கடவுளை மற..மனிதனை நினை..

28 February 2010

கிரிக்கெட்டும் நானும் - தொடர்பதிவு

6:31:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
நண்பர்கள் வெள்ளி நிலா ஷர்புதீன் மற்றும் முகிலன் அழைத்ததால் இத் தொடர்பதிவை எழுதுகிறேன்.

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
*******
மூன்றாவது விதிமுறை மீறப்படும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்கு இந்தத் தொடர்பதிவை எழுத யாரையும் அழைக்க விருப்பமில்லை.

(சச்சின் டெண்டுல்கர்)
1.பிடித்த கிரிக்கெட் வீரர்சச்சின் (எனக்கு கிரிக்கெட் தெரிய ஆரம்பித்ததிலிருந்து)

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்ஸ்ரீசாந்த் (திமிர் பிடித்தவன்)

3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர்ஆலன் டொனால்ட் (தென் ஆப்பிரிக்காவின் முந்நாள்)

4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர் -- நெஹ்ரா (முக்கியமான கட்டத்துலக் கூட பந்து வீசத்தெரியாதவர்)

5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர் -- முத்தையா முரளிதரன் (சாதனைகள் பல)

6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர் -- முரளி கார்த்திக்

7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர்வேற யாரு சச்சினே தான்

8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர் - அப்ரிதி (குருட்டாம்போக்கில் விளாசுபவர்)

(சௌரவ் கங்குலி)
9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர் -- கங்குலி, கில்கிறிஸ்ட் மற்றும் யுவராஜ்

10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர் -- யாருமில்லைங்க

(அஜய் ஜடேஜா)
11. பிடித்த களத்தடுப்பாளர் - ஜான்டி ரோட்ஸ், அஜய் ஜடேஜா மற்றும் ராபின் சிங்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் -- இப்பதான் நிறைய பேர் இருக்கானுங்களே நம்ம இந்திய அணியில

13. பிடித்த ஆல்ரவுண்டர்ராபின் சிங் (திறமையான வீரன்)

14. பிடிக்காத ஆல்ரவுண்டர் -- யூசுப் பதான் (இரண்டிலுமே சொதப்பல்)

15. பிடித்த நடுவர் - ஷெப்பர்ட் (மறக்க முடியுமா இவரை), பில்லி பார்டன்

16. பிடிக்காத நடுவர் -- தர்மசேனா

17. பிடித்த நேர்முக வர்ணனையாளர் -- டோனி கிரேக்

18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் -- சிவராமகிருஷ்ணன்

19. பிடித்த அணிஇந்தியா

20. பிடிக்காத அணிஇந்தியாவுடன் விளையாடும் எதிரணிகள்

21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள்இந்தியா மற்றும் பாகிஸ்தான்

22. பிடிக்காத அணிகளுக்கான போட்டிபங்களாதேஸ், கென்யாவுடன் பெரும் அணிகள் விளையாடும் போது

23. பிடித்த அணித் தலைவர் -- சவுரவ் கங்குலி, அசாருதீன்

24. பிடிக்காத அணித் தலைவர் -- பாண்டிங் (எதிரணிகளை ஏளனமாக விமர்சிப்பதால்)

25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடிகங்குலி-சச்சின்

26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி - சடகோபன் ரமேஷ் உடன் களமிறங்கிய ஜோடிகள்

(ராகுல் திராவிட்)
27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் - டிராவிட் (வேறு யாரும் நிகரல்ல)

28. உங்கள் பார்வையில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் - சச்சின்

29. பிடித்த போட்டி வகைஒரு நாள் போட்டிகள்

30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்சச்சின்

27 February 2010

டரியல் (27-பிப்ரவரி-2010)

7:27:00 AM Posted by புலவன் புலிகேசி 26 comments
அஜீத் என்ன சொன்னா நமக்கென்னங்க? நமக்கு தனிப்பட்ட முறையிலயும், நாட்டுலயும் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. அவங்க சொன்ன அந்த வார்த்தைகள், அதனால் எழுந்த பிரச்சினைகள் பொது மக்களுக்குத் தேவையற்றது. அவரு சொன்ன மாதிரியே சொல்லனும்னா "மக்களை மக்களா இருக்க விடுங்க". அவருக்காக வருத்தப் படவோ, ஆதரவு கொடுக்கவோ அவுரு இந்த தேசத்துக்காக ஒன்னும் செய்யல.

----------------------


நீண்ட நாட்களாக எதிர்பார்த்த "விண்ணைத்தாண்டி வருவாயா" படம் வந்துருக்கு. படம் நல்லா இருக்குன்னு பலர் சொல்லிட்டாங்க. இன்னைக்கு இரவுக் காட்சிக்கும் பதிஞ்சாச்சு. பாத்துட்டு வந்து அடுத்த டரியல்ல சொல்றேன். பல பேர் சொல்லிருந்தாங்க போனது என்னவோ ரகுமான், கௌதமுக்காகத்தான், ஆனா பாத்தது சிம்புவுக்காகன்னு. அவ்வளவு அருமையா நடிச்சிருக்காராம். பாப்போம். (இதப்பத்தி பேசியும் ஒன்னும் நடக்கப் போறதில்லை. இது பொழுதுபோக்கு அவ்வளவே)

----------------------

இது நம்ம சென்னை மக்களின் பொழுது போக்கு இடமான மெரீனா கடற்கரைங்க.


குப்பைகளை கண்ட இடத்தில் போடும் வழக்கம் கொண்ட தமிழர்கள் தானே.மெரினாவில் எதாவது வாங்கி சாப்பிட்டு விட்டு குப்பையை அங்கேயே போட்டு விட்டு வருகிறார்கள். நாம உபயோகிக்கற இடமும் நம்ம வீடு மாதிரிதாங்க. மெரினான்னு இல்ல எங்க போனாலும் பொது இடத்தில் குப்பை போடாமல் குப்பைத் தொட்டிகளில் போடலாமே. அரசும் குப்பைத் தொட்டிகளைக் குறைவாகத்தான் வைத்திருக்கிறது. அதனாலென்ன அக்குப்பையை கையில் வைத்திருந்து குப்பைத் தொட்டியப் பார்க்கும் போது போடலாமே. அது கையில் இருப்பதால் நாம் ஒன்றும் குறைந்து போய் விடுவதில்லை. அக்குப்பையை உருவாக்கியதே நாம் தானே...

----------------------

இந்த வாரப் பதிவர்

நமது நண்பர் ஈரோடு கதிர்.இவரது பதிவுகள் பெரும்பாலும் வாழ்வியல் பிரதிபலிப்புகளாகவே இருந்திருக்கிறது. கவிதைகள் எழுதுவதில் வல்லவர். அதோடில்லாமல் ஈரோடு வலைப்பதிவர் குழுமம் உருவானதில் பெரும் பங்காற்றியவர். அங்கு பதிவர் சந்திப்பை தமிழ் மன்ற விழா போல் நடத்திய பெருமைக்குரியவர். வாழ்த்துக்கள் கதிர் அண்ணா.

அவரது வலைப்பூ: கசியும் மௌனம்

----------------------

சிறுகதைகளுக்காக தனியே வலைப்பூ வைத்து எழுதி வரும் நண்பர் சே.குமாரின் "'ஆ'சிரியர்". நாட்டில் பல இடங்களில் நடக்கின்ற சம்பவம். அருமையாய் கதைப்படுத்தி எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள் ஆ'சிரியர்

----------------------

26 February 2010

பள்ளியும் சமுதாயமும்

5:41:00 AM Posted by புலவன் புலிகேசி , 23 comments
முதன் முதல் அம்மா அப்பாவைப் பிரிந்து எட்டு மணி நேரம் இருந்ததும் அதன் பின் அதையே பழக்கமாக்கியதும் அந்தப் பள்ளிக்கூடம் தான்.ஆரம்பத்தில் எதற்காகப் போகிறோம் என்று எவருக்கும் தெரிந்ததில்லை. அது போலத்தான் பள்ளி வாழ்க்கையை தொடங்கின அந்த இரு சிட்டுகளான ரமேசும், அம்பிகாவும்.


