்டியவை: தட்ப வெட்ப நிலை நல்ல வெயில் எனில் வெளிர் நிறங்களில் வர்ணம் பூசவும்.

- நீங்கள் வசிக்கும் பகுதி குளிர் நிறைந்தது எனில் நல்ல அடர்த்தியான(டார்க்) நிறத்தில் வர்ணம் பூசவும். இதன் மூலம் கார்பன் -டை- ஆக்சைடின் அளவைக் குறைக்க முடியுமாம்.

மரங்களை வளர்த்தல்

இதன் அவசியம் குறித்து தனிப் பதிவே எழுதியிருக்கிறேன் பசுமைக் கொலைகள். ஒரு மரம் வெட்டினால் இரு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். மரங்களின் அவசியம் மரத்துப் போன மனிதர்களுக்கு என்றுதான் புரியப் போகிறதோ?

இவற்றை செய்வது நம் கடமை அல்ல. நம் இயல்பாக இருக்க வேண்டும். இத்தகைய சிறு செயல்களினால் பெரும் மாற்றங்கள் நிகழும் என்பது அப்பட்டமான உண்மை. கை கோர்த்து இப்போரில் வெற்றி பெறுவோம் வாருங்கள்.

பி.கு: இனி டரியல் திங்கள் கிழமைகளில் வெளிவரும். மேலும் இந்த புவி வெப்பமாதலைத் தடுக்கும் வழி முறைகள் தெரிய வந்தால் அவ்வப்போது டரியலில் சொல்கிறேன்.

19 March 2010

புவி வெப்பமாதலுக்கு எதிராக ஒரு போர் - 2

5:55:00 AM Posted by புலவன் புலிகேசி , 31 comments

வாகனங்களை பராமரித்தல்


- வாகனங்களை சரியான முறையில் பராமறரிக்க வேண்டும். சரியான கால இடைவெளிகளில் சர்வீஸ் செய்து பயன்படுத்தல் வேண்டும்.

- மிதமான வேகத்திலும் சீராகவும் வாகனத்தை ஓட்டப் பழக வேண்டும். அதிவேகமாக செல்லும் போது அதன் எரிபொருட்கள் அதிக அளவு கார்பன் - டை - ஆக்சைடு வாயுவை வெளியேற்றுகிறது. மிதமான வேகமும் அதற்கேற்ற கியர் முறையும் பயன் படுத்தப் பட்டால் எரிபொருள் சிக்கனமாவதுடன் புவியின் வெப்பத்தையும் குறைக்க முடியும்.

- வாகனங்களை ஒரே இடத்தில் ஆன் செய்து நிறுத்தி வைப்பதைத் தவிர்க்கவும். 30 செகன்ட்சுக்கு மேல் ஆகும் என்றால் அவற்றை அனைத்து வைக்க வேண்டும்.

- வாகனங்களின் டயர் அவ்வப்போது சரி பார்க்கப் பட வேண்டும். எரிபொருள் சிக்கனத்திற்கு உதவும்.

- வாகனங்களில் ஏ.சி பயன் படுத்தும் போது குறிப்பிட்ட அளவு குளிரானதும் அதை நிறுத்தி வைக்கவும். வெயிலின் தாக்கம் அதிகமிருந்தால் மட்டுமே ஏ.சியை உபயோகிக்கவும். பெருமைக்காக உபயோகிக்க வேண்டாம்.

- குறைந்த அருகில் உள்ள இடங்களுக்கு செல்லும் போது மோட்டார் வாகனங்களைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். அது பூமிக்கு மட்டுமல்ல நம் உடலுக்கும் நல்லது. வாக்கிங் சென்றது போல் இருக்கும்.

- உங்கள் வாகனம் கேஸ் சிலிண்டரில் இயங்குவதாயின் அதன் மூடியை தினம் சரி பார்க்கவும். வாயுக் கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை.

- அதிக மைலேஜ் கொடுக்கும் வாகனங்களாக பார்த்து வாங்கவும். அதன் மூலம் நம் பணத்துடன் சேர்த்து பூமியையும் காக்க முடியும்.

- வாகனத்தில் ஏ.சி இருப்பின் சர்வீஸ் செய்யும்போது அதன் கூலண்ட் ரீசைக்கிள் செய்யப் பட வேண்டும். இதன் மூலம் கார்பன் - டை- ஆக்ஸைடு வாயுவைக் கட்டுப் படுத்த முடியும்.


யோசித்துப் பார்த்தால் இவை சொல்லி செய்ய வேண்டிய காரியங்கள் அல்ல. இயல்பாக நாம் செய்ய வேண்டியவை. நம்முடைய அலட்சியத்தால் இவ்வளவு நாள் செய்யாமல் இருந்திருக்கிறோம். இனியாவது செய்யலாம் வாருங்கள்.

மீதமுள்ள இரண்டு முறைகளைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். இவை சொல்லுக்காக அல்ல நாம் செயல் படுத்துவதற்காக. இந்தப் போரில் நாடு மொழி, மதம், இனம் பாராமல் நாம் பங்கேற்க வேண்டும். கை கோர்க்கத் தயாராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

பி.கு: இது என் நூறாவது இடுகை. ஒரு நல்ல விடயத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற திருப்தி இருக்கிறது.

18 March 2010

புவி வெப்பமாதலுக்கு எதிராக ஒரு போர் - 1

8:40:00 AM Posted by புலவன் புலிகேசி , 38 comments

புவி வெப்பமடைவது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எந்த நாட்டின் அரசாங்கமும் இதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை எனக் குறை கூறுவதில் துளியும் விருப்பமில்லை. இதற்கெல்லாம் முழுக் காரணம் படித்த மக்களின் அறியாமை என்றுதான் சொல்வேன்.

நம்மைப் போன்றவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன் படுத்தத் தொடங்கிய பல பொருட்கள் இன்று நம் அழிவிற்கு துணை நிற்கின்றன.குளிர் காலத்திலும் ஏ.சி போட்டு உறங்குபவர்கள் நம்மில் பலர். இந்த புவி வெப்பமாதல் குறித்து பல ஊடகங்கள் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தாலும் நித்யானந்தர் பிரச்சினை அளவிற்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப் படவில்லை.

