கடவுளை மற..மனிதனை நினை..

Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

05 August 2010

ஒரே கு(க)ஷ்டமப்பா!

6:56:00 AM Posted by புலவன் புலிகேசி 11 comments

அவன் பெயர் பிச்சை. தாசில்தார் அலுவலகத்தில் பணியில் இருக்கிறான். லஞ்சம் வாங்குவதிலும் அதைப் பதுக்குவதிலும் பலே கில்லாடி. மாட்டிக் கொள்ளாதவாறு திருடத் தெரிந்த திருடன். அவனுடன் வேலை பார்ப்பவள் தான் வள்ளி. இவளும் லஞ்சம் வாங்குபவள் தான். ஏன் இவர்கள் இருவருக்கும் யார் அதிகம் லஞ்சம் வாங்குகிறோம் எனும் அளவிற்கு போட்டிகள் பல நடந்தேறியிருக்கின்றன.

இதன் காரணமாகவே இருவரும் ஒருவரை ஒருவர் உயர் அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்தும், உடன் பணி புரிபவர்களை இரு அணியாகப் பிரித்து வைத்துக் கொண்டு புரணிப் பேசியும் திரிந்து கொண்டிருப்பர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தாலும் அந்த உயர் அதிகாரிக்கு பிச்சையால் சில பல காரியங்கள் (லஞ்சம்) நடக்க வேண்டியிருப்பதால் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெயருக்கு ஒன்றிரண்டு முறை அவனது வீடுகள் சோதனையிடப் பட்டும், ஓரிரு முறை கைது செய்யப் பட்டும் இருக்கிறான். அவ்வளவே. ஆனால் வழக்குகள் மூடி மறைக்கப் பட்டு விட்டது. இவன் தனது ஆள் பலத்தைப் பயன் படுத்தி வள்ளியின் லஞ்சங்களை அம்பலப் படுத்தினான். அது தொடர்பாக வள்ளி மீது வழக்கும் தொடுக்கப் பட்டு நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்து யுத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. சில சமயங்களில் இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டு காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. சிலர் வேலையையும் இழந்திருக்கின்றனர். ஆனால் அது பற்றியெல்லாம் இருவரும் சிந்தித்தது கூட இல்லை.

சரி இவர்கள் இருவரும் ஏன் பகையாளியானார்கள்?

இருவருக்குள்ளும் யார் பெரிய ஆள்? என்ற எண்ணம் தலைதூக்கத் தொடங்கி அதன் பின் இருவரும் தங்களின் ஆதரவாளர்களைத் தனித் தனியே திரட்டி வைத்துக் கொண்டனர். பிச்சைக்கு இரண்டு மகன்கள். எப்படியாவது இருவருக்கும் அவன் வேலை பார்க்கும் இடத்திலேயே வேலை வாங்கிக் கொடுத்து விடுவது என விடாப்பிடியாக இருந்தான்.

வள்ளிக்கு பிள்ளைகள் இல்லை. தன் தோழி ரஞ்சிதா என்றால் அவளுக்கு உயிர். அவள் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டாள். தான் பெறும் லஞ்சங்களில் செய்யும் செலவுகளில் பாதி ரஞ்சிதாவுக்காக இருக்கும். எது வாங்கினாலும் அவளுக்கும் சேர்த்து வாங்குவாள். தன் தோழிக்கு எப்படியாவது தனது அலுவலகத்தில் வேலை வாங்க வேண்டும் என இவளும் விடாப்பிடியாக இருந்தாள்.

இவைதான் இவர்கள் இருவரையும் பகையாளிகளாக்கியது.

இந்நிலையில்தான் பிச்சை தன் அலுவலகக் கூட்டாளிகளையும், தனக்குத் தெரிந்த சில ரவுடிகளையும் வைத்துக் கொண்டு வேலை நிறுத்ததில் ஈடுபட்டான்.

"வள்ளி மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்.
அந்தத் திருடி வேலையிலிருந்து நீக்கப் பட வேண்டும்"

என்றவாறு அலுவலக வாயிலில் போஸ்டர் ஒட்டி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தான்.

அன்று அங்கு சாதிச்சான்றிதழ் மற்றும் இன்ன பிற சான்றிதழ்கள், பத்திரப் பதிவுகளுக்காக வந்த மக்கள் தலையிலடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அங்கு சாதிச்சான்று பெற வந்திருந்தான் குமரன். ஆர்ப்பாட்டக் கூட்டத்திலிருந்து வெளியே வந்தான் குமரனிடம் லஞ்சம் பெற்ற அந்த பியூன்.

"தம்பி இன்னைக்கு ஆபீஸ் நடக்காது. நீ பேசாம நாளைக்கு வா" என்றான்.

"அண்ணே! நாளைக்கு பேங்க் வேலைக்கு அப்ளிக்கேசன் போட லாஸ்ட் டேட். அதுக்கு சாதிச்சான்றிதழ் அவசியம் வேணும்" என்றான்.

"அப்ப காலையிலயே வந்துடு. நான் பாத்துக்குறேன். மதியத்துக்குள்ள அனுப்பிச்சிரலாம்" என்றான்.

சரி காலையில் வாங்கிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு வீடு திரும்பினான். மறு நாள் காலை எட்டு மணிக்கெல்லாம் புறப்பட்டு அந்த அலுவலகத்தை அடைந்தான். அதிர்ச்சியில் செய்வதறியாது நின்றான்.

"எங்கள் தலைவியை திருடி என கூறி அவமானப்படுத்தி
ஆர்ப்பாட்டம் செய்ததை கண்டித்து
இன்று வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்"

என்ற போஸ்டரின் கீழ் அலுவலகப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க அப்போது அருகாமை டீக்கடையிலிருந்து வந்த பியூன்

"தம்பி இன்னைக்கும் ஒன்னும் செய்ய முடியாது. நீ வேற பேங்குக்கு அப்ளிக்கேசன் போட்டுக்கலாம். நாளைக்கு வா" என்றான்.

எதுவும் பேசாமல் ஏமாற்றத்துடன் திரும்பினான். வாங்கி வைத்திருந்த பேங்க் அப்ளிக்கேசனை குப்பைத் தொட்டியில் போட முயன்ற போது கவனித்தான் அங்கு நிறைய அப்ளிக்கேசன்கள் கிடந்தன.


18 June 2010

இதுவும் காதல்!

1:30:00 AM Posted by புலவன் புலிகேசி , 18 comments

அன்று அவனுக்கு உடல் சுகமில்லை. அதனால் அலுவலக குளிர்சாதனம் அவனுக்குப் பிடிக்கவில்லை. இரண்டு மணி நேரம் அனுமதிப் பெற்று முன்னரே புறப்பட்டான். ஐந்து நிமிட தாமதத்தால் ஆறு மணி அலுவலகப் பேருந்தைத் தவற விட்டான். வெளியில் வந்து குமரன் நகர் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தான்.

நிறைய மக்கள் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அவனும் அவர்களுடன் ஐக்கியமானான். 19B பேருந்து வந்து நின்றது. கூட்டத்தில் அடித்துப் பிடித்து உள் சென்று நிற்பதற்கு ஒரு இடத்தைத் தேடிப் பிடித்துக் கொண்டான். அவன் உடல்நிலை அமர்ந்திருப்பவர்களை எதிரிகளாகப் பார்க்க வைத்தது. எரிச்சலுடன் பயணம் தொடங்கிய 10வது நிமிடத்தில் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வந்து நின்றதுப் பேருந்து.

அங்கு அந்தப் பேருந்தில் பலர் ஏறினர். ஏனோ இவனுக்கு அந்த விப்ரோ நிறுவனப் பெண் மட்டும் தனியாகத் தெரிந்தாள். சிறிது நேரம் இவனருகில் நின்றிருந்தாள். அவளின் உதட்டு வழி வந்த செய்கையில் அவளும் எரிச்சலுடன் நிற்பதை எதிர்த்திசைக் கண்ணாடியில் பார்த்துத் தெரிந்து கொண்டான்.

சில நிமிடங்களில் அவளுக்கு இருக்கைக் கிடைத்ததும் அமர்ந்து கொண்டாள். இவன் எதிரில் நின்று ஒளிவு மறைவாக அவளை ரசித்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும் ஏனோ அவனுக்கு பாரதியார் நினைவு வந்து சென்றார்.

மாநிறத்திலிருக்கும் அவளது முகத்தில் செங்குத்தாக ஒரு அழகான சிகப்பு நிறப் பொட்டு. காதில் கோபுரம் போன்ற ஒருத் தங்கத் தோடு, சிகப்பு நிறச் சுடிதார் அவளுக்காகவே வடிவமைக்கப் பட்டதாய்த் தோன்றியது அவனுக்கு. ஒற்றைக்கை சிகப்பு நிற பிளாஸ்டிக் வளையல், கால்களில் வெள்ளிக் கொளுசு என அவளின் அழகு சாதனங்கள் அனைத்தும் அவளை மேலும் அழகாகக் காட்டின.

இவன் காதுகளில் செல்ஃபோன் மூலம் எஃப்.எம் கேட்டுக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் செல்ஃபோனில் யாருடனோப் பேசிக் கொண்டு உதடு சுழித்தாள். எஃப்.எம்-மில் "உசிரே போகுதே! உசிரே போகுதே! உதட்ட நீக் கொஞ்சம் சுழிக்கையிலே" என்ற வரிகள் ஓட இவன் வாய்விட்டுப் பாடி விட்டான். அவள் மெல்லியப் புன்னகையுடன் இவனைப் பார்த்து விட்டுத் திரும்பி அமர்ந்து கொண்டாள்.

அதன்பின் அந்தப் பேருந்தில் எத்தனையோ அழகானப் பெண்கள் ஏறியிருக்க கூடும். ஆனால் இவனுக்கு அவளைத் தவிற வேறு யாரையும்ப் பார்க்கத் தோன்றவில்லை. துரைப்பாக்கம் நிறுத்தத்தில் ஏறிய இருப் பெண்கள் அவளை மறைத்து நிற்க அவர்களை எதிரி போல் பார்த்தான். சிறிது நேரம் அவளைப் பார்க்க இயலவில்லை.

சுங்கச்சாவடி வந்ததும் அமர்ந்திருந்த ஒருவர் இறங்கிக் கொள்ள இவனுக்கு இருக்கைக் கிடைத்தது. அமர்ந்த பின் கூட்ட நெறிசலின் ந்டுவில் அவளின் முகம் மட்டும் இவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ரசித்துக் கொண்டிருக்கையில் எஸ்.ஆர்.பி டூல்ஸ் நிறுத்தத்தில் ஏறினாள் கைக்குழந்தையுடன் ஒரு பெண்மணி. நெறிசலில் குழந்தையுடன் இவன் இருக்கைக்கு அருகில் நின்றிருந்தாள்.

அவள் மீது பரிதாபத்திற்கு பதில் கோபமே வந்தது அவனுக்கு. அந்தப் பெண்மணி இவன் முகபாவனையைப் புரிந்து கொண்டவளாய் உள் சென்றாள். இவன் மீண்டும் அந்த விப்ரோ பெண்ணை ரசிக்கத் தொடங்கினான். மத்ய கைலாஷ் நிறுத்தம் வந்ததும் அழுகின்ற குழந்தையுடன் ஒரு பெண்மணி இவனை முறைத்துக் கொண்டே கீழிறங்கினாள். அவன அதை கவனிக்கவில்லை. அழகு மனிதம் மறக்க செய்திருக்க கூடும்.

அந்த பேருந்துக் காதல்(?) சைதாப்பேட்டை நிறுத்தம் வரைத் தொடர்ந்தது. அவள் இறங்கி சென்று விட்டாள். இவனும் தி.நகரில் இறங்கி அறை வந்து சேர்ந்தான். இப்போது காய்ச்சல் விட்டிருந்தது அவனுக்கு. மீண்டும் ஒருநாள் அதேப் பேருந்துப் பயணம். சோழிங்கநல்லூர் வந்ததும் இவன் கண்கள் தானாக அவளைத் தேடியது.

