கடவுளை மற..மனிதனை நினை..

17 January 2012

நண்பன் - பதிவுலக மேன்மக்களே!

9:23:00 AM Posted by புலவன் புலிகேசி 7 comments
இது 3 Idiots-ன் அப்பட்டமான காப்பி என்பது அனைவரும் அறிந்ததே. அதற்காக இப்படத்தின் கேவலங்களை அந்த இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும் என்றால் அதை ஒப்புக் கொள்ள முடியாது. காரணம் அதை ரீமேக் செய்பவர் அப்படத்தை ஏற்று கொண்டு தான் எடுக்கிறார் என்றால் அந்த கருத்தையும் ஏற்றுக் கொண்டார் என்று தான் அர்த்தம்.

நண்பன் குறித்து பதிவுலகில் பல விமரிசனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதில் பதிவுலகில் சிலர் தங்களை "மேன்மக்களாக" நினைத்து பார்ப்பனிய கோவணத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு திரிவதும் பார்க்க முடிகிறது. மேலும் சிலர் தங்களை பெரியாரின் பேரன் எனும் அளவுக்கு பினாத்தி கொண்டு தட்டிக் கேட்காமல் சந்தர்ப்ப வாதியாகவும் திரிந்து கொண்டிருக்கின்றனர்.

சரி இவர்களை பற்றி பார்ப்பதற்கு முன் நண்பனை பற்றி பார்க்கலாம்.

மூன்று வர்க்கங்களில் இருந்து வரும் மூன்று எஞ்சினியரிங் மாணவர்கள், அவர்களின் பின்னணி, கல்வி ஆகியவற்றை கொண்டு நகர்வது தான் இந்த படம். இதில் பணக்கார வர்க்கத்திலிருந்து வரும் மாணவனாக பாரியாக விஜய். அவர் பிரபு கல்யான் ஜுவல்லரியில் புரட்சி நடத்துவது போல் கல்வியில் புரட்சி நடத்துவதாக நினைத்து ஏதோ செய்திருக்கிறார்.

எதையுமே மனப்பாடம் செய்து படிப்பதை விட புரிந்து படிக்க வேண்டும் என நினைப்பவர் இந்த பாரி. அது போல் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் அதில் ஜெயிக்க வேண்டும் என்கிறார்.

முதலில் தனியார் மயமாகிக் கொண்டிருக்கும் இந்த கல்வித்துறை காசு இருப்பவனுக்கு தான் கல்வி என்ற நிலைக்கு கொண்டு செல்கிறது. கல்வி முறையில் குற்றம் கண்டு பிடித்து அதில் மாற்றம் செய்ய வேண்டும் என சொல்லும் இயக்குனர் அதற்கு முன் அந்த கல்வித் துறையின் தனியார் மயத்தை எதிர்த்து எதுவும் பேச வில்லை. சரி அப்படியே மாற்றம் செய்தாலும் அதனால் என்ன நடந்து விடும்? மனப்பாடம் செய்தாலும், புரிந்து படித்தாலும் படித்து முடித்த பின் அந்தப் படிப்பு ஒரு தனியார் நிறுவனத்துக்கோ அல்லது அந்நிய நாட்டு வளர்சிக்கோ தான் பயன் பட போகிறது.

மேலும் தான் விரும்பும் துறையை தேர்ந்தெடுத்து படிக்கும் அல்லது அதில் கவனம் செலுத்தும் வாய்ப்பு மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே சாத்தியம். ஒரு துறையை விரும்புவதற்கு கூட நாம் மேல் தட்டில் இருக்க வேண்டும். கேம்பஸ் இன்டர்வியூக்கு புறப்படும் ஸ்ரீகாந்தை தடுத்து அவருக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தும் பின்னணி அதை புரிய வைக்கிறது. அதோடில்லாமல் எந்த ஹங்கேரியில் இருந்தும் எந்த மாத்தேவும் நமக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்க மாட்டான். அது ஸ்ரீகாந்த் போன்ற சங்கர் பட நாயகனுக்கு மட்டும் தான் சாத்தியம். அதுவும் படத்தில் மட்டும் தான்.

