கடவுளை மற..மனிதனை நினை..

28 June 2010

பெண் என்ற அடிமைச்சொல்

11:38:00 PM Posted by புலவன் புலிகேசி , , 20 comments

பெண்ணை
மலராக
காற்றாக
மேகமாக
உவகைப் படுத்தாதே!

அது அவளை
முள்ளாக
புயலாக
அடை மழையாக
மாற்றி விடும்!

பெண் என்ற அடிமைச் சொல்லையும்
ஆண் என்ற ஆதிக்கச் சொல்லையும்
விட்டொழி!

பெண் என்பவள் ஆளுமைக்குட்
பட்டவள் அல்ல இதை
முதலில் பெண்ணே நீ
புரிந்து கொள்!

உன் மனதில் பதியப்பட்ட
அடிமைத் தனங்களின்
ஆணி வேரைப் பிடுங்கி எறிந்து
விட்டு வா!

உலகம் உனக்கும் சொந்தம் தான்!

27 June 2010

பதிவர்களின் பதிவுகளை சுடும் "நாம் தமிழர்" இணையம்

7:11:00 PM Posted by புலவன் புலிகேசி , 18 comments
நேற்று நான் எழுதியிருந்த "செம்மொழி மாநாடும், தலைவர் குடும்ப ஆங்கிலமும்" என்ற அதே தலைப்பு "நாம் தமிழர்" இணைய தளத்தில் காணப் பட்டது. என்னவென்று உள் சென்று பார்த்தேன். நான் எழுதிய அதே பதிவு அச்சு பிசுங்காமல் அப்படியே பதிவிட்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக எழுதிய எனது பதிவின் தொடுப்புகள் எதுவும் கொடுக்கப் படவில்லை.

அது மட்டுமல்ல இது சம்பந்தமாக எனக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்பி அனுமதி பெற வில்லை. அந்தப் பதிவுகள் அனைத்தும் அந்த நாம் தமிழர் இயக்கத்தால் எழுதப் பட்டது போலவே பதிவிடப் பட்டிருந்தது. என்னுடையப் பதிவு மட்டுமல்ல வினவில் வெளி வந்த "செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!" பதிவின் கெலிச் சித்திரங்களும் அதே தலைப்பில் அப்படியே வெளியிடப் பட்டிருக்கிறது.

அதற்கும் அனுமதி வாங்கினார்களா எனத் தெரியவில்லை. அந்த பதிவின் மூலத் தொடுப்பும் அங்குக் கொடுக்கப் படவில்லை. அதற்கு பதில் இறுதியில் சிறியதாக நன்றி: வினவு எனப் போட்டிருக்கிறார்கள்.

இது நேற்றைய என் பதிவின் தொடுப்பு: "செம்மொழி மாநாடும், தலைவர் குடும்ப ஆங்கிலமும்"

இது இதே பதிவு நாம் தமிழர் இணையத்தில்: "செம்மொழி மாநாடும், தலைவர் குடும்ப ஆங்கிலமும்"

இது வினவின் பதிவு: "செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!"

இது அதே பதிவு நாம் தமிழர் இணையத்தில்: "செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!"

இதை சுட்டுப் போட்டவர்கள், என்னுடைய சூர்யா குறித்தப் பதிவையும் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாழ்க நாம் தமிழர் அரசியல் கட்சி. என்னத்த சொல்றது இவுங்களையெல்லாம்???

பி.கு: நாம் தமிழர் இயக்கத்திலிருந்து இந்த விடயம் சம்பந்தமாக இந்தப் பதிவுக்கு பின் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது "தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.தங்களின் பக்கத்திற்கு இணைப்பு கொடுக்கப்படும்." என்பதாக.


26 June 2010

செம்மொழி மாநாடும், தலைவர் குடும்ப ஆங்கிலமும்


எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்பதற்கான நோக்கம் மட்டுமே இந்த மாநாட்டின் அடித்தளமாக இருந்திருந்தால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவில் இந்த மாநாடு நடந்திருக்கும். ஆனால் ஒரு தனி மனிதனின் சுய விருப்பத்திற்காக நடக்கும் இதை எப்படி செம்மொழியான நம் தமிழ் மொழியின் மாநாடு என சொல்ல முடியும்?

இந்த மாநாடு ஒரு கேளிக்கைக் கூத்துப் போன்றதே. இதற்கும் ஐஃபா-வுக்கும் ஒன்றும் பெரிய வித்யாசமில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும், நிறுவனங்களும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். சட்டசபை, அரசு அலுவலகங்களில் "தமிழ் வாழ்க" என்ற பலகை, தமிழில் திரைப் படங்களுக்குப் பெயர் வைத்தால் வரி விலக்கு எனக் கூறும் இந்தத் தலைவனின் குடும்பத்தாரிடம் தமிழின் நிலை என்ன?

சில சிறிய சான்றுகள் மட்டுமேத் தருகிறேன்.

*** இவரது பேரன்களால் துவக்கப் பட்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர் தமிழில் இல்லை.

"க்ளவுட் நைன் மூவீஸ்(Cloud Nine Movies)"
"ரெட் ஜியாந்த் மூவீஸ்(Red Giant Movies)" மற்றும்
"சன் பிக்சர்ஸ்(Sun Pictures)".

ஏன் பேரப் பிள்ளைகளிடம் சொல்லவில்லையா தமிழில் பெயர் வையுங்கள் என்று. பேரப் பிள்ளைகள் எடுக்கும் படங்களை பாராட்டும் இவர் ஏன் தமிழில் பெயர் வைக்க சொல்லவில்லை?

