கடவுளை மற..மனிதனை நினை..

01 February 2015

மோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா?

9:52:00 AM Posted by புலவன் புலிகேசி No comments
இது குறித்து என் கல்லூரி நண்பர்கள் சிலருடன் விவாதம் நடந்தது.



ஆடை என்பது உடலை மறைக்கும் பொருள் என்ற காலம் போய் நவ நாகரீகம் என்ற பெயரில் பல மாற்றங்களும் வடிவமைப்புகளும் வந்து விட்டன. ஒருவன் அணியும் ஆடை லட்சங்களிலோ கோடிகளிலோ இருக்க வேண்டிய அவசியம் ஏதாவது இருக்கிறதா? என முதலில் சிந்திக்க வேண்டும்.

ஒபாமா வருகையின் போது மோடி ஒரே நாளில் சினிமா நடிகனை போல் மூன்று வித ஆடைகளை மாற்றி காட்சி அளித்தார். இதன் அவசியம் என்ன? எனக்கு புரியவில்லை.

இரண்டாவது அவர் அணிந்திருந்த ஒரு ஆடையில் தன பெயரையே தைத்து போட்டிருந்தார். அதன் அவசியம் என்ன? தன்னை ஒரு தேச பக்தனாக அடையாளப் படுத்திக் கொண்டு மக்களிடம் ஓட்டு வாங்கிய மோடி "இந்தியன்" என தன் சட்டையில் தைத்து போட்டிருக்கலாம். அதோடில்லாமல் அந்த சட்டை தைக்க லட்சங்களில் செலவானதாக கூறப் படுகிறது.


அது உண்மையா? பொய்யா? என்ற விவாதத்தை தள்ளி வைத்து விடுவோம். மோடியின் ரசிக கோமாளிகள் சொல்வது என்ன என்றால் லட்சங்களில் ஆடை வாங்கி அணிய மோடிக்கு தகுதி இருக்கிறது. அவர் அணிகிறார் என்பது தான்.

அது என்ன தகுதி என கேட்டால் அவர் இந்திய பிரதமர் என்பது தான் பதில். ஒரு ஏழை இந்தியாவின் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்ததாக அடையாளப் படுத்தி வாக்கு வங்கியை நிறைத்து பிரதமரான ஒருவர் எளிமையான அல்லது தான் இருக்கும் இடத்திற்கு சாதாரணமான வழக்கமாக அணியும் ஒரு ஆடையே போதுமானது எனும் போது இந்த ஆடம்பரம் எதற்கு?

டெல்லியில் பெண்களின் பாதுகாப்புக்கு எந்த ஏற்பாடும் செய்யாமல் ஒபாமா வருகையின் போது பல லட்சம் செலவழித்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது எதற்கு?

குறிப்பு: நான் இப்போது இருக்கும் இடத்திற்கு வழக்கமாக அணியும் ஒரு ஆடையை தான், குறைந்த செலவில் தான் அணிந்து வருகிறேன். இதுவும் அந்த மோடியின் ரசிக கோமாளிகளுக்காக சொல்லிக் கொள்கிறேன்.

30 January 2015

ஒபாமா வருகையும் அணுசக்தி ஒப்பந்தமும்

10:03:00 PM Posted by புலவன் புலிகேசி No comments
அனைவருக்கும் வணக்கம்!

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் எழுத வேண்டிய தேவையும், அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. இனி தொடர்ந்து எழுதலாம் என முடிவு செய்திருக்கிறேன்.

சரி விடயத்திற்கு வருவோம். ஒபாமா குடியரசு தினத்தில் கொடி ஏற்றி வைத்து வாழ்த்து சொல்ல ஒன்றும் இந்தியா வரவில்லை. அப்படி வருவதற்கு அவர் ஒன்றும் முட்டாளும் இல்லை.

இந்த முறை இந்தியா வந்ததன் நோக்கம் கடந்த 2006 ம் ஆண்டு கையெழுத்தாகி கிடப்பில் கிடந்த இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை செயல் பாட்டுக்கு கொண்டு வரத்தான். இந்திய மின்சார உற்பத்தியில் வெறும் 2.5% சதம் மட்டுமே பங்களிப்பு செய்து இந்திய உயிர்களை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த அணு சக்தி தேவையே இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.





போபால் விபத்துக்கு பின்னர் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிடம் அடிமை சாசனம் எழுதி வாங்காமல் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றன. அப்படித்தான் இந்த அணு சக்தி ஒப்பந்தமும். 2006 லிருந்து இது கிடப்பில் போடப் பட்டதற்கு காரணமும் ஒரு வேலை விபத்து நேர்ந்தால் யார் இழப்பீடு கொடுப்பது என்கிற பிரச்சினையும் ஒரு காரணம்.

சரி இழப்பீட்டிலிருந்து அமெரிக்கா தப்பித்துக் கொள்ள அப்படி என்ன இருக்கிறது இந்த மசோதாவில்...இது தொடர்பாக 2010 - ல் நான் எழுதிய கட்டுரையை இங்கு மீள் பதிவு செய்ய வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

சரி இந்த மசோதாவின் நோக்கங்கள் என்ன?

