கடவுளை மற..மனிதனை நினை..

23 December 2010

பதிவர்களே வாருங்கள்!

7:16:00 AM Posted by புலவன் புலிகேசி , 2 comments


நூல் வெளியீட்டு விழா

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி,

வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர்,

சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)

விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி

பதிவர் சந்தனமுல்லை

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன்
,

பொதுச் செயலர்,

மக்கள் கலை இலக்கியக் கழகம்,

தமிழ்நாடு

பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் அனைவரும் வருக!

(விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண்: 39,40)



16 December 2010

ஐ.பி.எல் சீசன் - 4

6:53:00 AM Posted by புலவன் புலிகேசி , 2 comments



இந்தியா பத்தாகப் பிரிக்கப் படும்.
தேசத்திற்காக ஆடும் போது இல்லாத ஆர்வம்
முதலாளிகளுக்காக ஆடும் போது வரும்.

ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு முதலாளியின் கையில்
வீரர்கள் அணியும் ஜட்டி முதல்
முதலாளிகளின் விளம்பரங்கள்.

அவன் விளம்பரத்தைக் காண,
அவனுக்கு பணம் கொடுத்து
கைத் தட்டி வரவேற்க ரசிகர்கள்.

நாட்டில் நடக்கும் வேறெந்த பிரச்சினைகளிலும்
கவனம் செலுத்தாமல் தொலைக் காட்சியில்
புகுந்து களிப்புறும் நம் மக்கள்.

அதைப் பயன் படுத்தி மற்றப்
பிரச்சினைகளை மூடி மறைத்து
நீர்த்து போக செய்யும் நம் அரசு

அவன் கோடிக் கணக்கில் ஊழல்
செய்யவும் தனது வருமானத்தைப்
பெருக்கிக் கொள்ளவும்

மக்களை மடையர்களாக்கி செவ்வனே
அரசியல் செய்யும் ஒரு சித்து
விளையாட்டு இந்த ஐ.பி.எல்

சோற்றுக்கு வழியில்லாத தேசத்தில்
எதற்கடா இந்த கொழுத்த
முதலாளிகளின் கேவல விளையாட்டு(!?)


11 December 2010

குடும்பத்தோடு கொள்ளையடிக்க வாங்க!

3:00:00 PM Posted by புலவன் புலிகேசி 11 comments

சன் பிக்சர்ஸ் வழங்கும் "குடும்பத்தோடு கொள்ளையடிக்க வாங்க!"

ஹீரோ: "ஸ்பெக்ட்ரம் புகழ்" ஆ.ராசா
இணை இயக்கம்: மு.க ஸ்டாலின்
ஸ்டண்ட்: மு.க.அழகிரி
காஸ்ட்யூம்: தயாநிதி
மீடியா: கலாநிதி
இயக்கம்: கருணாநிதி
தயாரிப்பு: மக்கள் நிதி (வேற யாரு நாம தான்)

மின்ன்னஞ்சலில் வந்தது.

பி.கு: இது நண்பர் மாணவனுடையது என
ரஹீம் கஸாலி மூலம் தெரிந்தது. மாணவனுக்கு நன்றி.

09 December 2010

எது இலக்கியம் ஜெயமோகன்(!?)



அருந்ததிராய் குறித்த ஜெயமோகனின் கட்டுரையை நண்பர் கார்த்தியின் மூலம் தெரிந்து படித்து முடித்தேன். இலக்கியப் படைப்புகளை வார்த்தை ஜாலங்களாலும், மொழி விளையாட்டுகளிலும் எடுத்தியம்புகின்றவர்கள் மட்டுமே இலக்கியவாதிகள் என பிரகடணம் செய்து வைத்திருக்கிறார்கள் போலும்.

அந்த அளவு தான் ஜெயமோ சொல்லும் இலக்கியங்களும். இலக்கியங்கள் என்பவை வெறும் பொழுது போக்கு அம்சங்களாகவும், கட்டுக் கதைகளாகவும் மட்டுமே இருப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. இலக்கியம் மக்களுக்கான ஒன்றாக இருக்க வேண்டும். அது எடுத்தியம்புகின்ற விடயங்கள் மக்களின் வாழ்வியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மாறாக மக்களை மடையர்களாக்கி வைத்திருக்கக் கூடாது.

எந்த ஒரு இலக்கியமும் மக்களுடன் கலந்து, மக்களைப் புரிந்து அவர்களின் வாழ்வியல் அவலங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். மாறாக அது ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் குடை பிடிப்பதாக இருக்கக் கூடாது. மேலும் காசு பார்ப்பது மட்டுமே நோக்காகக் கொண்ட எதுவும் முழுமையான மக்கள் இலக்கியமாக இருக்க முடியாது.