ஒரு காட்சியில் "சார் இந்த பர்ஸ்ட் ரேங்க் வாங்குனவங்க மேல் சாதி மாதிரியும், கம்மியா ரேங்க் வாங்குனவங்க கீழ்சாதி மாதிரியும் உக்கார வைக்கிறது நல்லா இல்லை. ரேங்கிங் சிஸ்டமே தப்பு சார்" என சொல்லும காட்சியில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து இலைமறை காயாய் பேசுவது தெள்ளத் தெளிவாக புரிகிறது. இந்தக் காட்சியில் நடித்த முற்போக்காளர் (!?) சத்யராஜிக்கு இது புரியவில்லையா?

அடுத்து இன்னொரு நண்பர் ஜீவா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். திருமணமாகாத அக்கா, உடல்நலமில்லாத தந்தை, ஒய்வு பெற்ற தாய் என வறுமையில் வாடும் குடும்பப் பின்னணி. இவர் படித்து தான் அந்தக் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். ஒரு வேலை இவருக்கு பெரிய போட்டோ கிராப்பர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தால் அவருக்கு இந்த பாரியின் அறிவுரை என்னவாக இருக்கும்?

மேலும் கருப்பான ஜீவாவின் அக்காவை ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொள்வது போல் நினைத்துப் பார்க்கும் காட்சியில் அந்த பெண்ணைக் கேவலப் படுத்தும் அக்காட்சியில் நிறவெறி பளிச்சிடுகிறது. இதை வெறுமனே நிறவெறி என்று ஒதுக்கி விட முடியாது. சிவாஜியிலும் கூட அங்கவை சங்கவை என கருப்பின மக்களை கேவலப் படுத்தும் வேலையை இந்த பார்ப்பன இயக்குனர் தவறாமல் செய்திருக்கிறார் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் தலித்துகளின் வீடுகள் சுத்தமில்லாமல் இருக்கும், அவர்கள் மாட்டுக் கறி உண்பவர்கள், அவர்கள் வீடுகளுக்குள் நுழைந்தால் துர் நாற்றம் வீசும் என்ற பார்ப்பனீய சிந்தனையை மனதில் வைத்து சித்தரிக்கப் பட்ட காட்சியமைப்பு தலித்துகள் மீதான வெறுப்பை உமிழ்ந்திருப்பதை தெளிவு படுத்துகிறது. ஆனால் உண்மையில் அவர்களின் வீடுகள் அப்படி கிடையாது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

அதோடில்லாமல் அவர்களின் ஏழ்மையை நகைச்சுவையாய் காட்ட முயலும் கேவலமான சிந்தனையை என்ன சொல்வது. அந்த ஏழ்மை தாய் சப்பாத்தி கட்டையால் நோயாளியின் நெஞ்சை சொரிவதும், தக்காளி எட்டு ரூவா, அரிசி பத்து ரூவான்னு பேசுவதாகவும் காட்டியிருக்கும் காட்சி யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையில் பார்த்தால் நாம் பணக்கார வீட்டிற்கு செல்லும் போது கிடைக்கும் மரியாதை, உணவை விட ஏழை வீட்டில் கிடைக்கும் உண்மையான பாசமும், உணவும் அதை நிரூபணம் செய்யும். இது எனது நேரடி அனுபவமும் கூட.

ஆனால் திரையரங்கில் இந்தக் காட்சியில் அனைவரும் கை தட்டி சிரித்தது மனதை வருத்தமடைய செய்தது. நம்மை நம் மக்களை கேவலப் படுத்தும் பார்ப்பன ஆதிக்கம் மிக்க காட்சியை எப்படி ரசித்து கைதட்டி சிரிக்க முடிகிறது எனத் தோன்றியது.

இன்னொரு காட்சியில் நாயகிக் குடித்து விட்டு வந்து பேசும் போது நாயகன் சொல்லும ஒரு வசனம் "ஓவரா குடிச்சிட்ட போல! முனிம்மாலாம் வெளிய வரா" என்பதாக. அதாவது தலித் பெண்களின் பேச்சு வழக்கு கேவலம், அவர்கள் குடிக்கக் கூட செய்வார்கள் என்பதாக இருக்கிறது இந்த வசனம்.