பள்ளிகளில் சீருடை வரக்காரணம் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால் அந்த சீருடையிலும் ரமேஸ் தரம் பிரிக்கப் பட்டான். அவனைத் தரம் பிரித்துக் காட்டியது பின்னால் கிழிந்த அவனது அரைக்கால் சட்டையும், பைக் கிழிந்த அவனது மேல் சட்டையும்தான்.

அம்பிகாவும் ரமேசும் அருகருகே வசிக்கும் தெரு நண்பர்கள். இருவரும் ஒன்றாகத்தான் பள்ளி சென்று வந்தனர். இது வரை இருவருக்குள்ளும் சாதிப் பிரச்சினை வந்ததில்லை. காரணம் சாதி என்றால் என்ன? எனத் தெரியாத விகல்ப்பமில்லாப் பருவமது. இருவரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர்.

மஞ்சள் நிற துணிக்கடை பை, காலை விட நீளமான செருப்பு, சில பாடப் புத்தகங்கள், பழைய சிலேட்டு, சில உடைந்த பல்பங்கள் இவைத் தவிற அந்த வயதில் எதுவும் அவர்களுக்கு பெரிய சொத்தாகத் தெரிந்ததில்லை. பள்ளியும், தெரு விளையாட்டும் அவர்களை பிரித்துப் பார்க்க மனமில்லாமல் வழி நடத்திக் கொண்டிருந்தன.

இப்படியே சென்று கொண்டிருந்த ஒரு நாளில் அம்பிகா பூப்பெய்தினாள். அப்போது இருவரும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள். சில நாடகள் ரமேஸ் தனியே பள்ளி சென்றான். அம்மாவிடம் கேட்டான் "ஏம்மா அம்பி ஸ்கூலுக்கு வரதில்ல?" அதற்கு பதிலாய் அவனுக்குக் கிடைத்தது "நாளை வருவாள்" என்பது மட்டுமே.

"இல்ல அவ வயசுக்கு வந்துட்டாளாம் இனிமே என் கூட வர மாட்டாளாமே? நம்ம ராசாத்தி சொன்னா" என்றான்.

பதில் சொல்ல முடியாமல் "ஆமாம்" என நிறுத்திக் கொண்டாள் தாய்.

இந்த சிலநாள் இடைவெளி இருவருக்குள்ளும் ஒரு நீண்ட இடைவெளியாக மாறத் தொடங்கியிருந்தது. அவள் த்ந்தையுடன் மீண்டும் பள்ளி வந்தாள். ரமேசைப் பார்த்து வெட்கப் பட்டாள். அது அவனுக்கு புதி(ரா)தாக இருந்தது. வீடு திரும்புகையில் வழக்கம் போல் ரமேஸ் அவள் கைப்பிடித்து நடக்க எத்தனிக்க அவள் தட்டி விட்டு சொன்னாள்.

"டேய் ரமேசு இனிமே நான் எந்த ஆம்பளப் பசங்க கூடயும் தொட்டுப் பேசக் கூடாதாமுடா" அம்மா சொன்னாங்க.

"ஏன் அப்புடி?" என்றான்.

"தெரியவில்லை" எனபதை விட அவளுக்கு வேறு காரணம் தெரியவில்லை.


காலமும், சமுதாயமும் இவர்களின் இடைவெளியை அதிகப் படுத்தியிருந்தது.அந்த இடைவெளியே ரமேசுக்கு அவளை வேறு படுத்திப் பார்க்கத் தூண்டியது. இப்போது பதினோராம் வகுப்பு. அவள் அவனுக்கு ஒரு பருவப் பெண்ணாகத் தெரிந்தாள். இருவருக்குள்ளும் ஒரு விகல்பம் தோன்றியிருந்தது.

25 February 2010

சச்சினின் 200க்கு எதிராக சாருவின் ரசிகன்

7:35:00 AM Posted by புலவன் புலிகேசி 79 comments

நேற்று நடந்தப் போட்டியில் சச்சின் 200 ரன்களைக்கடந்து உலக சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே. சச்சின் இந்த சாதனையைப் புரிவார் என நேற்று வரை யாரும் நினைக்கவில்லை. ஷேவக்கால் மட்டுமே இது முடியும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேலையில் சச்சின் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி இந்தியர்களை விளையாட்டுத்துறை மூலம் பெருமையடைய செய்திருக்கிறார்.

இதுவரை எந்தக் கிரிக்கெட் வீரரும் செய்திடா அளவு சாதனைகளை இவர் புரிந்திருக்கிறார்.இவரது இத்தகைய சாதனைகளின் காரணம் தன்னம்பிக்கையும், தேசப்பற்றுமே. சமீபத்தில் நடந்த பால்தாக்கரே பிரச்சினையின் போது கூட "நான் முதலில் இந்தியன்" எனப் பெருமிதக் குரல் கொடுத்தவர்.

ஆனால் இப்படிப்பட்ட மனிதனை வெறும் விளம்பரத்திற்காக விளையாடுவதாகவும், இந்த இரட்டை சதத்தால் ஜட்டி விளம்பரம் கிடைக்கும், வேறொன்றும் நிகழப்போவதில்லை என ஒரு "ப்ராபளப்" பதிவர் கூறியிருக்கிறார்.

நண்பரே பரபரப்பு ஏற்படுத்த எதை வேண்டுமானாலும் எழுதலாம். விளையாடுவது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. கிரிக்கெட்டிற்காக தன்னை வருத்திக் கொள்பவர் சச்சினைத் தவிற வேறு யாரும் இருக்க முடியாது. அந்த ஐந்து அடி உயர மனிதனின் உடலில் உள்ள தழும்புகள், வலிகள் மற்றும் காயங்கள் எண்ணிலடங்கா.

சம்பாதிப்பது மட்டும் நோக்கமாக இருந்திருந்தால் அவர் இவ்வளவு சிரமப்பட்டிருக்க மாட்டார். தன் துறையை முழுமையாக நேசிக்கிறார். அந்த நேசிப்புக்குக் கிடைத்த பரிசு இது. எந்த நோக்கமும் இல்லாமல், சம்பள உயர்வு இல்லாமல் பணி புரிய நீங்கள் தயாராக உள்ளீர்களா?

சச்சின் தன் பணியை சிறப்பாக செய்வதால் விளம்பரங்களும், பணமும் தேடி வருகின்றன. இப்படி குறை சொல்லி சொல்லியே திறமையான இந்திய வீரர்களை இழிவு படுத்த ஒரு கூட்டம் இருக்கிறது. கஜினிப் படத்தில் ஒரு வசனம் வரும்

"கஷ்டப் பட்டு உழைத்தால் ஜெயிக்க முடியாது.
இஷ்டப் பட்டு உழைத்தால் தான் ஜெயிக முடியும்"

நண்பரே ஒன்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள் "எந்த துறையிலும் சுலபமாக வெற்றியடைய முடியாது. அதற்கான ஆர்வமும், விருப்பமும் முழுமையாக இருக்க வேண்டும்". இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் கூட பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. அதற்காக கவலை மட்டுமே பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை.