**** இவற்றை விட கொடுமையான கூத்து ஒன்று சமீபத்தில் நடந்த விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் அரங்கேறியது. இவரின் மகள் கவிஞர் கனிமொழி மந்திரி அவர்கள் செம்மொழியாம் தமிழ்மொழி மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து பேசுகையில் ஆங்கிலம் கலக்காமல் பேசவில்லை.

"நிறைய எதிர் பார்ப்புகளோரடும், படபடப்போடும் தான் அந்த ப்ராஜக்ட்டை(Project) ஆரம்பிச்சோம்."

"It could bring everything inside of it inclusive"

"It was great pleasure watching Rahman and Goutham Menon"


மேற் சொன்ன வரிகள் வேறொன்றும் இல்லை. தமிழ்மொழி மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து, தமிழ்த் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கனிமொழி பேசியவை. மாநாட்டுக் காட்சிகளைப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஐஃபா-வை போலவே புறக்கணித்திருக்கிறேன். ஒரு வேலைப் பார்த்தால் இன்னும் எத்தனைக் கூத்துக்கள் வெளிப் பட்டிருக்குமோ? இன்னும் எவ்வளவு இருக்கிறதோ? தெரிஞ்சா சொல்லுங்க.

24 June 2010

நடிகரே சூர்யா-நீங்க அரசியலுக்கு வரலாம்


முன்னர் ஒரு முறை இதே சூர்யாவுக்கு பரிந்து பேசியவர்களே இதுக்கும் வந்து பதில சொல்லுங்க. அட இவுரு உதவி செய்யறேன், படிக்க வைகிறேன் அப்புடிங்கறதெல்லம் ஒரு பெரிய அரசியல் தந்திரமப்பா. இவருக்கு எதிர்காலத்தில் அரசியலில் ஒரு இடம் உண்டு. "யாரு எக்கேடு கெட்டா எனக்கென்ன என் பொழப்பு நடக்கனும்" - இதையே தனது கொள்கையாக வகுத்து வைத்திருப்பவர்தான் இந்த சூர்யா.

"மிர்ரர்"-னு ஒரு பெங்களூரு பத்திரிகையில இவுரு ஒரு பேட்டிக் குடுத்துருக்காரு.

"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே"

அப்ப இலங்கைப் பிரச்சினையும் செத்துப் போன ஒன்றா? ஆமாம் ராவணன் படத்தை எதுக்காகத் தடை செஞ்சிருக்கனும்? வேணும்னா மணியோட முதலாளித்துவக் கூட்டனிப் புத்தி அங்கத் தெரியுது. அதுக்காகத் தடை செஞ்சிருக்கலாம்.


"ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன்.
நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சனை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?"

ஓ அப்புடிங்களா! அப்புடி அந்த விவேக் ஓபராய் அங்குள்ளத் தமிழர்களுக்கு உதவச் சென்றவராக இருந்தால் ஐ.பா விழாவில்தான் செல்ல வேண்டுமா? இல்லையின்னா அங்க உள்ள உட மாட்டாங்களா? நல்லா இருக்குதய்யா உங்க கூத்து. உதவி செய்யும் மனமுள்ள ஒருவன் நிச்சயம் இது போன்று செய்திருக்க மாட்டான். விழாவைப் புறக்கணித்து விட்டு பின்னரோ அல்லது முன்னரோ சென்றிருப்பான்.

அந்த விவேக் ஓபராயும் உங்களைப் போலவே மக்களை ஏமாற்றும் ராஜ தந்திரம் கற்றவராக இருக்கிறார். இந்தப் பேட்டியில் கூட கவனித்தீர்களேயானால் ஐ.பா விழா எதிர்ப்பை அசிங்கப் படுத்தி விட்டு இறுதியில் நல்லவர் போல் "அந்தப் பள்ளி சம்பந்தமாக எல்லா உதவிகளும் செய்வேன்" என ஒரு ராஜ தந்திர வார்த்தை.

இந்த வார்த்தைகளை நம்பும் மக்கள் நிறைய இங்கு இருப்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அப்படி நம்பித்தானே அரசியல் கட்சிகள் அட்டூழியம் செய்தாலும் ஆட்சி அமைக்கிறார்கள். இந்தத் தந்திரம் தெரிந்த நீங்கள் ஏன் உங்கள் அண்ணன் சீமானுடன் சேர்ந்து அரசியலில் குதிக்கக் கூடாது?

இந்த சீமான் இருக்கிறாரே இவர் உண்மையில் தமிழர் உணர்வாளன் தானா? என்றால் நான் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வேன். இந்த இலங்கைப் பிரச்சினையை வைத்து அரசியல் நடத்த முயல்பவர் போல் தெரிகிறார். உண்மையில் இவர் கொள்கை வீரனாக இருந்திருந்தால் இந்த ரத்த சரித்திரம் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பார்.

ஆனால் அதை விடுத்து "சூர்யா என் தம்பி. அவரது படத்தை மட்டும் மன்னிக்கலாம். அவர் ஒரு தமிழ் உணர்வாளன்" அதனால் அவரது படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என்று சொல்லியிருந்தார். உண்மையில் ஒரு கொள்கை வீரன் இப்படி செய்ய மாட்டான். இது எப்படி இருக்கிறது என்றால் ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்காக ப்ருத்வியை மன்னிக்கும் விக்ரம் போல் முட்டாள் தனமாய் இருக்கிறது.