சென்னை தி.நகரில் உள்ள 10 downing street வழியாக வார இறுதி நாட்களின் இரவில் சென்று பாருங்கள் குடித்து விட்டு வெளியில் வருவது முனிம்மாக்களா அல்லது ரியாக்களா என்பது புரியும்.

படத்தில் கவனிக்கப் பட வேண்டிய மற்றுமொரு பாத்திரம் பன்னீர். தான் ஒரு சிறந்த கிரியேட்டிவிட்டி உள்ளவர் என்பதை நிரூபிக்க முயலும் இளைஞர். ஆனால் கல்லூரியில் கொடுக்கப் படும் பிரசர் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதாக அமைக்கப் பட்டிருக்கும் பாத்திரம் அது.

இன்று IIT, IIM, AIIMS போன்ற மாபெரும் கல்லூரிகளில் நடைபெறும் தற்கொலைகளின் காரணம் நிச்சயம் இது போன்ற பிரஷர் அல்ல. அவைகளின் பின்னணி கொடூரமானது. இங்கு நடக்கும் பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணம் சாதி. நன்கு படிக்கும் ஆசையில் இது போன்ற கல்லூரிகளில் சேரும் தலித்துகள் நடத்தப் படும் விதம் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது.
இது போன்ற கல்லூரிகளில் முதல் நாள் வகுப்பில் மாணவர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்யும் பொழுது, அவர்கள் எந்த கோட்டாவில் சேர்ந்தார்கள் என்பதையும் சேர்த்து உரக்க சொல்ல வேண்டும். அவர்கள் எந்த கோட்டா என்பது ஆசிரியர்களுக்கு கொடுக்கப் படும் லிஸ்டில் இருக்கும். ஆனால் இப்படி உரக்க சொல்ல வைக்கக் காரணம் மற்ற மாணவர்களுக்கும் தலித்துகளை அடையாளப் படுத்தும் நோக்கம். அதன் பின் சக மாணவர்களின், ஆசிரியர்களின் கேலி, கிண்டல் அவமானங்களை சகித்துக் கொண்டு அவர்கள் படிக்க வேண்டும். இதையெல்லாம் கடந்து வந்து படிப்பில் சிறந்து விளங்கினால், "ஒரு தலித் எப்படி மேலே வரலாம்" என்ற எண்ணம் ஆசிரியர்கள் மத்தியிலும் பீறிட்டு கிளம்புகிறது. அந்த மாணவர்களிடம் "நீ எப்புடி இந்த செமஸ்டரில் பாஸ் ஆகுரன்னு பாக்குறேன்" என்பதாக சவால் விட்டு அவர்களை பெயிலாக்கி, அதனால் தற்கொலை செய்து கொண்ட கதையும் உண்டு.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சண்டிகரை சேர்ந்த மாணவன் ஜாஸ்ப்ரீத் சிங். மருத்துவப் படிப்பில் நான்கு ஆண்டுகள் நல்ல மதிப்பெண் பெற்ற இவரை வேண்டுமென்றே சாதி வெறியில் இறுதியாண்டில் தோல்வியடைய செய்தான் ஒரு பேராசிரியர். இதைத் தொடர்ந்து மாணவனின் தற்கொலை, வழக்கு பதிய மறுக்கும் போலிஸ், அதன் பின் பழங்குடியினருக்கான ஆணையத்தின் தலையீட்டுக்கு பின் வழக்கு பதியப் பட்டது. அதைத் தொடர்ந்து விடைத் தாள்கள் வேறு மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களால் திருத்தப் பட்டு அந்த மாணவன் தேர்ச்சியடைந்ததாக அறிவிக்கப் பட்டது.

இது போன்று பல தலித் மாணவர்கள் இந்தியாவின் மாபெரும் உயர்கல்வி நிறுவனங்களில் தற்கொலை இல்லை இல்லை கொலை செய்யப் படுகிறார்கள். தற்கொலைகளின் பின்னணி இங்கு இருக்கிறது. இதை விடுத்து ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் ஒரு மாணவன் தற்கொலைக்கு முயல்கிறான், அதற்கு காரணம் வெறும் பிரஷர் மட்டும் தான் என்பதாக சித்தரித்த மேன்மக்களை என்னவென்று சொல்வது.