இதைத் தடுக்க பல ஊடகங்கள் சொன்ன வழிமுறைகளை நம்மில் எத்தனை பேர் பின் பற்றியிருக்கிறோம்? இரண்டு சதம் கூட இருக்காது. இதைத் தடுக்க நம்முடைய அன்றாட செயல் பாடுகளை நெறிமுறை படுத்தினாலே போதும். சரி இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

மின்சார பயன்பாட்டைக் குறைத்தல்
வாகனங்களை பராமறித்தல்
அன்றாட பழக்க வழக்கங்களில் சிறு மாற்றம் செய்தல்
மரங்களை வளர்த்தல்

இவை பலர் சொன்னதுதான். ஆனால் இவற்றை எப்படி நடைமுறை படுத்தலாம் என்பதற்கு சில வழிமுறைகள்

மின்சார பயன்பாட்டைக் குறைத்தல்

(எனர்ஜி சேவர் பல்ப்)

- நம்மில் பலர் உபயோகிக்கும் "குண்டு பல்ப்" அதிக அளவு மின்சாரம் உறிஞ்சக் கூடியது. இதனைத் தவிர்த்து இன்று மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய எனர்ஜி சேவர் பல்புகளை பயன்படுத்த வேண்டும். இத்தகைய குண்டு பல்புகள் அதிக அளவு கார்பன்டை-ஆக்சைடு வாயுவை வெளியிடுகிறது.

- தேவையற்ற நேரங்களில் மின் விளக்குகள், கனினிகளை அனைத்து வைத்தல்

- வீட்டு உபயோகப் பொருட்களான ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை தேவையில்லாமல் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக ஏ.சி என்பது வெப்பமிகு நாட்களில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். என்னைக் கேட்டால் அதை நாம் முற்றிலும் தவிர்த்து மாற்று ஏற்பாடாக மின்சாரக் காத்தாடிகளை பயன்படுத்தலாம். அதோடில்லாமல் வெப்பமிகு நாட்களில் வீட்டின் மேல் தண்ணீர் தெளித்து வெப்பத்தை தணிக்கலாம்.

- ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வாங்கும் போது அவற்றின் எனர்ஜி சேவர் சதவீதம் பார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம் கூட கார்பன்டை-ஆக்சைடின் வெளியேற்றத்தைக் குறைக்க முடியும்.

- நாம் உபயோகிக்கும் வாட்டர் ஹீட்டர் என சொல்லக் கூடிய தண்ணீரை சூடுபடுத்தும் கருவிதான் நம் முதல் எதிரி. இவை வெளியிடும் கார்பன்டை-ஆக்சைடு பன்மடங்கு அளவிலானது. இதற்கு மாற்றாக சோலார் வாட்டர் ஹீட்டிங் முறையை பயன்படுத்தலாம்.

யோசித்துப் பாருங்கள் இதைக்கூட செய்ய இயலவில்லை என்றால் நாம் மனிதர்களாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

மீதமுள்ள மூன்று முறைகளைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன். இவை சொல்லுக்காக அல்ல நாம் செயல் படுத்துவதற்காக. இந்தப் போரில் நாடு மொழி, மதம், இனம் பாராமல் நாம் பங்கேற்க வேண்டும். கை கோர்க்கத் தயாராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

நன்றி http://www.eartheasy.com

பி.கு: கதிர் அண்ணனின் ஆதங்க வெளிப்பாடான "சுடும் வெம்மை" படித்த பிறகு நாம் அறிந்த வழிமுறைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் எழுதியதுதான் இந்த பதிவு. பலரை சென்றடைந்து சிலரையாவது சிந்திக்க வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

17 March 2010

பிடித்த பத்து பெண்கள்

1:09:00 PM Posted by புலவன் புலிகேசி 21 comments
நண்பர்கள் வெள்ளிநிலா ஷர்புதீனும், சசிக்குமாரும் இந்தத் தொடர்பதிவை எழுத அழைத்திருந்தனர்.

நிபந்தனைகள் :-

1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...


1) அன்னை தெரேசா

இவ்வுலகில் பலரின் தாய். தாய் என்ற சொல்லுக்கு முழு அர்த்தமாய் வாழ்ந்தவர். என் தாய்க்கு பிறகு எனக்கு இவர் தான் தாய். இது போன்ற மனமுடையவர்கள் மிகச்சிலரே

2) சாந்தி

நான் பணிபுரியும் TNQ நிறுவனத்தின் C.O.O. தன்னம்பிக்கைக்கும், பொறுமைக்கும் எடுத்துக் காட்டாய் இவரைத்தான் சொல்வேன். பல விடயங்களில் எனக்கு ரோல் மாடல் இவர்தான். ஆயிரக்கணக்கில் பணியாளர்களைக் கொண்ட நிறுவனத்தின் பணிகளை நிதானமாக கையாளும் திறமை படைத்தவர்.

3) மரிய ஷரபோவா

டென்னிஸ் வீராங்கனை. இவரின் ஆட்ட வெளிப்பாடும், ஆர்வமும் என்னை வியக்க வைத்திருக்கிறது.

4) ஐஸ்வர்யா ராய்

உலக அழகிப் பட்டத்திற்கு முழு தகுதியானவர். தன்னால் எப்படிப் பட்ட கதாப் பாத்திரத்தையும் சிறப்பாக செய்ய முடியும் என நிரூபித்துக் காட்டியவர். தமிழில் உதாரணம்: இருவர்.

5) சரோஜினி நாயுடு

ஒரு கவிஞராகவும், தேசிய போராட்ட வீரராகவும் இருந்தவர். இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர். இந்தியாவின் முதல் மாநில பெண் ஆளுநர்.

6) கல்பனா சாவ்லா

விண்வெளி சென்ற முதல் பெண் வீராங்கனை.

7) புனிதா அரோரா (Lieutenant General.)

இந்தைய இராணுவத்தில் உயர் பதவி அடைந்த முதல் பெண் என்ற பெருமைக்குரியவர்.

8) தாமரை

சொல்லவா வேண்டும். சிறந்த பாடலாசிரியர். இவரைப் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேன்

9) கேப்டன் துர்கா பேனர்ஜி (முதல் பைலட்)


இந்திய விமானத்துறையின் முதல் பெண் பைலட் என்ற பெருமை பெற்றவர்.

10) எஸ் ஜானகி

எல்லா விதமான குரலிலும் பாடக்கூடிய திறமை மிக்கவர். இன்றும் இவர்க் குரலை கேட்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

யாரையும் தொடர் பதிவுகள் எழுத அழைப்பதில் விருப்பமில்லாததால், விருப்பமானவர்கள் எழுதலாம்.