அவள் வரவில்லை. மாறாக வேறு ஒரு விப்ரோ பெண் ஏறினாள். நல்ல அழகாக இருந்தாள். மெல்லத் தனக்குள் சிரித்துக் கொண்டு சன்னலோரம் திரும்பி உட்கார்ந்தான். துரைப்பாக்கத்தில் கைக்குழந்தையுடன் ஏறினாள் ஒரு பெண். இப்போது அவள் அவனுக்குப் பரிதாபமாய்த் தோன்ற குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டான். அன்றையப் பயணத்தில் அந்தக் குழந்தை மட்டுமே அவகனுக்கு அழகாகப் பட்டது.

27 May 2010

மாம்பலம் மேன்சன்

12:59:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
மாம்பலம் ரயில் நிலையம் அருகில் உள்ளது அந்த மேன்சன். நூறு பேர் இருக்கும் அந்த மேசனிலும் அவன் தனிமையையும் வெறுமையையுமே உணர்ந்தான். ஆனால் அதிலிருந்து வெளிவர அவனுக்கு மனமிருந்ததில்லை. அவன் ஏன் அப்படி இருக்கிறான் என இதுவரை யாரும் கேட்டதில்லை. கேட்கும் அளவுக்கு அவன் யாரிடமும் பேசியதில்லை.

யார் அவன்? பனிரெண்டாம் வகுப்பு படிக்கையில் தாயைப் பறி கொடுத்தவன். அன்று தொடங்கியதுதான் அந்த தனிமை. பின் கல்லூரியில் பி.ஏ தமிழ். எதற்காக தமிழ் படிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. கிடைத்தது அது மட்டுமே என சேர்ந்தான். அங்கு அவனது தனிமை சிறிது காலம் விடை பெற்றிருந்தது.

நண்பர்கள், அரட்டை, கேலி கிண்டல் என அனுபவித்துக் கொண்டிருந்த நேரம் அவன் தந்தை இரண்டாவதாக ஒருத்தியை மணம் முடித்து வந்தார். வழக்கமான சித்திக் கொடுமை அவன் தாயை நினைவு படுத்தத் தொடங்கிற்று. கல்லூரிப் படிப்பு முடிகின்ற நேரம் சித்தியுடனான வாக்குவாதத்தில் வீட்டை விட்டு விரட்டியடிக்கப் பட்டான். மீண்டும் தனிமை அவனைத் தழுவிக் கொண்டது.

கல்லூரி நண்பன் ஒருவனின் நட்பு அறைதான் அந்த மேற்கு மாம்பல மேன்சன் அறை. பி.ஏ தமிழ் படித்தவனின் நிலை கற்றது தமிழ் படத்திலேயே சொல்லப் பட்டதுதான். கிட்டத்தட்ட அதே நிலைதான் இவனுக்கும். அவனது நாட்கள் பெரும்பாலும் மேன்சன் அறையிலேயெ கழிந்தன. உடன் இருப்போரிடம் இந்த ஆறு மாத காலத்தில் இவன் பேசிய வார்த்தைகள் விரல் விட்டு எண்ணக் கூடியவை.

தனிமையை நேசிக்கத் தொடங்கினான். அந்தத் தனிமையிலும் அவனுடன் உறவாடியது அறைக் காத்தாடி. விட்டத்தைப் பார்த்த படி காற்றாடியுடன் பேசி மகிழ்ந்தான். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் எல்லாம் மறந்து போயினர். அந்த காற்றாடியின் இசை மட்டுமே பிடித்திருந்தது அவனுக்கு.

வாரக்கடைசி நாட்களைக் கழிப்பது அவனுக்கு நரகமாக இருந்தது. அறை நண்பர்கள் அரட்டை, டாஸ்மாக் சரக்கு என இவன் தனிமையை கலைப்பதாக உணர்ந்தான். மேன்சனை விட்டு வெளியே வந்து ரெங்கநாதன் தெருவுக்குள் நுழைந்தான். ஒரே இரைச்சல், நெரிசல். தனிமையைத் தேடி அலைந்தான். பித்துபிடித்தவன் போல் திரிந்தான்.

கையிலிருந்த காசுகள் கரைந்து போயின. சில நாட்களில் மேன்சனிலிருந்து வெளியேற்றப் பட்டான். போக்கிடமின்றி தி.நகரில் திரிந்தான். வெளிச்சமும் இரைச்சலும் அவனுக்கு எரிச்சலாய் இருந்தது. அன்றிரவு மேட்லி சப்வேயில் ஒதுங்கினான். வாகன இரைச்சல் வெளியை விட அங்கு அதிகாமாக இருப்பதை உண்ர்ந்தான்.

காதுகளைப் பொத்தி, கால்களை முடக்கி இரைச்சலின் எரிச்சலில் நடுக்கத்துடன் உறங்கிப் போனான். பொழுது விடிந்தது. மனித எந்திரங்கள் அங்குமிங்கும் நடக்கத் தொடங்கின. வாகனங்கள் நெறிசல் ஏற்பட்டு சப்வேயில் குவிந்திருந்தன. கண் விழித்தான். இப்போது அவனுக்கு எந்த இரைச்சலும் பெரிதாகத் தோன்றவில்லை. தான் யார் என்பது கூட மறந்து போனது அவனுக்கு.

ரெங்கநாதன் தெருவிலும் அவனால் தனிமையை உணர முடிந்தது.....ஒரு குழந்தை தாயிடம் "அம்மா பைத்தியம்" என்றது.

06 May 2010

நாயே!

6:18:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments
தெரு நிசப்தமாக இருந்தது. ஒரு நாயின் கதறல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆமாம் குமரன் வீட்டு நாய்தான் அது. குமரன் கண்களில் கண்ணீருடன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். தன் வீட்டு நாய் ஈன்ற மூன்று கண் திறக்காத குட்டிகளைப் பிரித்து ஊருக்கு வெளியில் விட்டு வந்து விட்டான்.


குட்டிகளைப் பிரிந்த நாய்க் கதறிக் கொண்டே இருந்தது. அவன் அம்மாவிற்கு நாய் என்றாலேப் பிடிக்காது. எப்போதும் வசை பாடிக் கொண்டெ இருப்பாள். அவளால் தான் அவன் அந்தக் காரியத்தை செய்ய நேர்ந்தது.நாட்கள் உருண்டோடின. நாய் கதறலை நிறுத்தி தன் பணிகளில் வழக்கம் போல் ஈடு படத் தொடங்கியிருந்தது.

இவன் திண்ணையில் அமர்ந்து நாயின் கழுத்துப் பகுதியில் கை வைத்து தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அந்த சுகத்தில் அது பாதி உறங்கிப் போயிருந்தது.ஒரு சிறுவன் வேகமாக ஓடி வந்து "அண்ணே அக்காவ ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க. உங்கள உடனே வரச் சொன்னாங்க" என்று சொல்லி விட்டு உருவமில்லாத தன் வாகனத்திற்கு ஒலி எழுப்பி ஓட்டிச் சென்றான்.

அம்மாவிடம் விசயத்தை சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான். அந்த அரசு ஆஸ்பத்திரியை இருவரும் நெருங்கிய போது அம்மாவைக் கேட்டான்

"ஏம்மா நாமளே அவள எதாவது தனியார் ஆஸ்பத்திரில சேத்துருக்கலாம்ல?"

"போடா போக்கத்த பயலே! தொற சம்பாதிச்சு கொட்டுறதுல இந்த ஆஸ்பத்திரி நர்சுங்களுக்கே லஞ்சம் குடுக்க முடியாது.இதுல தனியாராம்" என்றதும் அவனிடமிருந்து பதில் இல்லை.

வாசலில் அமர்ந்திருந்த அவன் மாமியார், இவனைக் கண்டதும் வாயில் தன் புடவை முந்தானையை வைத்துப் பொத்திக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள். அதைக் கண்டதும் பதட்டத்துடன் வார்டுக்குள் ஓடினான்.அங்கு அவன் மனைவி மயக்க நிலையில் படுத்திருந்தாள். அருகிலிருந்த தொட்டிலில் கண் திறக்காத ஒரு பெண் குழந்தை இரு கைகளற்று கிடப்பதைப் பார்த்தான்.

கண்ணீருடன் வெளியில் வந்தான். "பொறந்தது பொட்டக் கழுத. இதுல கைய வேற காணும்" என புலம்பிக் கொண்டே வெளியில் வந்தாள் அந்த குமரனின் தாய்.

"தோ பாரு அவ எந்திரிச்சி பாக்குறதுக்குள்ள கொழந்தைய கொண்டு போயி எதாவது அனாத இல்லத்துல உட்டுரு. கையில்லாத பொம்பளப் புள்ளையை வளத்து கர சேக்க நம்மாள முடியாது" என வழக்கமான குரலில் கூறி விட்டு சென்றாள் அவன் தாய்.


அவனது இயலாமை அவனை எதிர்த்துப் பேச விடவில்லை. கண் திறவா அந்த பச்சைக் குழந்தையை எடுத்து சென்று ஒரு ஆஸ்ரம வாசலில் போட்டு விட்டு வீடு வந்து திண்ணையில் அமர்ந்தான்.அவன் வீட்டு நாய் அருகில் வந்து அமர்ந்து அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தது.

"ஏண்டா நாயே! ஒரு போக்கத்தப் புள்ளைய உட்டுட்டு வந்துட்டு என்னடா அழுக? எந்திரிச்சி உள்ள வாடா"

என்ற அவன் தாயின் குரல் உள்ளிருந்து கேட்டது.யதேச்சையாய்த் திரும்பியவன் தன் நாயைப் பார்த்தான். கண்களில் நீர் அருவி போல் கொட்டத் தொடங்கியது. எதுவும் புரியாமல் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தது அந்த நாய்.


02 April 2010

தேநீர் - சிறுகதை

6:50:00 AM Posted by புலவன் புலிகேசி 19 comments

"என்னடா பயளுவ வயலுக்குப் போய்ட்டானுங்களா?" என பல் தேய்த்து கொண்டே கேட்டான் பண்ணையார் பரமசிவம். "ஐயா, எல்லாரும் போயி அறுவடை காலைல ஆறு மணிக்கே ஆரம்பிச்சிருச்சிங்க" என்று கைகட்டியவாறே சொன்னான் கணக்கன் குப்புசாமி.

அந்த அழகிய கிராமத்தில் காலை பத்து மணி வரை உறங்கும் ஒரே ஆள் இந்த பரமசிவமாகத்தான் இருக்க முடியும். அங்குள்ள மனிதர்களுக்கு விவசாயம் தவிற ஒன்றும் தெரியாது. ஊரெங்கும் பசுமை நிறைந்து செழிப்புடன் இருக்கும். முழுக்க முழுக்க இயற்கையையும், உழைப்பையும் மட்டுமே நம்பியிருக்கும் ஊர் அது.

"ஏண்டா மொக்க என்னடா அருவா வச்சிருக்க, போயி அந்தக் கல்லுல தீட்டிட்டு வந்து அறுடா" என்றவாறு சுறுசுப்பாய் அறுவடையில் ஈடு பட்டிருந்தான் சுப்பையன். சுப்பையன் உழவு செய்யும் உடம்பு, உடற் பயிற்சி நிலையம் என்றால் என்னவென்றே தெரியாத அவன் உடம்பில் ஆறு அடுக்கு கட்டமைப்பு(six packs).

பல் தேய்த்து முடித்து "அடியேய் பாண்டியம்மா சுடுதண்ணி வச்சியா இல்லையா?" என கடுகடுத்தான் பரமசிவம். "இதோ வரேங்க" என ஒரு குரல் மட்டும் கேட்டது. சிறிது நேரத்தில் கந்தாங்கிச் சேலையுடன் கையில் சுடுதண்ணி பாத்திரம் சுமந்து வந்தாள் பாண்டியம்மா. "சரி சரி வச்சிட்டு போயி ஒரு டீயைப் போடு" என்றான்.

அறுவடை முடியும் வரை சுப்பையனுக்கு வேறு எது பற்றிய எண்ணமும் இருந்ததில்லை. அறுவடை முடித்து வீடு திரும்பும் போது அவனது நடை வீட்டை நோக்கி என்பதை விட குப்பாயி போடும் அந்த பாலில்லா டீத்தண்ணியை நோக்கிதான் என சொல்ல வேண்டும். செல்லும் போது வழியில் காண்போரிடம் கூட "அவன் வாய் மட்டுமே பேசும் மனம் முழுதும் அந்த டீத்தண்ணியில்தான் இருக்கும்".