தலித்துகளை கேவலப் படுத்தும் நோக்கம் இது போன்ற காட்சிகளில் தெளிவாக தெரிகிறது.

அடுத்து படத்தில் கவனிக்கப் பட வேண்டிய பாத்திரம் சைலன்சர் சத்யன். இந்த பாத்திரம் 3 Idiots படத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு தமிழன் வருவது போல் சித்தரிக்கப் பட்டது. அதாவது தமிழன் என்றால் போட்டுக் கொடுப்பவன், கேவலமானவன் என்பதாக சித்தரித்த அந்தப் பாத்திரம் அச்சு பிசகாமல் இங்கும் வைக்கப் பட்டிருக்கிறது ஆனால் வெளிநாட்டில் செட்டில் ஆன கோயம்பத்தூர் காரனாக.

தமிழனைக் கொச்சைப் படுத்தும் இந்தக் காட்சியையும் தமிழர்களாகிய நம் மக்களால் ரசித்து சிரித்து கை தட்ட முடிகிறது என்றால் (3 Idiots பார்த்தவர்கள்) நாம் சொரணை இலந்தவர்களாகி விட்டோம் என அர்த்தமாகிறதே!

பாரி படித்து பட்டம் பெற்றது தனக்காக அல்ல, இன்னொருவனுக்காக எனத் தெரிந்தும் அதை பொருட்படுத்தாமல் தன் நண்பனை தேடி ஓடும காட்சியில் தெளிவாகத் தெரிகிறது அந்தப் பார்ப்பனீயம். "யார் வம்பு தும்புக்கும் போவாத. அப்பத்தான் நல்ல புள்ள" ன்னு சொல்லுற பார்ப்பநீயக் கருத்து தான் அது.

சரி இப்போது அந்த இரு பதிவர்களின் கதைக்கு வருவோம். முதலாமவர் பதிவுலக பிரபலம் கேபிள் சங்கர். இந்த நண்பன் குறித்து அவர் எழுதிய விமர்சனத்தில் ஏழ்மையிலும் சுவாரஸ்யத்தையும், நகைச்சுவையையும் எதிர் பார்த்த பார்ப்பனீய வஞ்சகம் தெரிகிறது. கீழ் உள்ள வரிகள் அதற்கு சான்று.

//இன்னொரு பக்கம் ஜீவாவின் வழக்கமான பரரலைஸ்ட் அப்பா, கல்யாணத்துக்கு காத்திருக்கும் அக்கா, தனி ஒருத்தியாய் குடும்பத்தைக் காப்பாற்றும் அம்மா என்பதை வழக்கமாய் சொலலாமல் படு காமெடியாய் வெளிப்படுத்தியக் காட்சி,//

வேலாயுதம் போன்ற பல படங்களை ரீமேக்கிய ராஜாவை கிண்டலடிக்கும் இந்த கேபிள் ராஜா சங்கர் ரீமேக்கியத்தை பெருமையாக பேசியதோடு இல்லாமல் "மேன் மக்கள் மேன் மக்களே" என பாராட்டு வேறு. இந்த மேன் மக்கள் பார்ப்பன இயக்குனராக இருந்தால் மட்டும் தான் போல.

வேட்டை, வேலாயுதத்தின் பல லாஜிக் மீறல்களை நக்கலடித்த இவர் கண்களுக்கு இந்த நண்பனின் லாஜிக் மீறல்கள் தெரியவில்லையா? மருத்துவமனைக்குள் பைக் ஓட்டும் விஜய்,குடித்து விட்டு கடசி பென்ச்சில் இருப்பவனுக்கு கூட தெரியாமல் தூங்கும் மூவர், தேர்வு எண் தெரியாத ஆசிரியரிடம் பேப்பரை கலைத்து விட்டு ஓடுவது (ஏன் அவனுங்கள கண்டு புடிக்க முடியாதா என்ன?), மிகைப் படுத்தப் பட்ட ஏழைக் குடும்பத்துக் காட்சிகள் , எந்த சர்டிபிக்கேட்டும் இல்லாமலே சயின்டிஸ்ட் ஆன விஜய் இப்படியாக நீள்கிறது லாஜிக் மீறல்கள்.

