கடவுளை மற..மனிதனை நினை..

30 October 2009

எந்த குப்பனும் சுப்பனும் இதை செய்வான்

8:25:00 AM Posted by புலவன் புலிகேசி 16 comments

குப்பனும் சுப்பனும் பூஞ்சோலை கிராமத்தின் விவசாயிகள். அவர்களைப் போல் உழைப்பதற்கு எவனாலும் முடியாது என்பது அந்த ஊராரின் கருத்து. அதுவே அவனின் முதலாளி வெங்கடாச்சலத்தின் கருத்தும் கூட....

வெங்கடாச்சலம் ஆச்சாரம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டிருக்கும் குடும்பத்தை சேர்ந்தவன். குப்பனோ சுப்பனோ வயல் வேலைகளை முடித்து தண்ணீர் கேட்டு வந்தால் கூட அவர்களுக்கென்று ஒரு தேங்காய் கூட்டில் தான் தண்ணீர் ஊற்றுவார்.

பின்னர் அவர்கள் உட்கார்ந்த இடம் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படும். வெங்கடாச்சலம் வீட்டு நாய்க்கு கூட குப்பனயோ சுப்பனையோ தொட அனுமதி இல்லை. நாய்க்கும் ஆச்சாரமாம்.?



ஒரு நாள் குப்பனின் குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது வழியில் வந்த வாகனத்தில் அடிப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. வெங்கடாச்சலத்திடம் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு சென்ற குப்பனிடம் இருந்த இரண்டு மாடுகளையும் வாங்கிக் கொண்டுதான் பணம் கொடுத்தான்.

குழந்தை உயிர்த் தப்பியது. வழக்கம் போல் குப்பனும் சுப்பனும் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். அப்போது வயலுக்கு வந்த வெங்கடாச்சலம் குப்பனிடம், "டேய் குப்பா நீ வாங்குனப் பணத்துக்கு அந்த ரெண்டு மாடும் பத்தாதுடா...அதனால இன்னும் ஒரு மாசத்துக்கு சம்பளம் வாங்காம வேல செய்யணும் என்ன?" என்றார். பதில் பேச முடியாமல் நின்றான் குப்பன்.

சொல்லி விட்டு அருகிலிருந்த மரப் பாலத்தின் வழியே செல்லும் பொழுது பாலம் இடிந்து விழுந்து தண்ணீரில் சிக்கிகொன்டான் வெங்கடாச்சலம். குப்பனும் சுப்பனும் பதறி அடித்துக் கொண்டு வெங்கடாச்சலத்தை கரைக்கு கொண்டு வந்து அவர்களுக்குத் தெரிந்த முதலுதவி செய்துக் காப்பாற்றினார்.



வெங்கடாச்சலத்தை வண்டிக் கட்டி கொண்டு வீட்டில் கொண்டு சேர்த்து விட்டு வழக்கம் போல் வாசலில் நின்றனர் இருவரும். வண்டியிலிருந்து இறங்கிய வெங்கடாச்சலம் தன மனைவியிடம் "ஏ புள்ள செல்வி ஒரு அண்டால தண்ணி கொண்டு வாடி தீட்டாயிப் போச்சு" என்றதும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் சுரீர் என்றது.

இருக்கிறானா இல்லையா எனக் கூடத் தெரியாமல் கடவுளை நம்பும் இவர்களை விட உழைப்பையும் மனிதனையும் மட்டும் நம்பும் நம்மைப் போன்றவர்கள்தான் உண்மையில் உயர்ந்தவர்கள் என நினைத்துக் கொண்டு வீடு திரும்பினர்.

பி.கு: உயிர் காக்க கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டான் வெங்கடாச்சலம். தன உயிரைப் பொருட்படுத்தாமல் அவனைக் காப்பாற்றினர் குப்பனும் சுப்பனும்.