16 March 2010

பசுமைக் கொலைகள்

6:41:00 AM Posted by புலவன் புலிகேசி 36 comments
பசுமை என்பது பிற்காலத்தில் ஒரு நாள் அகராதியில் தேடிப் பார்க்கக் கூடிய சொல்லாக மாறக்கூடும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் விவசாயத்தில் கொடிகட்டிப் பறந்த கிராமங்களில் கூட பசுமையைக் காண முடியவில்லை. என் டரியலில் சொன்னது போல் பசுமை என்பது சுற்றுலாத் தளங்களில் மட்டுமே இயற்கையாகவும், பல இடங்களில் செயற்கையாகவும் காண முடிகிறது.

பசுமைத் தமிழகம் என்பதெல்லாம் வெறும் பேச்சில் மட்டுமே இருக்கிறது. இந்த நிலைக்கு யார்க் காரணம்? என ஆராய்ந்து ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லித் திரிவதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. இத்தகைய நிலைக்கு நானும் ஏதோ ஒரு வகையில் காரணம் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இங்கு நான் என்பது நான் மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதனும் தான்.

தனி மனிதனின் நியாமான ஆசையான வீடு வாங்குதல், அதை பெற்றதும் நின்று விடுவதில்லை. அடுத்து இதை விட பெரிய இடமாக வாங்க வேண்டும். அதில் அடுக்ககம் அமைத்து பணம் சேர்க்க வேண்டும் என நீண்டு கொண்டே போகிறது. பலர் எதற்காக பணம் சேர்க்க வேண்டும் எனத் தெரியாமல் அளவுக்கு அதிகமாக அதை சேர்ப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறோம்.

இத்தகைய ஆசைகளுக்காக நாம் பலி கொடுப்பது பல மரங்கள் மற்றும் நிலங்கள். ஒரு காலத்தில் நல்ல விளை நிலங்களாக இருந்த இடங்கள் பல இன்று அடுக்ககங்களாக மாற்றம் பெற்றிருக்கின்றன. இதை வளர்ச்சி எனப் பெருமையடித்துக் கொண்டாலும் யோசித்துப் பார்த்தால் இது ஒரு மாபெரும் வீழ்ச்சி என்பது புரியும்.

மனிதனின் பரிணாம வளர்ச்சி அளவுக்கு மீறி சென்று கொண்டிருக்கிறது. அது நஞ்சில் சென்று முடியும் நாள் வெகுத் தொலைவில் இல்லை. இவற்றைக் கட்டுபடுத்த பலருக்கு நிச்சயம் மனம் வரப் போவதில்லை. நாம் அனைவரும் இந்த விடயத்தில் சுய நலவாதிகளாகவே இருக்கிறோம். எல்லோரும் ஆசைப் படும் போது நான் ஆசைப் படுவதில் என்ன தவறு? என வினா எழுப்புகிறோமே தவிற, இது நமக்குத் தேவையா என யோசிப்பவர்கள் மிகச்சிலரே.

பதினெட்டம் நூற்றாண்டில் ரெனி டீ ரீமர் என்பவர்தான் மரத்துகள்களில் இருந்து காகிதங்கள் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தார். அதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது குழவிப் பூச்சி தான். அவற்றின் செய்ல்பாடுகளில் இருந்துதான் மரத்துகளை உபயோகிக்கும் முறையைக் கண்டறிந்தார்.

ஆக்கத்திற்காக அவர் கண்டு பிடித்ததை இன்று அளவுக்கு அதிகமாகவும், தேவையில்லாமலும் வீணாக்கி இயற்கை வளமான மரங்களின் அழிவிற்கு துணை நிற்கிறோம். மரங்கள் அழியப் பெற்றால் நிலச்சரிவுகள் கட்டுபடுத்த முடியாமல் உயிரிழப்புகள் தொடர்வது நிச்சயம். அதோடில்லாமல் காற்றைக் கூட காசு கொடுத்து வாங்கி சுவாசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதும் உறுதி.

இதைப் பற்றி பேசிக் கொண்டேயிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. நாம் இங்கு கைகோர்த்து செயல்பட வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். இவற்றின் அழிவைத் தடுக்கும் ஆரம்பமாக குறைந்தது தேவையில்லாமல் காகிதங்களை வீணாக்க மாட்டேன் என்ற உறுதியாவது எடுத்துக் கொள்ளப் பட வேண்டும்.

நமக்கு பயன்படாக் காகிதங்கள் குப்பையாக மாற்றப் படாமல் ரீசைக்கிள் என்று சொல்லக் கூடிய மறு தயாரிப்பு முறைக்கு உபயோகப் படுத்தப் பட வேண்டும்.


ஒரு மரம் வெட்டும் முன்
ஒரு மரக் கன்றாவது
ஊன்றப் பட வேண்டும்!

நாம் தேவையில்லாமல் வீணாக்கும்
காகிதங்களில் மரங்களை அழித்துக்
கொண்டிருக்கிறோம்!

மரம் வளர்ப்போம்! உயிர்க் காப்போம்!

15 March 2010

வேலைக்காரி

4:30:00 AM Posted by புலவன் புலிகேசி 23 comments

ஒரு கோடி ஒரு தரம், ரெண்டு தரம், மூனு தரம். ரம்யாவின் வீடு மற்றும் சொத்துக்கள் ஏலம் விடப் பட்டாகி விட்டது. ரம்யா ஒரு பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசு. கடன் தொல்லையால் வீடு மற்றும் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்து விட்டன. ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் விடப் பட்டு கடன்கள் அடைக்கப் பட்டன.

ரம்யா குழந்தகள் மற்றும் கணவனுடன் நடுத்தெருவிற்கு வந்தாள். ஒரு குப்பத்திலுள்ள பொறம்போக்கு இடத்தில் கையிலிருந்த பணம் கொண்டு குடிசை அமைத்து குடி புகுந்தனர். இடம் கிடைத்து விட்டது சோற்றுக்கு என்ன செய்வது என்ற நிலை. ரம்யாவின் கணவன் முத்து ஒரு ஊதாறி. ரம்யா வீட்டு வேலைக்கு செல்வதாய் முடிவு செய்தாள்.