1) போபால் வழக்கு யூனியன் கார்பைடுக்கு ஏற்படுத்தியத் தொந்தரவுகள் இனி வேறெந்த அமெரிக்க நிறுவனங்களுக்கும் வந்து விடக் கூடாது. இந்திய மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? அமெரிக்க முதலாளிகளுக்கு குடைப் பிடிக்கதான் நாங்கள் ஆட்சியமைத்திருக்கிறோம் என்பது போல் உள்ளது இச்செயல்.

2) இம்மசோதா சட்டமாக்கப் பட வில்லையென்றால் வெளி நாடுகளிலிருந்து அணு உலைகளோ, யுரேனியமோ நம்மால் வாங்க முடியாது என ஒரு பொய்த் தகவல் வேறு பரப்புகிறார்கள். இப்படி ஒரு சட்டம் இயற்றப் பட வேண்டுமென யுரேனியம் விற்பனை செய்யும் நாடுகள் (Nuclear suppliers group) கோரவில்லை. இச்சட்டமில்லாமலே ரஷ்யாவும், பிரன்சும் நமக்கு அணு உலைகளை விற்பனை செய்துள்ளன.

3) ஜெனரல் எலக்ட்ரிக், வெஸ்டிங்ஹவுஸ் போன்ற அமெரிக்க அணு உலைத் தயாரிப்பு நிறுவனங்கள் போபால் போல ஒரு பிரச்சினை தங்களுக்கு வந்து விடக்கூடாது என கொடுத்து வரும் நிர்பந்தங்கள் தான் இம்மசோதாவின் மூலக் காரணம்.

4) இவர்களிடமிருந்து இறக்குமதி செய்யப் படும் அணு உலைகளை இயக்கப் போவது நம் இந்திய அணுசக்தி கழகமே. ஒரு வேளை எந்திரத்தின் கோளாறு அல்லது வடிவமைப்பின் கரணமாக விபத்து நேர்ந்தால் பொது மக்கள் அந்நிறுவனங்களீன் மீது வழக்கு போட முடியாது. இந்திய அணுசக்தி கழகம் மட்டுமே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். ஏன் விபத்தின் காரணம் எந்திரம் தான் என நிரூபிக்கப் பட்டாலும் இந்திய அணுசக்தி கழகம் கூட அவர்களிடம் இழப்பீடு கேட்க முடியாது. விற்பனை ஒப்பந்தப் படி என்ன இழப்பீடோ அது மட்டுமேக் கிடைக்கும். இதைக்கூட நீர்த்து போக வைக்கும் திருட்டுத் தனமானத் திருத்தங்களும் இச்சட்டத்தில் செய்யப் பட்டிருக்கின்றன.

5) அணு உலை விபத்து ஏற்பட்டு அதனால் நாம் பாதிக்கப் பட்டால் நம்மில் யாரும் அமெரிக்க நீதி மன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியாது. இவையனைத்தும் இந்திய நீதி மன்றத்தால் மட்டுமே விசாரிக்கப் பட வேண்டும் என்கிறது இம்மசோதா.

6) இதையும் மீறி யாராவது வழக்குத் தொடுத்தால் என்ன செய்வது? என யோசித்து அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் திட்டமாக சர்வதேச அணுசக்தி முகமையின் ஈட்டுத்தொகை தொடர்பான ஒப்பந்தத்திலும்(IAEA's Convention on Supplementary Compensation) இந்திய அரசு கையொப்பமிட முடிவெடுத்திருக்கிறது. இதில் கையொப்பமிடும் நாடுகளுக்கு விபத்து ஒன்றுக்கு சுமார் 30கோடி டாலரை வழங்குவார்கள் என்பதால் அந்நாட்டு மக்கள் வேறு எங்கும் வழக்குத் தொடுக்கும் உரிமையை இழக்க வேண்டும்.

7) விபத்துக்கான ஈட்டுத் தொகையை மதிப்பிடுகின்ற அதிகாரத்தை சுற்றுச்சூழல், சுகாதாரத் துறைகளிடமிருந்து பிடுங்குகிறது இம்மசோதா. இனி அம்மதிப்பீடுகள் முழுதும் "அணுசக்தி பாதிப்பு இழப்பீட்டு ஆணையர்" என்பவரால் நிர்ணயிக்கப்படும். அந்த ஆணையரின் முடிவை எதிர்த்து வழக்குப் போட யாருக்கும் உரிமை கிடையாது.

8) கதிர்வீச்சினால் விபத்து நேரிட்டால் அதிலிருந்து 30 ஆண்டுகளுக்கு அங்கு நடக்கும் அனைத்து பாதிப்புகளுக்கும் அந்நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்பது வியன்னா மற்றும் பாரிஸ் கன்வென்சன்களின் முடிவு செய்யப் பட்ட சர்வதேச நெறிமுறை. ஆனால் இம்மசோதா சொல்வது என்னவென்றால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்த இழப்பீடும் வழங்கப் பட மாட்டாது.