இந்த ஜெமோ சொல்வது போல் வெறும் புகழையும், பணத்தையும் மட்டுமே நோக்காக கொண்டிருந்தால் அருந்ததி ராய் என்றோ அதன் உச்சத்திற்கு சென்றிருக்க முடியும். பலர் எழுதி விட்டுச் சென்ற கட்டுக் கதைகளை போல் மக்களுடன் கலவாத இலக்கியங்களைப் படைத்து உலகம் முழுதும் ஒன்று சேர்ந்து போற்றும் ஒரு மாபெரும் எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்றிருக்க முடியும்.

அவர் விரும்பியது பாமர மக்களை. அவர்களின் அவலநிலைக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தினார். அவர் ஒன்றும் உங்களைப் போல் மக்களுடன் கலவாத கற்பனைகளை எழுதிப் பெயர் வாங்கும் நோக்கம் கொண்டவரல்ல. மாறாக மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் நிலைப் பாட்டைப் புரிந்து கொண்டு அதை முதலாளித் துவம், அதிகார வர்க்கத்திற்கெதிரான எழுத்தாக மாற்றியிருக்கிறார்.

அவர் ஒன்றும் சினிமாக்களுக்கு வசனம் எழுதிப் பிழைப்பு நடத்தவில்லை. ஊடகங்கள் பெரும்பாலும் ஊமைகளாகவே இருந்திருக்கின்றன. அவைகள் ஆளும் வர்க்கம், முதலாளிகளுக்குமான் சேவைகளையே செய்து வந்திருக்கின்றன. அவற்றின் மாய பிம்பங்களில் மக்கள் மூழ்கடிக்கப் பட்டிருக்கின்றனர்.

ஊடகங்களால் பெரிது படுத்தாத உண்மை நிலைகள் பல அருந்ததி ராய் போன்றவர்களால் வெளிக்கொணரப் படுகிறது. இது போன்று ஆள்பவனுக்கு பயப்படாமல் குரல் கொடுக்க, மக்களுடன் இணைத்துக் கொள்ள உங்களுக்குத் துணிவிருக்கிறதா?

இன்று "ஐரோம் ஷர்மிளா" பற்றி யாருக்குத் தெரியும்?

நண்பர்களிடம் கேட்டால் புது நடிகையா? என்ற கேள்வி வருகிறது. அவரை இந்த ஊடகங்கள் இன்றும் வெளிக் காட்டாமல், அவரது நியாயமான போராட்டத்திற்கு ஆதரவளிக்காமல் ஆளும் வர்க்கங்களுக்கு குடை பிடித்து வருகிறது. போராட்டங்களில் இணைந்து கொள்ளாமல் போராடுபவர்களை கேவலப் படுத்தும் உங்களுக்கு "ஐரோம் ஷர்மிளா" குறித்து தெரியாதா? அவரைப் பற்றி எதாவது எழுதியிருக்கிறீர்களா?

நக்சல்பாரி பிரச்சினை, காஷ்மீர் போராட்டங்கள் குறித்த உங்களின் கருத்துக்கள் தெள்ளத் தெளிவாக உங்களின் பதிவில் தெரிகிறது. அவர்களின் போராட்டங்களைக் கொச்சைப் படுத்தியிருக்கிறீர்கள். ஒடுக்கப் பட்ட ஏழை வர்க்கத்தின் போராட்டம் வேதாந்தாவுக்கு எதிரானது. அவர்களைத் துப்பாக்கியேந்தும் சூழலுக்கு கொண்டு சென்று நிறுத்தியது முதலாளிகளுக்கு கொடி பிடிக்கும் அரசாங்கம்.

அதனை எதிர்த்து தங்களின் நியாயத்திற்காக போராடி வருபவர்களுக்கு சூட்டப் பட்ட பெயர் தீவிரவாதிகள். அதற்கு ஒத்து ஊத உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் வேறு.

கஷ்மீரில் நடப்பது என்ன ஜாதிக் கலவரமா? மக்கள் ஒன்று கூடி நடத்தும் போராட்டம் அது. அந்த மக்களுடன் கலந்து பின்னர் அவர்களின் நிலைப்பாட்டை எடுத்து சொன்னவர் இந்த அருந்ததி ராய். அதனால் அவர் மீது வழக்குப் பதிவு. அது போன்று மக்களின் நிலைப் பாட்டை நேரடியாக ஆய்ந்து எடுத்து சொல்லவும் அதனால் வரும் எதிர் விளைவுகளுக்கு அஞ்சாமலும் எழுத நீங்கள் தயாரா?