கிரிக்கெட் பார்க்கும் போது கவலைப் படும் மனங்களில் ஒரு ஆறுதல் கிடைத்தால் அது அவன் கவலைகளை மறக்கடிக்கும் மருந்தாக இருக்கும். எந்நேரமும் பிரச்சினைகளை எண்ணி கவலை மட்டும் படுவதில் எந்த அர்த்தமும், பிரயோஜனமும் இல்லை. முதலில் இந்தப் புரிதலுக்கு வாங்க. இது போல் சாதனையாளர்களைத் தாக்கி எதிராக எழுதுவதை விடுத்து உங்களால் என்ன செய்ய முடியுமோ அந்த நல்ல காரியங்களை செய்யுங்கள் அது போதும்.

கிரிக்கெட் பார்ப்பதால் நாங்கள் மற்ற பிரசினைகளை கண்டு கொள்வதில்லை என அர்த்தமல்ல. நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டுதானிருக்கிறோம்.

24 February 2010

கடவுள் யாரைக் காக்கிறான்(ள்)?

7:02:00 AM Posted by புலவன் புலிகேசி , 32 comments
கடவுள் இந்த சொல்லுக்கு என்னப் பொருள் எனக் கேட்டால் பலர் சொல்வது படைத்தல், காத்தல், அழித்தல் செய்பவன்(இங்கும் ஆணாதிக்கம்) கடவுள். சரி விடயத்திற்கு வருவோம் படைத்தல் என்பது கடவுள் செய்தது என்றால் அந்தக் கடவுளை யார்ப் படைத்திருக்கக்கூடும்?

பலர் என் விவாதங்களில் கேட்டது கடவுள் இல்லாமலா இவ்வளவு ஜீவராசிகள் பிறந்திருக்கிறது? என்று. அவர்களிடம் நான் கேட்பது அக்கடவுளைப் படைத்தவனுக்கு என்னப் பெயர்? அதற்கு சிலர் கடவுளை யாரும் படைக்க முடியாது, அவனே ஆதியாய் இருக்கிறான் என்றனர். ஏன் அந்த ஆதி மனிதனாக இருக்கக் கூடாதா? இதுவரை யாரும் கண்டிராக் கடவுளை ஏன் ஆதியாக எண்ண வேண்டும்? விதண்டாவாதம் பேசாதே என விட்டு விலகியவர்கள் பலர்.


அவனது அடுத்த தொழில் காத்தல். யாரைக் காக்கின்றான்? பெரியார் உட்பட அனைவரும் கேட்டக் கேள்விதான். கடவுள் காப்பவன் என்றால் அனைத்துக் கோவில்களிலும் பூட்டு எதற்கு? இதைப் பார்க்கும் போது "கடவுள் உங்களைக் காக்கிறானா? அல்லது நீங்கள் கடவுளைக் காக்கிறீர்களா?" என சந்தேகம் எனக்கு வருது. யதேச்சையாக நிகழும் தப்பித்தல் நிகழ்வுகளுக்கு கடவுள்தான் காப்பாற்றினார் என பரைசாற்றுபவர்கள் யாரும் "ஏன் நம்மை அப்படி ஒரு ஆபத்துக்குத் தள்ளினான்?" என யோசித்ததில்லை.

அடுத்து அழித்தல். உண்மையில் மரணம் கடவுளின் செயல் என்றால், அது தீயவர்களுக்கு மட்டுமே வர வேண்டும். ஏன் நல்ல மனிதர்கள் பலருக்கு இளவயதிலேயே வர வேண்டும்? தரம் பிரித்துத் தன் வேலையை செய்யத் தெரியாத அவன் கடவுளா?

கடவுள் என்பவன் பெரும்பாலும் உபயோகப் படுத்தப் படுவது பாவமன்னிப்புக்காகத்தான். தான் செய்தது பாவம் எனத் தெரிந்தவன் அந்த கடவுளாகப் பட்டவனிடம் சென்று மன்னிப்புக் பெற்று விட்டு மன்னிக்க இவனிருக்கும் தைரியத்தில் அடுத்த பாவம் தேடிச் செல்கிறான். இப்படி தீய காரியங்களை மன்னித்து இவன் செய்யும் பாவத்திற்கு என்ன மன்னிப்பு?

இன்னும் சிலர் "நம்மைக் காகின்ற கடவுளுக்கு நன்றி செலுத்தவே கோவில்களுக்கு செல்கிறோம்" என்றனர். சரி அவர்களிடம் ஒரு கேள்வி "இதுவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனதார கடவுளுக்கு நன்றி செலுத்தியவர்கள் யாராவது இருக்கிறீர்களா?". உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள். நன்றி சொல்லும் போது அடுத்த வேண்டுகோளை வைத்து விட்டுதானே வருகிறீர்கள் (இது போலவே என்னைக் காப்பாற்று என்றாவது).

இப்படி பல கேள்விகள் என்னுள் விடை கிடைக்காமல் பல வருடங்களாக உலவிக் கொண்டிருக்கிறது. இதன் விடைக்கான தேடுதலையும் என் மனம் புரிந்து கொண்டுதான் இருக்கிறது. என் பலத் தேடல்களில் கிடைத்ததெல்லாம் நல்லுள்ளம் படைத்த அத்தனை உயிர்களும்(மனிதன் மட்டுமல்ல) கடவுள்தான்.

சங்க காலத்தில் கோவில்கள் படைக்கப் பட்டதன் நோக்கம் மக்கள் ஒன்று கூட ஒரு இடம் தேவை என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இன்று அக்கோவில்கள் பணம் சேர்க்கும் ஒரு வியாபார இடமாக மாற்றப் பட்டிருக்கிறது.

இருக்கும் இடம் விட்டு இல்லா இடம் தேடி அலையும் இந்த மனிதர்கள், கோவிலை விடுத்து மனிதத்தில் கடவுள் தேடினால்தான் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பிச்சைக் காரர்கள் போன்றோரின் வறுமை ஒழிந்து நல்ல மனம் ஓங்கி கடவுளுக்கான புரிதல் ஏற்படும்.

கடவுள் இருக்கிறது!!! கோவில்களில் அல்ல!!! நம் நற்குணங்களில்!!!

23 February 2010

சொந்த பந்தங்கள் - 3

6:23:00 AM Posted by புலவன் புலிகேசி , 25 comments

அண்ணன்

தன் இளவல் கற்க
தன் கல்வி இழந்தான்

தமையாளின் மணம் முடிக்க
தன் மணம் தள்ளினான்

இருவரும் இவன் மறந்து
இன்புற்றிருக்க இவனோ

துன்புற்றிருப்பினும் அவர்கள்
இன்பத்தில் திளைத்திருக்கிறான்

தம்பி

அம்மையப்பனின் செல்லப் பிள்ளை
அதனால் மூத்தவனின் பிள்ளைப்

பருவ எதிரி வளர்பருவத்
தோழன் வளர்ந்த பின்

பங்காளி

20 February 2010

பரிசலின் டைரிக்குறிப்பு - புத்தக விமர்சனம்

7:44:00 PM Posted by புலவன் புலிகேசி 18 comments

கேபிளாரின் லெமன்ட்ரீயுடன் நாகரத்னா பதிப்பகம் வெளியிட்ட இன்னொரு புத்தகம் பரிசல் கிருஷ்ணாவின் "டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்". இப்புத்தகம் மொத்தம் பதினேழு சிறுகதைகளை உள்ளடக்கியது. அது பற்றிய விமர்சனம் இது.

