கடவுளை மற..மனிதனை நினை..

Showing posts with label உலகத் தமிழ் செம்மொழி மாநாடு. Show all posts
Showing posts with label உலகத் தமிழ் செம்மொழி மாநாடு. Show all posts

07 July 2010

இது தேவையா? - தமிழக மேம்பாட்டுக்கு 1903 கோடி கடனாம்

ஏற்கனவே ஒவ்வொரு இந்தியக் குடி மகனும், பிறக்கும் குழந்தைகளும் 30,000 ரூ கடனோடுதான் பிறக்கிறது என்பது மக்கள் அறிந்ததே. இந்நிலையில் தமிழகத்தின் சுகாதாரம் மற்றும் சாலை மேம்பாட்டிற்காக உலக வங்கியிடம் ரூ. 1903 கோடி கடனாகப் பெறப் போகிறோம். இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கருணாநிதி தலைமையில் கையொப்பமிடப் பட்டிருக்கிறது.

இது போன்ற திட்டங்களுக்கு நாம் நிச்சயம் உலக வங்கியிடம் கையேந்த வேண்டுமா? இந்த ஒப்பந்தமானது மூன்றாண்டுகளுக்கானத் திட்டங்களுக்காக கையெழுத்தாகி இருக்கிறது.

யோசித்துப் பார்த்தால் இந்த அரசு ஆட்சியமைத்த இத்தனை ஆண்டுகளில் தனக்குத் தானே நடத்திக் கொண்ட பாராட்டு விழாக்கள், புதிய பாலம் திறப்பு விழாக்கள், சட்ட சபை திறப்பு விழா, செட் போட்ட செலவு, திரையுலகை வளர்க்கிறேன் என்ற பெயரில் செய்த செலவுகள், செம்மொழி மாநாட்டு 400கோடி ரூபாய் எல்லாம் சேர்த்தால் இந்த கடன் வாங்க அவசியம் ஏற்பட்டிருக்குமா?

இதில் பெரும்பாலான விழாக்களும், அதற்கான செலவுகளும் ஒரு தனிமனிதனின் சுயநலத்திற்காக செலவிடப் பட்டிருக்கின்றன. புதிய சட்ட சபை கட்டிடம் அவசரமாக திறப்பதற்காக அமைக்கப் பட்ட அரங்கத்தின் செலவு எத்தனை கோடிகள்? இப்போது அது பிரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் திறப்பு விழாவிற்கு சோனியா, மன்மோகன் வருவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பாதுகாப்புக்கு ஆன செலவுகள் எவ்வளவு?

இந்த ஆட்சியில் இதுவரை அவருக்கு நடத்தப் பட்ட பாராட்டு விழாக்கள் தோராயமாக பத்துக்கு மேற்பட்டவை. இவற்றிற்கு ஆன செலவுகளும் நிச்சயம் கோடியில் இருக்கும். அதோடில்லாமல் லட்சங்களில் செலவு செய்து அமைக்கப் பட்ட பாலங்களின் திறப்பு விழாவிற்கு மட்டும் செய்யப் பட்ட செலவுகளும் லட்சங்களில் தான்.

இதையெல்லாம் விடக் கொடுமை சமீபத்தில் நடத்தப் பட்ட செம்மொழி மாநாடு விழா. இதுவும் தன் பெருமையை மட்டுமே பரை சாற்றுபவர்களுக்காக நடத்தப் பட்டது என்பது உலகறிந்ததே. இங்கு தமிழ் பற்றிப் பேசியவர்களை விட கருணாநிதியைப் பற்றிப் பெருமைப் பேசியவர்களே அதிகம்.

வாலி, வைரமுத்து என்ற இரண்டு சொம்புகள் இவரைப் புகழ்ந்து தள்ளி விட்டு நாங்கள் தமிழ்க் கவிஞர்கள் என சொல்லிக் கொள்கின்றன. இவைகள் தமிழ்க் கவிஞர்கள் அல்லர். கருணாக் கவிஞர்கள்.

இந்த விழாவிற்காக செய்யப் பட்ட பசுமைக் கொலைகள் எத்தனை? இதற்கு செலவிடப் பட்டத் தொகை 398 கோடி ரூபாய் என சொல்லப் படுகிறது. இத்தகைய செலவுகள் எல்லாம் செய்யப் படாமலிருந்தால் நாம் எதற்காக உலக வங்கியிடம் கையேந்த வேண்டும்? தன் குடும்பத்திற்கும், த்ற்பெருமைக்காகவும் நம் பணத்தை செலவு செய்து விட்டு இன்று உலக வங்கியிடம் கையேந்தி நிற்கின்றனர்.