"அறிவியலில் சாதனைப் புரிந்து விட்டு எந்த குப்பனும் சுப்பனும் இத செய்ய முடியுமான்னு"

கேக்குறவன் இவுங்க செஞ்சத செய்ய மாட்டான். அறிவியல் கண்டுபிடிப்பை விட இந்த குப்பனும் சுப்பனும் தான் எனக்கு பெருசாத் தெரியுறாங்க.......

28 October 2009

தெய்வம் முதியோர் இல்லத்தில்........பகுத்தறிவு (பகுதி-2)

9:12:00 AM Posted by புலவன் புலிகேசி 20 comments
*வியாபார உலகில் பெரியவன். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தைக் கோவில் உண்டியலில் செலுத்தினான்.

பாதிக்கப் பட்டது ஏழை மக்கள்.



*தீமிதித் திருவிழாவில் மற்றவனைப் போல் ஓடத் தெரியாதவன் காலில் புண். 

தெய்வக்குத்தமாம்.....??

*பத்தாம் வகுப்புத் தேர்வுக்குப் படிக்காதவன் பிள்ளையார் கோவிலில் சென்று தேர்வு எண்ணை எழுதினான். 

தேர்விலும் அதை மட்டும் தான் எழுதினான்.

*எதிர் வீட்டுக் குழந்தை அடித்த பந்து மேலேப் பட்டதால் வெட்டுக்குத்து சண்டை. கோவிலில் நேர்த்திக்கடனாக தலையில் தேங்காய் உடைப்பு. 

குழந்தையும் தெய்வமும்..???


*வியாபாரத்தில் வெற்றி. கோவிலில் நேர்த்திக்கடன். 

தெய்வம் (தாய்) முதியோர் இல்லத்தில்......

26 October 2009

தெய்வக் குத்தமாகிப் போச்சே........??? பகுதி-1

4:00:00 PM Posted by புலவன் புலிகேசி 44 comments

* வண்ணான் தொட்டால் தீட்டு என்றவன் திருநாளில் புது சட்டை அணிந்தான்.

சட்டையைத் தானே உருவாக்கினானோ???

* சாணியக் கொடுத்து சந்தனம் என்றால் ஒப்புக்கொள்ள மறுத்தவன் கல்லைக் காட்டிக் கடவுள் என்றதும் ஒப்புக்கொண்டான்.


* பொங்கல் திருநாளில் பானையில் ஊற்றப்பட்ட கோமியத்தை (மாட்டுக் கழிவு) பார்த்தக் குழந்தை ஏனென்று கேட்டது. சம்பிரதாயம்
என்றாள் அதன் விபரம் தெரியாத அம்மா.....

மாட்டுக் கழிவு மனிதனுக்கு உணவா???

* மாட்டுத் தொழுவத்திலிருந்து வெளியேறி கையில் ஒட்டியிருந்த மாட்டுசானத்தைக் கழுவி சுத்தம் செய்து விட்டு சாமி அறைக்கு வந்தவன்....

மாட்டுச்சாண சாம்பலை எடுத்து நெற்றியில் பூசி வாயில் போட்டுக் கொண்டான்.
* 6 வயது குழந்தைக்கு கால் நடக்க முடியாமல் போன போது தெய்வக் குத்தம் என்று சொல்லி குழந்தைக்கு மொட்டைப் போட்டான்.

தெய்வம் போலியோ சொட்டு மருந்து எனத் தெரியாதவன்.

24 October 2009

வணக்கத்திற்குரிய இராணுவவீரன்.!!!!

8:16:00 AM Posted by புலவன் புலிகேசி 26 comments
அவன் பெயர் முருகன். மயிலாடுதுறையில் பிறந்து B.Sc கணிதம் முடித்து தேசத்தின் மீதுள்ளப் பற்றினால் இராணுவ வீரனானான். அவனுக்கு தமிழழகி என்ற பெண்ணுடன் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் ஆனது.

