கடவுளை மற..மனிதனை நினை..

12 October 2009

போக்குவரத்து காவலருக்கு லஞ்சம் கொடுத்து கற்றுக் கொண்டது....!!

12:22:00 PM Posted by புலவன் புலிகேசி 21 comments

ஒரு நாள் தி.நகர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பர்கிட் சாலையில் உள்ள ஒரு பேருந்து பயணசீட்டு அலுவலகம் சென்று திரும்பிய போது நடந்த ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.....

அன்று இரவு 10 மணி. நானும் என் நண்பனும் எனது இரு சக்கர வாகனத்தில் பயணசீட்டு முன்பதிவு செய்ய சென்றோம். பதிவு செய்து முடித்து திரும்பவந்து வாகனத்தை எடுத்து திருப்பி சில தொலைவு வந்த பிறகுதான் உணர்ந்தேன் அது "ஒரு வழிப் பாதை" என்றும் நான் தவறான வழியில் செல்கிறேன் என்பதையும்.

வந்தான் ஒரு போக்குவரத்துக் காவலன் (?). எனது வாகனத்தை ஓரம் கட்டி வழக்கம் போல் வாகனம் சம்பந்தமான காகிதங்களை சரி பார்த்துவிட்டுத் தொடங்கினான் பேரத்தை.

அவன் பேரம் 100 ரூபாயில் தொடங்கியது. நான் என்னிடம் அவ்வளவு இல்லை என்றதும் 50௦ கொடு என்றான். என்னிடம் 20 தான் உள்ளது என்றதும் அதையாவது கொடு என்று பிச்சைகாரனை விட கேவலமாக வாங்கிக் கொண்டான் அந்த காவல்காரன் (திருடன்)?

எனக்கு அந்த காவல்காரனை விட என் மீதுதான் கோபம் அதிகமாக வந்தது. நான் ஏன் போக்குவரத்து விதிமுறைகளை மீற வேண்டும்? அப்படி மீறிய நான் அதற்குரிய அபராதத்தை செலுத்த முற்படாமல் லஞ்சம் கொடுக்க முன்வந்தது ஏன்? இந்த தவறுக்கு முழுக் காரணமும் நான்தான் என உணர்ந்து கொண்டேன்.

நாம் கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அவனுக்கு ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் வாங்குவதற்கான வாய்ப்பும் குறைந்து லஞ்சம் ஒழிகிறதோ!! இல்லையோ!!! குறைந்தாவது போகட்டும்.

"நாம் அனைவரும் காவல் துறை லஞ்சம் வாங்குவதை பற்றியே குற்றம் சொல்லியிருக்கிறோமே தவிர அதற்கு உடந்தை நாம்தான் என்பதை உணர மறுக்கிறோம். நாம் செய்த தவறை மறைக்க அவனுக்கு ஒரு "அன்பளிப்பு?". இது ஒரு கலாச்சாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது."

நாம் அனைவரும் முதலில் சாலை விதிகளை மதிக்கத் தொடங்க வேண்டும். எப்போதும் மஞ்சள் கோட்டிற்கு இடது புறமே செல்ல வேண்டும். இந்த விதிதான் நாம் முதலில் பின்பற்ற வேண்டியது. இப்படி செய்தாலே பெருநகரங்களில் உள்ள போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.

இதுபோல் விதிமுறைகளை பின்பற்றி சென்றால் நம்மை ஏன் அந்த காவலர்கள் பிடிக்கப் போகிறார்கள்? லஞ்சம் வாங்கப் போகிறார்கள்? அப்படியே எதிர்பாராத விதமாக விதிமீறி மாட்டிக் கொண்டால் லஞ்சம் கொடுக்காமல் அபராதம் செலுத்தலாமே. அப்போது விதி மீறினால் பணம் செலவாகும் என்ற எண்ணத்தில் நமக்குள் ஒரு கட்டுப்பாடு வருமல்லவா??

