கடவுளை மற..மனிதனை நினை..

31 May 2010

ஐஃபா விழா - பங்கேற்காமை வற்புறுத்தலால் இருக்குமோ?

7:13:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 12 comments
கொடூரன் ராஜபக்ஷ்சே தமிழர்கள் கொல்லப் பட்டதன் முதலாமாண்டு நிறைவு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செதிருக்கும் இந்த ஐஃபா விழா அங்குள்ள மக்களைத் திசைத் திருப்பும் முயற்சி. இதில் கலந்து கொள்ள தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பன்மொழிக கலைஞர்களுகு அழைப்பு விடுத்திருந்தது அந்த அமைப்பு.

இந்நிலையில் இந்தியாவின் முக்கிய திரைக்கலைஞர்கள் இவ்விழாவைப் புறக்கனித்து வருவது நாம் அறிந்ததே. இதற்கு என்ன காரணம் தமிழர்கள் மீதுள்ள உணர்வா? அல்லது பயமா?


முதலில் இதற்கான அழைப்பிதழைப் பார்த்து கடுப்பாகிப் போய் தூக்கிப் போட்ட இரு நடிகர்கள் ரஜினி, கமல் எனக் கூறப் படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. அப்படி உண்மை எனில் அவர்களுக்கு என் சல்யூட்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் விலகியிருக்கிறார். இந்த விழாவில் அவரின் ராவணன் சிறப்புக் காட்சியாக ஒளிபரப்பு செய்யப் பட இருந்தது. எங்கே தான் சென்றால் தமிழ் ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமோ என்ற பயத்தில் விழாவைப் புறக்கணித்திருக்கிறார்.

அடுத்து அமிதாப் குடும்பத்தார். நாம் தமிழர் இயக்கத்தினரின் போராட்டத்திற்கு பின் ரஜினியுடன் பேசியிருக்கிறார் அமிதாப். அப்போது இவ்விழாவைப் புறக்கணிக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் அமிதாப்பிடம் கூறிய காரணம் "அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீது தமிழ் ரசிகர்கள் வைத்துள்ள மதிப்பு குறித்து ரஜினி எடுத்துக் கூறினாராம். குறிப்பாக ஐஸ்வர்யா ராய் இந்த நேரத்தில் கொழும்பு செல்வது எத்தகைய விளைவுகளை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்றும் விளக்கியுள்ளார் (ராவணன் வரனும்ல)". இதையடுத்து அமிதாப் சிறப்புத் தூதர் பதவியிலிருந்து விலகியதுடன் தன் குடும்பம் பங்கேற்காது என அறிவித்தார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு பிறகு இவ்விழாவில் பங்கேற்பவர்களின் படங்களுக்கு தென்னிந்தியாவில் தடை விதிக்கப் படும் என தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், ரித்திக் ரோஷன், அமிதாப் போன்றவர்களின் படங்களுக்கு தனி வரவேற்பு இருக்கும்.

ஷாருக்கான் இப்போது தனக்கு வேளை பளு அதிகமிருப்பதால் இவ்விழாவில் பங்கேற்க போவதில்லை என கூறியிருக்கிறார். கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல கதையா இருக்கு. எங்கே தன் படங்கள் தென்னகத்தில் வெளி வராதோ என்ற பயம் தான் காரணமாக இருக்கும்.

தற்போது நடிகை நமீதா "ஆனால் இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இங்கே இந்த பிரச்சனை இருப்பது தெரிந்த பிறகும் எப்படி நான் போக முடியும். எனக்கு சோறு போட்டது தமிழ் மக்கள்தான். இன்று இந்த அந்தஸ்து வந்தததும் அவர்களால்தான். எனவே யாரும் சொல்வதற்கு முன்பே மறுத்துவிட்டேன்." எனக் கூறியிருக்கிறார். அம்முனி மறுக்கறதுன்னா முன்னரே மறுத்துருக்கனும்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இவ்விழாவில் விலகுபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர் உணர்வாலோ, மனித உணர்வாலோ விலக வில்லை. தன் சொந்த வேலை பாதிப்படையக் கூடாது என்ற எண்ணத்திலும் தமிழ் ரசிகர்கள் மீதான பயத்திலுமே விலகியிருக்கின்றனர் என அப்பட்டமாகத் தெரிகிறது.