இவர்களால் கடனாளியாக்கப் பட்ட இந்தியா மேலும் மேலும் கடனாளியாகவே மாறி வருகிறது. பிறக்கும் குழந்தைக்கு 30 ஆயிரம் கடன் என்பது எவ்வளவு கேவலமான ஒன்று.

26 June 2010

செம்மொழி மாநாடும், தலைவர் குடும்ப ஆங்கிலமும்


எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்பதற்கான நோக்கம் மட்டுமே இந்த மாநாட்டின் அடித்தளமாக இருந்திருந்தால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவில் இந்த மாநாடு நடந்திருக்கும். ஆனால் ஒரு தனி மனிதனின் சுய விருப்பத்திற்காக நடக்கும் இதை எப்படி செம்மொழியான நம் தமிழ் மொழியின் மாநாடு என சொல்ல முடியும்?

இந்த மாநாடு ஒரு கேளிக்கைக் கூத்துப் போன்றதே. இதற்கும் ஐஃபா-வுக்கும் ஒன்றும் பெரிய வித்யாசமில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும், நிறுவனங்களும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். சட்டசபை, அரசு அலுவலகங்களில் "தமிழ் வாழ்க" என்ற பலகை, தமிழில் திரைப் படங்களுக்குப் பெயர் வைத்தால் வரி விலக்கு எனக் கூறும் இந்தத் தலைவனின் குடும்பத்தாரிடம் தமிழின் நிலை என்ன?

சில சிறிய சான்றுகள் மட்டுமேத் தருகிறேன்.

*** இவரது பேரன்களால் துவக்கப் பட்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர் தமிழில் இல்லை.

"க்ளவுட் நைன் மூவீஸ்(Cloud Nine Movies)"
"ரெட் ஜியாந்த் மூவீஸ்(Red Giant Movies)" மற்றும்
"சன் பிக்சர்ஸ்(Sun Pictures)".

ஏன் பேரப் பிள்ளைகளிடம் சொல்லவில்லையா தமிழில் பெயர் வையுங்கள் என்று. பேரப் பிள்ளைகள் எடுக்கும் படங்களை பாராட்டும் இவர் ஏன் தமிழில் பெயர் வைக்க சொல்லவில்லை?

**** இவற்றை விட கொடுமையான கூத்து ஒன்று சமீபத்தில் நடந்த விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் அரங்கேறியது. இவரின் மகள் கவிஞர் கனிமொழி மந்திரி அவர்கள் செம்மொழியாம் தமிழ்மொழி மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து பேசுகையில் ஆங்கிலம் கலக்காமல் பேசவில்லை.

"நிறைய எதிர் பார்ப்புகளோரடும், படபடப்போடும் தான் அந்த ப்ராஜக்ட்டை(Project) ஆரம்பிச்சோம்."

"It could bring everything inside of it inclusive"

"It was great pleasure watching Rahman and Goutham Menon"


மேற் சொன்ன வரிகள் வேறொன்றும் இல்லை. தமிழ்மொழி மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து, தமிழ்த் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கனிமொழி பேசியவை. மாநாட்டுக் காட்சிகளைப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஐஃபா-வை போலவே புறக்கணித்திருக்கிறேன். ஒரு வேலைப் பார்த்தால் இன்னும் எத்தனைக் கூத்துக்கள் வெளிப் பட்டிருக்குமோ? இன்னும் எவ்வளவு இருக்கிறதோ? தெரிஞ்சா சொல்லுங்க.

21 June 2010

தமிழை வளர்ப்போம்(?) மரங்களை வெட்டுவோம்!


இன்று உலகின் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கேள்விக்குறியாய் இருக்கும் நிகழ்வு நடக்கப் போகும் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு". இந்த மாநாடு தேவைதானா என யோசிக்காத தமிழர் ஒருவரும் இல்லை. நம்மைப் போன்ற மக்களின் வரிப்பணத்தில் 200 கோடிக்கும் மேல் செலவு செய்யப் பட்டிருக்கிறது.