அந்த மேன் மக்கள் குரூப்புக்கு இதெல்லாம் தெரியலையா? இந்த மேன்மக்கள் பிரிவின் தலைவர் கேபிள் ராஜாவுக்கு ஆதரவாக பல கருத்து மழைகள் வேறு. அதில் குறிப்பாக ஊடகன் என்ற அஜீத் ரசிகர் வேறு. இவர் எழுதிய கருத்துரை கீழே.

//ஊடகன் said...
இந்தி படம் போலவே இன்ச் பய் இன்ச் அதே சீன் அதே டயலாக், இந்த மாதிரி எடுத்தா சிபி ராஜ், பிரசன்னா, ஸ்ரீகாந்த் நடிச்சா கூட படம் சூப் ஹிட்டாயுடும். இதை சங்கர் இல்ல, எந்த புது டைரக்டர் எடுத்தாலும் சூப்பர் ஹிட் தான்.......! ஆகையால் இந்த வெற்றி ஒரு வெற்றியே அல்ல....!
நண்பன் = Xerox காப்பி//

இது காப்பின்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா அந்த விமர்சனத்தில் சொல்லப் பட்ட பார்ப்பநீயக் கருத்துக்கள், மேன்மக்கள் குறித்தக் கருத்துகளை எல்லாம் விட்டு விட்டு தான் ஒரு அஜீத் ரசிகன் என்பதை மட்டும் மனதில் வைத்து கருத்து சொன்ன இவரைப் பார்த்தால் ஒரு உண்மை புரிகிறது. இவரை போன்றவர்கள் தான் திரையரங்கில் அந்த ஏழைகள் குறித்த இழிவான காட்சிகளில் கை தட்டி சிரித்தவர்களாக இருக்க முடியும் என்று.

அதே கேபிளின் விமரிசனத்தில் ஒரு நண்பரின் நியாயமான கேள்வி.

----------Jayadev Das said...
எழுத்தாளர் எழுதிய திரைக்கதைக்கு மரியாதை கொடுத்து அவருக்கு கிரெடிட் கொடுக்கும் தன்மையை பார்க்கும் போது மேன் மக்கள் மேன் மக்களே என்று பாராட்டத்தான் தோன்றுகிறது.\\Boys படம் ஏதோ ஆங்கிலப் படத்தில் காபி, அந்தப் படத்திற்கு கிரெடிட் கொடுத்தாரா? மேன் மக்கள் எப்போதும் மேன்மக்களாக இருக்க வேண்டும், அவ்வப்போது மேன்மக்கள் போல வேடம் போடுபவரை மேன் மக்கள் லிஸ்டில் வைக்க முடியாது.--------------------

இந்த நியாயமான கேள்விக்கு கூட கேபிள் ராஜா-விடம் பதில் இல்லை. எந்திரனை காப்பியடித்த போது அதன் ஒரிஜினல் எழுத்தாளருக்கு கிரெடிட் கொடுக்காத இவர் இந்த ஒரு படத்தின் மூலம் மேன்மக்களாகி விட முடியுமென்றால் பார்ப்பனீயம் அவரை தாங்கிப் பிடிக்கிறது என்று தான் அர்த்தம்.
அந்த இரண்டாம் பிரபல பதிவர் யுவகிருஷ்ணாவுக்கு இதெல்லாம் புரியவில்லையா? அவர் தான் மாபெரும் முற்போக்காளர் ஆயிற்றே. எப்படி புரியாமல் இருந்திருக்கும். எஸ்.ரா வை ஜெமோ என எழுதிய என்னைப் போன்ற அரை வேக்காட்டுக்கே புரிகிற இந்த விடயம் அந்த அறிவாளி-க்கு புரியாமலா இருந்திருக்கும்.

ஒரு வேலை தான் எழுதிய "அழிக்க பிறந்தவன்" நாவலை வெளியிட்டது அந்த கேபிளார் என்ற காரணத்தால் இருக்குமோ? அல்லது அவர் நாவலின் கதை "நண்பன் திருட்டு வீ.சி.டி" யை மையப் படுத்தி வருவதால் மேன்மக்களிடம் வாய்ப்பு தேடும் எண்ணமாக இருக்குமோ? இந்த இரண்டில் எது காரனமானாலும் அதற்கு பெயர் சந்தர்ப்ப வாதம் என்றல்லவா ஆகிறது. ஒரு வேலை இந்த சந்தர்ப்பவாதி முற்போக்காளர் போர்வைக்குள் ஒளிந்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. பிட்டு படங்களுக்கே பாய்ந்து பாய்ந்து விமரிசனம் எழுதும் இவரால் சக நண்பரை விமரிசிக்க முடியாதது வியப்பாக இருக்கிறது.