1) தனிமை-கொலை-தற்கொலை

காதலைக் காட்டிலும் நட்பு உயர்ந்தது என்பதைக் காட்டும் இக்கதை ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரஸ்யம் குறையவில்லை. காதலிக்காக நண்பனை கொலை செய்ய என்னுவதும், நட்புக்காக தற்கொலை முயற்சியும் என இக்கதை நட்பிற்கு சமர்ப்பனமாய்.

2) காதல் அழிவதில்லை

சினிமாவில் வருவது போல ஒரு ஈர்ப்புக் காதல் கல்யாணத்தில் முடிந்த பின்பு அந்தக் காதலின் நிலை என்ன என்பதை இரு ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு பெண்ணை வைத்து எழுதியிருக்கிறார். இதன் முடிவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் மனதில் பதியுமளவுக்கு இன்னும் ஆழமாக சொல்லப் பட்டிருக்கலாம் எனத் தோன்றியது.

3) காதலிக்கும் ஆசையில்லை

ஒரு தோழி தன் மீது வைத்திருக்கும் ஒரு தலைக்காதலை ஏற்றுக் கொள்ளவும் மனமில்லாமல், அவளின் நட்பையும் இழக்க விரும்பாத ஒருவன் என்ன செய்கிறான் என்பதை அழகாக விளக்கும் கதை. சொன்ன விதம் அருமை. ஊகிக்க முடிந்த முடிவு.

4) பட்டர்ஃப்ளை எபெக்ட்

இதற்கு ஏன் ஆங்கிலப் பெயர் வைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு அழகான வாழ்வியல் கதை. இருவரும் வேலைப் பார்க்கும் வீடுகளில் குழந்தைகள் படும் சிரமத்தையும், அவர்கள் இழந்து கொண்டிருக்கும் சந்தோசத்தையும் அற்புதமக சொல்லியிருக்கிறார். படித்ததும் பசக் என மனதில் ஒட்டிக் கொண்ட கதை.

5) இருளின் நிறம்

தொலைக்காட்சியில் தொலைந்து கொண்டிருக்கும் உறவுகளையும், அங்கு பாசம் தேடும் நேரத்தையும் இரு அருகாமை வீட்டாரை வைத்து குட்டியா அழகா சொல்லிருக்காரு. இதுவும் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு.

6) நான் அவன் இல்லை

ஒரு பரபரப்பான கதை. வேலை தேடி அலையும் ஒருவன், உழைபை விட இலவசமாக கிடைக்கும் பணத்தை பெற சென்று சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். இதையும் சுவாரஸ்யம் குன்றாமல் கொடுத்திருக்கிறார்.

7) மாற்றம்

சவரக்கடையில் அமர்ந்து தன் சிறுவயது அனுபவன்களை அசைபோட்டு முடித்து வெளியில் வந்து சந்தித்த நபரை கண்டதும் அதிர்ச்சிக்குள்ளாகிறன் இக்கதை நாயகன். ஏன் அந்த அதிர்ச்சி என்பதையும் அழகாக வாழ்வியலோடு விளக்கியிருக்கிறார்.

8) மனிதாபிமானம்

நகர்ப்புற வாழ்வில் அவசர யுகத்தால் மனிதாபிமானமும், புரிதலும் அழிந்து போயிருக்கிறது என்பதை விளக்கும் கதை. யதார்த்தம் பளிச்சிடும் கதை.

9) நட்பில் ஏனிந்த பொய்கள்?

தன்னிடம் பொய் சொன்ன முகமறியா நண்பனுக்கு கடிதம் எழுதுவதாக ஆரம்பித்து அதை அனுப்ப முயல்கையில் அவனிடமிருந்து வந்த கடிதத்தை படித்து பின் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.

10) கைதி

சிறையிலிருந்து தப்பித்த கைதி பற்றிய அறிவிப்பு கார் வானொலியில், அதே காரில் லிப்ட் கேட்டு அமர்ந்த ஒருவன், அந்த கைதி யார்? என்பதை சுவாரஸ்யமாக விளக்கும் கதை

11) ஜெனிஃபர்

இந்த புத்தகத்தின் மிகச் சிறந்த கதை என்றுதான் சொல்வேன். என் மனதிலும் முகத்திலும் புன்னகை கசிய செய்த கதை. காதல் இப்படி கூட இருக்கலாமா? என சிந்திக்க வைத்த கதை. இப்படித்தான் இருக்க வேண்டும் என தோன்றியது. இதற்காக பரிசலுக்கு ஒரு சிறப்பு வாழ்த்து.

12) கடைசி ஓவரில் ஒரு ஆபரேசன்

கிரிக்கெட் பார்க்கும் ஒருவன் அலைபேசியில் அதன் நிலையறியும் ஒருவன். இறுதி ஓவரின் பரபரப்பு முடியும் தருவாயில் வந்த ஒரு செய்தி. அனைத்தையும் நன்கு விளக்கியிருக்கும் கதை.

13) டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்

புத்தகத் தலைப்பும் இதுதான். நல்ல கதை.ஒரு விபத்தையும் இன்னொரு நிகழ்வையும் ஒரு சேர கலந்தெழுதி அதை தொடர்பு படுத்திய விதம் பாராட்டுதலுக்குரியது.

14) மனசுக்குள் மரணம்

நடக்கப் போகும் நிகழ்வுகளை கனவில் காணும் மனிதனின் வாழ்வு குறித்த கதை. ஜனகராஜ் நடித்த பழைய படம் ஒன்றில் இது போல் பார்த்த நியாபகம் வருகிறது.

15) ஸ்டார் நெம்பர் ஒன்

ஒரு உதவி இயக்குனர், ஒரு திமிர் பிடித்த நடிகை இருவருக்குமான பிரச்சினை, சில வருடம் கழித்து அவன் இயக்குனரான பின் அந்த நடிகையின் நிலை குறித்த கதை. நன்று

16) நட்சத்திரம்

இரு குழந்தைகளுக்கிடையேயான நட்பையும், ஏற்ற தாழ்வுகளையும் விளக்கும் கதை. எனக்கு மிகப் பிடித்த இன்னொரு கதை இது.

17) சமூகக் கடமை

சமூக அக்கரைபற்றி பேசும் ஒருவர் செய்யும் அற்ப காரியம் அழகாக விவரிக்கப் பட்ட கதை

கேபிளார் அசைவக்கதை என்றால் இவர் சைவக்கதை. அதனால் இந்த "டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்" புத்தகம் "U" சர்டிபிகேட் பெறுகிறது.

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - சுவையான சைவ சாப்பாடு

டரியல் (20-பிப்ரவரி-2010)

6:31:00 AM Posted by புலவன் புலிகேசி 20 comments
"வெள்ளி நிலா" என்ற பதிவர்களுக்கான முதல் பத்திரிகை வெளிவந்திருக்கிறது. அதில் என் கதை வெளிவந்து முடிவு மாற்றம் செய்தது குறித்து முன்னரே எழுதியிருந்தேன். அந்த மாற்றம் என்னைக் கேட்காமல் நிகழ்ந்தது. அது குறித்து ஷர்புதீனிடம் நேரடியாக கேட்டேன். "தவறான புரிதலும்,நேரமின்மையும் காரணம் எனக் கூறினார்". அதில் உண்மையிருந்தது.

ஆனால் இனி ஒரு இதழ் வெளியிடும் போது ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வரும் எழுத்துக்களை மட்டும் படித்து பரிசீலனைக்கு எடுத்து கொண்டு தேவைப்பட்டால் அதை அனுப்பியவரிடம் அனுமதி பெற்று மாற்றம் செய்ய வேண்டியது அவரது பொறுப்பு.