இதில் 118 கோடி ரூபாய் 3840 அடுக்ககங்கள் அமைப்பதற்கும், 59.85 கோடி சாலை சீரமைப்பு பணிகளுக்கும் பயன் படுத்தப் படுகின்றனவாம். மேலும் அங்கு பாதுகாப்பு பணிக்காக ஒரு பலூனில் நான்கு கேமராக்கள் பொருத்தப் பட்டு விண்ணில் பறக்க விடப் பட்டுள்ளது. ஒரு கேமராவின் விலை மட்டும் 50 லகரம்.

இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் 200 கோடி என்பது சும்மா என்றே தோன்றுகிறது. எத்தனை கோடிகள் ஆனதோ? இன்னும் எத்தனை ஆகுமோ? நாட்டில் விவசாயப் படுகொலைகள், பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படிப் பட்ட மாநாடு இவ்வளவு பொருட் செலவில் தேவைதானா?

3840 அடுக்ககங்கள் இவ்வளவு விரைவில் சாத்தியமாகும் போது ஏழை மக்களுக்கும், சுனாமியால் வீடிழந்தோருக்கும் கட்டிக் கொடுக்கப் படும் வீடுகள் மட்டும் ஏன் வருடக் கணக்காகிறது?

இத்தனை கோடிகள் செலவில் இவ்வளவு நாள் கவனிப்பாறற்றுக் கிடந்த சாலைகள் துரிதமாக சீரமைக்கப் படும் போது, இவ்வளவு நாள் செய்யப் படாதது ஏன்?

இதுவரை சாலைகள் சீரமைப்பு என்ற பெயரில் கோவையை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன.ஊட்டி சாலையில் 600க்கும் மேற்பட்ட மரங்களும், திருச்சி செல்லும் சாலையில் 200க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டித் தள்ளியிருக்கின்றனர். இங்கு வெட்டப் பட்டவை வெறும் மரங்கள் அல்ல. நம் மனிதமும் தான்.

மரங்களைக் கொன்று இப்படி ஒரு விழா தேவைதானா? மரங்களுக்காக மக்கள் ஏங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கும் போது இவ்வளவு மரங்கள் கொலை செய்யப் பட்டு ஒரு தலைவனின் ஆசைக்கு விழா எடுப்பது நியாயம் தானா?

"ஒரு பக்கத்து மரங்களை மட்டும் வெட்ட சொல்லிருக்கோம், தேவைப் பட்டா இன்னொருப் பக்க மரத்தையும் வெட்ட சொல்லிருக்கொம்" என கலக்டர் முன்னர் கூறியிருந்தார். மரங்களை வெட்டி மனிதம் அழிக்கும் இந்த மிருகப் பணிக்கு எடுக்கப் படும் விழாவிற்கு பெயர் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு".

இதெல்லாம் பார்த்தப் பின்பும் நம் மக்கள் ஒரு ரூபாய் அரிக்காகவும், ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத கலர் டி.விக்காகவும் மீண்டும் வாககளிக்கப் போவது உறுதியே. என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தேர்தலின் போது என்ன சொல்லி ஓட்டு வாங்கலாம் என்பது அந்த அரசியல்வியாதிகளுக்குத் தெரியும்.

"இந்த மாநாட்டின் மூலம் எத்தனைப் பேருக்கு வேலைக் கிடைச்சிருக்குத் தெரியுமா?" என என் நண்பன் கேட்டான்.

எத்தனை பேருக்கு?
எவ்வளவு நாளைக்கு?
எவ்வளவு ரூபாய்க்கு? என்றேன்.

அவனிடம் பதிலில்லை.

எத்தனை உயிர்கள் இலங்கையில் அழிக்கப் பட்டது தெரியுமா?
எத்தனை மரங்கள் கோவையில் கொல்லப் பட்டது தெரியுமா?
அதனால் என்ன நடக்கப் போகிறது எனத் தெரியுமா?
விவசாயப் படுகொலைகள் பற்றித் தெரியுமா?
பட்டினி என்றால் என்னவென்றுத் தெரியுமா?
உழைக்கும் வர்க்கத்தின் நிலைத் தெரியுமா? என்றேன்.

என்னை ஏளனமாகப் பார்த்து விட்டு எதற்கும் பதில் சொல்லாமல் திரும்பிப் போனான்.