அருகிலுள்ள பங்களாவில் வேலைக்கும் சேர்ந்தாள். வீடு பெருக்குதல், துணி துவைத்தல், சமையல் இவைதான் அங்கு வேலை. அரை வயிற்று கஞ்சிக்கு வருமானமும் கிடைத்தது. அவ்வப்போது சமைப்பதில் கொஞ்சம் இவள் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

ஒரு நாள் "ஏண்டி ரம்யா! ஏண்டி நேத்து வேலைக்கு வரலை?"

"அம்மா குழந்தைக்கு உடம்பு சரியில்லம்மா"

"இந்த மாதிரில்லாம் காரணம் சொல்லிக் கிட்டிருந்தீன்னா உன்னைய வேலையை விட்டுத் தூக்கிட்டு வேற ஆளத்தான் பாக்கனும்"

"மன்னிச்சிருங்கம்மா இனிமே சரியா வந்துடுறேன்" என சொல்லிக் கொண்டே பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். பாத்திரங்கள் இவள் கண்ணீரில் இன்னும் பளபளப்பாகிக் கொண்டிருந்தன. அவைகளுக்கு பலமுறைக் கண்ணீரை உணவளித்திருக்கிறாள்.

"என்னடி அழுது கிட்டிருக்க! ஒழுங்கா வேலையைப் பாரு இல்லைன்னா வீட்டுக்கு கெளம்பு இனிமே நீ வர வேணாம்."

திடுக்கென போர்வையை விலக்கி எழுந்தாள் ரம்யா. கனவில் நடந்த அந்த விடயங்கள் அவளுக்கு நினைவில்லை. நேரம் பார்த்தாள் எட்டாகியிருந்தது. எழுந்து வெளியில் வந்தாள். அப்போதுதான் வேலைக்கு வந்தாள் ரஞ்சனி.

"என்னடி ரஞ்சனி மணி எட்டாகுது. இதுதான் வேலைக்கு வர்ற நேரமா?" என்றாள் ரம்யா.

"கொழந்தைக்கு உடம்பு சரியில்லைம்மா" என்றாள் ரஞ்சனி.

"இந்த மாதிரிக் காரணமெல்லாம் சொல்லாத. அப்பறம் வேற எடத்துல வேலைத் தேடுறா மாதிரி இருக்கும். போ போய் வேலையைப் பாரு" என்றாள் ரம்யா.

பாத்திரங்களுக்கு வழக்கம்போல் உணவு கிடைத்தது. ரஞ்சனியிடமிருந்து.

12 March 2010

டரியல் (13-மார்ச்-2010)

10:01:00 PM Posted by புலவன் புலிகேசி 34 comments
ZYlog Systems Ltd என்ற நிறுவனத்தில் எனக்கு மென்பொருள் பொறியாளனாகப் பணிக் கிடைத்துள்ளது. 12-ஏப்ரல்-2010 அன்று பணியில் சேரப் போகிறேன். இப்பொழுது பணிபுரியும் TNQ நிறுவனத்திலிருந்து 10-ஏப்ரல்-2010 உடன் விடை பெறுகிறேன். இந்த நிறுவனம் தான் என் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இங்குள்ள பல அதிகாரிகள், நண்பர்கள் அனைவருக்கும் எனது வெற்றிகளில் பங்கு உண்டு. அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

----------------------

ஐ.பி.எல் தொடங்கி விட்டது. இனி அரசுத் தேர்வெழுதப் போகும் மாணாக்கரின் பெற்றோர்கள் பாடு திண்டாட்டம்தான். இந்த ஐ.பி.எல் போட்டிகள் தேர்வுகளுக்குப் பின்னர் நடை பெற்றால் நன்றாக இருக்கும். இது போன்ற போட்டிகளில் எனக்கு அதிகம் ஈடுபாடு இல்லை. ஏனெனில் இங்கு பணம் மட்டுமே குறிக்கோள் என்பதால்.

----------------------


நாளைக்கு சட்டசபைத் தொறக்குறாங்க. அவ்வளவுதான் யாரும் சரியான நேரத்துக்கு எங்கும் செல்ல முடியாது. நம்ம ஆளுங்கதான் தற்பெருமைக்காகவே திறப்பு விழாக்களை நடத்தி விட்டு அப்புறம் தம்பட்டமடித்துக் கொள்வது "எங்க விழாவால எவ்வளவு போக்குவரத்தை நிறுத்தி வச்சோம் தெரியுமில்ல" அப்புடின்னு. கட்டப் பட்டவை அமைதியாகத் திறக்கப் படும் காலம் எப்போதுதான் இந்தியாவிற்கு வரப் போகிறதோ...? இது போன்ற திறப்பு விழாக்களுக்கு செய்யப் படும் வீண் செலவுகளைக் கணக்கிட்டால் சாமான்ய மக்களில் குறைந்தது ஆயிரம் பேராவது ஒரு மாத காலத்திற்கு மேல் சாப்பிட முடியும். இதை எல்லாம் யோசிப்பார்களா...?

----------------------

பசுமை என்ற சொல்லுக்கு இன்னும் சில காலம் கழித்து அகராதியில்தான் பொருள் தேட வேண்டியிருக்கும்.


இன்று பச்சை பசேல் என்ற இடங்களைக் காண்பது ஏதோ சுற்றுலா செல்வது போல் ஆகி விட்டது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் நமது ஆசைகள் தான் இடம் வாங்குதல், வீடு கட்டுதல், காகிதங்களை வீணாக்குதல். இவை எல்லாம் அளவுக்கு மீறி செய்து கொண்டிருக்கிறோம். இதனால் பாதிக்க படப் போவது நமது சந்ததிகள் தான். தேவைக்கு அதிகமக ஆசைப் படும் குணம் நம்மிடையேப் பெருகி வருகிறது. அதுவே இவ்வுலகின் அழிவிற்கும் துணை நிற்கிறது. காகிதங்களையாவது வீணாக்காமல் பயன்படுத்த முயற்சிப்போம்....!

----------------------

இந்த வாரப் பதிவர்: தியா


"தியாவின் பேனா பேசுகிறது" என்ற இவரின் வலைப்பூவில் கவிதைகள் மிக அழகாக வெளிப்பட்டிருக்கும். இவரதுக் கவிதைகளைத் தேடிப் பிடித்துப் படிக்கலாம். நிச்சயம் உங்கள் மனதில் நிற்கக் கூடும். முக்கியமாக எளிதில் புரியக்கூடிய கவிதைகள்.