மேலும் இந்த முதல் இதழில் வந்த கட்டுரை, கதை, நகைச்சுவை, புகைப்படங்க்கள்(அதிலும் அந்த பவ்ய புகைப்படம்) அனைத்தும் நன்றாகத்தான் இருந்தது. ஒரு சிறிய வேண்டுகோள் "இனி பதிப்புகளை கதை, கட்டுரை, சினிமா,கவிதை எனப் பிரித்து அதற்கேற்றார் போல் பக்கங்கள் வடிவமைக்கப் பட்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும்".

வெள்ளி நிலாவின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. அது மென்மேலும் வளர்ந்து ஒரு பெரிய ஊடகமாக மாற என் வாழ்த்துக்கள். அப்பறம் அடுத்த இதழுக்கான என் படைப்பைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் அனுப்பி வைக்கிறேன் ஷர்புதீன்.

----------------------

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் வானம்பாடிகள் ஐயா "கள்ளக் காதல் என ஏன் சொல்கிறீர்கள்?" எனக் கேட்க அதற்கு நான் அதை எப்படி கூறுவது என வினவ, அவர் "அதற்கு எப்பெயரும் இட வேண்டியதில்லை" என சொல்ல, "அப்படியே விட்டு விட வேண்டுமா?" என நான் ஆதங்கம் தெரிவிக்க "அதை நீங்களே யோசிங்கன்னு" முடிச்சிட்டாரு. கடைசி வரைக்கும் என்ன சொல்ல வந்தாருன்னு புரியவே இல்ல.

அதற்கு நான் அளித்த பதில் பின்னூட்டம்

எனது பார்வையில் அது தவறான ஒன்று. கண்டிக்கத்தக்கது. அது போல் கணவனிடம்/மனைவியிடம் பாசமோ, காதலோ கிடைக்கவில்லை என நினைத்தால் "திருவாரூர் சரவணன்" சொன்னது போல் விவாகரத்து பெற்று பிடித்தவனை/பிடித்தவளை மணம் செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து இது போன்ற உறவுகள் தவறானது.

//திருவாரூரிலிருந்து சரவணன் said...

கணவனுடன் ஒத்துப்போகாத நிலையில் விவாக ரத்து செய்து வேறொரு பொருந்தும் துணியை தேடிக்கொள்ளலாம். ஆனால் அவன் சம்பாதிக்கும் பணம் மட்டும் வேண்டும்,ஆனால் சுகத்துக்கு மற்றொருவன் என்ற விஷயம் நம்மில் பெரும்பாலானோர் விரும்பத்தகாத ஒன்றுதான்.மைன்ட் ஒப்பன் பண்ணினா அது நம்மை இன்னும் செம்மைப்படுத்தக்கூடியதாதான் இருக்கணும். எந்த கட்டுப்பாடும் இல்லைன்னா எல்லா ஆணும் ஏன் சில பெண்களும் கூட குழந்தையை பெற்றுக்கொள்ளவோ அல்லது பராமரிக்கவோ விரும்ப மாட்டார்கள். இப்போது பெற்றோரின் (?!) அரவணைப்பு இருக்கும்போதே பல குழந்தைகள் தடம் மாறிப்போகிறார்கள். இப்படி ஒரு கலாச்சாரம் இல்லாமல் கட்டற்ற காமம் பின் பற்றப்படும் என்றால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். நாட்டுதான் சொல்கிறேன். கதையில் சொல்லப்பட்டிருக்கும் கள்ளக்காதலுக்கான காரணம் வெறும் காரணம் தானே தவிர,அதுநியாயப்படுத்தக்கூடியது இல்லை என்பது என் கருத்து.//

இப்ப நீங்க சொல்லுங்க உங்க கருத்தை.

----------------------


இது வேற ஒன்னும் இல்லீங்க. நம்ம சென்னை கூவம் தான். சொல்ல சொல்ல கேக்காம நாம உபயோகிக்கும் பிளாஸ்டிக் பேப்பர்களும், பாட்டில்களும் தான். இதே போல் நாம் தொடர்ந்தால் நிச்சயம் ஒரு நாள் கூவம் தேங்கிப் போய் சாக்கடைகள் வெளியேற்றப் படாமல் சென்னை வாசிகள் நோய்வாய்ப் பட்டு சென்னையை விட்டு அனைவரும் வெளியேறும் நிலை வரும்.

அத்தோடு நின்று விடாது. இதனால் காற்று மண்டலமும் பாதிக்கப் பட்டு பல சீரழிவுகள் நிகழ்வது நிச்சயம். இதைத் தடுக்க நாம் அனைவரும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். என் கையை நான் உயர்த்தியாச்சு, என்னுடன் கைக் கோர்க்க விரும்புறவங்க பின்னூட்டத்துல கை கோர்த்து உறுதிமொழி எடுத்துக்குங்க.

----------------------

கேபிள் மற்றும் பரிசலின் புத்தகங்களை ஆன்லைனில் வாங்க

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்

டைரிக்குறிப்பும் காதல்மறுப்பும்
மேலும் தொடர்புக்கு:
கேபிள் சங்கர் : 9840332666
பரிசல் காரன் : 9894747014
குகன் : 9940448599
---------------------

இந்த வாரப் பதிவர்

நம்ம நண்பர் .பாலாசி.

பதிவுகளைத் தேடிப்பிடித்து பின்னூட்டமிடுவதில் வானம்பாடிகள் ஐயாவை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இவரது பதிவுகள் சமுதாய தாக்கம் ஏற்படுத்துவதாக இருக்கும். மேலும் "குழந்தையின் குமுறல்களாக" இவர் எழுதும் கவிதைகள் நெஞ்சைத் தொடும். பதிவுலகில் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களில் இவரும் குறிப்பிடத்தக்கவர். நாங்கள் இருவரும் ஒரே ஊர்க் காரர்கள். ஆனால் சந்தித்தது என்னவோ ஒரே ஒரு முறைதான்.

இவரது வலைப்பூ:சி@பாலாசி
----------------------

இந்த வார டரியல் நம்ம ஆரூரன் விஸ்வநாதன் அவர்களின் அனுபவப் பகிர்வான "கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி". கண்ணாடி அணிந்திருப்பவர்கள் அதைத் தவிர்க்க பாண்டிச்சேரியில் அளிக்கப்படும் பயிற்சி குறித்த விபரங்கள் இதில் தொகுத்து வழங்கியிருக்கிறார். பொது நல நோக்குடன் இதைப் பகிர்ந்த ஆரூரன் அவர்களுக்கு என் நன்றிகள்.

----------------------

18 February 2010

கேபிளாரின் லெமன் ட்ரீ ஒரு 18+ புத்தகம்

11:45:00 PM Posted by புலவன் புலிகேசி 49 comments

இது கேபிளாரின் "லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" புத்தகத்தின் விமர்சனம். இப்புத்தகத்தில் மொத்தம் 13 சிறுகதைகள். முதல் கதை என்னை உள்ளே இழுத்து சென்றது.

