கடவுளை மற..மனிதனை நினை..

09 December 2010

எது இலக்கியம் ஜெயமோகன்(!?)



அருந்ததிராய் குறித்த ஜெயமோகனின் கட்டுரையை நண்பர் கார்த்தியின் மூலம் தெரிந்து படித்து முடித்தேன். இலக்கியப் படைப்புகளை வார்த்தை ஜாலங்களாலும், மொழி விளையாட்டுகளிலும் எடுத்தியம்புகின்றவர்கள் மட்டுமே இலக்கியவாதிகள் என பிரகடணம் செய்து வைத்திருக்கிறார்கள் போலும்.

அந்த அளவு தான் ஜெயமோ சொல்லும் இலக்கியங்களும். இலக்கியங்கள் என்பவை வெறும் பொழுது போக்கு அம்சங்களாகவும், கட்டுக் கதைகளாகவும் மட்டுமே இருப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. இலக்கியம் மக்களுக்கான ஒன்றாக இருக்க வேண்டும். அது எடுத்தியம்புகின்ற விடயங்கள் மக்களின் வாழ்வியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மாறாக மக்களை மடையர்களாக்கி வைத்திருக்கக் கூடாது.

எந்த ஒரு இலக்கியமும் மக்களுடன் கலந்து, மக்களைப் புரிந்து அவர்களின் வாழ்வியல் அவலங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். மாறாக அது ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் குடை பிடிப்பதாக இருக்கக் கூடாது. மேலும் காசு பார்ப்பது மட்டுமே நோக்காகக் கொண்ட எதுவும் முழுமையான மக்கள் இலக்கியமாக இருக்க முடியாது.

இந்த ஜெமோ சொல்வது போல் வெறும் புகழையும், பணத்தையும் மட்டுமே நோக்காக கொண்டிருந்தால் அருந்ததி ராய் என்றோ அதன் உச்சத்திற்கு சென்றிருக்க முடியும். பலர் எழுதி விட்டுச் சென்ற கட்டுக் கதைகளை போல் மக்களுடன் கலவாத இலக்கியங்களைப் படைத்து உலகம் முழுதும் ஒன்று சேர்ந்து போற்றும் ஒரு மாபெரும் எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்றிருக்க முடியும்.

அவர் விரும்பியது பாமர மக்களை. அவர்களின் அவலநிலைக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தினார். அவர் ஒன்றும் உங்களைப் போல் மக்களுடன் கலவாத கற்பனைகளை எழுதிப் பெயர் வாங்கும் நோக்கம் கொண்டவரல்ல. மாறாக மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் நிலைப் பாட்டைப் புரிந்து கொண்டு அதை முதலாளித் துவம், அதிகார வர்க்கத்திற்கெதிரான எழுத்தாக மாற்றியிருக்கிறார்.

அவர் ஒன்றும் சினிமாக்களுக்கு வசனம் எழுதிப் பிழைப்பு நடத்தவில்லை. ஊடகங்கள் பெரும்பாலும் ஊமைகளாகவே இருந்திருக்கின்றன. அவைகள் ஆளும் வர்க்கம், முதலாளிகளுக்குமான் சேவைகளையே செய்து வந்திருக்கின்றன. அவற்றின் மாய பிம்பங்களில் மக்கள் மூழ்கடிக்கப் பட்டிருக்கின்றனர்.

ஊடகங்களால் பெரிது படுத்தாத உண்மை நிலைகள் பல அருந்ததி ராய் போன்றவர்களால் வெளிக்கொணரப் படுகிறது. இது போன்று ஆள்பவனுக்கு பயப்படாமல் குரல் கொடுக்க, மக்களுடன் இணைத்துக் கொள்ள உங்களுக்குத் துணிவிருக்கிறதா?

இன்று "ஐரோம் ஷர்மிளா" பற்றி யாருக்குத் தெரியும்?

நண்பர்களிடம் கேட்டால் புது நடிகையா? என்ற கேள்வி வருகிறது. அவரை இந்த ஊடகங்கள் இன்றும் வெளிக் காட்டாமல், அவரது நியாயமான போராட்டத்திற்கு ஆதரவளிக்காமல் ஆளும் வர்க்கங்களுக்கு குடை பிடித்து வருகிறது. போராட்டங்களில் இணைந்து கொள்ளாமல் போராடுபவர்களை கேவலப் படுத்தும் உங்களுக்கு "ஐரோம் ஷர்மிளா" குறித்து தெரியாதா? அவரைப் பற்றி எதாவது எழுதியிருக்கிறீர்களா?