சுக்கு, பனங்கல்கண்டு சேர்த்து இடித்து பாலை அடுப்பில் வைத்து அதில் கலந்து, டீத்தூள் சேர்த்து கொதிக்கும் தருவாயில் போடப்பட்ட உடைத்த ஏலத்தின் வாசனையுடன் டீத் தயாரித்துக் கொண்டிருந்தாள் பாண்டியம்மா.

ஒரு ரூபாய் சக்கரை, சுடுதண்ணீரில் போடப்பட்ட டீத்தூளுடன் தன் மூச்சுக்காற்றை ஊதி அடுப்பைப் பற்ற வைத்து காந்தல் வாசனையுடன் பாலில்லா டீத் தயாரித்துக் கொண்டிருந்தாள் குப்பாயி.

குளித்து முடித்து ஒரு வேஷ்டியை அணிந்து வந்து சாய்நாற்கலியில் அமர்ந்தான் பரமசிவம். பாண்டியம்மா கம கம வாசனையுடன் டீயைக் கொண்டுவந்து கொடுத்தாள். கையில் அன்றைய தினசரி இதழ் ஒன்றை எடுத்தவாறே டீயை அருந்தத் தொடங்கினான். "என்னடி டீப் போட்டுருக்க...ஒரே தண்ணியா இருக்கு" என டீயைக் குடிக்காமலே வைத்து விட்டான். பாண்டியம்மா உள்சென்று மீண்டும் டீ போட ஆரம்பித்திருந்தாள்.

நேரம் பதினொன்றைக் கடந்திருந்தது. டீத்தண்ணித் தேடி வீடு நுழைந்தான் சுப்பையன். சுடச்சுட குப்பாயி கொடுத்த டீத்தண்ணியை நாவில் உமிழ்நீர் சொட்ட சொட்ட ஊதி ஊதி கடைசி சொட்டு வரைக் குடித்ததும், எதோ அமிர்தம் அருந்தியது போல் இருந்தது அவனுக்கு. மீண்டும் ஒரு சுறுசுறுப்பு வந்தவனாய் எழுந்தோடி தன் இரண்டு மாடுகளையும் மேய்ச்சலுக்கு விரட்டிச் சென்றான்.

பி.கு: சென்றமாத வெள்ளி நிலா இதழில் வெளிவந்த எனது சிறுகதை.

15 March 2010

வேலைக்காரி

4:30:00 AM Posted by புலவன் புலிகேசி 23 comments

ஒரு கோடி ஒரு தரம், ரெண்டு தரம், மூனு தரம். ரம்யாவின் வீடு மற்றும் சொத்துக்கள் ஏலம் விடப் பட்டாகி விட்டது. ரம்யா ஒரு பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசு. கடன் தொல்லையால் வீடு மற்றும் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்து விட்டன. ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் விடப் பட்டு கடன்கள் அடைக்கப் பட்டன.

ரம்யா குழந்தகள் மற்றும் கணவனுடன் நடுத்தெருவிற்கு வந்தாள். ஒரு குப்பத்திலுள்ள பொறம்போக்கு இடத்தில் கையிலிருந்த பணம் கொண்டு குடிசை அமைத்து குடி புகுந்தனர். இடம் கிடைத்து விட்டது சோற்றுக்கு என்ன செய்வது என்ற நிலை. ரம்யாவின் கணவன் முத்து ஒரு ஊதாறி. ரம்யா வீட்டு வேலைக்கு செல்வதாய் முடிவு செய்தாள்.

அருகிலுள்ள பங்களாவில் வேலைக்கும் சேர்ந்தாள். வீடு பெருக்குதல், துணி துவைத்தல், சமையல் இவைதான் அங்கு வேலை. அரை வயிற்று கஞ்சிக்கு வருமானமும் கிடைத்தது. அவ்வப்போது சமைப்பதில் கொஞ்சம் இவள் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

ஒரு நாள் "ஏண்டி ரம்யா! ஏண்டி நேத்து வேலைக்கு வரலை?"

"அம்மா குழந்தைக்கு உடம்பு சரியில்லம்மா"

"இந்த மாதிரில்லாம் காரணம் சொல்லிக் கிட்டிருந்தீன்னா உன்னைய வேலையை விட்டுத் தூக்கிட்டு வேற ஆளத்தான் பாக்கனும்"

"மன்னிச்சிருங்கம்மா இனிமே சரியா வந்துடுறேன்" என சொல்லிக் கொண்டே பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். பாத்திரங்கள் இவள் கண்ணீரில் இன்னும் பளபளப்பாகிக் கொண்டிருந்தன. அவைகளுக்கு பலமுறைக் கண்ணீரை உணவளித்திருக்கிறாள்.

"என்னடி அழுது கிட்டிருக்க! ஒழுங்கா வேலையைப் பாரு இல்லைன்னா வீட்டுக்கு கெளம்பு இனிமே நீ வர வேணாம்."

திடுக்கென போர்வையை விலக்கி எழுந்தாள் ரம்யா. கனவில் நடந்த அந்த விடயங்கள் அவளுக்கு நினைவில்லை. நேரம் பார்த்தாள் எட்டாகியிருந்தது. எழுந்து வெளியில் வந்தாள். அப்போதுதான் வேலைக்கு வந்தாள் ரஞ்சனி.

"என்னடி ரஞ்சனி மணி எட்டாகுது. இதுதான் வேலைக்கு வர்ற நேரமா?" என்றாள் ரம்யா.

"கொழந்தைக்கு உடம்பு சரியில்லைம்மா" என்றாள் ரஞ்சனி.

"இந்த மாதிரிக் காரணமெல்லாம் சொல்லாத. அப்பறம் வேற எடத்துல வேலைத் தேடுறா மாதிரி இருக்கும். போ போய் வேலையைப் பாரு" என்றாள் ரம்யா.

பாத்திரங்களுக்கு வழக்கம்போல் உணவு கிடைத்தது. ரஞ்சனியிடமிருந்து.

10 March 2010

உன் சிரிப்பினில் - 3


ஒரு வருடம் முன் அழைத்த அதே குரல். தேர்வுக்கான் அறையை நோக்கி நடந்த போது, அவளைக் கடைசியாக பார்ந்த்த அந்தக் கண்ணாடி அறையை நோக்கினான். அங்கு அவள் இல்லை. அந்த இடம் வெறிச்சோடிப் போனதாகத் தோன்றியது அவனுக்கு. இவனுக்கான அறைக் கதவைத் திறந்து "மே ஐ கம் இன்" என்றான்.

"எஸ்" என்றவாறுத் திரும்பினாள் அந்தப் பெண். ஆம் அவளேதான். அவளைக் கண்டுபிடித்து விட்டான். மகிழ்ச்சியில் செய்வதறியாமல் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சென்று அவள் எதிரில் அமர்ந்தான். அவளுக்கு இவனை யார் எனத் தெரியவில்லை.

"அவள் அன்று வந்தது டீம் லீட் பதவிக்கு. வேலையும் பெற்று விட்டாள் எனப் புரிந்தது. அப்படியென்றால் நம்மை விட வயது மூர்த்தவளா இவள். இர்க்கட்டுமே சச்சின், தனுஷ் எல்லாம் இல்லையா" என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

அவள் தேர்வுக்கானக் கேள்விகளைத் தொடுத்த வண்ணமிருந்தாள். அவளது குரலையும் இதழசைவையும், மறக்க முடியா அந்தக் கன்னக்குழி சிரிப்பையும் ரசித்துக் கொண்டே பதிலளித்துக் கொண்டிருந்தான். இந்த ஒரு வருடத்தில் அவன் கற்ற விடயங்களேக் கேள்விகளாய்த் தொடுக்கப்பட்டது.

அவள் கேட்டதால் பதில்களை பட்பட்டென கொடுத்தான். எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருந்தான். அனைத்துக் கேள்விகளையும் முடித்து "யூ ஆர் செலக்டட் இன் திஸ் ரவுண்ட்" என அந்த பலிங்கு சிலை சொன்னது. இது போலவே "யூ ஆர் செலக்டட் அஸ் மை ஹஸ்பன்ட்" என சொல்ல மாட்டாளா என நினைத்துக் கொண்டான்.

சொல்லியவள் எழுந்து நின்று அவனுக்குக் கைக் கொடுத்தாள். அவள் ஸ்பரிசம் பட்டதும் இவன் வலது கை பிறவிப் பலனை அடைந்து விட்டதாக இடது கையிடம் தம்பட்டமடித்துக் கொண்டது. "யூ வில் பீ கால்டு ஃபார் த நெக்ஸ்ட் ஹெச்.ஆர் ரவுண்ட். ப்ளீஸ் வெயிட் அவுட் சைட்" என்றாள்.

அவளிடம் "தேங்க் யூ" என சொல்லிவிட்டுத் திரும்பியவன் ஏதோ மனதில் பட சட்டெனத் திரும்பி அவள் கால்களைப் பார்த்தான். அவன் இதயமே வெடித்துப் போனது போல் உணர்ந்தான் ஆம் அவள் கால்களில் அந்த மெட்டி இருந்தது. கழுத்தை மறைத்து சுடிதார் அணிந்திருந்ததால் தாலி இவன் கண்களில் படவில்லை.

நடைபிணம் போல் வெளியேறி ஒரு இருக்கையில் அமர்ந்தான். எதுவும் தோன்றவில்லை அவனுக்கு. ஏன் இங்கு உட்கார்ந்திருக்கிறோம் என்ற யோசனை கூட இல்லை. அப்போதுதான் அந்தக் குரல் "எக்ஸ் க்யூஸ்மி..யூ கேன் லீவ் னவ். வீ வில் கால் யூ பை டுமாரோ ஃபார் யுவர் னெக்ஸ்ட் ரவுண்ட்" என்றது. எந்த பதிலும் சொல்லாமல் எழுந்து வெளியேறினான்.

மறுநாள் அலைபேசி ஒலிக்க எடுத்தான். "யுவர் நெக்ஸ்ட் ரவுண்ட் வில் பீ பை டுமாரோ. வீ வில் சென்ட் த மெயில் டூ யூ" என்றவாறு வந்த அழைப்பு அறிவுறுத்தியது. மின்னஞ்சலைப் பார்த்தான். பின்பு ஏதோ முடிவு செய்தவனாய் சென்று தேவையான சான்றிதழ்களை எடுத்துப் பையில் வைத்து விட்டு அன்றைய பொழுதை கலக்கத்துடன் கழித்தான்.

மறுநாள் காலை முன்னரே எழுந்து குளித்து வேலைக்கானத் தேர்வுக்கு புறப்பட்டான். அவர்கள் சொன்ன சரியான நேரத்தில் அந்த நிறுவனத்தின் அருகிலிருந்த டி.சி.எஸ் சென்று நுழைந்தான். இப்போது அவளைத் தேடும் நோக்கம் இல்லை. வேலை பெறுவது மட்டுமே நோக்கமாக இருந்தது.

(முற்றும்)

09 March 2010

உன் சிரிப்பினில் - 2


முதல் பகுதி படிக்க: உன் சிரிப்பினில்-1

அதன் பின் அவள் சிரிப்பதை நிறுத்தவில்லை. இவனும் ரசிப்பதை நிறுத்தவில்லை. ஒரு சிகப்பு நிற சுடிதாருடன், பச்சை நிறத் துப்பட்டா, அவளுக்காகவே வடிவமைக்கப் பட்டதாகத் தோன்றியது. தேவதை என்றால் வெள்ளை ஆடை மட்டும்தான் அணிய வேண்டுமா? என அந்த சுடிதார் இவனைப்பார்த்து கேட்டதாய்த் தோன்றியது.

முகத்தில் எந்த வித ஆடம்பர அலங்காரங்களும் இல்லை. நிலவிற்கு பொட்டு வைத்தாற்போல் இருந்தது அவள் நெற்றி. அந்த சாதாரனம் அவனுக்குள் இருந்தக் காதலை அதிகப் படுத்தியிருந்தது.