இனி நான் நிச்சயமாக சாலை விதிகளை மதிக்கும் ஒரு சாதாரண மனிதனாக இருப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு தான் இந்த பதிவை எழுதத் தொடங்கினேன். முயற்சி செய்துதான் பார்ப்போமே!!! இந்தியாவிற்காகவும், சாதாரண மனிதனுக்காகவும். லஞ்சம் ஒழிய ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.


21 விவாதங்கள்:

பிரபாகர் said...

மிகச்சரி நண்பா....

நாம் நம்மை முதலில் திருத்திக்கொள்வோம் எனச்சொல்லி, அனுபவத்தோடு எல்லோரையும் அறிவுறுத்தியிருக்கிறீர்கள்.... அருமை. ஓட்டும் போட்டு விட்டேன்...

பிரபாகர்.

ஊடகன் said...

//இனி நான் நிச்சயமாக சாலை விதிகளை மதிக்கும் ஒரு சாதாரண மனிதனாக இருப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு தான் இந்த பதிவை எழுதத் தொடங்கினேன். முயற்சி செய்துதான் பார்ப்போமே!!! இந்தியாவிற்காகவும், சாதாரண மனிதனுக்காகவும். லஞ்சம் ஒழிய ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டும்
//

அருமையான பதிவு........
நானும் இதை வழி மொழிகிறேன்......
தொடருங்கள் சமுதாயத்தின் மீதான உங்கள் கோபத்தை...........

வெண்ணிற இரவுகள்....! said...

குற்றம் செய்தவனை விட தூண்டியாயவனுக்கே தண்டனை அதிகம் நாம் திருடனா வாங்கிய அவன் திருடனா நல்ல பதிவு

க.பாலாஜி said...

//அப்படி மீறிய நான் அதற்குரிய அபராதத்தை செலுத்த முற்படாமல் லஞ்சம் கொடுக்க முன்வந்தது ஏன்? இந்த தவறுக்கு முழுக் காரணமும் நான்தான் என உணர்ந்து கொண்டேன்.//

சரியாக சொன்னீர்கள்...ஒவ்வொருவரும் இதை உணரும்பட்சத்தில் லஞ்சம் எனும் வார்த்தையே வெகுவாக குறைந்துவிடும்...

லஞ்சம் கொடுப்பதுவும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்பதை உணர்ந்த உங்களை பாராட்டுகிறேன். சரியான சிந்திக்கத்தக்க இடுகை....வாழ்த்துக்கள் நண்பா....

ஹேமா said...

புலிகேசி உங்களைப்போல எல்லோருமே சிந்திக்கத் தொடங்கிவிட்டால் எங்கள் நாடுகள் விரைவில் முன்னேற வாய்ப்பு.
உங்களுக்கு என் வாழ்த்துகள்.பாராட்ட நிறைவாய் நினைக்கிறேன்.

வானம்பாடிகள் said...

ஹி ஹி. அனுபவம் போறலைங்க உங்களுக்கு. செண்ட்ரல் ஸ்டேஷன் அருகில் எல்லா பேப்பரும் சரியாக வைத்துக் கொண்டு வந்து பாருங்க சாமி. எதாவது கொடுத்து விட்டு போ என்று சாவியைப் பிடுங்கி வைத்துக் கொண்டு இருப்பார்கள். பேசவே தயாரில்லை என்பது போல். லாரிக்காரன் கெட்ட வார்த்தையில் திட்டியபடி கொடுக்கும் 2 ரூபாய்க்கு பதிலுக்கு திட்டிக்கொண்டாவது வாங்கத் தவறியதே இல்லை.

ஆனாலும், இந்த உறுதி வேண்டும். பாராட்டுக்கள்.

கதிர் - ஈரோடு said...

நேர்மையும், சுய ஒழுக்கமும் நம்மிடம் வந்தால் போதும்

புலவன் புலிகேசி said...

நன்றி பிரபாகர்,ஊடகன்,கார்த்தி,பாலாசி,ஹேமா,கதிர் மற்றும் வானம்பாடிகள்.