இவரின் வலைப்பூ: தியாவின் பேனா

----------------------

இந்த வார டரியல் நம்ம பாலாசி எழுதின "ஒன்று சேர்ந்த....". சமீப கால இளவயது ஈர்ப்பினால் பாதிக்கப் படும் மனித வாழ்க்கையை பழ மொழிகளுடன் விளக்கியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

----------------------

10 March 2010

உன் சிரிப்பினில் - 3


ஒரு வருடம் முன் அழைத்த அதே குரல். தேர்வுக்கான் அறையை நோக்கி நடந்த போது, அவளைக் கடைசியாக பார்ந்த்த அந்தக் கண்ணாடி அறையை நோக்கினான். அங்கு அவள் இல்லை. அந்த இடம் வெறிச்சோடிப் போனதாகத் தோன்றியது அவனுக்கு. இவனுக்கான அறைக் கதவைத் திறந்து "மே ஐ கம் இன்" என்றான்.

"எஸ்" என்றவாறுத் திரும்பினாள் அந்தப் பெண். ஆம் அவளேதான். அவளைக் கண்டுபிடித்து விட்டான். மகிழ்ச்சியில் செய்வதறியாமல் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சென்று அவள் எதிரில் அமர்ந்தான். அவளுக்கு இவனை யார் எனத் தெரியவில்லை.

"அவள் அன்று வந்தது டீம் லீட் பதவிக்கு. வேலையும் பெற்று விட்டாள் எனப் புரிந்தது. அப்படியென்றால் நம்மை விட வயது மூர்த்தவளா இவள். இர்க்கட்டுமே சச்சின், தனுஷ் எல்லாம் இல்லையா" என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

அவள் தேர்வுக்கானக் கேள்விகளைத் தொடுத்த வண்ணமிருந்தாள். அவளது குரலையும் இதழசைவையும், மறக்க முடியா அந்தக் கன்னக்குழி சிரிப்பையும் ரசித்துக் கொண்டே பதிலளித்துக் கொண்டிருந்தான். இந்த ஒரு வருடத்தில் அவன் கற்ற விடயங்களேக் கேள்விகளாய்த் தொடுக்கப்பட்டது.

அவள் கேட்டதால் பதில்களை பட்பட்டென கொடுத்தான். எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருந்தான். அனைத்துக் கேள்விகளையும் முடித்து "யூ ஆர் செலக்டட் இன் திஸ் ரவுண்ட்" என அந்த பலிங்கு சிலை சொன்னது. இது போலவே "யூ ஆர் செலக்டட் அஸ் மை ஹஸ்பன்ட்" என சொல்ல மாட்டாளா என நினைத்துக் கொண்டான்.

சொல்லியவள் எழுந்து நின்று அவனுக்குக் கைக் கொடுத்தாள். அவள் ஸ்பரிசம் பட்டதும் இவன் வலது கை பிறவிப் பலனை அடைந்து விட்டதாக இடது கையிடம் தம்பட்டமடித்துக் கொண்டது. "யூ வில் பீ கால்டு ஃபார் த நெக்ஸ்ட் ஹெச்.ஆர் ரவுண்ட். ப்ளீஸ் வெயிட் அவுட் சைட்" என்றாள்.

அவளிடம் "தேங்க் யூ" என சொல்லிவிட்டுத் திரும்பியவன் ஏதோ மனதில் பட சட்டெனத் திரும்பி அவள் கால்களைப் பார்த்தான். அவன் இதயமே வெடித்துப் போனது போல் உணர்ந்தான் ஆம் அவள் கால்களில் அந்த மெட்டி இருந்தது. கழுத்தை மறைத்து சுடிதார் அணிந்திருந்ததால் தாலி இவன் கண்களில் படவில்லை.

நடைபிணம் போல் வெளியேறி ஒரு இருக்கையில் அமர்ந்தான். எதுவும் தோன்றவில்லை அவனுக்கு. ஏன் இங்கு உட்கார்ந்திருக்கிறோம் என்ற யோசனை கூட இல்லை. அப்போதுதான் அந்தக் குரல் "எக்ஸ் க்யூஸ்மி..யூ கேன் லீவ் னவ். வீ வில் கால் யூ பை டுமாரோ ஃபார் யுவர் னெக்ஸ்ட் ரவுண்ட்" என்றது. எந்த பதிலும் சொல்லாமல் எழுந்து வெளியேறினான்.

மறுநாள் அலைபேசி ஒலிக்க எடுத்தான். "யுவர் நெக்ஸ்ட் ரவுண்ட் வில் பீ பை டுமாரோ. வீ வில் சென்ட் த மெயில் டூ யூ" என்றவாறு வந்த அழைப்பு அறிவுறுத்தியது. மின்னஞ்சலைப் பார்த்தான். பின்பு ஏதோ முடிவு செய்தவனாய் சென்று தேவையான சான்றிதழ்களை எடுத்துப் பையில் வைத்து விட்டு அன்றைய பொழுதை கலக்கத்துடன் கழித்தான்.

மறுநாள் காலை முன்னரே எழுந்து குளித்து வேலைக்கானத் தேர்வுக்கு புறப்பட்டான். அவர்கள் சொன்ன சரியான நேரத்தில் அந்த நிறுவனத்தின் அருகிலிருந்த டி.சி.எஸ் சென்று நுழைந்தான். இப்போது அவளைத் தேடும் நோக்கம் இல்லை. வேலை பெறுவது மட்டுமே நோக்கமாக இருந்தது.

(முற்றும்)

09 March 2010

உன் சிரிப்பினில் - 2


முதல் பகுதி படிக்க: உன் சிரிப்பினில்-1

அதன் பின் அவள் சிரிப்பதை நிறுத்தவில்லை. இவனும் ரசிப்பதை நிறுத்தவில்லை. ஒரு சிகப்பு நிற சுடிதாருடன், பச்சை நிறத் துப்பட்டா, அவளுக்காகவே வடிவமைக்கப் பட்டதாகத் தோன்றியது. தேவதை என்றால் வெள்ளை ஆடை மட்டும்தான் அணிய வேண்டுமா? என அந்த சுடிதார் இவனைப்பார்த்து கேட்டதாய்த் தோன்றியது.

முகத்தில் எந்த வித ஆடம்பர அலங்காரங்களும் இல்லை. நிலவிற்கு பொட்டு வைத்தாற்போல் இருந்தது அவள் நெற்றி. அந்த சாதாரனம் அவனுக்குள் இருந்தக் காதலை அதிகப் படுத்தியிருந்தது.