"கவிதா ப்ளீஸ் கம்" என்ற குரல் இவனுக்குப் பின்னாலிருந்து ஒலிக்க கோபமாய்த் திரும்பினான். அவள் நேர்முகத் தேர்வு அறைக்கு அழைக்கப் பட்டாள். எழுந்து இவனைக் கடக்கும் முன் ஒரு கன்னக்குழி புன்னகையை இவனுக்கு பரிசளித்தாள். "ஹாய்" என சொல்ல முயற்சித்தான். அதற்குள் இவனைக் கடந்து சென்றது அந்த தேவதை. சட்டென அவள் கால்களைப் பார்த்தான். அதில் மெட்டி இல்லை.

அவள் சென்ற பின் அவள் அமர்ந்திருந்த இருக்கையைப் பார்த்தான் அங்கே அவளது கைப்பை இருந்தது. நிம்மதிப் பெருமூச்சிட்டான். அடுத்த சில நிமிடங்களில் "முருகன் ப்ளீஸ் கம்" என்று அதே குரல் கேட்டது. இவன் புன்னகைக்க அங்கே அவள் இல்லை. கைப்பையைப் பார்த்துக் கொண்டே உள் நுழைந்தான்.

ஒரு கண்ணாடி அறைக்குள் பலிங்கு சிலை ஒன்று அமர்ந்து சைகையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தது. அதை ரசித்துக் கொண்டே இவனுக்கான அறையில் நுழைந்தான். அங்கு கேட்கப் பட்ட கேள்விகளுக்கு இவனிடம் பெரும்பாலும் மவுனம் மட்டுமே பதிலாய் இருந்தது. அவன் நினைவு முழுதும் அந்தக் கைப்பை மீதே இருந்தது.

இவன் தேர்வாகவில்லை. அது அவனுக்கு பெரிதாகத் தோன்றவில்லை. வெளியில் வந்தவன் நேரே ஒடி அவள் இருக்கையைப் பார்த்தான். அங்கே அது இல்லை. அவள் சென்றிருக்க கூடும். அந்த அலுவலகம் விட்டு வெளியேறினான். அவளை வெளியில் தேடி நொந்து போனான். அவள் இல்லை.

வீடு வந்து சேர்ந்தான். "என்னடா ஆச்சு" என அம்மா கேட்டாள். "கிடைக்குமான்னு தெரியலை" என்று அந்தப் பெண்ணை மனதில் வைத்து சொல்லிவிட்டு உள் சென்றான். அவளை எங்குத் தேடலாம் என யோசித்தான். திடீரென ஒரு எண்ணம் தோன்ற அன்று முதல் எங்கு வேலைக்கான தேர்வு நடந்தாலும் தவறாமல் செல்ல முடிவு செய்தான். அவளைத் தேட, வேலையை அல்ல.

ஒரு வருடம் கடந்திருந்தது. இந்த ஒரு வருடம் அவனை நிறையவே மாற்றியிருந்தது. இந்த ஒரு ஆண்டில் அவன் குறைந்த பட்சம் ஐம்பது நிறுவனங்களாவது அலைந்திருப்பான். இதுவரை வேலையும் கிடைக்கவில்லை. அவளும் கிடைக்கவில்லை. அப்போது அவனுக்கு அந்த மின்னஞ்சல் வந்திருந்தது.

அவன் அவளை சந்தித்த அந்த நிறுவனத்திலிருந்து வேலைக்கான தேர்வு நடைபெறுவதாகவும், அதில் கலந்து கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது. சரி ஒரு வேளை அவளை அங்கு சந்திக்க நேர்ந்தால் என எண்ணிக் கொண்டு புறப்பட்டு சென்றான். மீண்டும் அதே அறை.

அவளைத் தேடத் தொடங்கினான். அங்கு அவளைக் காணவில்லை. இதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்க அவனுக்கு விருப்பமில்லை. புறப்பட எத்தணித்து எழுந்த போது "முருகன் ப்ளீஸ் கம்" என ஒரு குரல் கேட்டதும் சட்டென திரும்பிப் பார்த்தான்.

(தொடரும்)

07 March 2010

உன் சிரிப்பினில்

"டேய் எருமை, இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னு ரமேஷ் சொல்லிருக்கான் எட்டு மணி வரைக்கும் தூங்கிக் கிட்டிருக்கியே!" என்ற தாயின் இனிமையான் வசைபாடலுடன் கண்திறந்து எழுந்தான் முருகன். முருகன் ஒரு மென்பொருள் முதுகலை பட்டதாரி. படிப்பு முடிந்து மூன்று மாத காலத்தில் இதுவரை அவன் வேலை தேடியதில்லை.

அவனுக்கு அதில் விருப்பமும் இருந்ததில்லை. காரணம் அவனது குறிக்கோள் ஒரு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என்பது. ஆனால் எப்படி என இதுவரை யோசித்ததில்லை. தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணமிருந்ததே தவிற என்ன தொழில், முதலீடு எப்படி சேர்ப்பது என்ற முயற்சியோ, சிந்தனையோ இல்லாமலிருந்தான்.

எழுந்து பல் துலக்கி குளித்து உடை மாற்றி தனது சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றான். இவனது முதல் வேலைக்கான தேர்வு. அந்த இடம் அவனுக்கு புதிதாகத் தெரிந்தது. வந்திருந்தவர்கள் எல்லாம் கையில் காகிதங்களை வைத்து எதையோ படித்துக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் அங்கு வந்து நுழைந்தாள் அந்தப் பெண். தேவதைகள் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. கட்டுக்கதை என சொல்லிக் கொண்டிருப்பான். அவளைப் பார்த்ததும் தேவதைக்கான அர்த்தம் கிடைத்ததாகத் தோன்றியது. முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.

அவளைப் பார்க்காமல் திரும்பி உட்கார்ந்து கொண்டான். தேர்வு நடத்துபவர், வந்திருப்பவர்களின் வருகையை சரிபார்க்க சுயவிவர குறிப்புகளை எடுத்து ஒரு ஒரு பெயராக அழைக்க ஆரம்பித்தார். இவனுக்கு அவள் பெயரைத் தெரிந்து கொள்ள ஆசை. அவள் பக்கம் திரும்பி பார்வையை அவளிடம் கொடுத்து செவியை அந்த வாசிப்பாளரிடம் கொடுத்திருந்தான்.


"கவிதா" என்றதும் அந்த பதுமை மெல்ல கைகளை உயர்த்தியவாறு இவனைப் பார்த்தது. அவளின் முதல் பார்வையில் இவனுக்குள் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கியது. அந்தப் பார்வையில் இவனுக்கு காதல் வந்திருக்க வேண்டும். அப்படி ஒரு அழகானப் பார்வை அது. மீன் போன்ற விழிகள் எனப் பிதற்றுபவர்களை ஏளனம் செய்திருக்கிறான். இப்போது அவர்களைத் தேடிப்பிடித்து நன்றி சொல்லத் தோன்றியது அவனுக்கு.

அதன்பின் அவள் மீதிருந்த பார்வையை திருப்ப இவனுக்கு மனமில்லை. இவன் பார்ப்பதை அவளும் கவனித்திருக்க கூடும். அடிக்கடி இவன் தன்னைத்தான் பார்க்கிறானா என்ற சந்தேகத்தில் அவளும் இவனைப் பார்த்தாள். தன் தோழியிடம் ஏதோ கிசுகிசுக்க அவள் தோழி இவனைத் திரும்பிப் பார்த்தாள். இப்போது பார்வையை வேறு இடத்திற்கு மாற்றினான். ஆனால் கண்கள் இவன் பேச்சைக் கேட்கவில்லை.

கவிதா கருப்பும் இல்லை சிவப்பும் இல்லை என சொல்லக்கூடிய நிறத்தில் அழகிய தேவதை. அவளின் முகத்தில் இவன் லயித்திருந்தான். இதற்கு முன் ஒரு பெண்ணிடம் இது போல் மயங்கியதில்லை. ஆனால் இவளிடம்....


அவள் இவன் பார்வையை சரிபார்த்துக் கொண்டே தோழியிடம் ஏதோ சொல்லி சிரிக்க கன்னத்தில் ஒரு அழகிய குழி விழுந்ததை கண்டதும் "படார்" என ஒரு சப்தம் இவனுக்கு மட்டும் கேட்டது. பொதுவாக வெடி வெடித்தால் குழி விழும். ஆனால் அவள் கன்னக்குழி இவனுக்குள் ஒரு வெடியைப் பற்ற வைத்திருந்தது.

(தொடரும்)

26 February 2010

பள்ளியும் சமுதாயமும்

5:41:00 AM Posted by புலவன் புலிகேசி , 23 comments
முதன் முதல் அம்மா அப்பாவைப் பிரிந்து எட்டு மணி நேரம் இருந்ததும் அதன் பின் அதையே பழக்கமாக்கியதும் அந்தப் பள்ளிக்கூடம் தான்.ஆரம்பத்தில் எதற்காகப் போகிறோம் என்று எவருக்கும் தெரிந்ததில்லை. அது போலத்தான் பள்ளி வாழ்க்கையை தொடங்கின அந்த இரு சிட்டுகளான ரமேசும், அம்பிகாவும்.


பள்ளிகளில் சீருடை வரக்காரணம் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால் அந்த சீருடையிலும் ரமேஸ் தரம் பிரிக்கப் பட்டான். அவனைத் தரம் பிரித்துக் காட்டியது பின்னால் கிழிந்த அவனது அரைக்கால் சட்டையும், பைக் கிழிந்த அவனது மேல் சட்டையும்தான்.

அம்பிகாவும் ரமேசும் அருகருகே வசிக்கும் தெரு நண்பர்கள். இருவரும் ஒன்றாகத்தான் பள்ளி சென்று வந்தனர். இது வரை இருவருக்குள்ளும் சாதிப் பிரச்சினை வந்ததில்லை. காரணம் சாதி என்றால் என்ன? எனத் தெரியாத விகல்ப்பமில்லாப் பருவமது. இருவரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர்.

மஞ்சள் நிற துணிக்கடை பை, காலை விட நீளமான செருப்பு, சில பாடப் புத்தகங்கள், பழைய சிலேட்டு, சில உடைந்த பல்பங்கள் இவைத் தவிற அந்த வயதில் எதுவும் அவர்களுக்கு பெரிய சொத்தாகத் தெரிந்ததில்லை. பள்ளியும், தெரு விளையாட்டும் அவர்களை பிரித்துப் பார்க்க மனமில்லாமல் வழி நடத்திக் கொண்டிருந்தன.

இப்படியே சென்று கொண்டிருந்த ஒரு நாளில் அம்பிகா பூப்பெய்தினாள். அப்போது இருவரும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள். சில நாடகள் ரமேஸ் தனியே பள்ளி சென்றான். அம்மாவிடம் கேட்டான் "ஏம்மா அம்பி ஸ்கூலுக்கு வரதில்ல?" அதற்கு பதிலாய் அவனுக்குக் கிடைத்தது "நாளை வருவாள்" என்பது மட்டுமே.

"இல்ல அவ வயசுக்கு வந்துட்டாளாம் இனிமே என் கூட வர மாட்டாளாமே? நம்ம ராசாத்தி சொன்னா" என்றான்.

பதில் சொல்ல முடியாமல் "ஆமாம்" என நிறுத்திக் கொண்டாள் தாய்.

இந்த சிலநாள் இடைவெளி இருவருக்குள்ளும் ஒரு நீண்ட இடைவெளியாக மாறத் தொடங்கியிருந்தது. அவள் த்ந்தையுடன் மீண்டும் பள்ளி வந்தாள். ரமேசைப் பார்த்து வெட்கப் பட்டாள். அது அவனுக்கு புதி(ரா)தாக இருந்தது. வீடு திரும்புகையில் வழக்கம் போல் ரமேஸ் அவள் கைப்பிடித்து நடக்க எத்தனிக்க அவள் தட்டி விட்டு சொன்னாள்.

"டேய் ரமேசு இனிமே நான் எந்த ஆம்பளப் பசங்க கூடயும் தொட்டுப் பேசக் கூடாதாமுடா" அம்மா சொன்னாங்க.

"ஏன் அப்புடி?" என்றான்.

"தெரியவில்லை" எனபதை விட அவளுக்கு வேறு காரணம் தெரியவில்லை.