எது எப்படியோ அந்த விழா தோல்வியைத் தழுவ வேண்டும் என்பதே தமிழர் மற்றும் மனித உணர்வுள்ள மக்களின் விருப்பம்.

27 May 2010

மாம்பலம் மேன்சன்

12:59:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
மாம்பலம் ரயில் நிலையம் அருகில் உள்ளது அந்த மேன்சன். நூறு பேர் இருக்கும் அந்த மேசனிலும் அவன் தனிமையையும் வெறுமையையுமே உணர்ந்தான். ஆனால் அதிலிருந்து வெளிவர அவனுக்கு மனமிருந்ததில்லை. அவன் ஏன் அப்படி இருக்கிறான் என இதுவரை யாரும் கேட்டதில்லை. கேட்கும் அளவுக்கு அவன் யாரிடமும் பேசியதில்லை.

யார் அவன்? பனிரெண்டாம் வகுப்பு படிக்கையில் தாயைப் பறி கொடுத்தவன். அன்று தொடங்கியதுதான் அந்த தனிமை. பின் கல்லூரியில் பி.ஏ தமிழ். எதற்காக தமிழ் படிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. கிடைத்தது அது மட்டுமே என சேர்ந்தான். அங்கு அவனது தனிமை சிறிது காலம் விடை பெற்றிருந்தது.

நண்பர்கள், அரட்டை, கேலி கிண்டல் என அனுபவித்துக் கொண்டிருந்த நேரம் அவன் தந்தை இரண்டாவதாக ஒருத்தியை மணம் முடித்து வந்தார். வழக்கமான சித்திக் கொடுமை அவன் தாயை நினைவு படுத்தத் தொடங்கிற்று. கல்லூரிப் படிப்பு முடிகின்ற நேரம் சித்தியுடனான வாக்குவாதத்தில் வீட்டை விட்டு விரட்டியடிக்கப் பட்டான். மீண்டும் தனிமை அவனைத் தழுவிக் கொண்டது.

கல்லூரி நண்பன் ஒருவனின் நட்பு அறைதான் அந்த மேற்கு மாம்பல மேன்சன் அறை. பி.ஏ தமிழ் படித்தவனின் நிலை கற்றது தமிழ் படத்திலேயே சொல்லப் பட்டதுதான். கிட்டத்தட்ட அதே நிலைதான் இவனுக்கும். அவனது நாட்கள் பெரும்பாலும் மேன்சன் அறையிலேயெ கழிந்தன. உடன் இருப்போரிடம் இந்த ஆறு மாத காலத்தில் இவன் பேசிய வார்த்தைகள் விரல் விட்டு எண்ணக் கூடியவை.

தனிமையை நேசிக்கத் தொடங்கினான். அந்தத் தனிமையிலும் அவனுடன் உறவாடியது அறைக் காத்தாடி. விட்டத்தைப் பார்த்த படி காற்றாடியுடன் பேசி மகிழ்ந்தான். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் எல்லாம் மறந்து போயினர். அந்த காற்றாடியின் இசை மட்டுமே பிடித்திருந்தது அவனுக்கு.

வாரக்கடைசி நாட்களைக் கழிப்பது அவனுக்கு நரகமாக இருந்தது. அறை நண்பர்கள் அரட்டை, டாஸ்மாக் சரக்கு என இவன் தனிமையை கலைப்பதாக உணர்ந்தான். மேன்சனை விட்டு வெளியே வந்து ரெங்கநாதன் தெருவுக்குள் நுழைந்தான். ஒரே இரைச்சல், நெரிசல். தனிமையைத் தேடி அலைந்தான். பித்துபிடித்தவன் போல் திரிந்தான்.

கையிலிருந்த காசுகள் கரைந்து போயின. சில நாட்களில் மேன்சனிலிருந்து வெளியேற்றப் பட்டான். போக்கிடமின்றி தி.நகரில் திரிந்தான். வெளிச்சமும் இரைச்சலும் அவனுக்கு எரிச்சலாய் இருந்தது. அன்றிரவு மேட்லி சப்வேயில் ஒதுங்கினான். வாகன இரைச்சல் வெளியை விட அங்கு அதிகாமாக இருப்பதை உண்ர்ந்தான்.