Sep:25 அன்று காலை அவன் கல்கத்தா இராணுவத் தளத்தில் பயிற்சியில் இருந்த போது தான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. அவன் தந்தை பேசினார். "டேய் முருகா உனக்கு மவன் பொறந்துருக்காண்டா.." என்றார்.

பதில் பேசும் முன் அவன் உயர் அதிகாரியின் குரல் "All Cadets Alert" பதில் பேசாமல் வைத்துவிட்டு அவர் முன் சென்று நின்றான்.சென்னையிலுள்ள "தமிழ்மண் மருத்துவமனையில்" தீவிரவாதிகள் ஊடுருவி மக்களை சிறைபிடித்த்துள்ளதாகவும் உடனே புறப்படுமாறும் உத்தரவிட்டார்.

தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் பிரசவப் பகுதியிலிருந்த கடைசித் தீவிரவாதியை சுட்டுக் கொன்றுவிட்டு எந்த மனிதச் சேதமும் இன்றி தன் மக்களைக் காப்பாற்றிய பெருமிதத்தோடு சென்னை இராணுவத் தளம் வந்தபோது சட்டென்று நினைவுத் திரும்பியவனாய் ஓடினான்.

தொலைபேசியை எடுத்துத் தந்தையை அழைத்து "எந்த மருத்துவமனை" என்றான். தந்தைப் பதற்றத்துடன் "சென்னைத் தமிழ்மண் மருத்துவமனை" என்றதும் மீண்டும் அதே அதிகாரியின் குரல் "All Cadets Alert".

மும்பையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் உடனேப் புறப்படுங்கள் என்று உத்தரவிட்டார். எப்படியாவது குழந்தையையும் தமிழழகியையும் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த முருகன் நேரே அந்த உயர் அதிகாரியை நோக்கிச் சென்று.....

சல்யுட் அடித்துவிட்டு நேராகச் சென்று இராணுவ விமானத்தில் ஏறி மும்பைப் புறப்பட்டுச் சென்றான்.

வீர வணக்கம்..




இந்தப் பதிவினை நம் தேசத்திற்காக இன்னுயிர் நீத்த மற்றும் போராடிக் கொண்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...உங்கள் வாக்குகளையும் கருத்துரைகளையும் தெரிவியுங்கள்....

22 October 2009

ஏழை சிறுவனுக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு.....

9:06:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments
இன்று (23-அக்-2009) பிறந்த நாள் காணும் எமது நண்பர் "வண்ணத்துப்பூசியாருக்கு" பதிவுலகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை சைதாப்பேட்டைதான் இந்த கதையின் களம்....

இரண்டு சிறுவர்கள் சச்சின், சாமிநாதன், இவர்கள் இருவரும் மட்டைப்பந்து விளையாட்டின் மூலம் நெருங்கிய் நண்பர்கள்.

சச்சின் ஒரு மிகப்பெரும் பணக்கார வீட்டு பிள்ளை. அவன் தந்தை ஒரு தொழில் அதிபர். சாமிநாதன் ஒரு ரிக்சா ஓட்டும் அன்னாடங்காச்சியின் பிள்ளை.

இந்த இரு சிறுவர்களும் முதன்முதலில் சந்தித்தது சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் விளையாட்டுத் திடலில்தான். இருவருக்கும் மட்டைப்பந்து மட்டும் தான் தெரிந்த விளையாட்டு. இதன் மூலம் இவ்விருவரும் நண்பர்களானார்கள்.

என்னதான் சச்சின் அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டாலும் அவன் வீட்டிற்குள் வர சாமிநாதனுக்கு அனுமதி கிடையாது. ஏனெனில் அவன் தந்தைக்கு சாமிநாதனைப் பிடிக்காது (ஏழை).

20-10-2009
அன்றுதான் சச்சினுக்கு 8 வது பிறந்த நாள். பெரும் தொழில் அதிபர்களுக்கெல்லாம் அழைப்பு பறந்தது. சச்சினுக்கு சாமிநாதனை கூப்பிட வேண்டும் என ஆசை. ஆனால் முடியவில்லை.