இப்படி இப்போது திமிர்த் தணமாகப் பேசும் இந்த சூர்யா ஐ.பா விழா அழைப்பின் போதே இதைப் பேசியிருக்க வேண்டியதுதானே. அப்போதுப் பேசியிருந்தால் இன்று காணாமற் போயிருப்பார். இப்போ மக்கள் அது பற்றி அதிக அக்கரை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற அரசியல்வாதி எண்ணம். மக்களும் அப்படித்தான், இவரை போன்றவர்களின் ஏமாற்று தொனிளில் ஏமாந்து கொண்டே இருப்பர்.

இவர்களும் அவர்கள் விழித்துக் கொள்ளாத படி நல்லவன் போலவே நிஜ வாழ்விலும் நடித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு ஜால்ரா அடிக்கவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த ஜால்ரா கோஷ்டிகளும் மக்களை மடையர்களாக்கும் வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த தமிழர் உணர்வாளன் எனக் கூறிக் கொண்டு அரசியல் நடத்த முயலும் முட்டாள் மாக்கள் இந்தப் படத்தை எதிர்ப்பின்றி வெளியிட்டாலும் அதைப் பார்க்க மாட்டேன் என்ற உறுதி மொழியை நாம் எடுத்துக் கொண்டு நம் எதிர்ப்பைப் பதிவு செய்வோம். என் உறுதி மொழியுடன் துவக்குகிறேன் "நான் இப்படத்தை எதிர்க்கிறேன்".

21 June 2010

தமிழை வளர்ப்போம்(?) மரங்களை வெட்டுவோம்!


இன்று உலகின் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கேள்விக்குறியாய் இருக்கும் நிகழ்வு நடக்கப் போகும் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு". இந்த மாநாடு தேவைதானா என யோசிக்காத தமிழர் ஒருவரும் இல்லை. நம்மைப் போன்ற மக்களின் வரிப்பணத்தில் 200 கோடிக்கும் மேல் செலவு செய்யப் பட்டிருக்கிறது.

இதில் 118 கோடி ரூபாய் 3840 அடுக்ககங்கள் அமைப்பதற்கும், 59.85 கோடி சாலை சீரமைப்பு பணிகளுக்கும் பயன் படுத்தப் படுகின்றனவாம். மேலும் அங்கு பாதுகாப்பு பணிக்காக ஒரு பலூனில் நான்கு கேமராக்கள் பொருத்தப் பட்டு விண்ணில் பறக்க விடப் பட்டுள்ளது. ஒரு கேமராவின் விலை மட்டும் 50 லகரம்.

இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் 200 கோடி என்பது சும்மா என்றே தோன்றுகிறது. எத்தனை கோடிகள் ஆனதோ? இன்னும் எத்தனை ஆகுமோ? நாட்டில் விவசாயப் படுகொலைகள், பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படிப் பட்ட மாநாடு இவ்வளவு பொருட் செலவில் தேவைதானா?

3840 அடுக்ககங்கள் இவ்வளவு விரைவில் சாத்தியமாகும் போது ஏழை மக்களுக்கும், சுனாமியால் வீடிழந்தோருக்கும் கட்டிக் கொடுக்கப் படும் வீடுகள் மட்டும் ஏன் வருடக் கணக்காகிறது?

இத்தனை கோடிகள் செலவில் இவ்வளவு நாள் கவனிப்பாறற்றுக் கிடந்த சாலைகள் துரிதமாக சீரமைக்கப் படும் போது, இவ்வளவு நாள் செய்யப் படாதது ஏன்?

இதுவரை சாலைகள் சீரமைப்பு என்ற பெயரில் கோவையை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன.ஊட்டி சாலையில் 600க்கும் மேற்பட்ட மரங்களும், திருச்சி செல்லும் சாலையில் 200க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டித் தள்ளியிருக்கின்றனர். இங்கு வெட்டப் பட்டவை வெறும் மரங்கள் அல்ல. நம் மனிதமும் தான்.

மரங்களைக் கொன்று இப்படி ஒரு விழா தேவைதானா? மரங்களுக்காக மக்கள் ஏங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கும் போது இவ்வளவு மரங்கள் கொலை செய்யப் பட்டு ஒரு தலைவனின் ஆசைக்கு விழா எடுப்பது நியாயம் தானா?

"ஒரு பக்கத்து மரங்களை மட்டும் வெட்ட சொல்லிருக்கோம், தேவைப் பட்டா இன்னொருப் பக்க மரத்தையும் வெட்ட சொல்லிருக்கொம்" என கலக்டர் முன்னர் கூறியிருந்தார். மரங்களை வெட்டி மனிதம் அழிக்கும் இந்த மிருகப் பணிக்கு எடுக்கப் படும் விழாவிற்கு பெயர் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு".

இதெல்லாம் பார்த்தப் பின்பும் நம் மக்கள் ஒரு ரூபாய் அரிக்காகவும், ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத கலர் டி.விக்காகவும் மீண்டும் வாககளிக்கப் போவது உறுதியே. என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தேர்தலின் போது என்ன சொல்லி ஓட்டு வாங்கலாம் என்பது அந்த அரசியல்வியாதிகளுக்குத் தெரியும்.

"இந்த மாநாட்டின் மூலம் எத்தனைப் பேருக்கு வேலைக் கிடைச்சிருக்குத் தெரியுமா?" என என் நண்பன் கேட்டான்.