காதுகளைப் பொத்தி, கால்களை முடக்கி இரைச்சலின் எரிச்சலில் நடுக்கத்துடன் உறங்கிப் போனான். பொழுது விடிந்தது. மனித எந்திரங்கள் அங்குமிங்கும் நடக்கத் தொடங்கின. வாகனங்கள் நெறிசல் ஏற்பட்டு சப்வேயில் குவிந்திருந்தன. கண் விழித்தான். இப்போது அவனுக்கு எந்த இரைச்சலும் பெரிதாகத் தோன்றவில்லை. தான் யார் என்பது கூட மறந்து போனது அவனுக்கு.

ரெங்கநாதன் தெருவிலும் அவனால் தனிமையை உணர முடிந்தது.....ஒரு குழந்தை தாயிடம் "அம்மா பைத்தியம்" என்றது.

24 May 2010

டரியல் (25-மே-2010)

11:22:00 PM Posted by புலவன் புலிகேசி 24 comments
மங்களூர் விமான விபத்தில் குழந்தைகள் உட்பட 159 பேர் பலி. இதற்கான காரனம் வழக்கம் போல் இன்னும் தெளிவு பட வெளி வர வில்லை. எது எப்படியோ போன உயிர்கள் போனதுதான். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவில் சிதைந்து போயிருக்கின்றன. சில நொடி கவனக் குறைவு எவ்வளவு உயிர்களை பலி கொண்டு விட்டது.
---------------------

நேரு மற்றும் ராஜாஜியின் புத்தகங்களை வெளியிட மத்திய அரசால் ஒதுக்கப் பட்ட ஐந்து கோடி சிறப்பு நிதி சோனியா காந்தியைத் தலைவராக கொண்ட ஒரு தனியார் அறக்கட்டளைக்கு சட்ட விரோதமாக திருப்பி விடப் பட்டுள்ளதாக தனிக்கைக் குழு தெரிவித்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த அறக் கட்டளையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரு அறங்காவலராம். என்ன கொடுமை சரவணன் இது???
---------------------


குஷ்புவை தி.மு.க தாங்குமா? என்ற ஆனந்த விகடனின் கேள்விக்கு தமிழினத் தலைவனின்(?) பதில் "தி.மு.க தாங்குமோ? இல்லையோ? விகடன் அட்டைப் படம் தாங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறது" என்பதாகும். யப்பா இந்தம்மவுக்கும் ஓட்டு போட்டு உச்சில கொண்டு போய் உக்கார வச்சி நாட்ட நாறடிச்சிறாதீங்க. இப்ப இருக்குற நாத்தமே தாங்க முடியல.
---------------------

இந்த வீடியோவில் வரும் குழந்தையின் யதார்த்தமான அழகான ஆட்டத்தைப் பாருங்கள். நான் மெய் மறந்து ரசித்து கொண்டேயிருக்கும் நடனம். ஆர்குட்டில் ஒரு சகோதரி இதைப் பார்த்து விட்டு "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என கருத்து தெரிவித்திருந்தார். நீங்களும் பாருங்க.


---------------------

இந்த வாரப் பதிவர்: "தாராபுரத்தான்"


பொன். பழனிச்சாமி ஐயா அவர்கள் வாசகனாக இருந்து பதிவராக மாறியவர். நண்பர் பாலாசியின் மூலம் இவரது வலைப்பூ அறிமுகம் கிடைத்தது. இவர் அதிகம் எழுதுவதில்லை. மாதத்திற்கு மூன்றோ, ஐந்தோ எழுதுகிறார். தனது அனுபவத்தை எழுதிவரும் இவரது "பொண்ணு பார்த்த கதையை விட்டுறாதீங்க" (இவருக்கு அந்த பாக்கியமில்லைன்னு வருத்தம் வேற). போய் படிச்சிப் பாருங்க.

இவரது வலைப்பூ: தாராபுரத்தான்.
---------------------

இந்த வார டரியல் நண்பர் பாலாசி அவர்களின் "வெட்டிவேரு வாசம்". சாக்கடை அள்ளும் தொழிலாளியின் வாழ்வியலை வட்டார மொழியில் இயல்பாக எடுத்தியம்பும் இந்த கதை என்னை வெகுவாக கவர்ந்தது. படிக்கலைன்னா போய் படிச்சிப் பாருங்க.
---------------------

21 May 2010

முத்தம் வெட்கம் சப்தம்

7:23:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments

முத்தம்

ஆளரவமற்ற அன்றைய மாலையில்
அவள் கொடுத்தது எடுத்து சென்றது
என் உயிரை
நடை பிணமாய்
அலைகிறேன் அவளைத் தேடி
என் உயிரை மீட்க!

