கடவுளை மற..மனிதனை நினை..

24 February 2010

கடவுள் யாரைக் காக்கிறான்(ள்)?

7:02:00 AM Posted by புலவன் புலிகேசி , 31 comments
கடவுள் இந்த சொல்லுக்கு என்னப் பொருள் எனக் கேட்டால் பலர் சொல்வது படைத்தல், காத்தல், அழித்தல் செய்பவன்(இங்கும் ஆணாதிக்கம்) கடவுள். சரி விடயத்திற்கு வருவோம் படைத்தல் என்பது கடவுள் செய்தது என்றால் அந்தக் கடவுளை யார்ப் படைத்திருக்கக்கூடும்?

பலர் என் விவாதங்களில் கேட்டது கடவுள் இல்லாமலா இவ்வளவு ஜீவராசிகள் பிறந்திருக்கிறது? என்று. அவர்களிடம் நான் கேட்பது அக்கடவுளைப் படைத்தவனுக்கு என்னப் பெயர்? அதற்கு சிலர் கடவுளை யாரும் படைக்க முடியாது, அவனே ஆதியாய் இருக்கிறான் என்றனர். ஏன் அந்த ஆதி மனிதனாக இருக்கக் கூடாதா? இதுவரை யாரும் கண்டிராக் கடவுளை ஏன் ஆதியாக எண்ண வேண்டும்? விதண்டாவாதம் பேசாதே என விட்டு விலகியவர்கள் பலர்.


அவனது அடுத்த தொழில் காத்தல். யாரைக் காக்கின்றான்? பெரியார் உட்பட அனைவரும் கேட்டக் கேள்விதான். கடவுள் காப்பவன் என்றால் அனைத்துக் கோவில்களிலும் பூட்டு எதற்கு? இதைப் பார்க்கும் போது "கடவுள் உங்களைக் காக்கிறானா? அல்லது நீங்கள் கடவுளைக் காக்கிறீர்களா?" என சந்தேகம் எனக்கு வருது. யதேச்சையாக நிகழும் தப்பித்தல் நிகழ்வுகளுக்கு கடவுள்தான் காப்பாற்றினார் என பரைசாற்றுபவர்கள் யாரும் "ஏன் நம்மை அப்படி ஒரு ஆபத்துக்குத் தள்ளினான்?" என யோசித்ததில்லை.

அடுத்து அழித்தல். உண்மையில் மரணம் கடவுளின் செயல் என்றால், அது தீயவர்களுக்கு மட்டுமே வர வேண்டும். ஏன் நல்ல மனிதர்கள் பலருக்கு இளவயதிலேயே வர வேண்டும்? தரம் பிரித்துத் தன் வேலையை செய்யத் தெரியாத அவன் கடவுளா?

கடவுள் என்பவன் பெரும்பாலும் உபயோகப் படுத்தப் படுவது பாவமன்னிப்புக்காகத்தான். தான் செய்தது பாவம் எனத் தெரிந்தவன் அந்த கடவுளாகப் பட்டவனிடம் சென்று மன்னிப்புக் பெற்று விட்டு மன்னிக்க இவனிருக்கும் தைரியத்தில் அடுத்த பாவம் தேடிச் செல்கிறான். இப்படி தீய காரியங்களை மன்னித்து இவன் செய்யும் பாவத்திற்கு என்ன மன்னிப்பு?

இன்னும் சிலர் "நம்மைக் காகின்ற கடவுளுக்கு நன்றி செலுத்தவே கோவில்களுக்கு செல்கிறோம்" என்றனர். சரி அவர்களிடம் ஒரு கேள்வி "இதுவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனதார கடவுளுக்கு நன்றி செலுத்தியவர்கள் யாராவது இருக்கிறீர்களா?". உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள். நன்றி சொல்லும் போது அடுத்த வேண்டுகோளை வைத்து விட்டுதானே வருகிறீர்கள் (இது போலவே என்னைக் காப்பாற்று என்றாவது).