மக்களைத் திரட்டிப் போராடினால் மட்டுமே எதையும் பெற முடியும் என்ற உங்களின் நிலைப் பாட்டிற்கு பாராட்டுகள். ஆனால் அவர்களை எப்படி திரட்ட முடியும்? என உங்களால் சொல்ல முடியுமா?

மக்களுக்கு உண்மைகளை ஒளித்து வைத்து மேம்போக்காக சொல்லும் ஊடகங்கள் தானே நம்மிடம் இருப்பவை? மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லிப் புரிய வைக்க வேண்டிய கடமை உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு இல்லையா? இலக்கியவாதிகள் என்பவர்கள் மக்களுடன் இருக்க வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்கு பயந்து, அடி பணிந்து இருக்கக் கூடாது.

இலக்கியம் என்பதும் மக்களின் உணர்வுகளை கிளர்ந்தெழ செய்யுமளவில் இருக்க வேண்டும். அநீதிகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். சமூக அவலங்களுக்கு பாரபட்சமின்றி குரல் கொடுப்பதாக இருக்க வேண்டும். நீங்கள் சொல்வதெல்லாம் இலக்கியமாகாது ஜெயமோ.

அருந்ததி ராய் குறித்த ஜெமோ பதிவு





06 December 2010

நந்தலாலா - மிஸ்கினின் திமிர்

7:41:00 AM Posted by புலவன் புலிகேசி , , 11 comments




நந்தலாலா படம் குறித்து பலவகையான விமர்சனங்கள் வெளி வந்த வண்ணமுள்ளன. அதில் பெரும்பாலும் கிகுஜிரோவின் காப்பி என்பது தான். நான் கிகுஜிரோ இனிமேல் தான் பார்க்கப் போகிறேன். அது குறித்து இன்னொரு பதிவில் விவாதிக்கலாம். இப்போது நான் பார்த்த நந்தலாலா குறித்து விவாதிக்கலாம்.

ஒரு சிறுவன் தன்னை விட்டுப் பிரிந்த தாயைத் தேடிப் புறப்படுகிறான். அதே நேரத்தில் மனநல காப்பகத்திலிருந்து தப்பி தன் தாயை பார்க்கப் புறப்படுகிறான் இன்னொருவன். இருவரின் ஒன்று சேர்ந்த பயணம் தான் படத்தின் கதை.

ஆரம்பக் காட்சியில் சிறுவன் அகியின் வீட்டு வேலைக்காரி திருப்பித் தருவதாக கூறி ஏமாற்றி சிறுவனிடம் பணம் பறிப்பது போல் ஒரு காட்சி. வேலைக்காரிகள் என்றால் அப்படித்தான் என்பது மிஸ்கினின் என்னமோ என்னவோ? ஆரம்பமே ஒரு கேவலமான சித்தரிப்புடன் தொடங்குகிறது.

அதன் பின்னர் சிறுவன் அகியுடன், பாஸ்கர் மணியும் இணைகிறார். இருவரின் நோக்கமும் தாயை சென்றடைவது என இருப்பதால் ஒன்றாக பயணிக்கத் தொடங்குகிறார்கள்.

அப்படி செல்கையில் வழியில் ஒருவர் பற்றி ஒருவர் பேசத் தொடங்குகையில் சிறுவன் பாஸ்கர் மணியின் அம்மா குறித்து கேட்கிறான். அதற்கு பாஸ்கர் மணி "அந்த சிறுக்கி நான் இந்த ஒயரம் இருக்குறப்ப ஆஸ்பத்திரில கொண்டு வந்து உட்டுட்டு போய்ட்டா!" என கடுமையாக தாயை சாடுகிறான். அடுத்து அப்பா குறித்து கேட்கையில் "அவன் எங்கயோ ஓடிப் போய்ட்டான்" என நகைச்சுவையுடன் பதிலளிக்கிறார்.

விட்டுப் போன தாயை "கன்னத்தில் எண்ணை தடவி வைடி சிறுக்கி வந்து அறையுறேன்" என கோபம் காட்டும் பாஸ்கர் மணி ஓடிப் போன தந்தைக் குறித்து எந்தக் கோபமும் காட்டாமல் "எதுக்காக ஓடிப் போனான்னே தெரியலன்னு" சிரித்துக் கொண்டே சொல்கிறான்.