பிறந்தநாள் விழாத் தொடங்கியது. அனைவரும் சச்சினின் அப்பாவுக்காக காத்திருந்த பொழுதுதான் அந்த அழைபேசி அழைப்பு வந்தது. சச்சின்-ன் தந்தை தொழில் ரீதியான கலந்தாய்வில் இருப்பதால் தன்னால் வர இயலவில்லை என்று கூறினார்.

சச்சின் அழ ஆரம்பித்து விட்டான். ஒரு வழியாக அவனை சமாதானப் படுத்தி இனிப்புகளை வந்தவர்களுக்கு அவனது கைகளால் வெட்டி பரிமாற்றமும் முடிந்தது. சச்சினுக்கு அப்போதுதான் தோன்றியது அந்த இனிப்புகளில் கொஞ்சமும் தனது சென்ற ஆண்டின் பிறந்த நாள் ஆடையையும் தன்அம்மாவிடம் அனுமதி பெற்று சாமிநாதனுக்கு கொடுத்தான்.


அன்றுதான் சாமிநாதனுக்கும் பிறந்தநாள் என்பது சச்சினுக்குத் தெரியும். சச்சின் கொடுத்த புதிய ஆடையை (சாமிநாதனுக்கு புதிதுதானே!!!) அணிந்து கொண்டு அவன் கொடுத்த இனிப்பு பண்டத்தை தன் தாய்க்கும் தந்தைக்கும் கொடுத்த போது சாமிநாதனுக்கு கிடைத்தது ஒரு விலை மதிக்க முடியாத பரிசு.

சச்சின் அதிர்ந்து போனான். இவ்வளவு வசதி இருந்தும் தனக்குக் கிடைக்காத அந்த பரிசு எந்த வசதியும் இல்லாத தன் நண்பனுக்கு கிடைத்ததைப் பார்த்து பொறாமையும், பெறுமையும் கொண்டான்.

அப்படி என்ன விலையுயர்ந்த பரிசு தெரியுமா? இனிப்பை கொடுத்தவுடன் ஆனந்த கண்ணீருடன் அந்த ஏழைப் பெற்றோரால் கொடுக்க முடிந்த விலைமதிக்க முடியாத முத்தம்.

எது கிடைத்தாலும் அதை பெரிதாக எண்ணும் எண்ணம் ஏழைகளிடம் உண்டு. எவ்வளவு விலை உயர்ந்த பொருள் கிடைத்தாலும் அதை விட பெரிதாக கிடைக்காதா எனத் தேடித் தேடியே பாசத்தையும் வாழ்க்கையையும் அனுபவிக்க முடியாமல் தவிப்பவன் பணவெறிப் பிடித்தவன்.

20 October 2009

பிச்சை எடுத்தாலும் பெருமை கொள்வோம்.......

8:16:00 PM Posted by புலவன் புலிகேசி 25 comments

தெருத்தெருவாய் திரிந்து கத்திக் கூச்சலிட்டு
பெற்ற பிச்சையை தான் மட்டும் உண்ணாமல்
தன சகாக்களையும் அழைத்து பகிர்ந்துக் கொள்ளும் 
காக்கை.....  

மனிதனிடம் குறைந்து விட்ட குணம். 
நம்மிடம் இருக்கும் ஒன்றை இல்லாதவனிடம் 
பகிர்ந்து உண்ண காக்கையிடம் கற்றுக் 
கொள்வதால் தான் அதை நம் 
முன்னோர்கள் என்று சொல்லியுள்ளனரோ???

12 October 2009

போக்குவரத்து காவலருக்கு லஞ்சம் கொடுத்து கற்றுக் கொண்டது....!!