எத்தனை பேருக்கு?
எவ்வளவு நாளைக்கு?
எவ்வளவு ரூபாய்க்கு? என்றேன்.

அவனிடம் பதிலில்லை.

எத்தனை உயிர்கள் இலங்கையில் அழிக்கப் பட்டது தெரியுமா?
எத்தனை மரங்கள் கோவையில் கொல்லப் பட்டது தெரியுமா?
அதனால் என்ன நடக்கப் போகிறது எனத் தெரியுமா?
விவசாயப் படுகொலைகள் பற்றித் தெரியுமா?
பட்டினி என்றால் என்னவென்றுத் தெரியுமா?
உழைக்கும் வர்க்கத்தின் நிலைத் தெரியுமா? என்றேன்.

என்னை ஏளனமாகப் பார்த்து விட்டு எதற்கும் பதில் சொல்லாமல் திரும்பிப் போனான்.


19 June 2010

இராவணன் - சொல்லப் படாதவை

12:35:00 PM Posted by புலவன் புலிகேசி , , , 29 comments

மேட்டுக்குடித் தனத்தையும் அவர்களால் ஒடுக்கப் பட்டோரின் போராட்டத்தையும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தயாரிப்பில் படமாக எடுத்தால் இப்படித்தான் இருக்குமோ? என வருத்தப் பட வைத்து விட்டார் இயக்குனர் மணிரத்னம். வீரா என்ற ஒடுக்கப் பட்ட வர்க்கத்தை சேர்ந்த கதா நாயகன், ராகினி என்ற மேட்டுக்குடியில் பிறந்த பெண், இவள் மேட்டுக்குடித் தனமுடைய அரசாங்க(அரசியல்வியாதிகளின்) அடிமையான போலீஸ் தேவின் மனைவி. இவர்கள் மூவரை மையப் படுத்தி நகர்கிறது படம்.

வீரா ஏன் ஒடுக்கப் படுகிறான். அவன் ஏன் தீவிரவாதி என அறிவிக்கப் பட்டான் என்பதற்கு பெரிதாய் ஒன்றும் விளக்கம் இல்லை.

விடுதலைப் புலிகளாகட்டும், அது போன்ற வேறு எந்த அமைப்பாகட்டும் ஏதோ ஒரு உரிமைப் பறிக்கப் படுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் ஒடுக்கப் படுவதை எதிர்த்து நிற்கிறார்கள். மக்களின் பார்வை அவர்களின் நியாயம் பக்கம் திரும்பும்.

எங்கே அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைத்து விடுமோ என அஞ்சும் அரசியல்வாதிகள் அவர்களின் அரசியல் தந்திரத்தின் மூலம் அந்த அமைப்புகள் பற்றி மக்களிடையே ஒரு தவறான அபிப்ராயம் ஏற்படுத்த முயல்வர். உதாரணத்திற்கு பொது மக்கள் அதிகமுள்ள இடங்களில் குண்டு வைப்பது, இரயில் தண்டவாளங்களைத் தகர்ப்பது போன்றவற்றை நீதிக்காக போராடும் எந்த ஒரு அமைப்பும் செய்யாது.

ஆனால் அவற்றை இந்த அரசியல்வாதிகளே அரங்கேற்றுவர். மக்கள் பலர் கொல்லப் படுவர். கேட்டால் இது அந்த அமைப்பினரின் தீவிரவாத செயல், அவர்கள் ஒடுக்கப் பட வேண்டும் என அறிக்கை விடுவர். மக்களுக்கு அது போன்ற செய்திகளை நம் விளம்பர செய்தி ஊடகங்களும் கொஞ்சம் கூட கூச்சமின்றி போட்டுக் காட்டி அந்தந்த அமைப்புகள் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

இவற்றை சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் நம் அரசியல்வாதிகள் அவர்களின் கையாட்களான காவல்துறை, இராணுவம் கொண்டு அவர்களை அழிக்கப் புறப்பட்டு விடும். இது போன்ற அரசியல்வியாதிகளின் அடக்கு முறைகள், அவர்களின் அயோக்யத்தனங்கள் அனைத்தும் இந்தப் படத்தில் சொல்லப் படாமல் மறைக்கப் பட்டிருக்கின்றன (ஒரு வேளை சொல்லப் பட்டிருந்தால் இந்தப் படத்தையும் அடக்கியிருப்பார்களோ என்னவோ?).


படத்தின் துவக்கக் காட்சிகளில் வீராவின் ஆட்கள் காவல்துறையினர் சிலரை கட்டிப் போட்டு தீ வைக்கின்றனர். இங்கு ஒரு விடயம் சொல்லியாக வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால் இது மிகப் பெரிய தவறாகவேத் தெரியும். தவறும் கூடதான். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் உண்மை நிலை என்ன? இது போன்ற போராட்ட அமைப்புகளைப் பொறுத்த வரையில் அவர்கள் காவலர்கள் அல்ல. அவர்களின் கூட்டத்தை அழிக்க வந்த எதிரிகள். அவ்வளவே. இதை நான் நியாயப் படுத்த விரும்பவில்லை. குற்றம்தான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அவர்க்ளை அப்படி ஒரு செயல் செய்யும் அளவிற்கு மாற்றியது இந்த அரசியல் தந்திரிகள்.