வெட்கம்

இதழ் பதித்து இட்ட
போது இச் என்ற சப்தம்
அருகாமை நாய் அதை
அழைத்ததாய் எண்ணி வந்த
போது அவளிடம் ஒரு சிரிப்பு
இதுதான் வெட்கமோ!

சப்தம்

சப்தமிட்டு சொல்லாதே
நீ என் காதலி என்று
பறவைக் கூட்டம் என்னைத்
தேடிக் கொல்ல்க் கூடும்

19 May 2010

டரியல் (19-மே-2010)

6:37:00 AM Posted by புலவன் புலிகேசி 21 comments
நேற்றுடன் ஒரு வருடம். நமது இனம் அருகாமையில் அழிக்கப் பட்டிருக்கிறது. நாம் தமிழராய் இருந்து இதுவரை அதற்காக ஒன்றும் கிழித்து விடவில்லை. அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பு போர் விதிமுறைகள் மீறப் பட்டிருப்பதாகவும், அப்பாவி மக்கள் கொல்லப் பட்டிருப்பதாகவும் வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறது.
------------------


கொளுத்தி எடுத்துக் கொண்டிருந்தது வெயில். "லைலா" (அட புயலோட பேர சொன்னேங்க) வந்ததும் செம குளிர்ச்சியாயிருச்சி. நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் அறையில் நிம்மதியான ஒரு உறக்கம். ஓடாத காற்றாடி வேகமாக ஓடியது, எரியாத விளக்கு நன்றாக எரிகிறது. மழைக்காகத் தவித்துக் கிடந்த என்னைப் போன்ற மக்களுக்கு "லைலா"(மறுபடியும் புயல்தான் நம்புங்க) ஒரு வரப்ரசாதம்.
------------------

வெஸ்ட் இண்டீஸ் போய் விளையாடி கோப்பையை கொண்டு வாங்கடான்னு அனுப்பி வச்சா, அங்க போய் குடிச்சிட்டு கலாட்டா பண்ணிருக்கானுங்க நம்ம "வீரர்"கள். யுவராஜ் சிங், ஆசிஷ் நெஹ்ரா, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஜாகிர் கான், பியூஷ் சாவ்லா இந்த ஆறு பேர் தான் நம்ம நாட்டுக்காக போர் புரிந்த அந்த வீரர்(?)களாம்.
------------------


உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக நம்ம ஏ.ஆர்.ரகுமான் இசைத்துக் கொடுத்தப் பாடலை 27 பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். பாடல் அவ்வளவு அழகாக வந்திருக்கிறது. இதற்கு சரியான ஒளி அமைத்தால் நிச்சயம் வந்தே மாதரம் அளவிற்கு வெற்றி பெறும்.

பாடலைப் பதிவிறக்கம் செய்ய:"செம்மொழியாம் எங்கள் தமிழ்"
------------------

இந்தக் குறும்படத்தை சமீபத்தில் நண்பர் ஒருவரின் ஆர்குட்டில் பார்த்தேன். ஒரு நிமிடத்தில் ஒரு கதை, அதை அழகாக சமுதாய கருத்துடன் சொல்லி யிருக்கும் விதம் என்னைக் கவர்ந்தது.

-----------------

இந்த வாரப் பதிவர்: தோழி "தேனம்மை லக்ஷ்மண்"


பதிவர் சந்திப்பு, நூல் வெளியீட்டு விழா எனப் பலத் தமிழ் சார்ந்த விழாக்களில் பங்கேற்று, அது குறித்த விளக்கங்கலையும் பதிவிட்டு வருகிறார். பூக்களின் காதலியான இவரது கவிதைகள் அனைத்தும் அவ்வளவு அழகு.