நக்சல்பாரி பிரச்சினை, காஷ்மீர் போராட்டங்கள் குறித்த உங்களின் கருத்துக்கள் தெள்ளத் தெளிவாக உங்களின் பதிவில் தெரிகிறது. அவர்களின் போராட்டங்களைக் கொச்சைப் படுத்தியிருக்கிறீர்கள். ஒடுக்கப் பட்ட ஏழை வர்க்கத்தின் போராட்டம் வேதாந்தாவுக்கு எதிரானது. அவர்களைத் துப்பாக்கியேந்தும் சூழலுக்கு கொண்டு சென்று நிறுத்தியது முதலாளிகளுக்கு கொடி பிடிக்கும் அரசாங்கம்.

அதனை எதிர்த்து தங்களின் நியாயத்திற்காக போராடி வருபவர்களுக்கு சூட்டப் பட்ட பெயர் தீவிரவாதிகள். அதற்கு ஒத்து ஊத உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் வேறு.

கஷ்மீரில் நடப்பது என்ன ஜாதிக் கலவரமா? மக்கள் ஒன்று கூடி நடத்தும் போராட்டம் அது. அந்த மக்களுடன் கலந்து பின்னர் அவர்களின் நிலைப்பாட்டை எடுத்து சொன்னவர் இந்த அருந்ததி ராய். அதனால் அவர் மீது வழக்குப் பதிவு. அது போன்று மக்களின் நிலைப் பாட்டை நேரடியாக ஆய்ந்து எடுத்து சொல்லவும் அதனால் வரும் எதிர் விளைவுகளுக்கு அஞ்சாமலும் எழுத நீங்கள் தயாரா?

மக்களைத் திரட்டிப் போராடினால் மட்டுமே எதையும் பெற முடியும் என்ற உங்களின் நிலைப் பாட்டிற்கு பாராட்டுகள். ஆனால் அவர்களை எப்படி திரட்ட முடியும்? என உங்களால் சொல்ல முடியுமா?

மக்களுக்கு உண்மைகளை ஒளித்து வைத்து மேம்போக்காக சொல்லும் ஊடகங்கள் தானே நம்மிடம் இருப்பவை? மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லிப் புரிய வைக்க வேண்டிய கடமை உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு இல்லையா? இலக்கியவாதிகள் என்பவர்கள் மக்களுடன் இருக்க வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்கு பயந்து, அடி பணிந்து இருக்கக் கூடாது.

இலக்கியம் என்பதும் மக்களின் உணர்வுகளை கிளர்ந்தெழ செய்யுமளவில் இருக்க வேண்டும். அநீதிகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். சமூக அவலங்களுக்கு பாரபட்சமின்றி குரல் கொடுப்பதாக இருக்க வேண்டும். நீங்கள் சொல்வதெல்லாம் இலக்கியமாகாது ஜெயமோ.

அருந்ததி ராய் குறித்த ஜெமோ பதிவு





4 விவாதங்கள்:

Thenammai Lakshmanan said...

புலிகேசி ஜெமோ இலக்கியவாதிதான் .. அரசியல்வாதி அல்ல..

புலவன் புலிகேசி said...

//தேனம்மை லெக்ஷ்மணன் says:
புலிகேசி ஜெமோ இலக்கியவாதிதான் .. அரசியல்வாதி அல்ல..//

அருந்ததி ராய் மட்டும் என்ன அரசியல்வாதியா? மக்களுக்கான எழுத்து அருந்ததியுடையது. வெற்றெழுத்து அல்ல.

எண்ணங்கள் 13189034291840215795 said...

இலக்கியவாதிகள் என்பவர்கள் மக்களுடன் இருக்க வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்கு பயந்து, அடி பணிந்து இருக்கக் கூடாது.//


சரியே.. ஆனா கனவுதான்.. அருந்ததிராய் போன்ற சிலர் வந்தாலும் எதிர்ப்புகள் எத்தனை?.

raja said...

கருணாநிதியை விட மிக கேடுகெட்ட அரசியல்வாதி ஜெயமோகன்..அதுவும் ஆர்.எஸ்.எஸ். அரசியல்வாதி.. ஒரு பெண் எழுத்தாளரைப்பார்த்து குருவி மண்டை என்கிறார்..(இதை நீங்கள் ஆமோத்திக்கிறீர்களா தேனம்மை) உடல் ரீதியாக ஒரு பெண்ணை விமர்சிப்பதை.. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழை ஜெமோ. இவரைப்பற்றி எந்த எதிர்வினையும் கொடுத்து நாம் அவரை வெளிச்சப்படுத்தவேண்டாம்.