அவர்களின் அடக்கு முறைகளுக்கு பலிகடாவாக்கப் படுவது இந்த காவலர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் இது போன்ற போராட்ட அமைப்பினர். ஆனால் இது குறித்து தெளிவான விளக்கமில்லாமல் ஒரே ஒரு காட்சியில் வீரா ஆவேசமாகப் பேசும் போது வரும் இடைச் செறுகல் வச்னம் போல "அவங்க கத்தியை எடுத்தாங்க நாங்களும் எடுத்தோம்" என அழுத்தமில்லாமல் ஒளிவு மறைவாக சொல்லி விட்டிருக்கிறார்.

போராட்டங்களின் போது போலீஸிடமோ, ராணுவத்திடமோ அந்த எதிர் அமைப்பை சேர்ந்த பெண் சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதையும், அவர்களின் அட்டூழியங்களையும் கூட மிக சுலபமாக அழுத்தமின்றி சொல்லி விட்டிருக்கிறார். போர் புரியுமிடத்தில் எதிரியின் தங்கையை மட்டும் தூக்கிக் கொண்டு மற்றவர்களை விட்டு விடும் அளவுக்கு அக் காவலர்களில் பலர் நல்லவர்களாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றனர். சிலர் ஆந்தப் பெண்ணை சீரழிக்கும் கெட்டவர்களாக சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள்.

உண்மையில் போராட்டங்களில் அப்படி நடக்குமா? இலங்கையில் எவ்வளவுப் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப் பட்டிருக்கிறது? இவற்றையெல்லாம் அழுத்தமாக சொல்ல முடியாத அளவுக்கு மணிரத்னம் ஒன்றும் சாதாரன இயக்குனர் அல்ல.

ஆனால் சொல்லாததற்கு காரணம் என்னவாக இருக்கும்? நிச்சயம் அரசியல் வாதிகள் மீதான பயமே. அப்படி சொல்லப் பட்டிருந்தால் இன்று இந்தப் படம் வெளி வந்திருக்காது.

ராமாயணக் கதையில் கூட ராவணன் நல்லவன் என எண்ணுபவன் நான். அந்த வகையில் இந்த ராவணனும் நல்லவனே. ஆனால் அந்த வீரா பாத்திரத்திற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கத் தவறிய (அ) பயந்த மணிரத்னத்தால் அந்த ராவணன் பெரிதாக மனதில் பதியவில்லை.

மற்றபடி தங்கையை சீரழித்ததற்காக காவலன் ஒருவனின் மனைவிக் கடத்தல், பின் அப்பெண் மீதுக் காதல், அந்தப் பெண்ணை வைத்தே நாயகன் அழிக்கப் படும் "சுப்ரமணியபுரம்" க்ளைமேக்ஸ் என படம் முழுக்க கமர்சியலாக வந்திருக்கிறது. வேறொன்றும் சொல்லிக் கொள்வதற்கு இல்லை.

18 June 2010

இதுவும் காதல்!

1:30:00 AM Posted by புலவன் புலிகேசி , 18 comments

அன்று அவனுக்கு உடல் சுகமில்லை. அதனால் அலுவலக குளிர்சாதனம் அவனுக்குப் பிடிக்கவில்லை. இரண்டு மணி நேரம் அனுமதிப் பெற்று முன்னரே புறப்பட்டான். ஐந்து நிமிட தாமதத்தால் ஆறு மணி அலுவலகப் பேருந்தைத் தவற விட்டான். வெளியில் வந்து குமரன் நகர் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தான்.

நிறைய மக்கள் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அவனும் அவர்களுடன் ஐக்கியமானான். 19B பேருந்து வந்து நின்றது. கூட்டத்தில் அடித்துப் பிடித்து உள் சென்று நிற்பதற்கு ஒரு இடத்தைத் தேடிப் பிடித்துக் கொண்டான். அவன் உடல்நிலை அமர்ந்திருப்பவர்களை எதிரிகளாகப் பார்க்க வைத்தது. எரிச்சலுடன் பயணம் தொடங்கிய 10வது நிமிடத்தில் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வந்து நின்றதுப் பேருந்து.

அங்கு அந்தப் பேருந்தில் பலர் ஏறினர். ஏனோ இவனுக்கு அந்த விப்ரோ நிறுவனப் பெண் மட்டும் தனியாகத் தெரிந்தாள். சிறிது நேரம் இவனருகில் நின்றிருந்தாள். அவளின் உதட்டு வழி வந்த செய்கையில் அவளும் எரிச்சலுடன் நிற்பதை எதிர்த்திசைக் கண்ணாடியில் பார்த்துத் தெரிந்து கொண்டான்.

சில நிமிடங்களில் அவளுக்கு இருக்கைக் கிடைத்ததும் அமர்ந்து கொண்டாள். இவன் எதிரில் நின்று ஒளிவு மறைவாக அவளை ரசித்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும் ஏனோ அவனுக்கு பாரதியார் நினைவு வந்து சென்றார்.

மாநிறத்திலிருக்கும் அவளது முகத்தில் செங்குத்தாக ஒரு அழகான சிகப்பு நிறப் பொட்டு. காதில் கோபுரம் போன்ற ஒருத் தங்கத் தோடு, சிகப்பு நிறச் சுடிதார் அவளுக்காகவே வடிவமைக்கப் பட்டதாய்த் தோன்றியது அவனுக்கு. ஒற்றைக்கை சிகப்பு நிற பிளாஸ்டிக் வளையல், கால்களில் வெள்ளிக் கொளுசு என அவளின் அழகு சாதனங்கள் அனைத்தும் அவளை மேலும் அழகாகக் காட்டின.