12:22:00 PM Posted by புலவன் புலிகேசி 21 comments

ஒரு நாள் தி.நகர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பர்கிட் சாலையில் உள்ள ஒரு பேருந்து பயணசீட்டு அலுவலகம் சென்று திரும்பிய போது நடந்த ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.....

அன்று இரவு 10 மணி. நானும் என் நண்பனும் எனது இரு சக்கர வாகனத்தில் பயணசீட்டு முன்பதிவு செய்ய சென்றோம். பதிவு செய்து முடித்து திரும்பவந்து வாகனத்தை எடுத்து திருப்பி சில தொலைவு வந்த பிறகுதான் உணர்ந்தேன் அது "ஒரு வழிப் பாதை" என்றும் நான் தவறான வழியில் செல்கிறேன் என்பதையும்.

வந்தான் ஒரு போக்குவரத்துக் காவலன் (?). எனது வாகனத்தை ஓரம் கட்டி வழக்கம் போல் வாகனம் சம்பந்தமான காகிதங்களை சரி பார்த்துவிட்டுத் தொடங்கினான் பேரத்தை.

அவன் பேரம் 100 ரூபாயில் தொடங்கியது. நான் என்னிடம் அவ்வளவு இல்லை என்றதும் 50௦ கொடு என்றான். என்னிடம் 20 தான் உள்ளது என்றதும் அதையாவது கொடு என்று பிச்சைகாரனை விட கேவலமாக வாங்கிக் கொண்டான் அந்த காவல்காரன் (திருடன்)?

எனக்கு அந்த காவல்காரனை விட என் மீதுதான் கோபம் அதிகமாக வந்தது. நான் ஏன் போக்குவரத்து விதிமுறைகளை மீற வேண்டும்? அப்படி மீறிய நான் அதற்குரிய அபராதத்தை செலுத்த முற்படாமல் லஞ்சம் கொடுக்க முன்வந்தது ஏன்? இந்த தவறுக்கு முழுக் காரணமும் நான்தான் என உணர்ந்து கொண்டேன்.

நாம் கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அவனுக்கு ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் வாங்குவதற்கான வாய்ப்பும் குறைந்து லஞ்சம் ஒழிகிறதோ!! இல்லையோ!!! குறைந்தாவது போகட்டும்.

"நாம் அனைவரும் காவல் துறை லஞ்சம் வாங்குவதை பற்றியே குற்றம் சொல்லியிருக்கிறோமே தவிர அதற்கு உடந்தை நாம்தான் என்பதை உணர மறுக்கிறோம். நாம் செய்த தவறை மறைக்க அவனுக்கு ஒரு "அன்பளிப்பு?". இது ஒரு கலாச்சாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது."

நாம் அனைவரும் முதலில் சாலை விதிகளை மதிக்கத் தொடங்க வேண்டும். எப்போதும் மஞ்சள் கோட்டிற்கு இடது புறமே செல்ல வேண்டும். இந்த விதிதான் நாம் முதலில் பின்பற்ற வேண்டியது. இப்படி செய்தாலே பெருநகரங்களில் உள்ள போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.

இதுபோல் விதிமுறைகளை பின்பற்றி சென்றால் நம்மை ஏன் அந்த காவலர்கள் பிடிக்கப் போகிறார்கள்? லஞ்சம் வாங்கப் போகிறார்கள்? அப்படியே எதிர்பாராத விதமாக விதிமீறி மாட்டிக் கொண்டால் லஞ்சம் கொடுக்காமல் அபராதம் செலுத்தலாமே. அப்போது விதி மீறினால் பணம் செலவாகும் என்ற எண்ணத்தில் நமக்குள் ஒரு கட்டுப்பாடு வருமல்லவா??

இனி நான் நிச்சயமாக சாலை விதிகளை மதிக்கும் ஒரு சாதாரண மனிதனாக இருப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு தான் இந்த பதிவை எழுதத் தொடங்கினேன். முயற்சி செய்துதான் பார்ப்போமே!!! இந்தியாவிற்காகவும், சாதாரண மனிதனுக்காகவும். லஞ்சம் ஒழிய ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.