1) முத்தம்

இச்சிறுகதையை பலர் வார இதழ் ஒன்றில் படித்து விட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் இப்போதுதான் முதன் முதல் படித்தேன். படித்ததும் கதை மனதில் ஒட்டிக் கொண்டது. காட்சிகள் கண் முன்னே வந்து சென்றன. ஒரு இளைஞனும் யாரெனத் தெரியாத ஒரு விபசாரியும் சந்தித்து அவன் அவளுக்கு உதவுவது, எதற்காக அவளை சந்தித்தான் என்பதையும், அவள் அவனுக்கு எதற்காக முத்தம் கொடுத்தாள் என்பதை கதையின் இறுதியாகவும் வைத்து சுவாரஸ்யம் குறையாமல் உள்ளே அழைத்து சென்றது இந்த முத்தம்..இப்புதக்கத்தின் சிறந்த கதைகளில் முதலிடம்

2) லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்

இந்த கதைதான் புத்தகத்தின் பெயராக இடம் பிடித்திருக்கிறது. நகர்ப்புற வழ்வியலின் அங்கமான பப் என சொல்லக்கூடிய இடத்தைக் கதைக் களமாக கொண்டு துவங்குகிறது. அங்கு வரும் இருவரில் ஒருவன் வெறுமையை அனுபவிக்கையில் இன்னொருவன் உற்சாகமாய் அனைவரையும் உற்சாகப் படுத்த அவன் கொடுத்த உற்சாகத்தில் இவனும் உற்சாகமடைய நட்பு பழக இறுதியில் உற்சாகப் படுத்திய அந்த மனிதன் சொன்ன விடயம் ஆச்சர்யப் பட வைக்கிறது என்பதாக முடிகிறது கதை. இக்கதைக்கு ஆறாமிடம்.

3) கல்யாணம்

கல்யாணம் என்பவன் கல்யாண வயதைக் கடந்தும் கல்யாணமாகாமலிருக்க ஒரு விபசாரி இல்லத்துக்கு செல்வதும் அங்கு நடக்கும் விடயங்களையும் ஒரு சிறுகதையாக்கியிருக்கிறார்.

4) ஆண்டாள்

ஐந்தாம் வகுப்பு வரை உடன் படித்த ஆண்டாள் என்ற பெண்ணை ஆறு வருடத்திற்கு பிறகு பார்க்கையில் அவளைப் பின் தொடர்ந்து அவளுடன் பேச முயற்சிக்கையில் என்ன நடக்கிறது என்பதை நினைவுத்திரும்பலுடன் (ஃப்ளாஸ்பேக்) சொல்லியிருக்கிறார். இக்கதைக்கு நான்காமிடம்.

5) ஒரு காதல் கதை..இரண்டு க்ளைமேக்ஸ்

ஒரு கதையில் இரண்டு முடிவுகள் வைத்துப் பின்னப்பட்டிருக்கும் கதை. இரண்டு முடிவுகளும் மனதில் நிற்கத்தான் செய்கிறது. ஒரு பெண்ணிடம் ஒருவன் காதலை சொன்னதும், சொன்ன இடமும், அவளது பதிலும் இதுவரை நான் கேள்விப்படா வண்ணம் ஒரு புதிய பாணியில் சொல்லியிருக்கிறார். இக்கதைக்கு ஐந்தாம் இடம்.

6) தரிசணம்

இது எனக்கு மிகப் பிடித்த கதை என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் ஆஸ்ரம், சாமியர்கள் எனப் பின்னப் பட்ட கதையில் அங்கு செல்லும் சிலருக்கு மன திருப்தி கிடைப்பதன் உண்மைக்காரணம் அழகாகவும் சுவரஸ்யம் குன்றாமலும் விளக்கப் பட்டிருக்கிறது. இக்கதைக்கு மூன்றாமிடம்.

7) போஸ்டர்

இந்த கதையில் சுட்டப் பட்டிருக்கும் போஸ்டர் போல சில மாதங்களுக்கு முன்னர் சைதாப் பேட்டையில் பார்த்திருக்கிறேன். காவல் துறையையும் ஒரு குற்றவாளிப் பெண்ணையும் எதிர்பாரா திருப்பம் கொண்டு முடித்திருக்கும் கதை.(காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததாக சொல்வர்கள் அது போன்ற கதை)

8) துரை..நான்..ரமேஷ் சார்.

கணவனுக்காக திரைத்துரைக்கு வரத்துடிக்கும் ஒரு பெண் படும் கஷ்டங்களையும், திரைத்துரையின் காமலீலைகளையும், கணவனின் பணவெறியையும் இன்னொரு மனிதனின் அன்பையும் அருமையாக விளக்கும் கதை. கதை அருமை.

9) என்னை பிடிக்கலையா?

திருமணமான ஒரு பெண்ணின் எதிர் பார்ப்புகள். அது கணவனிடம் கிடைக்காமல் இன்னொருவனிடம் கிடைப்பது போன்ற கதை. இது ஒரு கள்ளக் காதல் குறித்த கதை. கள்ளக்காதலின் காரணம் விளக்க ஒரு கதை.

10) காமம் கொல்

இது முழுக்க முழுக்க தடம் மாறும் இளைஞனின் வாழ்வையும் அவன் சந்திக்கும் சாமியார் பற்றியும் எழுதப் பட்ட கதை. இதுவும் ஒரு காமம் குறித்த கதைதான். சாமியாரும் காமம் விஞ்சியவன் அல்ல.

11) ராமி,சம்பத்,துப்பாக்கி

ஒரு விபச்சாரியுடன் அவள் விபச்சாரி எனத் தெரியாமல் உல்லாசிக்கும் ஒருவன் உண்மை தெரிந்த பின் அதை எண்ணித் துடிக்க அவனுக்கு என்ன முடிவு கிடைத்தது என்பதை துப்பாக்கி முனையில் சொல்லியிருக்கிறார். கமர்சியல் க்ளைமேக்ஸ்.

12) மாம்பழ வாசனை

ஒரு இளைஞனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான காதலும் அவள் மீதான ஒரு வித வாசத்தில் அவன் மயங்குவதும் அவ்வாசம் தேடி அவள் பின்னால் அலைவதும் என கொண்டு சென்று ஒரு விதமாய்முடித்திருக்கிறார்.

13) நண்டு

இது ஒரு உணர்வுப் பூர்வமான கதை. கணவனுக்கு கேன்சர் என்பது தெரிந்த பின் எந்த ஆதரவுமில்லா மனைவியின் மன வேதனையையும் கணவன் மீதான பாசத்தையும் அழகாக சொல்லியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் இரண்டாவது சிறந்த கதை என்று சொல்வேன்.

பதிமூன்று கதைகளையும் படிச்சி விமர்சிச்சாச்சி. இவர் கதைகளில் பெரும்பாலும் காமம், கள்ளக்காதல் போன்றவை பல இடங்களில் வருதலால் "" சர்டிபிக்கேட் வழங்கப்படுகிறது.

"லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" - கொஞ்சம் இயல்பாய் நிறைய கமர்ஷியல் காமம்

17 February 2010

உறக்கம் தொலைத்த உறவுகள்....

7:36:00 AM Posted by புலவன் புலிகேசி 49 comments

தமிழ் ஒரு நடுத்தரக்குடும்பத்தை சேர்ந்த திருமணமான இளைஞன். அவன் வேலைப்பார்ப்பது ஒரு கால் சென்டரில். இரவில் பணி பகலில் உறக்கம் என இன்பம் தொலைத்து பொருள் தேடும் பலரில் இவனும் ஒருவன். ஞாயிறு, இதுதான் அவனுக்குப் பிடித்த தினம். ஏனென்றால் அன்றுதான் அவன் கண்கள் முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்.

சனி இரவு பணி முடித்து திரும்பும் போது எதிர் வருபவை அவனுக்குத் தெரிந்ததில்லை. உறக்கத்தை நோக்கிப் பயணிப்பதில் ஒரு சுகம் அவனுக்கு. அந்தப் பயண வேகம் பல முறை நூறு கி.மீ கூடக் கடந்திருக்கிறது. இத்தனைக்கும் ஐந்து கி.மீ தொலைவிலிருக்கும் அலுவலகம் ஞாயிறு அதிகாலை மட்டும் ஐம்பதாக ஆகத் தோன்றும்.