காலமும், சமுதாயமும் இவர்களின் இடைவெளியை அதிகப் படுத்தியிருந்தது.அந்த இடைவெளியே ரமேசுக்கு அவளை வேறு படுத்திப் பார்க்கத் தூண்டியது. இப்போது பதினோராம் வகுப்பு. அவள் அவனுக்கு ஒரு பருவப் பெண்ணாகத் தெரிந்தாள். இருவருக்குள்ளும் ஒரு விகல்பம் தோன்றியிருந்தது.

17 February 2010

உறக்கம் தொலைத்த உறவுகள்....

7:36:00 AM Posted by புலவன் புலிகேசி 49 comments

தமிழ் ஒரு நடுத்தரக்குடும்பத்தை சேர்ந்த திருமணமான இளைஞன். அவன் வேலைப்பார்ப்பது ஒரு கால் சென்டரில். இரவில் பணி பகலில் உறக்கம் என இன்பம் தொலைத்து பொருள் தேடும் பலரில் இவனும் ஒருவன். ஞாயிறு, இதுதான் அவனுக்குப் பிடித்த தினம். ஏனென்றால் அன்றுதான் அவன் கண்கள் முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்.

சனி இரவு பணி முடித்து திரும்பும் போது எதிர் வருபவை அவனுக்குத் தெரிந்ததில்லை. உறக்கத்தை நோக்கிப் பயணிப்பதில் ஒரு சுகம் அவனுக்கு. அந்தப் பயண வேகம் பல முறை நூறு கி.மீ கூடக் கடந்திருக்கிறது. இத்தனைக்கும் ஐந்து கி.மீ தொலைவிலிருக்கும் அலுவலகம் ஞாயிறு அதிகாலை மட்டும் ஐம்பதாக ஆகத் தோன்றும்.

அதனால்தான் இருளைக் கிழிக்கும் அந்த வேகம். வீட்டை நெருங்கியதும் வாகனத்தை சரியான இடத்தில் நிறுத்தக்கூட தோன்றவில்லை அவனுக்கு. அவன் வாகனம், அதுதான் தன் உறக்கத்தின் ஊன்றுகோல் எனத் தோன்றும் அவனுக்கு. வீட்டிற்குள் நுழைந்ததும் ஆடை மாற்றக் கூட அலுப்பாக எண்ணி அப்படியே கட்டிலில் சரிவான்.

அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் அவன் குழந்தையிடம் கொஞ்சி விளையாடுவது என்னவோ கணக்கிட்டுப் பார்த்தால் மாதத்திற்கு இரண்டு மணி நேரம் கூட இல்லை. அந்த குழந்தைக்குத் தெரிந்தது என்னவோ அம்மா மட்டும்தான். அப்பாவைக் கூட அந்நியனாகப் பார்க்கிறது அக்குழந்தை.

இரவுப் பணியிடை வேளைகளில் உறவுகள் பற்றி யோசிப்பான். அவனுக்குப் பிடித்த அவன் தங்கை "ரம்யா". இருவருக்குள்ளும் அப்படி ஒரு பாசப்பிணைப்பு. ரம்யா திருமணமாகி இருப்பது என்னவோ அருகில் உள்ள அம்பத்தூரில்தான். ஆனால் அவளைப் பார்த்து ஆறு மாதமாகிறது. ஒவ்வொரு ஞாயிறும் பார்க்க வேண்டும் என நினைப்பான்.

ஆனால் உறக்கம் அவனை இன்று வரை அனுமதிக்கவில்லை. அப்படி ஒரு ஞாயிறில் அதிகாலை முடிய வேண்டிய பணி ஒரு வெள்ளைக்காரனின் தொ(ல்)லைபேசியால் பத்து மணி வரை நீடித்தது. உறக்கம் அவன் உடலை வாட்டியதால் வாகனத்தை அலுவலகத்தில் விட்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து நுழைந்தான்.

அன்று ரம்யா கணவனுடன் அங்கு வந்திருந்தாள். ரம்யாவைப் பார்த்ததும் தன் மகிழ்ச்சியைக் கூட வெளிப்படுத்த முடியவில்லை அவனுக்கு. "வாம்மா! வாங்க மாப்ள" என சொல்லிக் கொண்டே சென்று கட்டிலில் சரியும் போது கேட்டான் "ரம்யா சாயங்காலமா பேசலாமா?". ரம்யாவுக்கு அதிர்ச்சி "சரிண்ணா"ன்னு சொல்லிட்டு அறைக்கதவை சாத்திச் சென்றாள்.

அண்ணன் அவளுக்கு அந்நியமாகப் பட்டான். மாலை வரை காத்திருந்தாள். சற்றே இருட்டத் தொடங்கியிருந்தது. தமிழ் இன்னும் எழுந்திரிக்கவில்லை. கணவர் வேறு அவசரப் பட அண்ணனிடம் சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டாள். "அண்ணன் ஏன் இப்படி மாறி விட்டான்? ஒரு வேளை வசதி அதிகம் வந்ததால் இந்தத் தங்கை அவன் கண்ணுக்குத் தெரியவில்லையோ?" என எண்ணிக் கொண்டே சென்றாள்.

உறக்க நித்திரையில் அவன் ரம்யாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.

16 February 2010

வெள்ளிநிலாவும் மாறிப்போன என் கதையும்

5:37:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
ராமசாமியும் சோஸ்யக்காரனும்

சின்னையன் ஒரு மிகப்பெரிய சோஸ்யக்காரன்னு பேர் வாங்குனவன். இவனோட பொழப்பே அடுத்தவங்க எதிர்காலத்த பத்தி சொல்லி (?) சம்பாதிக்கறதுதான். ராமசாமி சின்னையனோட உதவியாளன்.

ராமசாமிக்கு உண்ண உணவும் இருக்க இடமும் தந்தான் சின்னையன். சம்பளம்னு இதுவரை எதுவும் கொடுத்ததில்லை. ராமசாமியும் சாப்பாடும் இடமும் கிடைச்சா போதும்னு இருந்துட்டான். சின்னையன் சொல்ல சொல்ல சோஸ்யக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களை எடுத்து வருவதுதான் ராமசாமியின் வேலை.

சின்னையனால் மட்டுமல்ல எந்த ஒரு சோஸ்யக்காரனாலயும் அடுத்தவர் எதிர்காலத்தை கணிக்க முடியாது. வருபவர்களின் வார்த்தைகளை கூர்ந்து கவனிப்பான் சின்னையன். பின்னர் அவரவர் மன நிலைக்கேற்ப அவர்களுக்கு சாதகமாக சோஸ்யம் சொல்லும் வித்தை தெரிந்தவன். நம் மக்களும் மூடநம்பிக்கையில் மூழ்கி போயிருக்கிறார்கள். அதுதான் சின்னையனின் முதலீடு

சின்னையன் சோஸ்யம் பாக்க வருபவர்களுக்கு சொல்லும் சில விடயங்கள்

"உங்க வீட்டுல கூடிய சீக்கிரம் ஒரு விசேசம் நடக்கப் போவுது"

"நீங்க தொழில்ல விருத்தி அடைவீங்க"

"உங்க சொந்தக்காரங்கள்ள ஒருத்தருக்கு உடல் நிலை சரியில்லாம போவும்"

"கொஞ்ச நாளைக்கு முன்ன உங்களுக்கே உடல்நிலை சரியில்லாம போயிருக்குமே?"

இது போன்ற பொதுப்படையான சோஸ்யம் மட்டுமே சொல்லத் தெரியும். இவை உலகில் உள்ள பலருக்கு பொதுவானது. அவர்களும் யோசிக்காமல் அட சரியா சொல்றாரேன்னு காசு கொடுத்து போவார்கள். இவனுக்கு மட்டுமல்ல ஊரில் திரியும் அனைத்து சோஸ்யக்காரர்களும் இது போலத்தான் வாழ்க்கையை ஓட்டி கிட்டிருக்காங்கன்னு ராமசாமிக்கு நல்லாவே தெரியும்.

ராமசாமிக்கு உடல்நிலை சரியில்லைன்னாலும் விடுப்பு எடுக்க முடியாது. அவன் தன் எடுபிடி வேலைகளை செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் சின்னையனிடம் திட்டு வாங்க வேண்டும். ராமசாமி ஒரு அடிமை போல் சின்னையனிடம் வேலை பார்த்து கொண்டிருந்தான்.

ராமசாமிக்கு அடிக்கடி தோன்றும் "என்னடா இவன் இந்த ஊர் மக்களை எல்லாம் ஏமாத்தி பொழப்பு நடத்திட்டுருக்கானே..நாம வேற அதுக்கு உடந்தையா இருக்கமே" இதெல்லாம் தப்புன்னு தெரிஞ்சும் வயத்துப் பொழப்புக்காக இப்புடி ஏமாத்தி திரியுறமேன்னு வருத்தப் படுவான்.

ஒரு நாள் ராமசாமி எப்படியாவது இந்த தொழிலில் இருந்து விலகனும்னு முடிவெடுத்தான். அதற்கு ஆயத்தமானான்.

---சின்னையன் சொன்ன சோஸ்யக்குறிப்பை எடுக்க வெளியில் வந்தவன் பல ஆண்டுகளாக பிரிக்கப்படாத தன் இறக்கையை விரித்து வான் நோக்கி பறந்தான். பறக்கும் போது தான் விடுதலையடைந்ததை விட இனி தன்னால் மக்கள் ஏமாற்றபட போவதில்லை என்ற சந்தோசமே ராமசாமியிடம் நிறைந்திருந்தது.

-------------------------------
இதுதான் வெள்ளிநிலாவிற்கு நான் அனுப்பியக் கதை. அதன் முடிவில் சில மாற்றம் செய்திருப்பதாக நண்பர் ஷர்புதீன் சொல்லியிருந்தார். அந்த முடிவு இதோ

----சில நாள் கழித்து சின்னையன் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தான். "ஏங்க யாராவது ராமசாமிய பார்த்தீங்களா? கொஞ்ச நாளா ஆளைக் காணோம்! என் ஜோஸ்ய குறீப்புகளையும் காணோம்."

இறுதி நேரத்தில் அனுப்பப்பட்டதால்தான் இந்த மாற்றம் நிகழ்ந்து போனது. இப்போ நீங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
--------------------------------

11 February 2010

யானையும் பாகனின் அங்குசமும்

5:44:00 AM Posted by புலவன் புலிகேசி 37 comments
அன்பு திருமங்கலக்குடி கிராமத்தில் வசிக்கும் 8வய்து சிறுவன். அந்த ஊரில் சிறப்பு மிக்க இடமாக இருப்பது அருகிலிருக்கும் "சூரியநாராயணன் கோவில்". அந்த கோவில் யானை வந்தால் அன்பு அதன் பின் ஓடுவதும் அதை விந்தையாகப் பார்ப்பதும் எல்லா சிறுவர்களிடமும் உள்ள குணமாகவே இருந்தது.

யானை என்றால் என்னவென்று தெரியாத ஒன்னறை வயது சிறுவனாக இருந்த போது அவன் அப்பாதான் யானை என நினைத்து சவாரி செய்து கொண்டிருந்தவன் முதன் முதலில் நிஜ யானையைப் பார்த்து அதன் மீது சவாரி செய்தது அவனது மூன்றாம் வயதில். ஆனால் அன்று முரண்டு பிடித்த யானையை அங்குசத்தால் பாகன் குத்திய போது அவன் அலறினான். அதன் பின் அவன் யானை மீது சவாரி செய்ததில்லை.

இருந்தாலும் யானை அவனுக்கு ஒரு விந்தை உயிராகவே தெரிந்தது. யானையின் மணியோசை கேட்டால் உறக்கத்திலிருந்தாலும் எழுந்தோடுபவன். ஒரு நாள் பள்ளி முடித்து வரும் போது "நம்ம தெருவுக்கு யானை வந்துருக்காமுடா" என தெரு நண்பன் சொன்னதும் வழக்கம் போல் ஓடத் தொடன்கினான்.

அவன் ஓட்டத்தைத் தடை செய்ய முயன்ற காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடும் போது பக்க வாட்டு மரங்களும், வீடுகளும் எதிர்த் திசையில் ஓடிக் கொண்டிருப்பதாக உணர்ந்தான். தெருவை நெருங்கிய போது அவன் ஓட்டத்துடன் சேர்ந்து மரம் வீடுகளின் ஓட்டத்தின் வேகமும் குறைந்து யானைக்கருகில் வந்து நின்றே போனது.