10 January 2012

முல்லைப் பெரியாறும் மீனவ பிரச்சினையும்

9:37:00 AM Posted by புலவன் புலிகேசி 1 comment
தமிழக மீனவர் பிரச்சினை:


இதுவரை 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள வெறியர்களால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக வழக்காடுமன்றத்தில் ஸ்டாலின் என்பவரால் தொடரப் பட்ட வழக்கிற்கு இந்திய கடலோர காவற்படை ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது.

அதில் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்வதால் தான் தாக்கப் படுவதும், கொலை செய்யப் படுவதும் நிகழ்கிறது. இதனை தடுக்க எல்லை தாண்டும் மீனவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் அவர்கள் கச்சத் தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க தடை செய்ய வேண்டும் எனவும் கூறியது.

பின்னர் தமிழக அரசின் எதிர்பை அடுத்து "கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்" என்பதை மட்டும் நீக்கி விட்டு கச்சத் தீவு பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் என்பதை மட்டும் விடாப் பிடியாக பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

1974 - ல் செய்து கொண்ட ஒப்பந்தப் படி கச்சத் தீவு பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை ஏதும் கிடையாது. ஆனால் இவர்கள் அந்த உரிமையை விட்டுக் கொடுக்க சொல்கிறார்கள். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பிடுங்கி அவர்களை நடுத் தெருவுக்கு கொண்டு வரத்தான் நினைக்கிறது இந்த இந்திய அரசாங்கம்.

மீனவர்கள் எல்லை மீருவதாகவே வைத்துக் கொண்டாலும் அவர்களை பிடித்து கடலோர காவற்படையிடம் ஒப்படைக்காமல் தாக்குவதும், சுட்டுக் கொள்வதும் நியாயமா? இதை நியாயப் படுத்தும் விதமாக பேசும் இந்தியக் காவற்படை தமிழர்கள் மீதான தனது பொறுப்பற்ற, துப்பில்லா தன்மையை வெளிப் படுத்தியிருக்கிறது.

முல்லைப் பெரியாறு:


தமிழகத்தின் ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் கேரள கட்சிகளின் போக்கைக் கண்டிக்க துப்பில்லாத தேசியக் கட்சிகள் இங்கு உலாத்திக் கொண்டிருக்கின்றன.

காங்கிரசு, பா.ஜ.க மற்றும் சி.பி.எம் போன்ற கட்சிகள் இந்தியா முழுதும் இருக்கும் தேசியக் கட்சிகள். இவர்கள் பேசுவதெல்லாம் ஒருமித்த இந்தியா, நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதாக. ஆனால் இந்த உணர்வெல்லாம் இந்தியா உலக கோப்பை வாங்கும் போதும் கார்கில் போர் நடக்கும் போதும் மட்டும் தான்.

கேரளாவில் உள்ள ஓட்டுப் பொறுக்கி தேசியக் கட்சிகள் தூண்டிவிட்ட மலையாள வெறியால் கேரளா வாழ் தமிழக மக்கள் தாக்கப் பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகள் போல வருகிறார்கள்.

ஆனால் கேரளாவில் இந்த வெறியை தூண்டிவிடும் காங்கிரசு, பா,ஜ,க மற்றும் சி.பி.எம் ஆட்களை தட்டிக் கேட்கவோ, தனது எதிர்ப்பை பதிவு செய்யவோ துப்பில்லாத தமிழக காங்கிரசு, பா.ஜ.க, சி.பி.எம் - கள் தன்னெழுச்சியாக லட்சக் கணக்கில் மக்கள் கூடி நடத்தும் போராட்டத்திற்கு தாங்களும் ஆதரவு என்பது போல் வேசமிடுகின்றன.