அதனால்தான் இருளைக் கிழிக்கும் அந்த வேகம். வீட்டை நெருங்கியதும் வாகனத்தை சரியான இடத்தில் நிறுத்தக்கூட தோன்றவில்லை அவனுக்கு. அவன் வாகனம், அதுதான் தன் உறக்கத்தின் ஊன்றுகோல் எனத் தோன்றும் அவனுக்கு. வீட்டிற்குள் நுழைந்ததும் ஆடை மாற்றக் கூட அலுப்பாக எண்ணி அப்படியே கட்டிலில் சரிவான்.

அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் அவன் குழந்தையிடம் கொஞ்சி விளையாடுவது என்னவோ கணக்கிட்டுப் பார்த்தால் மாதத்திற்கு இரண்டு மணி நேரம் கூட இல்லை. அந்த குழந்தைக்குத் தெரிந்தது என்னவோ அம்மா மட்டும்தான். அப்பாவைக் கூட அந்நியனாகப் பார்க்கிறது அக்குழந்தை.

இரவுப் பணியிடை வேளைகளில் உறவுகள் பற்றி யோசிப்பான். அவனுக்குப் பிடித்த அவன் தங்கை "ரம்யா". இருவருக்குள்ளும் அப்படி ஒரு பாசப்பிணைப்பு. ரம்யா திருமணமாகி இருப்பது என்னவோ அருகில் உள்ள அம்பத்தூரில்தான். ஆனால் அவளைப் பார்த்து ஆறு மாதமாகிறது. ஒவ்வொரு ஞாயிறும் பார்க்க வேண்டும் என நினைப்பான்.

ஆனால் உறக்கம் அவனை இன்று வரை அனுமதிக்கவில்லை. அப்படி ஒரு ஞாயிறில் அதிகாலை முடிய வேண்டிய பணி ஒரு வெள்ளைக்காரனின் தொ(ல்)லைபேசியால் பத்து மணி வரை நீடித்தது. உறக்கம் அவன் உடலை வாட்டியதால் வாகனத்தை அலுவலகத்தில் விட்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து நுழைந்தான்.

அன்று ரம்யா கணவனுடன் அங்கு வந்திருந்தாள். ரம்யாவைப் பார்த்ததும் தன் மகிழ்ச்சியைக் கூட வெளிப்படுத்த முடியவில்லை அவனுக்கு. "வாம்மா! வாங்க மாப்ள" என சொல்லிக் கொண்டே சென்று கட்டிலில் சரியும் போது கேட்டான் "ரம்யா சாயங்காலமா பேசலாமா?". ரம்யாவுக்கு அதிர்ச்சி "சரிண்ணா"ன்னு சொல்லிட்டு அறைக்கதவை சாத்திச் சென்றாள்.

அண்ணன் அவளுக்கு அந்நியமாகப் பட்டான். மாலை வரை காத்திருந்தாள். சற்றே இருட்டத் தொடங்கியிருந்தது. தமிழ் இன்னும் எழுந்திரிக்கவில்லை. கணவர் வேறு அவசரப் பட அண்ணனிடம் சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டாள். "அண்ணன் ஏன் இப்படி மாறி விட்டான்? ஒரு வேளை வசதி அதிகம் வந்ததால் இந்தத் தங்கை அவன் கண்ணுக்குத் தெரியவில்லையோ?" என எண்ணிக் கொண்டே சென்றாள்.

உறக்க நித்திரையில் அவன் ரம்யாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.

16 February 2010

வெள்ளிநிலாவும் மாறிப்போன என் கதையும்

5:37:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
ராமசாமியும் சோஸ்யக்காரனும்

சின்னையன் ஒரு மிகப்பெரிய சோஸ்யக்காரன்னு பேர் வாங்குனவன். இவனோட பொழப்பே அடுத்தவங்க எதிர்காலத்த பத்தி சொல்லி (?) சம்பாதிக்கறதுதான். ராமசாமி சின்னையனோட உதவியாளன்.

ராமசாமிக்கு உண்ண உணவும் இருக்க இடமும் தந்தான் சின்னையன். சம்பளம்னு இதுவரை எதுவும் கொடுத்ததில்லை. ராமசாமியும் சாப்பாடும் இடமும் கிடைச்சா போதும்னு இருந்துட்டான். சின்னையன் சொல்ல சொல்ல சோஸ்யக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களை எடுத்து வருவதுதான் ராமசாமியின் வேலை.

சின்னையனால் மட்டுமல்ல எந்த ஒரு சோஸ்யக்காரனாலயும் அடுத்தவர் எதிர்காலத்தை கணிக்க முடியாது. வருபவர்களின் வார்த்தைகளை கூர்ந்து கவனிப்பான் சின்னையன். பின்னர் அவரவர் மன நிலைக்கேற்ப அவர்களுக்கு சாதகமாக சோஸ்யம் சொல்லும் வித்தை தெரிந்தவன். நம் மக்களும் மூடநம்பிக்கையில் மூழ்கி போயிருக்கிறார்கள். அதுதான் சின்னையனின் முதலீடு

சின்னையன் சோஸ்யம் பாக்க வருபவர்களுக்கு சொல்லும் சில விடயங்கள்

"உங்க வீட்டுல கூடிய சீக்கிரம் ஒரு விசேசம் நடக்கப் போவுது"

"நீங்க தொழில்ல விருத்தி அடைவீங்க"

"உங்க சொந்தக்காரங்கள்ள ஒருத்தருக்கு உடல் நிலை சரியில்லாம போவும்"

"கொஞ்ச நாளைக்கு முன்ன உங்களுக்கே உடல்நிலை சரியில்லாம போயிருக்குமே?"

இது போன்ற பொதுப்படையான சோஸ்யம் மட்டுமே சொல்லத் தெரியும். இவை உலகில் உள்ள பலருக்கு பொதுவானது. அவர்களும் யோசிக்காமல் அட சரியா சொல்றாரேன்னு காசு கொடுத்து போவார்கள். இவனுக்கு மட்டுமல்ல ஊரில் திரியும் அனைத்து சோஸ்யக்காரர்களும் இது போலத்தான் வாழ்க்கையை ஓட்டி கிட்டிருக்காங்கன்னு ராமசாமிக்கு நல்லாவே தெரியும்.

ராமசாமிக்கு உடல்நிலை சரியில்லைன்னாலும் விடுப்பு எடுக்க முடியாது. அவன் தன் எடுபிடி வேலைகளை செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் சின்னையனிடம் திட்டு வாங்க வேண்டும். ராமசாமி ஒரு அடிமை போல் சின்னையனிடம் வேலை பார்த்து கொண்டிருந்தான்.

ராமசாமிக்கு அடிக்கடி தோன்றும் "என்னடா இவன் இந்த ஊர் மக்களை எல்லாம் ஏமாத்தி பொழப்பு நடத்திட்டுருக்கானே..நாம வேற அதுக்கு உடந்தையா இருக்கமே" இதெல்லாம் தப்புன்னு தெரிஞ்சும் வயத்துப் பொழப்புக்காக இப்புடி ஏமாத்தி திரியுறமேன்னு வருத்தப் படுவான்.

ஒரு நாள் ராமசாமி எப்படியாவது இந்த தொழிலில் இருந்து விலகனும்னு முடிவெடுத்தான். அதற்கு ஆயத்தமானான்.

---சின்னையன் சொன்ன சோஸ்யக்குறிப்பை எடுக்க வெளியில் வந்தவன் பல ஆண்டுகளாக பிரிக்கப்படாத தன் இறக்கையை விரித்து வான் நோக்கி பறந்தான். பறக்கும் போது தான் விடுதலையடைந்ததை விட இனி தன்னால் மக்கள் ஏமாற்றபட போவதில்லை என்ற சந்தோசமே ராமசாமியிடம் நிறைந்திருந்தது.