மூச்சிறைப்புடன் நிமிர்ந்து பார்த்தவன் தனக்கு வாங்கும் மூச்சு ஏன் மரத்திற்கும், வீட்டிற்கும் வாங்கவில்லை என்ற குழப்பத்தை மறந்து அந்த விந்தை உயிரினத்தைப் பார்த்த போது பாகன் அதை அங்குசத்தால் குத்தியதைக் கண்டான். கண்களை மூடி அழுது கொண்டே வீடு நோக்கி ஓடினான். இப்போது எதிர்த்திசையில் ஓடிய அவை அவனுக்குத் தெரியவில்லை.

அதன் பின் பலமுறை யானையின் கண்களில் (லி)ழியும் நீரைப்பார்த்து கலங்கியிருக்கிறான். இவனுடன் சேர்ந்து நாட்களும் ஆண்டுகளும் ஓட அப்பாவின் பணியிட மாற்றம் என ஓடி 28வயதைக் கடந்திருந்தான். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பின் மனைவியுடனும் கையில் குழந்தையுடனும் வந்தவன் அந்த கோவிலுக்கு சென்றான்.

யானையைப் பார்த்த அவனது குழந்தை சிரிக்க அதை இன்னும் மகிழ்வூட்ட பணப்பையிலிருந்து ஒரு 1ரூ நாணயத்தை எடுத்து யனையிடம் நீட்டினான். வாங்க மறுத்த யானையை பாகன் வழக்கம் போல் அங்குசத்தால் குத்த யானை அலறியது. இவன் பிள்ளையும் அலறினான்.

பாகனுக்கு பயந்த யானை அந்த காசை வாங்கிக் கொண்டு குழந்தையின் தலையில் தன் கையை வைத்ததும் குழந்தை சிரித்தான். இவனும் குழந்தையின் சிரிப்பில் மகிழ்ந்தான். இப்போது யானையின் கண்களில் வழிந்த நீர் அவனுக்குத் தெரியவில்லை.

11 January 2010

மறுமணம்

6:29:00 AM Posted by புலவன் புலிகேசி 46 comments
தேன்மொழி, வயது 20 பூங்காவூர் கிராமம். பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்தாள். அதற்குமேல் படித்தால் கெட்டு போய்டுவாளாம். அப்புடின்னு தாய்மாமன் சபாநாயகம் சொன்னதால் படிப்பை நிறுத்தி விட்டனர் அவளது பெற்றோர்.

சபாநாயகம், வயது 35. ஊருக்குள் கட்ட பஞ்சாயத்து செய்து கொண்டு திரியும் முரடன். ஆனால் நல்லவன். தேன்மொழி என்றால் அவனுக்கு உயிர். ஆனால் தேன்மொழிக்கு இவனை பிடிக்காது. காரணம் அவனது முரட்டுத்தனம்.

பக்கத்து வீட்டு பங்கஜம் அம்மாள். இவர் வீடுதான் படிப்பை நிறுத்திய பிறகு தேன்மொழியின் சரணாலயம். பங்கஜம் அம்மாளின் தம்பி ரமேஷ் பொறியியல் முடித்து ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணி புரிபவன். எப்போதாவது விடுப்பு எடுத்து பங்கஜம் அம்மாள் வீட்டில் வந்து தங்குவது அவனது வழக்கம்.

அப்படி ஒரு நாளில் ரமேஷ் தொலைக்காட்சியை மேய்ந்து கொண்டிருந்த சமயம் சப்தம் கேட்டு வெளியில் ஓடி வந்தான். தேன்மொழிதான் சப்தம் போட்டு கொண்டிருந்தாள். ஆட்டுக்குட்டியை கல்லால் அடித்து விட்டானாம் காக்கையன்.அவளுக்கு ஆடு, நாய், கோழி என்றால் உயிர். அதுகளுக்கும் தேன்மொழி என்றால் உயிர்.

காக்கையனைப் பிடித்து அடித்து அழவைத்து விட்டு அமைதியானாள். அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருத ரமேஷ் புன்னகைத்தான். அவனை பார்த்ததும் ஆட்டு குட்டியை தூக்கி கொண்டு வீட்டுக்கு ஓடி விட்டாள். ரமேசுக்கு அவளை பிடித்திருந்தது. அவளுக்கும்தான். ஆனால் ஜாதி அவளை தடுத்தது. ஆனால் ரமேஷின் ஒவ்வொரு வருகையையும் எதிர்பார்த்து காத்திருப்பாள்.

ஒரு நாள் திடீரென தேன்மொழியின் பாட்டி வீட்டிற்கு வந்து "எலேய் ராசு(தேன்மொழியின் அப்பா) என் பேத்திய என் மொவன் சபாநாயகத்துக்கு குடுத்துடுடா" என்ற வார்த்தை கேட்டு ஆடிப் போனாள் தேன்மொழி. ஆனால் அவளின் பெற்றோர் கொஞ்சமு யோசிக்காமல் சம்மதம் சொன்ன போது, "மாமா எதுக்கும் தென்மொழிய ஒரு வார்த்தை கேட்டுருங்களேன்" என்றான் சபாநாயகம்.

அதுக்கு ராசு "என்னடா கேக்குறது பொட்டக் கழுதய" என்றான். தேன்மொழி கலங்கி போனாள். திருமணம் நிச்சயித்தவாறு நடந்து முடிந்தது. அதன் பின் ஒரு நாள் மீண்டும் ஊருக்கு வந்த ரமேஷ் தேன்மொழியை பக்கத்து வீட்டில் காணாமல் தவித்தான். பங்கஜத்திடம் கேட்டே விட்டான்.

"அக்கா உன்னையே சுத்தி சுத்தி வருமே பக்கத்து வீட்டு பொண்ணு எங்க காணும்?"

"அவ மாமனை கல்யாணம் பண்ணி பக்கத்து தெருவுக்கு போய்ட்டா" என்றதும் ஆடிப்போனான். உடனே புறப்பட்டு ஊருக்கு சென்று விட்டான்.

6 மாதத்திற்கு பின்னால்

அக்கா வீட்டில் ரமேஷ்.அப்போதுதான் தேன்மொழி அங்கு வந்தாள். வெள்ளை புடவையில் வந்தவளை பார்த்து திடுக்கிட்டு எழுந்தான். இவனை பார்த்ததும் கண்ணை கசக்கி கொண்டு ஓடி விட்டள். அக்காவிடம்

"என்ன ஆச்சு?"

"அவனுக்கு எதோ கேன்சர் வியாதியாம் அத மறச்சி கல்யாணம் பண்ணி வச்சி இவ வாழ்க்கைய கெடுத்து புட்டானுங்க" என்றாள்.

ஒரு முடிவுக்கு வந்தவனாய் அக்காவை அழைத்து கொண்டு தேன்மொழி வீட்டுக்கு சென்றவன் ராசுவிடம் பேசினான்

"உங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றதும் கோபத்தில் கொதித்தெழுந்த ராசு

"ஏண்டா நாய என்ன தைரியம் இருந்தா வேத்து சாதிக்கார பய நீ ஒரு முன்டச்சிய பொண்ணு கேட்டு வந்துருப்ப" என்று ரமேஷை அடித்தே விட்டான்.

"அய்யய்யோ சாமிக்குத்தமாயிப் போச்சே என் பேத்திய கட்டிக்கிறேன்னு சொல்லி புட்டானே" என கத்தி கொண்டிருந்தாள் பாட்டி. இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த தேன்மொழி திடீரென ஒரு இரும்பு பெட்டியை தூக்கி கொண்டு வந்து அவர்கள் முன் நின்றாள் மஞ்சள் நிற புடவை நெற்றி நிறைய குங்குமம்.

"அப்பா நான் ரமேஷ் கூட போறேன் என்ன ஆசிர்வாதம் பன்னுங்க" என்றவளுக்கும் இரண்டு அடி விழுந்தது. அப்பாவை பிடித்து தள்ளி விட்டு பேசினாள்.

"பொட்ட கழுத பொட்ட கழுதன்னு சொல்லியே என்னய படிக்க விடாம பண்ணி ஒரு வியாதி காரனுக்கு கட்டி குடுத்து என் வாழ்க்கைய சீரழிச்சு புட்டீங்க. நான் ஒன்னும் பொட்ட கழுத இல்ல சாதாரண மனுஷி. எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கு" எனக் கத்தியவளை பார்த்து வியப்பில் வாயடைத்து போனான் ராசு.

தேன்மொழி ஒரு புதுமைப் பெண்ணாய் தெரிந்தாள் ரமேசுக்கு. அவளை கைபிடித்து அழைத்து செல்லும் போது பாட்டி கத்தினாள் "எலே ராசு இனிமே உனக்கு அவ மவ கெடையாது. அவள தல முழுகிடு. சிறுக்கி நம்ம குடும்ப மானத்த கப்பலேத்திட்டு போறா. நல்லாவே இருக்க மாட்டா" என்றாள்.

இதுதான் தேன்மொழியின் மறுமணத்திற்கு கிடைத்த வாழ்த்து.

24 December 2009

யார் அவன்?

5:31:00 AM Posted by புலவன் புலிகேசி 36 comments
கந்தசாமி மிகப்பெரும் அரசியல்வாதி. அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவன் என்று கட்சி தலைமையில் அவன் மீது ஒரு அபிப்ராயம். அவன் யார் மீதும் நம்பிக்கையில்லாதவன் ஒருவனை தவிர. உண்மையில் சொன்னால் கந்தசாமி ஒரு அரசியல்வியாதி.

ஆம் இந்த இருபது ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவன் குடும்பத்திற்காக மட்டுமே சேவை செய்திருக்கிறான். மக்களை பற்றி தேர்தல் நேரத்தில் மட்டுமே கவலைப் படும் வழமையான அரசியல்வியாதிகளுள் அவனும் ஒருவன். அவனுக்கு துணையாக கூட்டாளியாக அந்த ஒருவனும்.

கந்தசாமிக்கு அவன் இருக்கிறான் என்ற எண்ணம் தான் இத்தனை தவறுகளையும் செய்ய தூண்டியது. இவன் எது செய்வதாக இருந்தாலும் அவனிடம் சொல்லி விட்டுதான் செய்வான். எவ்வளவு லஞ்சம் கிடைத்தாலும் நேர்மையாக(?) அவனுக்கும் பங்கு கொடுத்து விடுவான்.

ஆனால் கந்தசாமிக்கு துணையாக நிற்பவன் மீது மக்களில் பலருக்கு நல்லவன் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் தகுதியற்றவன் அவன் என்பது அதே மக்களில் சிலரின் அபிப்ராயம்.

அடுத்த சட்டசபை தேர்தல் நெருங்கியது. கந்தசாமி இந்த முறையும் தான் தான் வெற்றி பெற வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தான். அந்த ஒருவனின் இல்லத்தில் வைத்து அவன் உதவியுடன் தொகுதி மக்களுக்கு பணமாகவும் பொருளாகவும் லஞ்சம் பட்டுவாடா செய்தான்.

தேர்தல் நாள் அன்று எதிர்கட்சிக்காரனும் கந்தசாமி ஆட்களும் மாறி மாறி கள்ள வாக்குகள் செலுத்தினர். கந்தசாமி செலவு செய்த பணத்தாலும் போட்ட கள்ள வாக்குகளாலும் வெற்றி பெற்றான். அன்றுடன் அந்த மக்களையும் மறந்து விட்டான்.

ஆனால் அந்த ஒருவனுக்கு மட்டும் மறவாமல் அவன் தொகுதியில் ஒரு வீடு கட்டி கொடுத்தான். மக்களும் மகிழ்ச்சியாக அந்த இல்லத் திறப்பு விழாவிற்கு வந்து விழாவை சிறப்பித்தனர். கந்தசாமி செய்தது நல்ல விடயம் என்று பாராட்டினர்.

அதோடு முடித்து கொண்டு மீண்டும் குடும்பத்தை முன்னேற்றுவதில் குறியாயிருந்தான். வழக்கம் போல் மக்களுக்கும் கந்தசாமி மீது கெட்ட அபிப்ராயம் தோன்றி அவன் மீது கோபம் வர வைத்தது. ஆனால் இந்த கோபத்தை எல்லாம் தேர்தலின் போது மட்டும் பணம் கொடுத்து சரிசெய்து விடலாம் என்ற அரசியல் தந்திரம் தெரிந்தவன் கந்தசாமி.