சமூகத்தில் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். குடும்பத்தை விட்டு பொறுப்புகளைத் தட்டிக் கழித்து விட்டு தப்பி செல்லலாம் அதை இந்த ஆணாதிக்க சமூகம் பெரிது படுத்தாது எனப்தை தன்னுடைய ஆணாதிக்கத்தின் மூலம் எடுத்துரைக்கிறார் மிஸ்கின். பெண் செய்தால் அது கொடுமையான குற்றமாகவும், ஆண் செய்தால் அது சாதாரன தவறாகவும் பாவிக்கும் ஆணாதிக்க மனோபாவத்தில் மிஸ்கின் அமைத்திருக்கும் காட்சி தான் அது.

தன்னை மென்டல் என்று சொன்ன ஆட்டோக்காரரை போட்டு புரட்டிய்ர்டுக்கிறார் பாஸ்கர் மணி. இறுதியில் சிறுவன் "போடா மென்டல்" என்று சொல்லும் போது கோபப் பட்டு அழுகிறார். அப்படி இருக்கும் ஒருவனிடம் சாதிக் கலவரத்தில் காப்பாற்றப் பட்ட ஒரு பெண் "அண்ணே நீங்க எந்த சாதிண்ணே!?" என கேட்கையில் "மென்டல்" என கூறுவது ஒப்புக் கொள்ளக் கூடியதாக இல்லை. ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்குவதற்காக சேர்க்கப் பட்ட தமிழ் சினிமா மசாலா ஃபார்முலா தான் அந்தக் காட்சி.

ஒரு வழியாக அன்னவயல் வந்து சேர்கின்றனர் இருவரும். அங்கு அகியின் அம்மாவை சந்திக்கிறான் பாஸ்கர் மணி. அகியின் அம்மாவுக்கு வேறொரு திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை இருப்பதாகக் காட்டப் படுகிறது. பாஸ்கர் மணியின் காலில் விழுந்து கதறி அழுகிறாள் அந்தப் பெண். அவரை அறைந்து விடுகிறான் பாஸ்கர் மணி.

அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணை விட்டு விட்டால் இன்னொரு திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை விட்டு விட்டால் அவன் இன்னொன்று அல்ல எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இது போன்று பெண்ணை அடிமையாக்கி வைத்திருக்கும் கலாச்சாரத்திற்கு கொடிப் பிடித்திருக்கிறார் இயக்குனர் மிஸ்கின்.



ஒரு விபச்சார பெண் பாஸ்கர் மணியிடம் கேட்கிறாள் "அகியோட அம்மா எங்க?" என்று. அதற்கு பாஸ்கர் மணியின் பதில் "அவ நல்லவ இல்ல! அம்மால்லாம் நல்லவ இல்ல! அம்மா கெட்டது! அம்மான்னா குப்ப! குப்ப!" என பெண்ணை, தாயைக் கேவலப் படுத்தும் வசனம் பேசுகிறான்.

அந்தப் பெண் இன்னொரு திருமணம் செய்து கொண்டாள். அவளுக்கு அந்த உரிமை இல்லையா? அப்படியே மகனை விட்டுச் சென்றது தவறு என வாதிட்டாலும் விட்டுச்சென்ற அப்பாவிற்கு அந்தக் கடமை அவசியமில்லையா? விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணை உடன் இருத்திக் கொள்ளும் பாஸ்கர் மணிக்கு அகியின் அம்மா இன்னொரு திருமணம் செய்தது தவறாகத் தெரிகிறது. அது முழுக்க முழுக்க ஆணாதிக்க சிந்தனை என்பதில் துளியும் சந்தேகமில்லை.

மேலும் சித்தரிக்கப் பட்ட அந்த விபச்சார பெண்ணின் பாத்திரம் தன்னை ஒரு முற்போக்கு சிந்தனையாளன் எனக் காட்டிக் கொண்டு கைத்தட்டல் வாங்க மிஸ்கினால் அமைக்கப் பட்ட போலி முற்போக்குத் தனமே அன்றி வேறில்லை. படத்தில் இத்தனை ஆணாதிக்கங்களையும் ஒளித்து வைத்து விட்டு மேலோட்டமாக ரசிகர்களுக்கு நல்லப் படம் போல் காட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் நந்தலாலா - மிஸ்கினின் ஆணாதிக்க மனதின் வெளிப்பாடு.

மகள் நேயாவின் நந்தலாலா குறித்தப் பார்வை மிக அருமை: தாய்மைச் சுமை