இவன் காதுகளில் செல்ஃபோன் மூலம் எஃப்.எம் கேட்டுக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் செல்ஃபோனில் யாருடனோப் பேசிக் கொண்டு உதடு சுழித்தாள். எஃப்.எம்-மில் "உசிரே போகுதே! உசிரே போகுதே! உதட்ட நீக் கொஞ்சம் சுழிக்கையிலே" என்ற வரிகள் ஓட இவன் வாய்விட்டுப் பாடி விட்டான். அவள் மெல்லியப் புன்னகையுடன் இவனைப் பார்த்து விட்டுத் திரும்பி அமர்ந்து கொண்டாள்.

அதன்பின் அந்தப் பேருந்தில் எத்தனையோ அழகானப் பெண்கள் ஏறியிருக்க கூடும். ஆனால் இவனுக்கு அவளைத் தவிற வேறு யாரையும்ப் பார்க்கத் தோன்றவில்லை. துரைப்பாக்கம் நிறுத்தத்தில் ஏறிய இருப் பெண்கள் அவளை மறைத்து நிற்க அவர்களை எதிரி போல் பார்த்தான். சிறிது நேரம் அவளைப் பார்க்க இயலவில்லை.

சுங்கச்சாவடி வந்ததும் அமர்ந்திருந்த ஒருவர் இறங்கிக் கொள்ள இவனுக்கு இருக்கைக் கிடைத்தது. அமர்ந்த பின் கூட்ட நெறிசலின் ந்டுவில் அவளின் முகம் மட்டும் இவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ரசித்துக் கொண்டிருக்கையில் எஸ்.ஆர்.பி டூல்ஸ் நிறுத்தத்தில் ஏறினாள் கைக்குழந்தையுடன் ஒரு பெண்மணி. நெறிசலில் குழந்தையுடன் இவன் இருக்கைக்கு அருகில் நின்றிருந்தாள்.

அவள் மீது பரிதாபத்திற்கு பதில் கோபமே வந்தது அவனுக்கு. அந்தப் பெண்மணி இவன் முகபாவனையைப் புரிந்து கொண்டவளாய் உள் சென்றாள். இவன் மீண்டும் அந்த விப்ரோ பெண்ணை ரசிக்கத் தொடங்கினான். மத்ய கைலாஷ் நிறுத்தம் வந்ததும் அழுகின்ற குழந்தையுடன் ஒரு பெண்மணி இவனை முறைத்துக் கொண்டே கீழிறங்கினாள். அவன அதை கவனிக்கவில்லை. அழகு மனிதம் மறக்க செய்திருக்க கூடும்.

அந்த பேருந்துக் காதல்(?) சைதாப்பேட்டை நிறுத்தம் வரைத் தொடர்ந்தது. அவள் இறங்கி சென்று விட்டாள். இவனும் தி.நகரில் இறங்கி அறை வந்து சேர்ந்தான். இப்போது காய்ச்சல் விட்டிருந்தது அவனுக்கு. மீண்டும் ஒருநாள் அதேப் பேருந்துப் பயணம். சோழிங்கநல்லூர் வந்ததும் இவன் கண்கள் தானாக அவளைத் தேடியது.

அவள் வரவில்லை. மாறாக வேறு ஒரு விப்ரோ பெண் ஏறினாள். நல்ல அழகாக இருந்தாள். மெல்லத் தனக்குள் சிரித்துக் கொண்டு சன்னலோரம் திரும்பி உட்கார்ந்தான். துரைப்பாக்கத்தில் கைக்குழந்தையுடன் ஏறினாள் ஒரு பெண். இப்போது அவள் அவனுக்குப் பரிதாபமாய்த் தோன்ற குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டான். அன்றையப் பயணத்தில் அந்தக் குழந்தை மட்டுமே அவகனுக்கு அழகாகப் பட்டது.

16 June 2010

அங்காடித்தெருக் கடையும், நடிகர் சூர்யாவும்

1:28:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 58 comments

நடிகர் சூர்யா, இவரைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல வெற்றிப் படங்களின் மூலம் தன்னை தமிழ் சினிமாவில் தக்க வைத்திருக்கும் ஒரு நடிகர். தான் ஆரம்பித்த அகரம் ஃபவுண்டேசன் மூலம் பல ஏழைகளின் படிப்புகளுக்கு உதவி செய்பவர். இவை மட்டும்தான் மேலோட்டமாக தமிழர்கள் மனதில் பதியப் பட்ட விடயங்கள்.

எல்லாம் சரிதான் இப்போது அவர் கைக் கோர்த்திருப்பது முதலாலித்துவ வியாபாரிகளான சரவணா ஸ்டோர்சுடன். சரவணா ஸ்டோர்ஸின் ஆளுமைக்கு தீனி போட அவர்களால் புரசைவாக்கத்தில் பெரிய கிளை ஒன்றுத் திறக்கப் பட்டுள்ளது.

அதற்கு விளம்பர தூதராக அறிவிக்கப் பட்டிருப்பவர்தான் இந்த நடிகன். இந்த நடிகனால் ஆரம்பிக்கப் பட்ட அகரம் ஃபவுண்டேசன் மூலம் இந்த ஆண்டு ப்ளஸ்-டூ தேர்வில் வெர்றி பெற்றவர்கள் அவர்களின் மேல் படிப்புக்கு ஆகும் செலவை தாராளமாக எங்களிடம் கேளுங்கள் நாங்கள் உதவுகிறோம் என அவரேக் கூறியிருந்தார்.