இப்படி பல கேள்விகள் என்னுள் விடை கிடைக்காமல் பல வருடங்களாக உலவிக் கொண்டிருக்கிறது. இதன் விடைக்கான தேடுதலையும் என் மனம் புரிந்து கொண்டுதான் இருக்கிறது. என் பலத் தேடல்களில் கிடைத்ததெல்லாம் நல்லுள்ளம் படைத்த அத்தனை உயிர்களும்(மனிதன் மட்டுமல்ல) கடவுள்தான்.

சங்க காலத்தில் கோவில்கள் படைக்கப் பட்டதன் நோக்கம் மக்கள் ஒன்று கூட ஒரு இடம் தேவை என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இன்று அக்கோவில்கள் பணம் சேர்க்கும் ஒரு வியாபார இடமாக மாற்றப் பட்டிருக்கிறது.

இருக்கும் இடம் விட்டு இல்லா இடம் தேடி அலையும் இந்த மனிதர்கள், கோவிலை விடுத்து மனிதத்தில் கடவுள் தேடினால்தான் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பிச்சைக் காரர்கள் போன்றோரின் வறுமை ஒழிந்து நல்ல மனம் ஓங்கி கடவுளுக்கான புரிதல் ஏற்படும்.

கடவுள் இருக்கிறது!!! கோவில்களில் அல்ல!!! நம் நற்குணங்களில்!!!

31 விவாதங்கள்:

சைவகொத்துப்பரோட்டா said...

அன்பே சிவம்.

பிரபாகர் said...

இன்னும் ஆழ்ந்து எழுத வேண்டும் தம்பி... மனிதம் தான் கடவுள்...

பிரபாகர்.

Chitra said...

காசேதான் கடவுளடா vs அன்பே கடவுள்.
காசு, அன்பு - எதில் கடவுளை, ஒரு பக்தன் காண்கிறான் என்பதை பொறுத்து இருக்கிறது.

கோவி.கண்ணன் said...

நல்ல பதிவு !

கடவுள் கோவில் பூசாரிகளைக் காக்கிறார், பூசாரிகளை படைக்கிறார், பூசாரிகளை பூசாரியை வைத்தே அழிக்கிறார்.

:)

ப்ரியமுடன் வசந்த் said...

உண்டியல் திருவோடு ரெண்டும் ஒன்றா?

ரோஸ்விக் said...

தல, நாகரிகமான கேள்விகள். இந்த பதிவிற்கு என்னால் ஒரு ஒட்டு தான் போட முடிந்தது...

வேறு ஏதேனும் வழி இருந்தால் சொல்லவும். ஒவ்வொரு வரிக்கும் ஒரு ஒட்டு போடுகிறேன். :-))

Thenammai Lakshmanan said...

கடவுள் பற்றிய தேடல் அருமை புலிகேசி.. அது ஒவ்வொருவரும் உணர்வது.. நீங்கள் உணர்ந்தது அப்படி.. நானும் அப்படி நினைத்து இருக்கிறேன் ..எல்லோரையும் அப்படி நினையுங்கள் என சொல்ல .,வலியுறுத்த முடியாது ..மேலும் இது உங்கள் பார்வைக்கு

//அன்பு அதிகமானால் யார் கால் மிதியாகவும் யாரும் கிடக்கலாம் புலிகேசி.. அது ஒரு குறியீடுதான் ..காலாகக் கையாகக் கிடப்பேனே என எழுத நினைத்தேன்.. பாலை வனத்தின் கடும் வெய்யிலில் கணவன் கருக.... கறுக... உழைக்கும் போது அவன் மனைவி அவனுக்காக என்னவானால்தான் என்ன... திருமணம் ஆனால் உங்களுக்கும் புரியும் ...உண்மையான அன்பின் முன் எதுவும் அடிமைத்தனமில்லை என்று..//

அகல்விளக்கு said...

நல்ல தேடல் நண்பா...