06 October 2009

மதம் பிடித்த மனிதன்...!!! (கடவுள் பகுதி-3 )

9:14:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments


கடவுளைப் பற்றிய விவாதத்தின் மூன்றாவது பகுதியில் நான் மதங்களைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன்..

முதலில் வைரமுத்துவின் பார்வையில் இந்துக் கடவுளான சிவன் எவ்வாறு உருவாக்கப் பட்டான் எனப் பார்ப்போம். வைரமுத்துவின் "கள்ளிக் காட்டு இதிகாசத்தில்" சிவன் என்பவன் யார் என விளக்கியுள்ளார்.

"மனிதனின் பரிணாம வளர்ச்சியில் விவசாயம்தான் முதலிடம் வகிக்கிறது. அந்த விவசாயத்திற்கு முக்கியமான விலங்காக மனிதன் மாடுகளைப் பயன் படுத்த தொடங்கினான். அப்படி தொடங்கிய முதல் மனிதனை மற்றவர்கள் பாராட்டி அவனுக்கு உருவம் தீட்டி, சிவன் என்று பெயரிட்டு கடவுளாக சித்தரித்ததாக கூறியுள்ளார்."

இன்று உலகெங்கும் பெரும்பாலும் பரவியிருக்கக் கூடிய மதங்கள் இந்து, கிறிஸ்த்தவம், இசுலாமியம். ஒவ்வொரு மதத்திலும் கடவுள் என்பவன் நன்மையை தரக் கூடியவன், நியாய தர்மங்கள் அறிந்தவன் என்பதுதான் கருப்பொருளாக சித்தரிக்கப் பட்டிருக்கும்.

இத்தகைய சித்தரிப்புகள் மனிதனை நல்வழிப் படுத்துவதற்காக சித்தரிக்கப் பட்டிருந்தாலும், மனிதனால் அவைகள் பிரித்துப் பார்க்கப் படுகிறது. இந்த பிரிவினைகள் அவரவர் மதங்களை வைத்தே உருவாக்கப் படுகின்றன.

இதுவும் தேர்தல் போலத் தான் நடக்கிறது. பெரும்பான்மை பெற்றவன் உயர்ந்தவன் என்றும் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் பிரிக்கப் படுகிறான்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் கொள்கை என்று சொல்லப் படும் "ஜிகாத்" என்ற வார்த்தையின் அர்த்தம் "புனிதப் போர்" என்பதாகும். உண்மையில் போர் என்பது புனிதமான ஒரு விசயமா???

இலங்கையில் பெரும்பாலானவர்களால் கடவுளாகக் கருதப் படுபவர் "புத்தர்". அவரது கொள்கைப் படி "மனிதன் என்பவன் ஆசைகளைத் துறந்தவனாக இருக்க வேண்டும்". அப்படி அந்தக் கொள்கையில் வாழ்பவன் தானா சிங்களத்தான்?? அப்படி என்றால் "எங்கள் தமிழ் சகோதரிகளின் கற்பு சூறையாடப் படுவதும் எங்கள் உறவுகள் கொல்லப் படுவதும்" ஆசையை துறந்தவர்கள் செய்யக் கூடிய காரியமா???

இன்றும் பல கோவில்களில் "தீண்டாமை" இருக்கத் தான் செய்கிறது. பல கோவில்களில் நான் கண்ட அறிவிப்பு பலகைகளில் "வேற்று மதத்தவர்கள் உள்ளே வரக்கூடது" என எழுதப் பட்டிருக்கும். ஏன் அந்தக் கடவுளுக்கு வேற்று மதத்தவர் "மனிதனாகத் தெரியவில்லையா???"