ஏன் சூர்யா, அந்த சரவணா ஸ்டோர்ஸில் வேலைப் பார்ப்பவர்களில் படிப்பார்வம் மிக்க படிக்கவியலாப் பிள்ளைகள் இருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

அவர்கள் அடிமைகள் போல் கால் கடுக்க பல மணி நேரம் பணி புரிவது நியாயம் என தோன்றுகிறதா?

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தினர் அடிமட்டத்திலிருந்து பெரிய நிலைக்கு வந்தவர்கள், என்னைப் போலவே (?!). அவர்களது நிறுவனத்துக்கு நான் விளம்பரத் தூதராக இருப்பது பெருமைக்குரியது எனக் கூறியிருக்கிறான் அந்த நடிகன்.

கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்க்ள் முதலாலித்துவம் காட்டலாம் என்று சொல்கிறீர்களா?

தான் நடிக்கும் படங்களுக்கான சம்பளத்தில் பத்து சதவீதத்தை ஏழைகளுக்குத் தருவதாகக் கூறியுள்ளவர்தான் இந்த நடிகன். நீங்கள் அவ்வாறு கொடுப்பதை விட இது போன்ற முதலாளிகளுக்குத் துணை போகாமலிருப்பதே சிறந்தது.

முன்னர் இதே நடிகன் பெப்ஸி விளம்பரத்தில் நடித்தார். போபால் ஆண்டர்சனை விடக் கொடியவர்க்ள் இந்த பெப்ஸி கோக் நிறுவனத்தார். ஆய்த எழுத்துப் படத்தில் ஒரு வசனம் வரும் "உங்க நிலத்துத் தண்ணிய உறிஞ்சி காசு பாத்து பழகிட்டாங்க. எப்புடித் தடுக்கப் போறீங்க?" என்றவாறு. இதைப் பேசியவர் அந்த சூர்யாதான்.

இது போன்று படத்தில் பேசும் வசனங்களைக் கண்டு நடிகனுக்கு கொடிப் பிடித்த, பிடித்து கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான முட்டாள்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது. பணத்திற்காக எதுவும் பேசுபவன்தான் நடிகன்.

மது அருந்துவதை மகா குற்றம் என சொல்லும் இவரின் தந்தைக்கு பெப்ஸி, கோக் குடிப்பது நியாமாகத் தெரிந்திருக்கிறதா?

மனித ரத்தத்தை உறிஞ்சும் அத்தகையக் குளிர்பான வியாபாரிகளுக்குத் தன் மகன் குடை பிடிப்பதை ஆதரிப்பது நியாயம் தானா?

இவையனைத்தும் மனிதத்திற்கு எதிரான செயல்களே. அதில் நான் சொல்லியிருப்பது கொஞ்சமே. இது போன்று மனிதத்திற்கு எதிராக செயல்படும் நடிகர்கள் மனிதத் துரோகிகளே!


13 June 2010

பதிவுலகின் பன்னாடைகள்

12:01:00 PM Posted by புலவன் புலிகேசி , 45 comments
வணக்கம் தோழர்களே! நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் பதிவை எழுதுகிறேன். அலுவல் பணி இரவு பகலாக சென்றதால் கடந்த பதினைந்து நாட்களாக யாருடைய பதிவையும் படிக்கவில்லை. அதனால் பதிவுலகில் நடந்த பிரச்சினைகள் எனக்குத் தெரியவில்லை. நேற்று நண்பர் ஊடகன் மூலம் "பூக்காரி" பிரச்சினைத் தெரிய வந்தது. அது குறித்த பதிவுகள் நீக்கப் பட்டிருப்பினும், வினவு தளம் அதன் பிரதியை வெளியிட்டிருந்தது.

பதிவுலகமும் மற்ற செய்தி ஊடகங்களைப் போல சாக்கடையாகத்தான் மாறிக் கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு பெண்ணைக் கேவலப் படுத்தும் பதிவு என்ற நோக்கிலேயே எதிர்ப்புகள் பல வெளி வந்தன. அது பெண்ணைக் கேவலப் படுத்தும் பதிவல்ல மனிதத்தைக் கேவலப் படுத்தும் மிருகப் பதிவு.

நர்சிம், கார்க்கி என இரண்டு மிருகங்கள் சேர்ந்து ஒரு மனித இனத்தைத் தாக்கியிருக்கின்றன. இதுவே என் பார்வை. பெண்ணின் பிரச்சினை எனப் பிரித்து ஆணாதிக்கம் காட்டாதீர்கள். மனிதத்திற்கு ஏற்பட்ட கலங்கம் என எண்ணுங்கள். இதுவே அவர்களுக்குள் தனிப்பட்ட விரோதம் தனியிடத்தில் தாக்கிக் கொண்டார்கள் என்றால் அது பற்றி நாம் கவலை கொள்ளப் போவதில்லை.

ஆனால் இந்தப் பிரச்சினை நடந்திருப்பது ஒரு பொது வெளியில். அதுவும் சக பதிவருக்கு சக பதிவரால் நடந்திருக்கிறது. இதை வெறும் செய்தி போல் பாவித்து பலர் தங்கள் அனுதாபங்களையும், எதிர்ப்புகளையும் அரசியல் கட்சிகள் போலவேக் காட்டியிருந்தனர். நன்றாக இருக்கிறது உங்கள் பதிவுலக அரசியல்.