இப்படி கந்தசாமி மீது அடிக்கடி வரும் கோபம் மக்களுக்கு ஒரு முறை கூட அவனின் கூட்டாளியான அந்த ஒருவன் மீது வரவில்லை. என்ன மக்கள் இவர்கள். ஒருவேளை அந்த கோபம் அவன் மீது வந்திருந்தால் கந்தசாமி போன்றவர்கள் அரசியலில் இருந்து துரத்த பட்டிருப்பார்கள் என்று சிந்திக்கத் தெரியாதவர்கள்.

சரி யார் அந்த ஒருவன்? என்று கேட்பது புரிகிறது. வேற யாரு மக்களை யுகம் யுகமாக ஏமாற்றி கொண்டிருக்கும் கட்வுள்(?). இவனுக்கு கந்தசாமி மட்டும் கூட்டாளியல்ல. இது போல பல தவறு செய்பவர்கள் இவனது கூட்டாளிகள். அவனுக்கு பெயர் கடவுள். என்ன கொடுமை இது.

பி.கு: கடவுள் என்பவன் மனிதத்தில் ஒரு நல்ல குணமாக இருக்க வேண்டுமே தவிற கல்லாகவோ, கோவிலாகவோ இருந்து தவறு செய்பவர்களின் கூட்டாளியாக இருக்க கூடாது. அப்படி பட்டவன் கடவுளாக இருக்கவே முடியாது.

02 December 2009

ஊருக்குள்ள நாங்கல்லாம்....

10:15:00 AM Posted by புலவன் புலிகேசி 31 comments
மொக்கை கைதி எண்:506, தப்பியோடிய போது போலீசாரால் சுட்டு கொலை செய்யப் பட்டான் என்ற செய்தியை நாளிதழில் படித்தான் வஜ்ரவேலு. "டேய் கந்தா மொக்கைய சொன்ன மாதிரியே போட்டாங்கேடா. அந்த இனுசுபெட்டர் பயல வரச் சொல்லி பணம் குடுத்து அனுப்புச்சுடு".

மொக்கை - வஜ்ரவேலு குப்பத்து ரவுடியாக இருந்ததிலிருந்து அவனுக்காக நாயாக உழைத்தவன் (கொலை பன்றது, கை கால் எடுக்குறது தான்). ராசு- இவந்தான் மொக்கைக்கு நெருங்கிய நண்பன். இவனும் வஜ்ரவேலுவின் ஆள்தான். இருவரும் சேர்ந்து தான் மதுரையில வஜ்ரவேலுவுக்கு புடிக்காதவங்களை எல்லம் போட்டுத் தள்ளி கிட்டிருந்தாங்கே.

"எலே ராசு எங்க்டா அந்த மொக்க்ப்பய" என்றான் வஜ்ரவேலு. "ஐயா நேத்துதான் மொக்கைக்கு கண்ணாலமாச்சுங்க". "என்னடா சொல்லவே இல்ல".

"இல்லீங்கய்யா அவன் அத்தப் பொண்ண கல்யாண மண்டபத்துலருந்து தூக்கிட்டு வந்து...." என்று இழுத்தான். "சரி இந்தா இந்த பணத்த கொண்டு போயி அவங்கிட்ட குடுத்துட்டு வா" என்றான் வஜ்ரவேலு. கடத்தி கிட்டு வந்து கட்டிகிட்டாலும் வள்ளியும் மொக்கையும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தனர்.

"ஏண்டா மொக்க தங்கச்சிக்கு உன் மேல இருந்த கோவம் போயிடுச்சா" என்றான் ராசு. "அதெல்லாம் போயி நாங்கதான் ஒன்னாயிட்டமுல்ல. அவளுக்காகத்தாண்டா இனிமே வாழ்க்கையே" என்றான் மொக்க.நண்பனை நினைத்து பெருமை பட்டு கொண்டான் ராசு. இருவரும் புறப்பட்டு வஜ்ரவேலு வீட்டுக்கு போனார்கள்.

"டேய் மொக்க நம்ம தலைவருக்காக ஒரு செய்கை செய்யனும்டா" என்றான் வஜ்ரவேலு. "சொல்லுங்கய்யா செஞ்சி புடுவோம்" என்றான் மொக்க. "நம்ம எதிர்கட்சி ராமசாமியோட சுத்திகிருப்பானே ரஞ்சித்துனு ஒரு பய..அவனத்தேன்" என்றான். "சரிங்கய்யா நாங்க பொறப்படுறோம்" என்றான் மொக்க. "டேய் ராசு அவன பாத்துக்கடா கோவக்காரப்பய எதாவது ஏடாகூடம் பன்னிடப் போறான்". "சரிங்கய்யா" என்று பதிலளித்து விட்டு இருவரும் சொன்ன 3வது நாளில் காரியத்த முடிச்சிட்டானுங்க.

ஒரு நாள் வஜ்ரவேலு மொக்கய தனியா கூப்பிட்டு "டேய் மொக்க நம்ம தலைவருக்காக இன்னொருத்தன.." என்றான். "சொல்லுங்கய்யா" என்றான் மொக்க. "நம்ம ராசுவத்தாண்டா போடனுமாம்" என்றதும் பதறிப் போனான். "என்னய்யா சொல்றீங்க" என நடுக்கத்துடன் கேட்டவனை கந்தன் உள்ளே அழைத்து சென்று

"டேய் மொக்க இன்னைக்கி நீ இல்லேன்னா அவன நாளைக்கு வேற எவனாவது போடப்போறான். அவன் ஒன்டிக்கட்டடா உனக்கு குடும்பம் இருக்கு ஐயாவ பகச்சிக் கிட்டு வெளியில போறதுக்கு இது படம் இல்லடா. உன்னைய போட்டு பொண்டாட்டிய தூக்கிடுவாங்கேடா" என்றான்.

மொக்கை அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு சென்றான். மறுநாள் ராசு வாயில் பீடியை பற்றவைத்துக் கொண்டு "டேய் மொக்க வாடா கம்மாய்க்கு போயிட்டு வருவோம்" எனக் கூப்பிட்டு இருவரும் புறப்படும் போது "ஏண்டா எங்கடா நேத்து உன்ன ஆளையே காணும்" என்றான் ராசு. சற்று கலங்கியவனாய் "ஐயாவோட தோப்புல காவக்காரன் வரலையாம் அதனால அங்கயே..." என்றிழுத்தான்.

இருவரும் கம்மாயை நெருங்கிய போது எதிர்பாராத நேரத்தில் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராசுவின் இடப்பக்க நெஞ்சில் குத்தினான் மொக்க. "என்னடா மொக்க...." என்றவாறு சரிந்தான் ராசு. அவன் நெஞ்சில் வழிந்த ரத்தத்தோடு இவன் கண்ணில் வழிந்த கண்ணீர் கலக்க "என்னய மன்னிச்சிடுடா ராசு" என ராசுவை கட்டியழுதான்.

முன்னரே அங்கு ஒளிந்திருந்த காவலர்கள் மொக்கையை கைது செய்ய, நீதிமன்றத்தில் மொக்கைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஐயா வெளியில் எடுப்பார் என்றிருந்த மொக்கையிடம் அந்த காவலன் "டேய் மொக்க ஐயா வெளிய வண்டியோட நிக்கிறாரு உன்னய தப்பிச்சி வர சொன்னருன்னு சொல்லி தப்பிக்க வச்சி போட்டுத் தள்ளிட்டான்".

எதிர்கட்சி ராமசாமி வீட்டு தொலைபேசி மணி ஒலித்தது "ஐயா நீங்க சொன்ன மாதிரியே அவனுங்க ரெண்டு பேரையும் முடிச்சாச்சு" என்றான் வஜ்ரவேலு. "கவலையே படாதடா நீதான் இந்த தேர்தல்ல உன்னோட தொகுதியில மந்திரி..ஆளுங்கட்சிக்கார பய செய்யாதத நான் உனக்கு செய்யறன்டா" என்றான்.

எதற்காக கொல்லப் பட்டோம் என தெரியாமலே ராசுவும், மொக்கையும் இறக்க இன்று வள்ளி கையில் குழந்தையுடன் நடுத்தெருவில்...........

26 November 2009

புகையும் காதல்....

9:08:00 AM Posted by புலவன் புலிகேசி 34 comments
2010 சனவரி 13 சென்னை எழும்பூர் புகைவண்டி நிலையம்:. மயிலாடுதுறைக்கு செல்லும் வண்டி 8வது நடைமேடையில் இருந்து 10 மணி 30நிமிடத்திற்கு புறப்படும் என்ற அறிவிப்பைக்.கேட்டு கொண்டே ஆனந்த விகடன் வாங்கிக கொண்டிருந்தான் வேலு.

வேலு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளன். பொங்கல் திருநாள் விடுமுறையுடன் சேர்த்து தனக்கு பெண் பார்க்கும் ஏற்பாட்டிற்காகவும் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு செல்வதற்கு ஆயத்தமாக எக்மோர் நிலையத்திற்கு வந்து சேர்ந்தான். மயிலாடுதுறைக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அகலப்பாதை பணிகள் முடிந்து இன்றுதான் முதல் முறை புகைவண்டி இயக்கப்படுகிறது.

9 மணி 30 நிமிடம்: வண்டியில் ஏறி தனது இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்து விகடனை படிக்கத் தொடங்கினான். வெளியில் ஒட்டப்பட்டிருந்த பயணிகள் இருக்கை விபரத்தை பார்த்து கொண்டிருந்த 4 பெண்கள் தனியாக நின்று கொண்டிருந்த ஐந்தாமவளிடம் "ஏய் சந்தியா அந்த 6வது இருக்கை(சீட்) ஒரு பையன்டி" என்றதும் "இதே வேலையா போச்சு உங்களுக்கு வாங்கடி உள்ள" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் சந்தியா.

தனது இருக்கையின் எதிரே அமர்ந்திருந்த வேலுவுக்கு வணக்கம் (ஹாய்) சொல்லிவிட்டு அமர்ந்தாள் சந்தியா.பின்னால் வந்த தோழிகள் "என்ன சந்தியா எங்களுக்கு முன்னாடியே வந்து மச்சான கவுத்துட்ட போல" என்று சொல்லி கொண்டே வந்து இருக்கைகளில் அமர்ந்தனர். இந்த ஐந்துப் பெண்களும் சத்தியபாமா கல்லூரியில் மென்பொருள் பொறியியல் இறுதியாண்டு மாணவிகள்.

அதில் ஒருத்தி வேலுவிடம் "மச்சான் எங்க போறீங்க" என்றாள். விகடனை விலக்கி மயிலாடுதுறை என்றான். "ஏய் சந்தியா நீதான் முதல்ல ஏறுன கடைசி வரைக்கும் மச்சான் கூட போகப் போற! வண்டியில சொன்னன்டி" என்றவளை சந்தியா அதட்டினாள். சந்தியாவுக்கு மயிலாடுதுறை, மற்ற 4 பேரும் செல்லும் வழியில் உள்ள சிதம்பரத்தில் இறங்கி விடுவர்.

அனைவரும் கேலி செய்த போதும் புன்னகையயும் வெட்கத்தையும் மட்டும் பதிலாக அளித்து விட்டு அமைதியாக .ஆர். ரகுமான் இசையை அலைபேசி உதவியில் கேட்டு கொண்டிருந்த சந்தியாவின் மவுனம் அவனுக்குப் பிடித்திருந்தது. முதல் பார்வையில் காதலை சொன்னவர்கள் குறைவுதான். வேலுவும் அந்த ரகம் தான்.

பயணத்தின் போது வைத்திருந்த உணவு பண்டத்தை பகிர்ந்து கொண்டிருந்த சந்தியா "நீங்களும் எடுத்துக்குங்க" என்று வேலுவிடம் சொன்னாள். தோழிகள் மீண்டும் இருவரையும் இணைத்து கேலி செய்ய பயணம் கேலி, கிண்டல் கொஞ்சம் உறக்கத்துடன் சென்று கொண்டிருக்க சிதம்பரம் வந்தது. வேலுவிடமும் சந்தியாவிடமும் கேலி கிண்டலுடன் தோழிகள் விடை பெற்றனர்.