ஒரு சில கிறிஸ்த்தவர்கள் அவர்கள் மதத்தைப் பரப்புவதற்காக பலரையும் "மூலை சலவை" செய்து வருகின்றனர். கடவுள் என்பவன் கட்டாயப் படுத்தி நம்பவைக்கப் பட வேண்டுமா???

"உண்மையில் சொன்னால் எந்த ஒரு மனிதனும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனே!!! அவனுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் அவன் கடவுள் நம்பிக்கை கொண்டவனாய் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறான்."

மதம் என்பது யானைகளுக்கு மட்டும் தான் பிடிக்க வேண்டும்.....மனிதனுக்கு அல்ல........

உங்கள் எண்ணங்களையும் வாக்குகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். காத்திருக்கிறான் ஒரு சாதாரண கடவுள் அல்லாத மனிதன்....

01 October 2009

கடவுள் விளம்பரம் விரும்பியா??? - பகுதி-2

9:05:00 AM Posted by புலவன் புலிகேசி 45 comments
இந்த பதிவு விகடனின் நல்ல பதிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது..

இது யார் கடவுள்.........??? என்ற என்னுடய முந்தைய பதிவின் தொடர்ச்சி.....

ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு பட்ட வடிவங்களிலும், வடிவங்கள் இல்லாமலும் கடவுள் சித்தரிக்கப் பட்டுள்ளான். இவ்வாறு கடவுள் சித்தரிக்கப் பட்டிருப்பதற்கான காரணங்கள் என்னவாக இருக்கக் கூடும்.


நிச்சயமாக அவன் இருக்கிறான் என்பதில்லை. இப்படி எல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக தான். (தசாவதாரத்தில் கமல் சொன்னது போல் "இருந்தால் நல்ல இருக்கும்").

கடவுளின் கதைகள் அனைத்திலும் "அதர்மத்தை அழிப்பவன் தான் கடவுள்" என்று சித்தரிக்கப் பட்டிருக்கும். அதர்மத்தை அளிக்கும் திறன் கடவுளுக்கு உண்டு என்றால் "அந்த அதர்மம் படைக்கப் படுவதை அவனால் தடுக்க முடியாதா???"

இதைப் படித்துவிட்டு சிலர் இப்படியும் சொல்லக் கூடும். அதர்மம் இல்லை என்றால் கடவுள் இருப்பதை அனைவரும் மறந்து விடுவோம் என்று. "அப்படியானால் கடவுள் விளம்பரம் விரும்பியா???"

தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தத்தான் அதர்மங்களை படைக்கிறான் என்றால் அவன் கடவுள் தானா?

கடவுள்தான் மனிதனை படைத்தான் என்றால் எதற்காக அவர்களுக்குள் பிரிவினை தோன்ற வேண்டும். மனிதனை சிந்திக்க வைத்தான் என்றால் நல்லதை மட்டும் சிந்திக்க வைத்திருக்கலாமே???

கடவுளின் கதைகள் உருவாக்கப் பட்டதன் நோக்கம் மனிதனை நெறிப் படுத்துவதற்காக. ஆனால் அதிலும் நமது திரைப்படங்கள் போல மசாலாக்கள் சேர்க்கப்பட்டு மனிதன் ஏமாற்றப் படுகிறான்.

நமது முன்னோர்கள் "கொள்கைப் பரப்பு செயலாளர்கள் போல" இதைப் பற்றி தனது சந்ததிகளிடம் பேசி பேசியே அவர்களை நம்ப வைத்திருக்கின்றனர். எந்த ஒரு மனிதனும் பிறந்தவுடன் தானாக கடவுளை கும்பிடுவதில்லை. தனது குடும்பத்தில் உள்ளவர்கள் சொல்வதாலேயே அவ்வாறு செயல்படுகின்றனர். பிறகு அந்த பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்கின்றனர்.

உங்கள் கருத்துக்களுக்காகவும் வாக்குகளுக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் கடவுள் அல்லாத ஒரு மனிதன்...........