இவரது வலைப்பூ: "சும்மா"
------------------

கடந்த பத்து நாட்களாக யாருடைய வலைப்பூவையும் அவ்வளவாகப் படிக்க வில்லை. பணி நிமித்தமாக வலைப்பூ பக்கம் வர இயலவில்லை. அதனால் இந்த வ்ஆர டரியலில் யாருடையப் பதிவையும் சுட்டவில்லை. அடுத்த வாரம் நிச்சயம் சுட்டுகிறேன்.
------------------

10 May 2010

டரியல் (10-மே-2010)

7:14:00 AM Posted by புலவன் புலிகேசி 24 comments
ஏ.ஆர். ரகுமானின் இரண்டாவது மகளான ரஹீமாவுக்கு மும்பையில் இருதய அறுவை சிகிச்சை நடை பெற்றுள்ளது.கடந்த சில தினங்களாக இசை மறந்து தன் மகளுக்காக இரவு பகல் பாராமல் தந்தைக்குரியக் கடமையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் ஏ.ஆர். ரகுமான். அவர் மகள் விரைவில் நலமுடன் திரும்ப என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
------------------------


"Need to better my bowling, rhythm hasn't been up to the mark... I ll come back strong in the remaining matches ...." இது முதல் சூப்பர்-8 போட்டி முடிவில் ஜாகிர்கான் அவரது ட்விட்டரில் வெளியிட்ட செய்தி. ஆனால் இரண்டாவது போட்டியிலும் கேவலமான பந்து வீச்சே. நமது பந்து வீச்சாளர்களின் திறமையான(?) பந்து வீச்சாலும், முக்கியமான போட்டிகளில் தன் திறமையைக் காட்டத் தவறிய மட்டையாளர்களாலும் இந்திய அணி இத்துடன் இந்த வருட உலக கோப்பையிலிருந்து வெளியேத் தூக்கி வீசப் பட்டிருக்கிறது.
------------------------

பெற்றோரின் ரத்தத்தை உறிஞ்சும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தை ஏற்க முடியாது எனத் தனியார் பள்ளிகள் சங்கம் கருத்து கூறியுள்ளது.

"பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு பள்ளி தாளாளர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒருமித்த கருத்துடன் கூடிய கல்வி கட்டணத்தை நிர்ணயித்தால் மட்டுமே நிர்வாக சிக்கல்களை பள்ளி தாளாளர்கள் தவிர்க்க இயலும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்" இது அவர்கள் கூறிய கருத்து.

தனியார் பள்ளிகள் என்றால் என்ன? அரசு பள்ளி என்றால் என்ன? கல்வியின் தர்ம் சிறப்பாகவே இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் வளர்ந்துக் கொழுத்துக் கொண்டிருப்பது தனியார் பள்ளிகளே. அவர்கள் இந்த அளவு துணிச்சலான அறிக்கை விடக் காரணமும் அரசு பள்ளிகளின் தரமின்மையே.

ஆசிரியர் பணியை சேவையாக நினைத்து செய்பவர்கள் மிகச்சிலரே. ஆனால் பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு கூட பணி புரிவதில்லை. படித்துப் பணிக்கு வரும் இது போன்றவர்களின் மெத்தனப் போக்கைக் கண்டிக்க ஆளில்லாமல் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்து சாமான்ய மக்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிப்படைந்திருக்கிறது.

தனியார் பள்ளிகள் இதை மேற்கோள் காட்டியே தங்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்களே அரசுத் திருந்துவதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலில் நீங்கள் திருந்துங்கள் வாங்குகின்ற சம்பளத்தில் உண்ணும் உணவு உள் செல்லும் முன் யோசித்துப் பாருங்கள் "இந்த உணவுக்கான பணியை செய்திருக்கிறோமா" என்று. அப்போது உரைக்கும் உங்களுக்கு.
------------------------


"ராவணன்" படத்தின் பாடல்கள் வெளியாகி எதிர் பார்த்தது போலவே வெற்றியும் பெற்றிருக்கிறது. எனக்கு அனைத்துப் பாடல்களும் பிடித்துப் போயி விட்டது. குறிப்பாக அனுராதா ஸ்ரீராம், சங்கர் மகாதேவன் குரல்களில் "காட்டுச் சிறுக்கி" பாடலும் கார்த்திக்கின் குரலில் "உசுரே போகுதே" பாடலும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. கேட்டுப் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.
------------------------

சில மாதங்களுக்கு முன்னர் பார்த்த ஒரு வீடியோ. என்னை மிகவும் கவர்ந்திழுத்தது. "ஒன்று பட்டால் உண்டு வாழ்வே" என்னும் தத்துவத்தை மிக அழகாக ஒரு சிறுவன் மூலம் எடுத்தியம்பும் இந்த வீடியோ உங்கள் அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் என நினைத்ததால் இங்கே.