இவர்களின் இந்த செயல்கள் மக்களிடம் ஓட்டு வங்கியை பெறும் முயற்சி மட்டுமே என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

ஆனால் மக்கள் திரள் தொடர் போராட்டம் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்து தீர்மானம் நிறைவேற்ற செய்து, அணையை காப்பாற்றி வருகிறது.

இரு பிரச்சினைகளின் வேறுபாடுகள்:

இந்த இரு பிரச்சினைகளுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. மீனவ பிரச்சினையை எடுத்துக் கொண்டால் அவர்கள் முழுதும் நம்பி வருவது தமிழக அரசை தான். சென்ற ஆட்சியில் வெறும் கடிதம் மட்டுமே கைமாறியது நியாயம் கிடைக்கவில்லை என மாற்றி வாக்களித்து புது ஆட்சியைக் கொண்டு வந்தார்கள். ஆனால் இன்றும் அதே நிலை தான் நீடிக்கிறது.

ஆனால் இந்த முல்லை பெரியாறு பிரச்சினையிலும், கூடங்குளம் பிரச்சினையிலும் மக்கள் அப்படி இல்லை. அவர்கள் அரசை மட்டும் நம்பியிராமல் தங்கள் போர்க் குணம் மிக்க போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். அதனால் அரசாங்கம் மிரண்டு போயுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மீனவ பிரச்சினையில் அவ்வப போது ஆங்காங்கே நடக்கும் போராட்டங்கள் அரசாங்கங்களைத் திரும்பிப் பார்க்க வைக்க போதுமானதாக இல்லை என்பதே உண்மை.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக நிரூபணமாகி இருக்கிறது. ஆட்சி மாற்றம் என்பது ஒரு போதும் நமக்கு தீர்வை தராது. மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே தீர்வும், நியாயமும் கிட்டும் என்பது இங்கு நிரூபணமாகி இருக்கிறது.

05 January 2012

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் - தனியார்மய தாண்டவம்

8:21:00 AM Posted by புலவன் புலிகேசி , , 2 comments
ஒரு ஆட்டோ ஓட்டுனரின் கர்பினி மனைவி அரசு மருத்துவரின் தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்றவர் மரணம். அதைத் தொடர்ந்து அந்த பெண் டாக்டர் கொலை. அதனைத் தொடர்ந்து நேற்று அரசு மருத்துவர்களும், இன்று அவர்களுடன் சேர்ந்து தனியார் மருத்துவர்களும் வேலை நிறுத்தம்.

இந்த அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்துக் கொள்வதற்கு என்ன காரணம்? இதை மேலோட்டமாக யோசித்தால் காசு பார்க்கும் ஆசை என்பது மட்டுமே தோன்றும். ஆனால் இதன் பின்னனியையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தனியார் மயமாக்கப் பட்ட கல்வித்துறையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் மருத்துவம் பயில நேரிடையாகவே பல லகரங்களை செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்கு பரிந்துறை செய்யும் அரசியல்வாதி மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கு தனியாக லகரங்களை கொடுக்க வேண்டியுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசால் ஒதுக்கப் பட்ட இடங்களுக்கும் கட்டணமாக அவர்கள் பல லகரங்கள் செலுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் எட்டாயிரம் மட்டுமே. ஆனால் தனியார் கல்லூரிகளில் மூன்று லகரங்கள் வரை ஆகும். அது மட்டுமல்லாது தனியார் கல்லூரிகளில் சீட்டு வாங்க குறைந்த பட்சம் இருபது லகரங்கள் செலவழிக்க வேண்டும்.இந்த பின்னணியில் படித்து வெளியில் வரும் பலர் அரசு மருத்துவர்கள் ஆக மேலும் சில லகரங்களை செலவழிக்கிறார்கள். இப்படி வரும் ஒருவர் எப்படி நேர்மையாக வைத்தியம் பார்ப்பார்?

