கடவுளை மற..மனிதனை நினை..

05 January 2012

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் - தனியார்மய தாண்டவம்

8:21:00 AM Posted by புலவன் புலிகேசி , , 2 comments
ஒரு ஆட்டோ ஓட்டுனரின் கர்பினி மனைவி அரசு மருத்துவரின் தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்றவர் மரணம். அதைத் தொடர்ந்து அந்த பெண் டாக்டர் கொலை. அதனைத் தொடர்ந்து நேற்று அரசு மருத்துவர்களும், இன்று அவர்களுடன் சேர்ந்து தனியார் மருத்துவர்களும் வேலை நிறுத்தம்.

இந்த அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்துக் கொள்வதற்கு என்ன காரணம்? இதை மேலோட்டமாக யோசித்தால் காசு பார்க்கும் ஆசை என்பது மட்டுமே தோன்றும். ஆனால் இதன் பின்னனியையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தனியார் மயமாக்கப் பட்ட கல்வித்துறையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் மருத்துவம் பயில நேரிடையாகவே பல லகரங்களை செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்கு பரிந்துறை செய்யும் அரசியல்வாதி மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கு தனியாக லகரங்களை கொடுக்க வேண்டியுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசால் ஒதுக்கப் பட்ட இடங்களுக்கும் கட்டணமாக அவர்கள் பல லகரங்கள் செலுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் எட்டாயிரம் மட்டுமே. ஆனால் தனியார் கல்லூரிகளில் மூன்று லகரங்கள் வரை ஆகும். அது மட்டுமல்லாது தனியார் கல்லூரிகளில் சீட்டு வாங்க குறைந்த பட்சம் இருபது லகரங்கள் செலவழிக்க வேண்டும்.இந்த பின்னணியில் படித்து வெளியில் வரும் பலர் அரசு மருத்துவர்கள் ஆக மேலும் சில லகரங்களை செலவழிக்கிறார்கள். இப்படி வரும் ஒருவர் எப்படி நேர்மையாக வைத்தியம் பார்ப்பார்?

அது மட்டுமில்லாது நம் அரசாங்கமும் இந்த தனியார் மருத்துவமனைகளுக்கு ஆதரவாக அரசு மருத்துவமனைகளின் தரத்தைக் கண்டு கொள்வதில்லை. வேண்டுமென்றே புறக்கணிக்கப் படுகிறது அரசு மருத்துவமனைகள். இதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைந்து போராடுவார்களா? நிச்சயம் இல்லை. காரணம் அரசு மருத்துவமனைகள் தரமாக்கப் பட்டால், சுகாதாரமாக்கப் பட்டால் தங்களின் தனியார் கிளினிக்குகள் கூட்டமிழந்து விடும்.

தனியார் கம்பெனிகள் ஊழியர்களை பணிக்கு சேர்க்கும் போது போடும் ஒப்பந்தத்தில் வேறு எங்கும் பணி புரிவதாக தெரிந்தால் பணி நீக்கம் செய்யப் படுவீர்கள் என ஒப்பந்தம் போடுகிறது. அது போல் நீக்கப் பட்ட சிலரையும் நான் நேரில் பார்த்ததுண்டு. ஆனால் அரசு மருத்துவர்களில் இ.எஸ்.ஐ(ESI) மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் தான் இந்த விதி கடை பிடிக்கப் படுகிறது. இங்கு ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும் கொலை செய்யப் பட்ட அந்த பெண் மருத்துவர் ஒரு இ.எஸ்.ஐ(ESI) பணியாளர்.

மற்ற மருத்துவர்கள் தனியாக மருத்துவம் பழக(practice) அரசே அனுமதியளித்திருக்கிறது. இந்த அரசாங்கம் ஏன் அது போன்ற தனியார் க்ளினிக்குகளை ஆதரிக்கிறது? அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. இதன் நோக்கம் அரசு மருத்துவ மனைகளை அடியோடு ஒழித்து தனியார், கார்ப்பரேட் மருத்துவமனைகளை வளர்த்து விடுவது.

அப்படி செய்கையில் அரசு மருத்துவர்களின் போராட்ட வீரியங்க்களை குறைக்க அவர்களுக்கு தனியார் க்ளினிக்குகளை வடிகால் ஆக்குகிறது. மேலும் இந்த விடயத்தில் மக்களும் கொதித்து விட கூடாது என்பதில் அரசு குறியாக உள்ளது. அதற்காக தான் "அரசு மருத்துவமனைகள் என்றால் தரமற்றவை, சுகாதாரமற்றவை" என்ற கருத்தை மக்கள் மனதில் உருவாக்க திட்டமிட்டே அரசு மருத்துவமனைகள் ஒதுக்கி வைக்கப் படுகின்றன.

அது மட்டுமில்லாது இந்த தனியார்மயம் இல்லையென்றால் அந்த ஆட்சியாளர்களும் காசு பார்க்க முடியாது. இந்த மருத்துவம் வெறுமனே மருத்துவமனை அளவில் தனியார் மயமாக்கப் படவில்லை. அதன் அடிப்படை கல்வியிலிருந்தே தனியார் மயமாக்கப் பட்டிருக்கிறது.

மேலும் இந்த அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் தனியார் மருத்துவர்களும் பங்கேற்க காரணம் வேறொன்ருமில்லை, நாளை தங்களுக்கும் அந்த பெண் மருத்துவரின் நிலைமை வந்து விடக் கூடாது என்ற பயம் தான். இன்று இந்த தனியார் மருத்துவமனைகளின் காசு வெறிக்கு பலியானவர்கள் பலர்.

அவர்களுக்கு போராட முன் வராத இவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்வது கொலை செய்யப் பட்ட அந்த பெண் மருத்துவருக்காக அல்ல. நாளை தங்களுக்கும் அந்த நிலை வந்து விடக் கூடாது என்ற பயம் தான்.

அரசு கல்லூரிகளில் படித்தவர்களும் கிளினிக் வைத்து காசு பார்க்க இந்த சூழல் தூண்டி விடுகிறது. இவை அனைத்தும் திட்டமிட்டே செய்யப் பட்டிருக்கின்றன.

அரசு மருத்துவமனைகளின் தரம் சீர் செய்யப் படவும், தனியார் மயத்தை ஒழிக்கவும் மக்கள் தான் ஒன்றிணைந்து போராட வேண்டும். மக்கள் புரட்சி மட்டுமே இதற்கு தீர்வாக முடியும். ஆட்சி மாற்றம் ஒரு போதும் தீர்வை தராது.

2 விவாதங்கள்:

ஊடகன் said...

அண்ணே வணக்கமுண்ணே....! என்ன சொல் வரீங்கன்னே...!

அ. வேல்முருகன் said...

தன் மனைவி இறந்தவுடன் போலீசுக்கு போன் செய்கிறான். அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அடுத்து அவன் செலுத்திய பணம் பிரச்சினை. மேலும் பணம் அவனால் கொடுக்க முடியாது என்னும் போதுதான் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிபாரிசு செய்கிறார்கள்.

ஒரு வேகத்தில் செய்து விட்டதாக சொல்கிறான்.