------------------------

இந்த வாரப் பதிவர்: அன்புடன் அருணா


இவர் பதிவுகளிலேயே என்னை மிகக் கவர்ந்தது சமீபமாக இவர் எழுதி வரும் "நிமிடத்தில் கடவுளாகலாம்". மிக அருமையாக கடவுளுக்கான புரிதல்களை எடுத்தியம்பும் இவை என்னை கவர்ந்தது. மேலும் இவர் இளமை விகடனில் "மாணவர்கள் தற்கொலை ஏன்?" என ஒரு தொடர் எழுதி வருகிறார். நல்ல பதிவுகளை சமுதாய நோக்கில் எழுதி வரும் இவருக்கு என் வாழ்த்துக்கள்.

இவரது வலைப்பூ: அன்புடன் அருணா
------------------------

இந்த வார டரியல் நண்பர் பலா பட்டரை ஷங்கரின் ம்ருதுளா... இந்த சிறுகதையைப் படித்துப் பாருங்கள். கவிதைகள் கலந்து மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.
------------------------

07 May 2010

அஜ்மல் கசாப் கொல்லப் படுவானா?

6:36:00 AM Posted by புலவன் புலிகேசி , 35 comments

மும்பைத் தாக்குதல் வழக்கில் நேற்று கசாபிற்கு மரண தண்டனை வழங்கப் பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் 2001ம் ஆண்டு முதல் வழங்கப் பட்டிருக்கும் மரண தண்டனைகளில் எத்தனை நிறைவேற்றப் பட்டிருக்கின்றன எனப் பார்த்தால் ஒன்றே ஒன்று மட்டுமே.பலருக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டு கருணை மணு என்ற பெயரில் பலர் விடுவிக்கப் பட்டு, இப்போது மரண தண்டனையை எதிர் நோக்கியிருப்பவர்களின் எண்ணிக்கை இந்த கொடூரனையும் சேர்த்து 30 பேர்.

ஒருவனுக்கு எப்போது மரண தண்டனை வழங்கப் படுகிறது? அவனது செயல் திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கும் பட்சத்திலும், அது கொடுரமான செயலாக இருக்கும் பட்சத்திலுமே. அப்படி இருக்கையில் அவர்கள் மீது என்ன கருணை வேண்டியிருக்கு? இதுவே அயல் நாடுகளில் விதிக்கப் பட்டால் உடன் கொல்லப் படுவான்.

இங்குதான் கருணை மனு, கத்தரிக்காய் என இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். 2001ம் ஆண்டு நம்து நாடாளுமன்றம் மீது "லஷ்கர்-ஈ-தொய்பா" மற்றும் "ஜெய்ஸ்-ஈ-மொஹமத்" தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த கொடூரர்கள் தாக்குதல் நடத்தியது அனைவரும் அறிந்ததே. இதில் ஆறு காவலர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். இது சம்பந்தமாக 2002ல் பிடிக்கப் பட்ட "முகமது அப்சல் குரு"-விற்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது.


ஆனால் இன்று வரை அவன் கொல்லப் படவில்லை. அவனது கருணை மனு குடியரசுத்தலைவரிடம் நிலுவையில் இருக்கிறதாம். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால். இந்த கருணை மனுக்களை ஆய்ந்து ஏற்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ குடியரசுத் தலைவருக்கு காலக் கெடு கிடையாதாம். அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது பார்த்தால் போதுமாம்.

தற்போது 29 கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரின் தீர்ப்பிற்காக நிலுவையில் கிடக்கின்றது. அந்தப் பட்டியலில் கசாப்பும் சேர்க்கப் படுவான் என நினைக்கிறேன். 2001 முதல் இன்று வரை விதிக்கப் பட்ட மரணதண்டனைகளில் நிறைவேற்றப் பட்டது ஒன்று மட்டுமே. அது சிறுமியை கற்பழித்துக் கொன்ற கொடூரன் "தனஞ்செய் சட்டர்ஜி".