//ஹி ஹி. அனுபவம் போறலைங்க உங்களுக்கு. செண்ட்ரல் ஸ்டேஷன் அருகில் எல்லா பேப்பரும் சரியாக வைத்துக் கொண்டு வந்து பாருங்க சாமி. எதாவது கொடுத்து விட்டு போ என்று சாவியைப் பிடுங்கி வைத்துக் கொண்டு இருப்பார்கள்//

இந்த அனுபவம் எனக்கில்லை என்றாலும் என் நண்பர்களுடன் செல்லும் போது சந்தித்திருக்கிறேன். இந்த உறுதி மொழியால் லஞ்சத்தை குறைக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம்தான்.

RAD MADHAV said...

செறிவான பதிவு....வாழ்த்துக்கள்....
பொதுவாக வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் எங்களை போன்றவர்களுக்கு
சாலை விதிகளை மீறத் தோன்றுவதில்லை....
காரணம் இங்கிருக்கும் கடினமான தண்டனைகள்....
ஆனால் அதே நாங்களே சொந்த நாட்டிற்கு வரும்போது விதிமுறைகளை மதிக்காது மட்டுமின்றி, எல்லாமே எங்களுக்கு ஒரு ஏளனமாகத் தெரியும்,,
பணம் கொடுத்தால் எப்படியும் தப்பித்துக் கொள்ளலாம் என்று...
நன்றாகச் சொன்னீர்கள்.....முதலில் நாம் மாற வேண்டும்...
வளர்க்க வேண்டும் நம்மிடம்... தனி மனித ஒழுக்கத்தை....நன்றி...

ரோஸ்விக் said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பா....! நானும் இதை கடைபிடிக்க ஆரம்பித்து
ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது....

கொள்கைக்கு வாழ்த்துக்கள்.

Viji said...

There are two ppl involved in corruption. So, if we want to stop corruption, we should also desist from giving any grease payment!

Anonymous said...

லஞ்சம் மற்றும் ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் ஓர் பதிவு!

http://ulalmannargal.blogspot.com/

புலவன் புலிகேசி said...

நன்றி RAD MADHAV,ரோஸ்விக்,Viji

நன்றி Anonymous
am not able to access this url http://ulalmannargal.blogspot.com

மௌனி said...

//லஞ்சம் ஒழிய ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் //

மாற்றத்துக்கு வாழ்த்துகள். உங்கள மாதிரி லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தவர்களின் லிஸ்ட்தான் இந்த தளம் பூராகவும்.

கவிதை(கள்) said...

நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு சரி. முதலில் நாம் விதிகளை கடைபிடிக்க வேண்டும். இந்தியன் படத்தில் கூறுவது போல வெளிநாட்டில் விதியை மீறுவதற்கு தான் லஞ்சம் இங்கு கடமையை செய்வதற்கே லஞ்சம்.

நல்ல பதிவு

வாழ்த்துக்கள்.

விஜய்

சீனு said...

இது எல்லோருமே சொல்றது தான். ஆனா சொல்லிட்டு அடுத்த வாட்டி மறுபடியும் 100 கொடுப்போம்...

டென்ஷன் ஆகாதீங்க.

தீப்பெட்டி said...

லஞ்சம் தவிர்ப்போம்..

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

velji said...

15 வருடங்களுக்கு முன்பு வந்த வானமே எல்லை திரைப்படத்தில் லஞ்சத்தைபத்தி பேசுவதே இப்ப அவுட் ஆப் பேஷன் ஆகிப்போச்சு என்று சொல்லியிருப்பார் பாலசந்தர்.லஞ்சலாவன்யத்தில் நம்நாடு மேலும் முன்னேறியிருக்கிறது!

நீங்கள் சொல்வதுபோல் நாம்தான் மாறவேண்டும்.

எதிர்கட்சி..! said...

நல்ல பதிவு
):!

விக்னேஷ்வரி said...

நல்லது. முயற்சிப்போம்.

அன்புடன் அருணா said...

ரொம்ப சரி! உலகத்தை மாற்றுவதை விட நாம் மாறிக் கொள்வது சிறந்தது!பூங்கொத்து!