"கவிதா ப்ளீஸ் கம்" என்ற குரல் இவனுக்குப் பின்னாலிருந்து ஒலிக்க கோபமாய்த் திரும்பினான். அவள் நேர்முகத் தேர்வு அறைக்கு அழைக்கப் பட்டாள். எழுந்து இவனைக் கடக்கும் முன் ஒரு கன்னக்குழி புன்னகையை இவனுக்கு பரிசளித்தாள். "ஹாய்" என சொல்ல முயற்சித்தான். அதற்குள் இவனைக் கடந்து சென்றது அந்த தேவதை. சட்டென அவள் கால்களைப் பார்த்தான். அதில் மெட்டி இல்லை.

அவள் சென்ற பின் அவள் அமர்ந்திருந்த இருக்கையைப் பார்த்தான் அங்கே அவளது கைப்பை இருந்தது. நிம்மதிப் பெருமூச்சிட்டான். அடுத்த சில நிமிடங்களில் "முருகன் ப்ளீஸ் கம்" என்று அதே குரல் கேட்டது. இவன் புன்னகைக்க அங்கே அவள் இல்லை. கைப்பையைப் பார்த்துக் கொண்டே உள் நுழைந்தான்.

ஒரு கண்ணாடி அறைக்குள் பலிங்கு சிலை ஒன்று அமர்ந்து சைகையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தது. அதை ரசித்துக் கொண்டே இவனுக்கான அறையில் நுழைந்தான். அங்கு கேட்கப் பட்ட கேள்விகளுக்கு இவனிடம் பெரும்பாலும் மவுனம் மட்டுமே பதிலாய் இருந்தது. அவன் நினைவு முழுதும் அந்தக் கைப்பை மீதே இருந்தது.

இவன் தேர்வாகவில்லை. அது அவனுக்கு பெரிதாகத் தோன்றவில்லை. வெளியில் வந்தவன் நேரே ஒடி அவள் இருக்கையைப் பார்த்தான். அங்கே அது இல்லை. அவள் சென்றிருக்க கூடும். அந்த அலுவலகம் விட்டு வெளியேறினான். அவளை வெளியில் தேடி நொந்து போனான். அவள் இல்லை.

வீடு வந்து சேர்ந்தான். "என்னடா ஆச்சு" என அம்மா கேட்டாள். "கிடைக்குமான்னு தெரியலை" என்று அந்தப் பெண்ணை மனதில் வைத்து சொல்லிவிட்டு உள் சென்றான். அவளை எங்குத் தேடலாம் என யோசித்தான். திடீரென ஒரு எண்ணம் தோன்ற அன்று முதல் எங்கு வேலைக்கான தேர்வு நடந்தாலும் தவறாமல் செல்ல முடிவு செய்தான். அவளைத் தேட, வேலையை அல்ல.

ஒரு வருடம் கடந்திருந்தது. இந்த ஒரு வருடம் அவனை நிறையவே மாற்றியிருந்தது. இந்த ஒரு ஆண்டில் அவன் குறைந்த பட்சம் ஐம்பது நிறுவனங்களாவது அலைந்திருப்பான். இதுவரை வேலையும் கிடைக்கவில்லை. அவளும் கிடைக்கவில்லை. அப்போது அவனுக்கு அந்த மின்னஞ்சல் வந்திருந்தது.

அவன் அவளை சந்தித்த அந்த நிறுவனத்திலிருந்து வேலைக்கான தேர்வு நடைபெறுவதாகவும், அதில் கலந்து கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது. சரி ஒரு வேளை அவளை அங்கு சந்திக்க நேர்ந்தால் என எண்ணிக் கொண்டு புறப்பட்டு சென்றான். மீண்டும் அதே அறை.

அவளைத் தேடத் தொடங்கினான். அங்கு அவளைக் காணவில்லை. இதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்க அவனுக்கு விருப்பமில்லை. புறப்பட எத்தணித்து எழுந்த போது "முருகன் ப்ளீஸ் கம்" என ஒரு குரல் கேட்டதும் சட்டென திரும்பிப் பார்த்தான்.

(தொடரும்)

07 March 2010

உன் சிரிப்பினில்

"டேய் எருமை, இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னு ரமேஷ் சொல்லிருக்கான் எட்டு மணி வரைக்கும் தூங்கிக் கிட்டிருக்கியே!" என்ற தாயின் இனிமையான் வசைபாடலுடன் கண்திறந்து எழுந்தான் முருகன். முருகன் ஒரு மென்பொருள் முதுகலை பட்டதாரி. படிப்பு முடிந்து மூன்று மாத காலத்தில் இதுவரை அவன் வேலை தேடியதில்லை.

அவனுக்கு அதில் விருப்பமும் இருந்ததில்லை. காரணம் அவனது குறிக்கோள் ஒரு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என்பது. ஆனால் எப்படி என இதுவரை யோசித்ததில்லை. தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணமிருந்ததே தவிற என்ன தொழில், முதலீடு எப்படி சேர்ப்பது என்ற முயற்சியோ, சிந்தனையோ இல்லாமலிருந்தான்.

எழுந்து பல் துலக்கி குளித்து உடை மாற்றி தனது சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றான். இவனது முதல் வேலைக்கான தேர்வு. அந்த இடம் அவனுக்கு புதிதாகத் தெரிந்தது. வந்திருந்தவர்கள் எல்லாம் கையில் காகிதங்களை வைத்து எதையோ படித்துக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் அங்கு வந்து நுழைந்தாள் அந்தப் பெண். தேவதைகள் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. கட்டுக்கதை என சொல்லிக் கொண்டிருப்பான். அவளைப் பார்த்ததும் தேவதைக்கான அர்த்தம் கிடைத்ததாகத் தோன்றியது. முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.

அவளைப் பார்க்காமல் திரும்பி உட்கார்ந்து கொண்டான். தேர்வு நடத்துபவர், வந்திருப்பவர்களின் வருகையை சரிபார்க்க சுயவிவர குறிப்புகளை எடுத்து ஒரு ஒரு பெயராக அழைக்க ஆரம்பித்தார். இவனுக்கு அவள் பெயரைத் தெரிந்து கொள்ள ஆசை. அவள் பக்கம் திரும்பி பார்வையை அவளிடம் கொடுத்து செவியை அந்த வாசிப்பாளரிடம் கொடுத்திருந்தான்.