பதிவர்களாகிய நாமும் நம் பதிவுகளில் சுடச்சுட செய்தி வெளியிட்டு பின் அது பற்றி மறந்து போகும் வியாபார செய்தி ஊடகங்கள் போல் செயல் படுகிறோம். அந்த பிரச்சினைகளும் நமது அரசியலால் கிடப்பில் போய் விடுகிறது. யார் தீர்வு காண்பது? என யாரும் யோசிப்பதில்லை.

அந்த தோழியின் "'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு" என்ற பதிவைப் படித்தேன். அவரது தைரியம் கண்டு வியந்தேன். பெண் என்ற அடிமைத்தனம் இல்லாதவராக இருக்கிறார். இதில் சிலர் இந்த பிரசினையை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள் என அறிவுரை வேறு. அறிவுரை செய்தவர்களில் பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்கும் ஒரு பெண்ணும் உண்டு என்பதுதான் எனக்கு வருத்தமளிக்கிறது.

அந்த தோழியின் பதிவிற்கும், அதற்கு ஆதரவான வினவின் பதிவிற்கும் தமிழ்மணத்தில் விழுந்த மைனஸ் வாக்குகளைப் பார்க்கும் போது, எவ்வளவு ஆணாதிக்க வாதிகள் உலவும் இடம் இந்த பதிவுலகம் என்பதுப் புரிகிறது. இங்கு பலர் கருத்துக்களுக்கும், பதிவுகளுக்கும் வாக்களிப்பதில்லை. எனக்கு நீப் போட்டியா? உனக்கு நான் போடுறேன் என்றுதான் போய்க் கொண்டிருக்கிறது. ஏன் நான் கூட ஆரம்ப காலத்தில் அப்படித்தானிருந்தேன்.

கருத்துக்கு வாக்களிப்பவர்கள் வெகு சிலரே. தயவு செய்து யாரும் குழு மனப்பான்மையில் வாக்களிக்காதீர்கள். குழுவாக இருங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. பதிவின் தரத்திற்கு மட்டும் அங்கீகாரம் கொடுங்கள். அப்போதுதான் இந்தப் பதிவுலகம் ந்நல்ல பாதையில் செல்லும்.

இந்தப் பூக்காரிப் பிரச்சினையின் துவக்க வாரத்தில் வந்த எதிர்ப்புகள் இப்போது காணப் படவில்லை. அது பழைய செய்தியாகவே மாற்றப் பட்டிருக்கிறது.

//ஒரு முக்கிய அறிவிப்பு.. கொஞ்ச நாட்கள் இதே வேலையாக எல்லோரும் கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். //

இந்த வரிகள் இந்தப் பிரச்சினைக்கு பின் அவரின் "இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்?" என்ற பதிவில் வந்தவை. அரசியல் சூட்சுமங்கள் தெரிந்தவர். நாமும் கொஞ்ச நாட்கள் இது குறித்து பேசி விட்டு அவர் சொன்னது போலவே அடங்கிப் போயிருக்கிறோம்.

//நான் எழுதிய புனைவு சில பேரை காயப்படுத்தியிருக்கிறது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். சந்தனமுல்லை அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.//

இது தான் இந்தப் பிரச்சினையின் தீர்வா? ஒரு பெரிய கலங்கத்தை ஏற்படுத்தி விட்டு இரண்டு வரியில் மன்னிப்புக் கேட்டால் போதுமா?

//முல்லையையும் முகிலையும் நம்மையும் நர்சிம் சந்திக்கும் இடம் பதிவர் சந்திப்பாக இருக்க வேண்டும். பெண் பதிவர்கள் உள்ளிட்ட எல்லாப் பதிவர்களின் முன்னிலையில், இந்த விவாதத்தில் பங்கு பெற்ற எல்லா பதிவர்கள் மற்றும் வாசகர்கள் முன்னிலையில், உண்மைத் தமிழர் உள்ளிட்ட எல்லாத் தமிழர்களின் முன்னிலையில், நர்சிம், கார்க்கி முதலானோரும் தங்களது மன்னிப்பை வெளியிடட்டும். கள்ள உறவு கதை கட்டிப் பரப்பிய பெருமக்களும் தங்கள் முகத்தை அங்கே காட்டட்டும். முகத்தை வெளிக்காட்டும் தேவை இல்லாததால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்//

இந்தப் பிரச்சினையில் நான் வினவோடு ஒத்துப் போகிறேன். வினவில் சொல்லியிருப்பது போல் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்து அதில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப் பட்டு அங்கு அந்த இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

நான் கண்டனம் தெரிவிக்க எழுதவில்லை. தீர்வு கேட்டு எழுதியிருக்கிறேன். மனசாட்சி உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள்.

03 June 2010

ஏன் இந்தக் கடவுள்?

1:22:00 PM Posted by புலவன் புலிகேசி 25 comments


என்ன வேண்டும் இவர்களுக்கு?
ஏன் செல்ல வேண்டும் கோவிலுக்கு?

இல்லை என சிலர்
இருப்பதைக் காக்க சிலர்

காணிக்கை என்ற பெயரில் லஞ்சம்
பணக்காரனாகக் கடவுள்(?)

பார்க்க சென்றவனுக்கு விபத்து
சில நேரம் காயம் சிலநேரம் உயிர்

ஏன் இப்படி எனக் கேட்டால்
தெய்வக் குத்தமாம்

இல்லாத ஒன்றைத் தேடித்
திரியும் இவர்களுக்கு எப்போது

புரியப் போகிறது அவர்களுக்குள்
இருக்கும் கடவுளை?