-------------------------------
இதுதான் வெள்ளிநிலாவிற்கு நான் அனுப்பியக் கதை. அதன் முடிவில் சில மாற்றம் செய்திருப்பதாக நண்பர் ஷர்புதீன் சொல்லியிருந்தார். அந்த முடிவு இதோ

----சில நாள் கழித்து சின்னையன் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தான். "ஏங்க யாராவது ராமசாமிய பார்த்தீங்களா? கொஞ்ச நாளா ஆளைக் காணோம்! என் ஜோஸ்ய குறீப்புகளையும் காணோம்."

இறுதி நேரத்தில் அனுப்பப்பட்டதால்தான் இந்த மாற்றம் நிகழ்ந்து போனது. இப்போ நீங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
--------------------------------

15 February 2010

காதலர் தினத்தில் கிடைத்த காதல் பரிசு

7:42:00 AM Posted by புலவன் புலிகேசி 30 comments

5.30 மணிக்குள் சென்றே ஆக வேண்டும் என முடிவெடுத்தேன். ஆனால் இடையில் நட்பு ஒருவர் வீட்டுக்கு செல்ல வேண்டியக் கட்டாயம். அதனால் 6 மணிக்குத்தான் சென்றேன். (எங்கன்னு யோசிக்காதீங்க கேபிள் & பரிசலின் புத்தக வெளியீட்டு விழாவிற்குத்தான்). உள்ளே நுழையும் இடத்தில் வழியில் நின்று பேசிக் கொண்டிருந்த கேபிள் (ஓனர்னா ஓரமா போவ வேண்டியதுதான?) மற்றும் அப்துல்லா என்னை வரவேற்றனர்.
(ஜெட்லி, நான், ரோமியோ)
உள்ளே நுழைந்ததும் அண்ணன் "பட்டர்ஃப்ளை" சூர்யா அழைத்ததும் அருகில் சென்று அமர்ந்து பார்த்தால் வரிசையாக நமது பட்டாளங்கள் ஜெட்லி, சங்கர், பலாபட்டறை சங்கர், மயில்ராவணன், அண்ணன் உண்மைத்தமிழன், அண்ணன் ஜிப்பா தண்டோரா (ஜிப்பா சூப்பர்), காதல் மன்னன் ரோமியோ. வந்திருந்தவர்களில் பெரும்பாலோனோர் வலைப்பதிவர்கள்தான்.

பின்னர் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டோம். சட்டென மின்சாரம் நின்றுவிட்டது(அட நம்ம .பி). அப்போதுதான் தொடங்கியது புத்தக வெளியீட்டு விழா. சிறப்பு விருந்தினர்களாக பிரமிட் நடராஜன் (கேபிளாரின் சித்தப்பா), அஜயன் பாலா, அகநாழிகை வாசு ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

புத்தக வெளியீடும் தொடங்கியது. "லெமன்ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" என்ற கேபிளாரின் புத்தகத்தை பிரமிட் நடராஜன் வெளியிட அகநாழிகை வாசு பெற்றுக் கொண்டார். "டைரிக்குறிப்பும் காதல் ம்றுப்பும்" என்ற பரிசலின் புத்தகமும் வெளியிடப்பட்டது(முன்னாடி போய் இந்த ஒளிப்பதிவு செய்யுறவங்க நின்னதால யாரு குடுத்தா யாரு வாங்குனான்னு தெரியல).

வாழ்த்துரைகளின் தொடக்கம். முதல் வாழ்த்துரை அண்ணன் கேபிளாரின் மகன் சின்ன கேபிளார் "அப்பா ஒரு காமெடி பீசு" என சொல்ல அனைவரும் ஒட்டு மொத்தமாக சிரித்து விட்டோம்.
(சிறப்பு விருந்தினர்கள்)
அடுத்து வாழ்த்துரை கூறிய பிரமிட் நடராஜன் "தான் இன்று இந்த அளவு பெரிய தயாரிப்பாளராக, நடிகனாக வரக்காரணம் கேபிளாரின் தந்தை செய்த உதவிதான் என்றார். அதாவது அவர் 10ம் வகுப்பு முடித்து சென்னை வந்து வேலை தேடிய போது இருக்க இடம், உணவு கொடுத்து உதவியவர் கேபிளாரின் தந்தை.

"இந்நூல் என் பிரம்மாவும் குருவுமான என் தந்தைக்கு சமர்ப்பனம்!!" இது அப்புத்தகத்தில் கேபிளாரின் என்னுரை வரிகள்.

அவர் பேசிக் கொண்டிருக்கையில் தமிழ்ப்படம் இயக்குனர் சி.எஸ்.அமுதன் வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்த போது நடராஜன் சொன்னார் "எனக்கு இன்னும் படத்துக்கு டிக்கெட் கிடைக்கலீங்க". நடராஜன் முடிக்கையில் தான் திரைத்துரையில் சாதித்தவன் என்பதை விட கேபிளாரின் சித்தப்பா என்பதில் பெருமிதம் கொள்வதாக சொன்னார்.
(தமிழ்ப்படம் சி.எஸ்.அமுதன்)
பின்னர் பேசிய அமுதன் தன் படத்திற்கு விமர்சனம் எழுதிய வலைப்பதிவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அதிலும் வலைப்பதிவு விமர்சனம் படித்தப் பின் ஒரு ந்ம்பிக்கை வந்ததாக சொன்னார். அதன் பின் பேசிய அஜயன் பலா நீண்ட நேரம் பேசினார். எழுத்துலகில் அவர் பட்ட கஷ்டங்கள், கேபிளாரின் புத்தகத்தில் அவருக்குப் பிடித்த கதைகள் என விவரித்தார்.

அதன் பின் என்னுரை வழங்கிய பரிசல் நகைச்சுவையாக பேசினார். "விருந்தினர்கள் எலாரும் இன்னும் புத்தகத்தைப் படிக்கலன்னு சொன்னங்க. அதனாலதான் வந்துட்டாங்க போலருக்கு" என்றதும் மீண்டும் சிரிப்பொலி.

நிகழ்ச்சியை
அழகாக தொகுத்து வழங்கிய திரு சுரேகா அவர்களுக்கு நன்றி. ஒரு வழியாக விழா முடித்து வெளியில் வந்து ஒரு பதிவர் சந்திப்பும் முடித்தோம்.

மேலே சொன்னப் பதிவர்கள் தவிர்த்து கார்கி, அத்திரி, வெள்ளி நிலா ஷர்புதீன், வீடு திரும்பல் மோகன் ஆகியோரையும் சந்தித்து பேசிவிட்டு நான் வீடு திரும்பினேன்.

பி.கு: நானும் இன்னும் புத்தகத்தைப் படிக்கல படிச்சிட்டு டரியல்ல விமர்சனம் பன்றேன். நடராஜன் பேசுகையில் யூத்துன்னு திரியுற கேபிளின் எழுத்துக்கள் 55வயதுக்காரரின் எழுத்து போல் இருப்பதக சொன்னார் (அனைத்து வலைப்பதிவர்களும் சிரித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்). இந்த இருப் புத்தகங்களும் எனக்குக் கிடைத்த காதலர்தின பரிசுகள்.

புகைப்பட உதவி: பலாபட்டறை சங்கர் (சுட்டாலும் போடனுமா இல்லையா)

மேலும் புகைப்படங்களுக்கு: பலாபட்டறை சங்கர்