"கவிதா" என்றதும் அந்த பதுமை மெல்ல கைகளை உயர்த்தியவாறு இவனைப் பார்த்தது. அவளின் முதல் பார்வையில் இவனுக்குள் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கியது. அந்தப் பார்வையில் இவனுக்கு காதல் வந்திருக்க வேண்டும். அப்படி ஒரு அழகானப் பார்வை அது. மீன் போன்ற விழிகள் எனப் பிதற்றுபவர்களை ஏளனம் செய்திருக்கிறான். இப்போது அவர்களைத் தேடிப்பிடித்து நன்றி சொல்லத் தோன்றியது அவனுக்கு.

அதன்பின் அவள் மீதிருந்த பார்வையை திருப்ப இவனுக்கு மனமில்லை. இவன் பார்ப்பதை அவளும் கவனித்திருக்க கூடும். அடிக்கடி இவன் தன்னைத்தான் பார்க்கிறானா என்ற சந்தேகத்தில் அவளும் இவனைப் பார்த்தாள். தன் தோழியிடம் ஏதோ கிசுகிசுக்க அவள் தோழி இவனைத் திரும்பிப் பார்த்தாள். இப்போது பார்வையை வேறு இடத்திற்கு மாற்றினான். ஆனால் கண்கள் இவன் பேச்சைக் கேட்கவில்லை.

கவிதா கருப்பும் இல்லை சிவப்பும் இல்லை என சொல்லக்கூடிய நிறத்தில் அழகிய தேவதை. அவளின் முகத்தில் இவன் லயித்திருந்தான். இதற்கு முன் ஒரு பெண்ணிடம் இது போல் மயங்கியதில்லை. ஆனால் இவளிடம்....


அவள் இவன் பார்வையை சரிபார்த்துக் கொண்டே தோழியிடம் ஏதோ சொல்லி சிரிக்க கன்னத்தில் ஒரு அழகிய குழி விழுந்ததை கண்டதும் "படார்" என ஒரு சப்தம் இவனுக்கு மட்டும் கேட்டது. பொதுவாக வெடி வெடித்தால் குழி விழும். ஆனால் அவள் கன்னக்குழி இவனுக்குள் ஒரு வெடியைப் பற்ற வைத்திருந்தது.

(தொடரும்)

06 March 2010

டரியல் (06-மார்ச்-2010)

6:19:00 PM Posted by புலவன் புலிகேசி 39 comments

சென்ற ஞாயிறு விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது மேற்கு மாம்பலம் அருகில் உள்ள மேட்டுப் பாளையம் அருகே வந்த போது எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா போட்ட பட்டம் என் முகத்தில் விழ மிதமான வேகத்தில் வந்ததால் வெறும் காயங்களுடன் தப்பித்தேன். சரியாக கண்ணுக்கருகே, மூக்கு கன்னம் மற்றும் கழுத்தில் சிறிதாக கிழித்து விட்டது அந்த நூல். விளையாட்டாக அவர்கள் செய்யும் இந்த மாஞ்சா வேலை பலரின் உயிரை பலி வாங்கியிருக்கிறது. இது தடை செய்யப் பட்டதோடு இல்லாமல் பொது மக்களும் கண்காணித்து தடுக்க வேண்டும்.
------------------------

சரி விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு வருவோம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. ஒரு காதல் கதையை அழகாகவும் இயல்பாகவும் தந்திருக்கிறார் கௌதம். சிம்புவா இது? என ஆச்சர்யப்படும் விதத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. இது போல் தேர்ந்தெடுத்து பந்தாக்கள் தவிர்த்து நடித்தால் மிகப்பெரிய எதிர்காலம் உண்டு சினிமாவில். எனக்கு அவ்வளவாக திரிஷா பிடிக்காது. ஆனால் இப்படத்தில் கௌதம் படவரிசை உடை அலங்காரத்தில் திரிஷா தேவதையாய்த் தெரிகிறார். காதல் வயப்பட்ட பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். முக்கியமாக இப்படத்தின் ஒளிப்பதிவு, நீங்கள் குறுந்தகடுகளில் பார்க்க வேண்டிய படமல்ல இது என சொல்லும் அளவு இருக்கிறது. அப்புறம் நம்ம தல ஏ.ஆர்.ரகுமான் பின்னனியிலும் பாடல்களிலும் பின்னி எடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் இப்படம் மசாலா ரசிகர்களுக்கானது அல்ல.
------------------------

ஒரு காதல் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். முடிந்ததும் மூன்று பகுதிகளாக வெளியிடலாம் என்றிருக்கிறேன். தலைப்பு கூட வச்சிட்டேன் "உன் சிரிப்பினில்". இது என் முதல் முயற்சி. இதற்கு உங்கள் வெளிப்படையான கருத்துக்களை எதிர் பார்க்கிறேன். சமீபத்தில் நான் சந்திக்க நேர்ந்த என்னைக் கவர்ந்த ஒரு பெண்தான் இக்கதை உருவாகக் காரணம். சென்னையில் இப்படி ஒரு பெண்ணைப் பார்க்க நேர்ந்தும் அவளிடம் ஒரு வார்த்தைக் கூட பேச முடியாமல் போனது. இது போல் இருக்கும் ஒரு பெண் மனைவியானால் வேறெதுவும் தேவையில்லை என எண்ண வைத்து விட்டாள். மீண்டும் சந்திப்பேனா? தோன்றவில்லை.
------------------------

இவர்கள் ஏன் இப்படி இருக்க வேண்டும்? நாம் கழிவு நீர்களில் கலக்க விடும் தேவையற்ற பிளாஸ்டிக், இதர குப்பைகளால்தான் இவர்கள் இப்படி. அரசு இதற்கு எந்திரம் வெளியிட்டிருக்கும் போதும் இவர்கள் இப்பணி செய்கிறார்கள் என்றால் அந்த எந்திரம் சரிவர வடிவமைக்கப் படவில்லை என்றுதான் அர்த்தம். அந்த எந்திரம் வடிவமைக்கப் பட்டு இவர்களுக்கு அரசு பயிற்சியளித்தால் இது போன்ற கொடுமைகள் தீரும். (இரண்டு நாட்களாக எங்கள் சாலையில் இவர்கள் போராடிக் கொண்டிருக்கையில் நாங்கள் மூக்கைப் பொத்திக் கொண்டு போய்க் கொண்டிருந்தோம்). குப்பைகள் சரியான் இடத்தில் போடப் படவேண்டும். இதற்கான விழிப்புணர்வு மக்களிடம்தான் வர வேண்டும்.
------------------------
இந்த வாரப் பதிவர்

ரௌத்ரம் பழகும் கலக(ல)ப்ரியா. இவரது கவிதைகள் பல புரியாமல் போயிருக்கிறது. ஆனால் எழுத்துக்கள் அணல் தெரிக்கும். வெளிப்படையான எழுத்துக்கள் பல இவரிடம் உண்டு. பலர் பின்னூட்டங்களில் "லகலகா" என அழைப்பதும் உண்டு. இவருடைய பதிவுகளுக்கு வானம்பாடிகள் ஐயா எழுதும் பின்னூட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.