//கடவுள் இருக்கிறது!!! கோவில்களில் அல்ல!!! நம் நற்குணங்களில்!!!//

இதை அனைவரும் உணர்ந்தாலே போதும்... பிச்சையெடுக்க யாரும் இருக்கமாட்டார்கள்...

க.பாலாசி said...

நல்ல தேர்ந்த எழுத்து நடை...யோசிக்க வைக்கும் கேள்விகள்...ஏழையின் சிரிப்பிலும் இறைவனைக் காணலாம்...

நல்ல இடுகை...

விக்னேஷ்வரி said...

கடவுள் குறித்த உங்கள் தேடலும், புரியலும் முழுமை பெற வேண்டும் என நினைகிறேன் நான். புராணங்களில், கதைகளில் இருக்கும் உதாரணங்களை மட்டுமே கொண்டு பேசாமல் அனுபவம், அறிவு, இயற்கை இவற்றினூடும் உங்கள் பார்வை சென்றால் உண்மை புலப்படும். இதற்கான விவாதம் முடிவற்றது. கடவுள் என்ற ஒன்று இல்லாததாய் நீங்கள் நினைக்கலாம். ஆனால் மனிதனை மிஞ்சிய சக்தி என்று ஒன்று உள்ளதென நம்புகிறீர்களா... அந்த நம்பிக்கையைக் கடவுள் என்கிறோம் நாங்கள். உங்களுக்குப் பிடித்தமான பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்.

எந்தக் கோவிலுக்கும் நடையாய் நடந்து, கோரிக்கை வைக்கும் கும்பலில் நானில்லை புலிகேசி.

தர்ஷன் said...

யாரையுமில்லை வேண்டுமானால் கடவுளைக் காட்டி மற்றவரை ஏய்ப்போருக்கு அவரை காக்க வேண்டிய தேவையிருக்கலாம்.

vasu balaji said...

:)

ஜெட்லி... said...

நச்....
பூட்டு இருந்தாலே உண்டியலை தூக்கிட்டு
போய்டுறாங்க....பூட்டு இல்லனா அவ்ளோ தான்....
கடவுள் ஒன்னும் பூட்டு போட சொல்லலை
நாம தான் பூட்டுறோம்.... ஏதாவது புரியுதா??

Unknown said...

http://graysparks.blogspot.com/2008/09/blog-post.html

Radhakrishnan said...

நன்றாக இருக்கிறது. அருமையான தேடல்கள், அந்த தேடல்களில் கடவுளையும் கண்டுவிட்டீர்கள்.

வெள்ளிநிலா said...

எட்டு புள்ளி கோலம் புக்கு கிடைக்குமா!

PPattian said...

கேள்விகளே வாழ்க்கையாக!!

வால்பையனிடம் விளக்கம் கேட்டால் தெளியலாம் :) (வால்பையன் கோச்சுக்க மாட்டார்னு தெரியும்)

priyamudanprabu said...

அற்புதமான பதிவி
வரிக்கு வரி பாராட்டுகிறேன்

ஹேமா said...

அன்புதான் கடவுல்.வேறு சொல்ல என்ன இருக்கு புலவரே.

அன்புடன் நான் said...

கடவுள் கண்ண குத்தாது எங்கிற துணிச்சல்ல... எழுதுறிங்க...ம்ம்ம்ம்ம்

கடவுளே புலவரை... காப்பாற்று!!

திவ்யாஹரி said...

உண்டியலில் போடும் காசை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவினால் கூட இவ்வளவு நபர்கள் கஷ்டப் பட மாட்டார்களே நண்பா.. யோசிக்க மாட்டேன்றாங்க .. நானும் கோயிலுக்கு போவேன்.. மன நிம்மதிக்காக..

ஸ்ரீராம். said...

உங்களுக்குள் எழுந்துள்ள கேள்விகளைப் பதிவாக்கி இருக்கிறீர்கள்...

கண்மணி/kanmani said...