கசாபிற்கு நேற்று வழங்கப் பட்ட மரண தண்டனையே குறைவான தண்டனை என மக்களில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவனுக்கெல்லாம் கொடூரமான முறையில் தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும் எனக் கருத்துத் தெரிவிப்பவர்கள் பலர். ஆனால் தண்டனையை நிறைவேற்றுவதில் இந்தியாவின் வேகத்தைப் பார்த்தால் அவனே வயதாகி செத்து விடுவான் போல் தெரிகிறது.

தன் உயிரைப் பனையம் வைத்து கொடூர செயல் செய்ய வரும் ஒருவனுக்கு மரண தண்டனை ஒன்றும் பெரிய விடயமல்ல. அவன் இறக்கப் போவது உறுதியான ஒன்று. ஆனால் இது போல் தண்டனைகள் இழுத்தடிக்கப் பட்டால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை.

வெளியில் இருந்து இறப்பதை விட இந்திய சிறைச்சாலையில் பிரியானி சாப்பிட்டு உயிர் வாழலாம் என்ற எண்ணம் நிச்சயம் வரும்.

வாழ்க இந்தியா! வளர்க கருணை மனுக்கள்!

06 May 2010

நாயே!

6:18:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments
தெரு நிசப்தமாக இருந்தது. ஒரு நாயின் கதறல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆமாம் குமரன் வீட்டு நாய்தான் அது. குமரன் கண்களில் கண்ணீருடன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். தன் வீட்டு நாய் ஈன்ற மூன்று கண் திறக்காத குட்டிகளைப் பிரித்து ஊருக்கு வெளியில் விட்டு வந்து விட்டான்.


குட்டிகளைப் பிரிந்த நாய்க் கதறிக் கொண்டே இருந்தது. அவன் அம்மாவிற்கு நாய் என்றாலேப் பிடிக்காது. எப்போதும் வசை பாடிக் கொண்டெ இருப்பாள். அவளால் தான் அவன் அந்தக் காரியத்தை செய்ய நேர்ந்தது.நாட்கள் உருண்டோடின. நாய் கதறலை நிறுத்தி தன் பணிகளில் வழக்கம் போல் ஈடு படத் தொடங்கியிருந்தது.

இவன் திண்ணையில் அமர்ந்து நாயின் கழுத்துப் பகுதியில் கை வைத்து தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அந்த சுகத்தில் அது பாதி உறங்கிப் போயிருந்தது.ஒரு சிறுவன் வேகமாக ஓடி வந்து "அண்ணே அக்காவ ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க. உங்கள உடனே வரச் சொன்னாங்க" என்று சொல்லி விட்டு உருவமில்லாத தன் வாகனத்திற்கு ஒலி எழுப்பி ஓட்டிச் சென்றான்.

அம்மாவிடம் விசயத்தை சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான். அந்த அரசு ஆஸ்பத்திரியை இருவரும் நெருங்கிய போது அம்மாவைக் கேட்டான்

"ஏம்மா நாமளே அவள எதாவது தனியார் ஆஸ்பத்திரில சேத்துருக்கலாம்ல?"

"போடா போக்கத்த பயலே! தொற சம்பாதிச்சு கொட்டுறதுல இந்த ஆஸ்பத்திரி நர்சுங்களுக்கே லஞ்சம் குடுக்க முடியாது.இதுல தனியாராம்" என்றதும் அவனிடமிருந்து பதில் இல்லை.

வாசலில் அமர்ந்திருந்த அவன் மாமியார், இவனைக் கண்டதும் வாயில் தன் புடவை முந்தானையை வைத்துப் பொத்திக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள். அதைக் கண்டதும் பதட்டத்துடன் வார்டுக்குள் ஓடினான்.அங்கு அவன் மனைவி மயக்க நிலையில் படுத்திருந்தாள். அருகிலிருந்த தொட்டிலில் கண் திறக்காத ஒரு பெண் குழந்தை இரு கைகளற்று கிடப்பதைப் பார்த்தான்.

கண்ணீருடன் வெளியில் வந்தான். "பொறந்தது பொட்டக் கழுத. இதுல கைய வேற காணும்" என புலம்பிக் கொண்டே வெளியில் வந்தாள் அந்த குமரனின் தாய்.