இவரது வலைப்பூ: லகலகா
------------------------

இந்த வார டரியல் தோழி "அன்புடன் அருணா" எழுதிய "கடவுள் யார் பக்கம்????". படித்துப் பாருங்கள் எதனால் எனக்குப் பிடித்தது எனப் புரியும்.
------------------------

04 March 2010

சொந்த பந்தங்கள் - 4

6:46:00 AM Posted by புலவன் புலிகேசி , 25 comments


அக்கா

தினம் தினம் சண்டையிட்டாலும்
சிறுவயது முதல் வழிகாட்டி

என்னதான் சண்டையென்றாலும் இளவலை
மற்றவர் முன் விட்டுக்
கொடுக்காத பாசப்பறவை.

தங்கை

அரசு பாடத்திட்டம் எப்போது
மாறும் என்ற ஏக்கத்துடன்
வாழும் ஒரு ஜீவன்

இதுவரை கிடைத்ததெல்லாம்
மூத்தோரின் பழைய புத்தகங்கள்
என்பதால்

பொதுவாய்

திருமண சீர்வரிசை ஏற்றதாழ்வு
பிரச்சினை வந்தது பெற்றோருடன்

பெற்றோரின் இறப்பு செய்தி

மனம் விட்டு ஒன்றுகூடி
அழுத ஜீவன்கள்

02 March 2010

ஆசிரியை வீட்டுக் கொய்யாப்பழம் - பதின்மம்

6:11:00 AM Posted by புலவன் புலிகேசி , 43 comments

நண்பர் மீன் துள்ளியான் இத்தொடர்பதிவை எழுத அழைத்ததும் மீண்டும் பதின்மம் சென்று எழுத எத்தணித்து நினைவில் திரும்பியவைகளை எழுதியிருக்கிறேன். அப்போதெல்லம் எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும் எனத் தெரியாமல் கிட்டத்தட்ட எங்கள் ஊரிலிருந்து வைதீஸ்வரன் கோவிலுக்கு (14 கி.மீ) நடந்தே சென்றிருக்கிறேன். அதை இப்பொது நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உடன் படித்தப் பெண் "லாவண்யா". எனக்கும் இவளுக்கும் யார் முதல் மதிப்பெண் பெறுவது என்பதில் பெரும் சண்டையே நடக்கும். ஒரு முறை அவள் முதல் மதிப்பெண் எடுத்து விட்டு வந்து என்னிடம் காட்டி ஏளனம் செய்ய ஓங்கி நடுமண்டையில் நச்சென நான் குட்ட அவள் அழுது கொண்டே தலைமை ஆசிரியையிடம் புகார் செய்ய ஒரு நாள் முழுதும் முட்டி போட்டு நின்றேன்.

அன்று மாலை அழுது கொண்டே வந்து என்னிடம் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்டு ஐஸ் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்தாள். அவள் என் முதல் ஆட்டோகிராஃப். இப்போது திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பதாக கேள்விப் பட்டேன். மகிழ்ச்சி!

அடுத்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, ஒரு ஞாயிறில் பள்ளி ஆசிரியை ஒருவர் வீட்டில் சென்று கொய்யாப் பழம் திருட மூன்று பேர் சென்றோம் (சுட்டப் பழம்). அவர் வீட்டினருகேயிருந்த கோவில் கோபுரத்தில் நான், அருகிலுள்ள மதிலில் கோபால் என்ற நண்பன், மரத்தின் மேல் முத்து என்ற இன்னொருவன்.


அவன் பறித்து கொடுக்க நாங்கள் அதை ஒரு துண்டில் போட்டு சேர்த்துக் கொண்டிருந்த நேரம் அந்த ஆசிரியைப் பார்த்து விட்டார். அவ்வளவுதான் நானும் மதில்மேல் இருந்த நண்பனும் துண்டை சுருட்டி தோலில் போட்டு அருகிலிருந்த வாய்க்காலில் குதித்தோம் (நல்ல வேளை தண்ணி இல்ல). சில சிராய்ப்புகளுடன் எழுந்து பார்க்க இன்னொருவன் மரத்தின் மேல் அமர்ந்த படி அழுது கொண்டிருக்க ஆசிரியை வசை பாடிக் கொண்டிருந்தார். அந்த ராகம் பிடிக்காததால் நண்பனை அங்கேயே விட்டு நாங்கள் இருவரும் வீடு வந்தோம்(இதுவல்லவோ நட்பு).

சிறிது நேரம் கழித்து அவனும் தப்பி வந்தான். மறுநாள் பள்ளி சென்ற போது அவர்கள் இருவரும் வகுப்பு வாசலில் முட்டி போட்டிருப்பதைப் பார்த்து சிரித்து விட்டு என் வகுப்பில் நுழைந்தேன் (அந்த ஆசிரியைக்கு என்னை யார் எனத் தெரியாது. நான் வேறு வகுப்பு என்பதால்).

பதினோரம் வகுப்பு பயிலும் போது நான் சந்தித்த மிகப்பெரும் துயர சம்பவம். இன்றும் அவ்வப்போது அதை எண்ணி கலங்கியிருக்கிறேன். என் நெருங்கிய நண்பன் "மதன்பாபு" சாலை விபத்தில் இறந்து போனான். அச்செய்தி கிடைத்ததும் நம்பாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்ற போது நின்ற கூட்டத்தைப் பார்த்ததும் அழத் தொடங்கி விட்டேன். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் விட்டு விட்டு அழுதிருக்கிறேன்.

இன்னும் என் கண்களில் நிற்கிறான். இப்பதின்ம நினைவுப் பதிவை அவனுக்காக சமர்ப்பிக்கிறேன். ஐ லவ் யூ மதன்.....