9) ஒரு வேளை போர், உள்நாட்டு போர், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப் பட்டு அதனால் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டு மக்கள் பாதிக்கப் பட்டால் அதற்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப் பட மாட்டாது.

10) அணு உலை விபத்து ஏற்பட்டு எத்தனை லட்சம் உயிர்கள் போனாலும் அதிக பட்ச இழப்பீட்டுத் தொகை 45 கோடி டாலர் மட்டுமே. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின் படி 2300 கோடி ரூபாய். ஆனால் அமெரிக்காவில் இத்தகைய விபத்து ஏற்பட்டால் அங்கு இழப்பீட்டுத் தொகை 10 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 50ஆயிரம் கோடி ரூபாய். இதிலிருந்து 20 இந்தியனின் உயிர் 1 அமெரிக்க உயிருக்கு சமம் என்கிறது இம்மசோதா.

இது போன்றொரு சட்ட மசோதா உலகின் எந்த ஒரு நாட்டிலும் இயற்றப் படவில்லை. இதன் மூலம் இவர்கள் இந்திய மக்களின் உயிர்களுக்கு உச்சவரம்பு விதிக்கின்றனர். அமெரிக்க முதலாளிகளுக்கு சொறிந்து விட்டுக் கொண்டு இந்திய மக்களை புதை குழியில் தள்ளி கொன்று குவிக்கும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படலாமா? இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியவர்கள் பொது மக்களாகிய நாம்தான்.

இது மன்மோகன் சிங் ஆட்சியில் இருக்கும் போதே முடிவு செய்யப் பட்ட மசோதா. போதிய ஆதரவு அப்போது காங்கிரசிடம் இல்லாததால் கிடப்பில் கிடந்த இதை இப்போது மெஜாரிட்டியாய் ஆட்சியை பிடித்திருக்கும் மோடியை வைத்து சாதித்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. மேலும் இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இந்திய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீட்டை கொடுக்கவும் மோடி அரசு ஏற்பாடு செய்திருப்பது தான். இதன் மூலம் அமெரிக்காவை இழப்பீட்டிலிருந்து காக்க முடிவு செய்திருக்கிறது இந்தியா.

மோடியும் ஒபாமாவும் ஒப்பந்தத்தை எப்படி சமரசம் செய்துள்ளனர் என்ற விவரத்தை வெளியிட பா.ஜ.க அரசு மறுத்தும் வருகிறது.

மேலும் விபரங்களுக்கு:




13 October 2012

எது கலாச்சார சீரழிவு?

5:26:00 PM Posted by புலவன் புலிகேசி 1 comment

செய்யும் தொழிலை பொறுத்து  பிரிக்கப் பட்ட சாதீய அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் செந்தம் விட்டு, சாதி விட்டு செய்யும் திருமணங்கள் கலாச்சார சீரழிவாக பலரால் பார்க்கப் படுகிறது.

சொந்தத்திற்குள் செய்யும் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு இருக்க வாய்ப்பிருப்பதாக அறிவியல் அறிவுறுத்துகிறது. இது இன்றும் கூட அறிவியலின் தொடர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் பட்ட ஒன்றாக இருந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்கட்டும். சுய சாதித் திருமணங்கள், சொந்தத்திற்குள் நடக்கும் திருமணங்கள் எல்லாம் மாபெரும் பின்னனி கொண்டதாக இருக்கிறது. இதன் பின்னணியில் சாதி, சொத்து, அடிமைத்தனம் போன்ற பல்வேறு காரணிகள் ஒளிந்திருக்கின்றன.

இதை எல்லாம் மறைத்து வைக்க பயன்படுத்த படும் வார்த்தை தான் இந்த கலாச்சார சீரழிவு. இத்தகைய கலாச்சார காவலர்கள் ரசித்து பார்த்து, கை தட்டி மகிழும் நிகழ்ச்சி தான் “சூப்பர் சிங்கர் ஜீனியர்”. குழந்தைகளை போலியான ஒரு உலகிற்குள் இழுத்து சென்று அவர்களின் குழந்தை பருவத்தை சீரழிக்கும் ஒரு நிகழ்ச்சி இது.

சிறு வயதிலேயே தோல்வியை தாங்கும் பலத்தை அவர்கள் இழக்கிறார்கள். அதை விளம்பரமாக்கி காசு பார்க்கும் வேலையை செய்கிறது இந்த நிகழ்ச்சி. அதோடில்லாமல் அந்த குழந்தைகளை குத்து பாட்டு பாட வைத்து, அப்பாடல்களில் வரும் காம உணர்வின் ஒலிகளை மீண்டும் பாட சொல்லி ரசிக்கும் மன நிலையில் அதன் நடுவர்களும் அதை வைத்து காசு பார்க்கும் தொலைக் காட்சியும் செய்வது தான் நிஜமான கலாச்சார சீரழிவு.

ஆனால் இந்த கலாச்சார காவலர்கள் இந்த நிகழ்ச்சியை ரசித்து ருசித்து பார்த்து அதை குழந்தைகளின் திறமை என வேறு சொல்கிறார்கள்.