இது இன்று நேற்றள்ள காலம் காலமாக [கோவியார் இல்லை ;))]கேட்கப்படும் கேள்வி.இதற்கான பதிலும் அவரவர் மனநிலைக்கிச் சாதகமாகவே பெறப்படுகிறது அல்லது திணிக்கப் படுகிறது.
அன்பே சிவம்
அன்பே இயேசு
அன்பே அல்லாஹ்
அன்பே மனிதம்

Romeoboy said...

ஹி ஹி ஹி .. இதுக்கு தான் வால்பையன் கூட எல்லாம் சேரகூடாது. இரு இரு நைட் சாமீ வந்து கண்ணை குத்தும்..

நாளும் நலமே விளையட்டும் said...

கடவுள் பத்தி பேசி பேசியே நம் காலம் போய் விடும்.
" நம்பினோர் கெடுவதில்லை"
நல்லவன் துன்பம் அடைந்தால் அது முன்வினை.-

---கடவுளுக்காக கொடி தூக்குறவங்க சொல்லும் வாக்கு.
என் கருத்து என்னனா நம் முன்னால் இருக்கும் பணிகளை நிறைவாய் செய்வோம்.
அவனப் பத்தி கவலைப் படுகிறவர்கள் படட்டும்.

மதம்-கடவுள் ஒரு சங்கம். ஒரு குறிப்பிட்ட சிந்தனை உள்ளவர்கள் கூடும் இடம்-கோயில்.
சினிமாக் கொட்டகைக்கு எதுக்குப் போறாங்க?
அது மாதிரி தான் கோயிலுக்கும்.

முன்பு சினிமா, நாடகம் இல்லாத நாட்களில் கோயிலில் கூடிய கூட்டங்களுக்கு காரணம்?

kunthavai said...

நல்ல விவாதம் தான்.
ஆனால் இன்னும் கொஞ்சம் அனுபவம் கிடைத்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
அன்பினால் தான் கடவுளை உணரமுடியும்.

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை நண்பா..

கண் காணா கடவுள் தான்தோன்றியாகும்போது...

கண்ணுக்குத் தெரியும் இப்பேரண்டம் தான்தோன்றியாகாதா?

என்ன?


கடந்து மனதின் உள்ளே இருப்பவன் கடவுள்..

அந்தக் கடவுள் கல்லிலும் மண்ணிலும், செப்புத்திருமேனிகளிலும் தான் இருக்கவேண்டும் என்பதில்லை..

மனித வடிவில் கூட இருக்கலாம்.

நல்ல சிந்தனை நண்பா.

அன்புடன் மலிக்கா said...

மனிதன் தானாக பிறக்கவில்லை
மனிதனை இறைவன் படைக்கிறான்.
அல்லது, ஏதோத ஒருசக்தி படைக்கிறது என்பது உண்மைதானே!

மனிதனாக படைக்கப்பட்ட நமக்கு ஏதோ ஒருவகையில் ஓதோ ஒரு தேடல் இருக்கத்தான் செய்கிறது இதையில்லையன்று யாராலும் மறுக்கமுடியாது!
அந்த தேடலை மனிதனால் நிவர்த்திசெய்ய
முடியவில்லையென்பதால் படைத்தவனை நாடுகிறோம்..

பாவத்திற்குமேல் பாவம் செய்துவிட்டு மன்னிப்புக்கேட்டுவிட்டால் எல்லாப்பாவங்களும் தீர்ந்துவிடுவதுஇல்லை தீர்க்கப்படுவதுமில்லை
எந்த ஒரு செயலுக்கும் உடனுக்குடன் தண்டனைகள் கிடைக்கவில்லையென்பதற்காக அவனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டெதன்று அர்த்தமில்லை. பாவச்செயல்களுக்கு நிச்சயம் தண்டனையுண்டு அது எந்நேரமும் எந்நாளிலும் நடக்கலாம்.