அது மட்டுமில்லாது நம் அரசாங்கமும் இந்த தனியார் மருத்துவமனைகளுக்கு ஆதரவாக அரசு மருத்துவமனைகளின் தரத்தைக் கண்டு கொள்வதில்லை. வேண்டுமென்றே புறக்கணிக்கப் படுகிறது அரசு மருத்துவமனைகள். இதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைந்து போராடுவார்களா? நிச்சயம் இல்லை. காரணம் அரசு மருத்துவமனைகள் தரமாக்கப் பட்டால், சுகாதாரமாக்கப் பட்டால் தங்களின் தனியார் கிளினிக்குகள் கூட்டமிழந்து விடும்.

தனியார் கம்பெனிகள் ஊழியர்களை பணிக்கு சேர்க்கும் போது போடும் ஒப்பந்தத்தில் வேறு எங்கும் பணி புரிவதாக தெரிந்தால் பணி நீக்கம் செய்யப் படுவீர்கள் என ஒப்பந்தம் போடுகிறது. அது போல் நீக்கப் பட்ட சிலரையும் நான் நேரில் பார்த்ததுண்டு. ஆனால் அரசு மருத்துவர்களில் இ.எஸ்.ஐ(ESI) மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் தான் இந்த விதி கடை பிடிக்கப் படுகிறது. இங்கு ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும் கொலை செய்யப் பட்ட அந்த பெண் மருத்துவர் ஒரு இ.எஸ்.ஐ(ESI) பணியாளர்.

மற்ற மருத்துவர்கள் தனியாக மருத்துவம் பழக(practice) அரசே அனுமதியளித்திருக்கிறது. இந்த அரசாங்கம் ஏன் அது போன்ற தனியார் க்ளினிக்குகளை ஆதரிக்கிறது? அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. இதன் நோக்கம் அரசு மருத்துவ மனைகளை அடியோடு ஒழித்து தனியார், கார்ப்பரேட் மருத்துவமனைகளை வளர்த்து விடுவது.

அப்படி செய்கையில் அரசு மருத்துவர்களின் போராட்ட வீரியங்க்களை குறைக்க அவர்களுக்கு தனியார் க்ளினிக்குகளை வடிகால் ஆக்குகிறது. மேலும் இந்த விடயத்தில் மக்களும் கொதித்து விட கூடாது என்பதில் அரசு குறியாக உள்ளது. அதற்காக தான் "அரசு மருத்துவமனைகள் என்றால் தரமற்றவை, சுகாதாரமற்றவை" என்ற கருத்தை மக்கள் மனதில் உருவாக்க திட்டமிட்டே அரசு மருத்துவமனைகள் ஒதுக்கி வைக்கப் படுகின்றன.

அது மட்டுமில்லாது இந்த தனியார்மயம் இல்லையென்றால் அந்த ஆட்சியாளர்களும் காசு பார்க்க முடியாது. இந்த மருத்துவம் வெறுமனே மருத்துவமனை அளவில் தனியார் மயமாக்கப் படவில்லை. அதன் அடிப்படை கல்வியிலிருந்தே தனியார் மயமாக்கப் பட்டிருக்கிறது.

மேலும் இந்த அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் தனியார் மருத்துவர்களும் பங்கேற்க காரணம் வேறொன்ருமில்லை, நாளை தங்களுக்கும் அந்த பெண் மருத்துவரின் நிலைமை வந்து விடக் கூடாது என்ற பயம் தான். இன்று இந்த தனியார் மருத்துவமனைகளின் காசு வெறிக்கு பலியானவர்கள் பலர்.

அவர்களுக்கு போராட முன் வராத இவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்வது கொலை செய்யப் பட்ட அந்த பெண் மருத்துவருக்காக அல்ல. நாளை தங்களுக்கும் அந்த நிலை வந்து விடக் கூடாது என்ற பயம் தான்.

அரசு கல்லூரிகளில் படித்தவர்களும் கிளினிக் வைத்து காசு பார்க்க இந்த சூழல் தூண்டி விடுகிறது. இவை அனைத்தும் திட்டமிட்டே செய்யப் பட்டிருக்கின்றன.

அரசு மருத்துவமனைகளின் தரம் சீர் செய்யப் படவும், தனியார் மயத்தை ஒழிக்கவும் மக்கள் தான் ஒன்றிணைந்து போராட வேண்டும். மக்கள் புரட்சி மட்டுமே இதற்கு தீர்வாக முடியும். ஆட்சி மாற்றம் ஒரு போதும் தீர்வை தராது.