சிதம்பரம் தாண்டிய பின் சந்தியா "என்னுடைய தோழிகள் இவ்வளவு கேலி செய்த போதும் பொறுமையாகவும், மவுனமாகவும் அவர்களுக்கு பதில் சொன்னீங்களே...உங்களுக்கு கோபமே வராதா?" என்றாள். அதற்கு புன்னகையை பதிலாக அளித்து விட்டு இவன் .ஆர்.ரகுமான் (இப்போது ஆனந்த விகடன் அவள் கையில்) பாடல் கேட்க ஆரம்பித்தான். அவனின் அந்த பொறுமை அவளுக்கு பிடித்திருந்தது. உண்மையில் சொன்னால் அவளும் வேலு ரகம் தான்.

ஊர் வந்ததும் இருவரும் இறங்கி காதலை சொல்லாமல் புகைவண்டி சினேகிதர்களாக பிரிந்தனர். பொங்கல் திருநாள் முடிந்து மூன்றாவது நாள் வேலுவுக்கு பெண் பார்க்கும் படலமாக பெண் வீட்டிற்கு சென்றனர். கையில் காபியுடன் வந்த பெண்ணைப் பார்த்து விட்டு அம்மாவிடம் "பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றான்.

இருவரும் வீட்டின் பின்புறமிருக்கும் கிணற்றடியில், வேலு அவளிடம் "சந்தியா நான் உன்னை காதலிக்கிறேன்" என்று தன் புகைவண்டி காதலை சொன்னதும் சந்தியா வெட்கத்தை சம்மதமாக கொடுத்து விட்டு உள்ளே ஓடினாள்.

பி.கு: இந்த சிறுகதையை “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.

18 November 2009

ராமன் இன்றும் ராமனாக...

10:50:00 AM Posted by புலவன் புலிகேசி 30 comments
ராமுவுக்கும் சீதாவுக்கும் திருமணம் நடந்தது.

காதல் திருமணம் தான். ஆனால், இரு வீட்டார் சம்மதத்துடன்.

இவர்கள் திருமணத்துக்கும், ஏன் காதலுக்கும் கூட அனுமார் போல் ஒரு நண்பன்தான் காரணம். அவன்தான் பரத்.

மூவரும் கல்லூரி நண்பர்கள். பரத்தும் சீதாவும் நல்ல நண்பர்கள். இருவரும் நண்பர்கள் என்பதை விட அண்ணன் - தங்கை போல. அதனால் தான் பரத்தின் உதவியுடன் அவளை காதலித்துத் திருமணம் செய்ய முடிந்தது.

தன் சொந்தத் தங்கையின் திருமணம் போல் முன்னின்று திருமணத்தை நடத்தி விட்டு ஊர்த் திரும்பினான்.

முதலிரவு அறையில் ராமுவும் சீதாவும்.

"பரத் மாதிரி ஒரு நண்பன் கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கனும் இல்ல," என்றான் ராமு.

"ம்.. என் கூடப் பொறந்தவன் கூட இந்த அளவுக்கு என் திருமணத்துக்காகக் கஷ்டப்பட்டிருக்க மாட்டான்," என்றாள் சீதா.

"நான் ஒன்னு சொன்னா தப்பா நெனைக்க மாட்டியே?" என்றான் தயக்கத்துடன்.

"ம்.. சொல்லு" என்றாள்.

"எங்க அப்பா அம்மா சொந்தக் காரங்களுக்குலாம் நீயும் பரத்தும் பழகுறது புடிக்கல. அதனால..." என இழுத்தான்.

'ராமாயண காலம் முதல் இன்று வரை ராமன் திருந்தவே இல்லை,' என மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் சட்டென ராமுவிடம், "நேத்தே பரத் எங்கிட்ட இனிமே நாம பேசவோ சந்திக்கவோ வேணாம்-னு சொல்லிட்டுதான் ஊருக்குப் போனார்," என்றாள்!

இந்த சிறுகதை இளமை விகடனில் வெளிவந்துள்ளது.

உங்கள் வாக்குகளை தமிழ்மணத்திலும் தமிழிஸிலும் மறக்காமப் போடுங்க

09 November 2009

நான் டி.சி.எஸ் நீ...?

11:03:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments

  பாலா, சீனு இருவரும் ஒரே கல்லூரியில் எம்.சி.ஏ மாணவர்கள். பாலா வகுப்பில் முதல் பென்ச். சீனு எப்போதுமே கடைசி பென்ச் தான்.

  ஆசிரியர்களின் பார்வையில் பாலா நன்றாகப் படிக்கக்கூடியவன். ஆம் உண்மைதான் கணிதமாக இருந்தாலும் மனப்பாடம் செய்துவிடுவான்.

  ஆனால் சீனு சுமாராகப் படிக்கக்கூடியவன் என்பது ஆசிரியர்களின் பார்வை. நமது கல்வித்திட்டத்தில் மனப்பாடம் செய்பவன் புத்திசாலி, செய்முறையில் முயற்சிப்பவன் அறிவில் குறைந்தவன் தானே.

  சீனுவும் அப்படித்தான், எது படித்தாலும் அதை முயற்சித்துப் பார்ப்பான். தான் முயற்சித்ததைத்தான் தேர்விலும் எழுதுவான். மனப்பாடம் செய்து எழுதும் பழக்கமில்லாதவன்...

  தேர்வுகளில் கேட்கப்பட்ட புரோகிராம்களின் உதவியில் சீனு பெற்ற மதிப்பெண்கள் 56%.ஆனால் பாலா  91% (என்னே நமது கல்விமுறை).

  கல்லூரியின் இறுதியாண்டில் டி.சி.எஸ் நிறுவனத்திலிருந்து பணிக்கானத் தேர்வு அந்தக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள குறைந்தது 60% மதிப்பெண்கள் தேவை. அதனால் சீனுவால் கலந்து கொள்ள இயலவில்லை.

  பாலா அதில் கலந்துகொண்டு பணிநியமன ஆணை பெற்றான். கல்லூரி முடிந்து நான்கு ஆண்டுகள் முடிந்திருந்தது. பாலா டி.சி.எஸ் சிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு ஓராண்டுகாலமாகியிருந்தது. 

  அப்போது ஒரு நிறுவனத்திலிருந்து அவனுக்கு பணிக்கான தேர்வுக்கு அழைப்பு வந்தது. டி.சி.எஸ் அனுபவத்தால் பணியும் கிடைத்தது. பணிநியமன ஆணை பெறுவதற்கு எம்.டி அறைக்கு சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். காரணம் அந்த நிறுவனத்தின் எம்.டி சீனு...

04 November 2009

தன்னம்பிக்கைக்கும் தலைக்கணத்துக்கும்............

9:59:00 AM Posted by புலவன் புலிகேசி 29 comments

குமரன், தொழில்நுட்பக்கல்வியை முடித்து சென்னையில் பயிற்சி முடித்து தமிழகத்தில் வேலை கிடைக்காமல் அரபு நாடு சென்று கடினப்பட்டு உழைத்து தமிழகத்தில் தொழில் துடங்கும் அவனது ஆசைக்குத் தேவயானப் பணத்தை சேமித்தான். அதற்காக அங்கு அவன் தினசரி பனிரெண்டு மணிநேர பணிக்குப் பிறகும் ஓ.டி க்காக உழைத்தான்.

போதுமடா இந்த வெளிநாட்டுப் பொழப்பு என்று முடிவெடுத்து சொந்த ஊரான ஆடுதுறைக்கு வந்து சேர்ந்தான். என்னத் தொழில் செய்யலாம் என்று யோசித்தவனுக்கு மகாலிங்கம் சட்டென்று நினைவுக்கு வந்தார். மகாலிங்கம் ஆடுதுறையில் இருக்கும் ஒரே ஒரு பெரிய பல்பொருள் அங்காடியின் உரிமையாளர். எது கிடைத்தாலும் அதை காசாக்கும் திறமை படைத்தவர்.

சரி நாமும் ஒரு பல்பொருள் அங்காடி ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்துடன் மகாலிங்கத்திடம் கருத்து கேட்க சென்றான்.

"வாத் தம்பி எப்ப துபாயிலேர்ந்து வந்த?" என்றார். 

"நேத்துதான் அண்ணாச்சி" என்று சொல்லிவிட்டு மெல்ல ஆரம்பித்தான். 

"அண்ணாச்சி நானும் உங்களை மாதிரி ஒரு பல்பொருள் அங்காடி ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன். அதுக்கு உங்க தயவு வேணும். இந்த சரக்குலாம் எங்கருந்து வங்குறீங்க. எனக்கும் கொஞ்சம் அறிமுகப்படுத்தி வச்சீங்கன்னா..."

"என்னத் தம்பி எனக்கெதிரா தொழில் ஆரம்பிக்க என் கிட்டயே ஆலோசன கேக்குறியா? நாங்கல்லாம் எத்தனை வருசம் எத்தனைக் கஷ்டப்பட்டுக் கத்துக்கிட்ட தொழில் தெரியுமா? போடா போ! இந்த ஊருல இந்த மகாலிங்கத்தை தவற எவனுக்கும் இந்தத் தொழிலில் தெறம கெடயாதுடா...." என்றதும் இவனுக்கு சுருக்கென்றது..

ஒரு வைராக்கியத்துடன் திரும்பியவன் தன் தந்தையின் நணபரும் மகாலிங்கத்தின் பழைய முதலாலியுமான ரங்கசாமியை சந்தித்தான். அவரதுக் கடைதான் இப்போது மகாலிங்கத்திடம். மகாலிங்கத்தின் திறமையைப் பார்த்து இயலாமையின் காரணமாக அவரிடமே விற்று விட்டார் ரங்கசாமி.

பின்னர் ரங்கசாமியின் உதவியுடன் கும்பகோணத்தில் பலசரக்கு மொத்த வியாபாரக் கடையின் அறிமுகம் கிடைத்தது. முதலில் தன் வீட்டிலேயே சிறியதாக ஒரு மளிகைக் கடை துவக்கினான். முதலில் சரியான அனுபவமின்மையால் நட்டத்தை சந்தித்தான். பின்னர் மனம் தளராமல் வீடு வீடாக சென்று வியாபாரம் செய்யத்தொடங்கி நட்டத்தை மீட்டு லாபம் பார்க்க ஆரம்பித்தான்.

மகாலிங்கத்திற்கு வியாபாரம் குறைய ஆரம்பித்தது. இருந்தாலும் அவரின் கர்வம் குறையவில்லை. 

"அவன் என்னடா சின்னப்பய வீடு வீடாப் போய் புண்ணாக்கு விக்கிறான்" என்று கடைப் பையனிடம் அலட்சியத்துடன் கூறினான். 

குமரனின் மளிகைக் கடை மீண்டும் பொலிவுப் பெற்று வியாபாரம் கலைகட்டியது. மகாலிங்கத்தின் கடையில் வேலை பார்த்தவர்களில் சிலர் இன்று குமாரனின் மளிகைக் கடையில் வீடு வீடாக பொருள் கொண்டு சேர்க்கும் ஊழியர்களாயினர். மகாலிங்கம் வியாபாரத்தில் நொடித்துப் போய் தனது பல்பொருள் அங்காடியை விற்க முடிவெடுத்திருப்பதாக செய்திகேட்டக் குமரன் அந்தக் கடையை ஏலத்தில் எடுத்தான்.
தன்னுடய நம்பிக்கை வீனாக வில்லை என்று நினைத்துக் கொண்டு தனது கனவான "குமரன் பல்பொருள் அங்காடி"-யில் நுழைந்து மகாலிங்கம் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்த போதுதான் ஒரு தொழில் ரகசியம் அவனுக்குத் தோன்றியது.

"ஒரு மனிதனிடம் தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் மட்டும் தான் இருக்க வேண்டும். மகாலிங்கத்தைப் போல் திறமை இருந்தாலும் கர்வமும், அந்த கர்வத்தால் தோற்றுவிக்கப் படும் அலட்சியமும் இருக்கவேக் கூடாது அது அவன் திறமையை அழித்துவிடும்"

என முடிவெடுத்து தன் சட்டையை கழற்றி ஓரம் வைத்து விட்டு தொழிலாளியுடன் சேர்ந்து இவனும் ஒரு தொழிலாளியானான்.