தெய்வநம்பிக்கையில்லையெனும் பட்சத்தில் மனிதன் அத்தனைபேரும் மனிதனாக வாழ்வோமா என்பது கேள்விக்குறியே!

ஏதோ ஒன்று நம்மைமீறி செயல்படுகிறது நம்மையாட்டிவைக்கிறது என்பதை உணரும்மனிதன் தெளிவுபெற்று பாவங்களிலிருந்து விலகியிருக்க முடிவுசெய்கிறான் முயச்சி செய்கிறான் என்பது
என் கருத்து நண்பா..

இனியன் பாலாஜி said...

\\என் பலத் தேடல்களில் கிடைத்ததெல்லாம் நல்லுள்ளம் படைத்த அத்தனை உயிர்களும்(மனிதன் மட்டுமல்ல) கடவுள்தான்.
அன்பு நண்பா உனது இறைத்தேடலுக்கு எனது வாழ்த்துக்கள்\\

ஒரு சின்னத் திருத்தம் .
நல்லுள்ளம் மட்டுமல்ல.
தீயுள்ளம் கொண்டவர்கள் கூட கடவுள் தான்.

நீ எந்த முடிவெடுத்தாலும் எனக்கு மிகவும் சந்தோஷம்தான்..
ஆனால் எல்லாப் பதிவர்களுக்கும் ஒன்று மட்டும்
சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.முக்கியமாக
ஆன்மீக மற்றும் நாத்திகத்தைப்பற்றி எழுதுபவர்களுக்கு
எல்லோரும் நம்து ச்கோதரர்கள்தான். அவர்கள் மனம் புண்படும் படி மட்டும் எழுதி
விடவேண்டாம் என்பது தான் அது.உண்மையான ஆத்திகன் நிச்சயம் ஒரு நாள் நாத்திகனாகத்தான் வேண்டும். அது போல் ஒரு உண்மையான நாத்திகன் உண்மையாக இறைவனைத்
தேடினால் அவனும் ஆத்திகனாகி விடுவான்/ ஆனால் அங்கு உண்மை என்பது இருக்கவேண்டும்
நானும் உங்களைப் போலவே இறைவனைத் தேடியவன் தான்.
இறைவன் இருக்கின்றான் என்பதை நான் கண்டு பிடித்துவிட்டேன்
நன்றாக எழுதுங்கள் . இதைப் பார்த்து சில ஆன்மீக அன்பர்களும் கூட சில உண்மைகளை
உணர வேண்டும்
வாழ்த்துக்கள்
அன்பன்
இனியன் பாலாஜி

S said...

புலவரே

சாதாரணமாக கடவுள் நம்பிக்கை கொண்ட(மதம் சார்ந்த, சாராத)வர்கள் தம் நம்பிக்கை பற்றி பெருமை கொளவதில்லை. அப்படி பெருமை கொள்பவர்கள் மதவாதிகள். ஆனால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பெரும்பாலும் அதை ஒரு பெருமையாக நினைக்கிறார்கள். பேசுகிறார்கள். தான் நாத்திகன் என்று கர்வப்படுபவன் கடவுளை தேடுதல் என்பது மற்ற மதத்தைவிட என் மதம் உயர்வானது என்று எண்ணும் மதவாதிகளின் ஆய்வுக்கு ஒப்பானது.

கேள்விகள் நியாயமானவை. அதை யொட்டிய சிந்தனைகள் மேலோட்டமாக உள்ளன. தேடலில் தீவிரமும் சிந்தனைகளில் ஆழத்தையும் மனத்தில் மனிதத்தையும் இருத்தி தொடருங்கள். நிச்சயம் கடவுளை உணர்வீர்கள்.

Guna Pollachi said...

கடவுள் இருக்கிறாரா? என்ற சுஜாதா வின் பதிவை பாருங்கள் .......

http://www.scribd.com/doc/10524296/Sujatha-Kadavul-Irrukkirara

இதில் அவர் அறிவியல் யுடன் விளக்கி இருப்பார் .நன்றி