"தோ பாரு அவ எந்திரிச்சி பாக்குறதுக்குள்ள கொழந்தைய கொண்டு போயி எதாவது அனாத இல்லத்துல உட்டுரு. கையில்லாத பொம்பளப் புள்ளையை வளத்து கர சேக்க நம்மாள முடியாது" என வழக்கமான குரலில் கூறி விட்டு சென்றாள் அவன் தாய்.


அவனது இயலாமை அவனை எதிர்த்துப் பேச விடவில்லை. கண் திறவா அந்த பச்சைக் குழந்தையை எடுத்து சென்று ஒரு ஆஸ்ரம வாசலில் போட்டு விட்டு வீடு வந்து திண்ணையில் அமர்ந்தான்.அவன் வீட்டு நாய் அருகில் வந்து அமர்ந்து அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தது.

"ஏண்டா நாயே! ஒரு போக்கத்தப் புள்ளைய உட்டுட்டு வந்துட்டு என்னடா அழுக? எந்திரிச்சி உள்ள வாடா"

என்ற அவன் தாயின் குரல் உள்ளிருந்து கேட்டது.யதேச்சையாய்த் திரும்பியவன் தன் நாயைப் பார்த்தான். கண்களில் நீர் அருவி போல் கொட்டத் தொடங்கியது. எதுவும் புரியாமல் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தது அந்த நாய்.


03 May 2010

டரியல் (03-மே-2010)

7:46:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments

கொடூரத் தாக்குதல் நடத்தி 166 பேரைக் கொன்ற கசாப் வழக்கில் இன்றுத் தீர்ப்பு வழங்கப் பட உள்ளது. மரண தண்டனை விதிக்கப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது. இது போன்ற கொடூரர்களை சாதரணமாக கொன்று விடக் கூடாது. அரபு நாடு போல நடு ரோட்டில் மக்கள் மத்தியில் தூக்கிலிடப் பட வேண்டும்.
----------------


மணிரத்ண்த்தின் "ராவணன்" படப் பாடல்கள் வரும் புதன் கிழமை வெளியிடப் பட உள்ளது. "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்கு பிறகு எனக்குள் ஒரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் "ராவணன்". ரகுமான் மணி கூட்டனியில் பாடல்கள் நிச்சயம் வெற்றி பெறும்.
----------------

இந்த வீடியோ சென்று இதில் உள்ள மனிதரைப் பாருங்கள். கஷ்டம் கஷ்டம் என புலம்பிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய மனிதர். இதைப் பார்த்து விட்டு யோசித்துப் பார்த்தால் நமது கஷ்டங்களும், பிரச்சினைகளும் கடுகாகத் தெரியும்.

See this Great Man
----------------

இந்த வாரப் பதிவர்: அகல் விளக்கு "ராஜா"


நண்பரின் பதிவுகளைப் படித்துப் பாருங்கள். மண்மனம் வீசும் கதைகள், அழகான கவிதைகள் எனக் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரை நம் பதிவுலகில் பலருக்குத் தெரியும். தெரியாதவர்கள் தவறாமல் போய்ப் பாருங்கள்.

அவரது வலைப்பூ: அகல் விளக்கு
----------------

இந்த வார டரியல் நண்பர் கதிர் எழுதிய வெட்க வாசனை. மனிதத்தின் இன்றைய நிலையை எடுத்தியம்பும் அற்புதமான புனைவு. யதார்த்தம் பளிச்சிடும் இந்த புனைவு என்னை மிகவும் கவர்ந்தது. படிக்காதவர்கள் படித்துப் பாருங்கள்.
----------------

01 May 2010

மருதாணி, முள், மழை

6:44:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments

மருதாணி

நீ தொட்டுப் பறித்து
இட்ட மருதாணி
சிவக்க வில்லை கைகள்.....
சிவந்து போனது மருதாணி....

முள்

நீ கடந்து போகும்
பாதையில் கிடந்து
போன முள் குத்தக்
கூடாது உன்னை என
முறித்துக் கொண்டது தன்னை

மழை

உன்னை நனைக்க வந்த
மழைத்துளி தடுத்து நின்ற
சேலையிடம் கொண்ட கோபத்தால்
மாறியது பெருமழையாய்