
மேட்டுக்குடித் தனத்தையும் அவர்களால் ஒடுக்கப் பட்டோரின் போராட்டத்தையும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தயாரிப்பில் படமாக எடுத்தால் இப்படித்தான் இருக்குமோ? என வருத்தப் பட வைத்து விட்டார் இயக்குனர் மணிரத்னம். வீரா என்ற ஒடுக்கப் பட்ட வர்க்கத்தை சேர்ந்த கதா நாயகன், ராகினி என்ற மேட்டுக்குடியில் பிறந்த பெண், இவள் மேட்டுக்குடித் தனமுடைய அரசாங்க(அரசியல்வியாதிகளின்) அடிமையான போலீஸ் தேவின் மனைவி. இவர்கள் மூவரை மையப் படுத்தி நகர்கிறது படம்.
வீரா ஏன் ஒடுக்கப் படுகிறான். அவன் ஏன் தீவிரவாதி என அறிவிக்கப் பட்டான் என்பதற்கு பெரிதாய் ஒன்றும் விளக்கம் இல்லை.
விடுதலைப் புலிகளாகட்டும், அது போன்ற வேறு எந்த அமைப்பாகட்டும் ஏதோ ஒரு உரிமைப் பறிக்கப் படுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் ஒடுக்கப் படுவதை எதிர்த்து நிற்கிறார்கள். மக்களின் பார்வை அவர்களின் நியாயம் பக்கம் திரும்பும்.
எங்கே அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைத்து விடுமோ என அஞ்சும் அரசியல்வாதிகள் அவர்களின் அரசியல் தந்திரத்தின் மூலம் அந்த அமைப்புகள் பற்றி மக்களிடையே ஒரு தவறான அபிப்ராயம் ஏற்படுத்த முயல்வர். உதாரணத்திற்கு பொது மக்கள் அதிகமுள்ள இடங்களில் குண்டு வைப்பது, இரயில் தண்டவாளங்களைத் தகர்ப்பது போன்றவற்றை நீதிக்காக போராடும் எந்த ஒரு அமைப்பும் செய்யாது.
ஆனால் அவற்றை இந்த அரசியல்வாதிகளே அரங்கேற்றுவர். மக்கள் பலர் கொல்லப் படுவர். கேட்டால் இது அந்த அமைப்பினரின் தீவிரவாத செயல், அவர்கள் ஒடுக்கப் பட வேண்டும் என அறிக்கை விடுவர். மக்களுக்கு அது போன்ற செய்திகளை நம் விளம்பர செய்தி ஊடகங்களும் கொஞ்சம் கூட கூச்சமின்றி போட்டுக் காட்டி அந்தந்த அமைப்புகள் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தி விடும்.
இவற்றை சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் நம் அரசியல்வாதிகள் அவர்களின் கையாட்களான காவல்துறை, இராணுவம் கொண்டு அவர்களை அழிக்கப் புறப்பட்டு விடும். இது போன்ற அரசியல்வியாதிகளின் அடக்கு முறைகள், அவர்களின் அயோக்யத்தனங்கள் அனைத்தும் இந்தப் படத்தில் சொல்லப் படாமல் மறைக்கப் பட்டிருக்கின்றன (ஒரு வேளை சொல்லப் பட்டிருந்தால் இந்தப் படத்தையும் அடக்கியிருப்பார்களோ என்னவோ?).

படத்தின் துவக்கக் காட்சிகளில் வீராவின் ஆட்கள் காவல்துறையினர் சிலரை கட்டிப் போட்டு தீ வைக்கின்றனர். இங்கு ஒரு விடயம் சொல்லியாக வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால் இது மிகப் பெரிய தவறாகவேத் தெரியும். தவறும் கூடதான். இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் உண்மை நிலை என்ன? இது போன்ற போராட்ட அமைப்புகளைப் பொறுத்த வரையில் அவர்கள் காவலர்கள் அல்ல. அவர்களின் கூட்டத்தை அழிக்க வந்த எதிரிகள். அவ்வளவே. இதை நான் நியாயப் படுத்த விரும்பவில்லை. குற்றம்தான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அவர்க்ளை அப்படி ஒரு செயல் செய்யும் அளவிற்கு மாற்றியது இந்த அரசியல் தந்திரிகள்.
அவர்களின் அடக்கு முறைகளுக்கு பலிகடாவாக்கப் படுவது இந்த காவலர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் இது போன்ற போராட்ட அமைப்பினர். ஆனால் இது குறித்து தெளிவான விளக்கமில்லாமல் ஒரே ஒரு காட்சியில் வீரா ஆவேசமாகப் பேசும் போது வரும் இடைச் செறுகல் வச்னம் போல "அவங்க கத்தியை எடுத்தாங்க நாங்களும் எடுத்தோம்" என அழுத்தமில்லாமல் ஒளிவு மறைவாக சொல்லி விட்டிருக்கிறார்.
போராட்டங்களின் போது போலீஸிடமோ, ராணுவத்திடமோ அந்த எதிர் அமைப்பை சேர்ந்த பெண் சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதையும், அவர்களின் அட்டூழியங்களையும் கூட மிக சுலபமாக அழுத்தமின்றி சொல்லி விட்டிருக்கிறார். போர் புரியுமிடத்தில் எதிரியின் தங்கையை மட்டும் தூக்கிக் கொண்டு மற்றவர்களை விட்டு விடும் அளவுக்கு அக் காவலர்களில் பலர் நல்லவர்களாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றனர். சிலர் ஆந்தப் பெண்ணை சீரழிக்கும் கெட்டவர்களாக சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள்.
உண்மையில் போராட்டங்களில் அப்படி நடக்குமா? இலங்கையில் எவ்வளவுப் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப் பட்டிருக்கிறது? இவற்றையெல்லாம் அழுத்தமாக சொல்ல முடியாத அளவுக்கு மணிரத்னம் ஒன்றும் சாதாரன இயக்குனர் அல்ல.
ஆனால் சொல்லாததற்கு காரணம் என்னவாக இருக்கும்? நிச்சயம் அரசியல் வாதிகள் மீதான பயமே. அப்படி சொல்லப் பட்டிருந்தால் இன்று இந்தப் படம் வெளி வந்திருக்காது.
ராமாயணக் கதையில் கூட ராவணன் நல்லவன் என எண்ணுபவன் நான். அந்த வகையில் இந்த ராவணனும் நல்லவனே. ஆனால் அந்த வீரா பாத்திரத்திற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கத் தவறிய (அ) பயந்த மணிரத்னத்தால் அந்த ராவணன் பெரிதாக மனதில் பதியவில்லை.
மற்றபடி தங்கையை சீரழித்ததற்காக காவலன் ஒருவனின் மனைவிக் கடத்தல், பின் அப்பெண் மீதுக் காதல், அந்தப் பெண்ணை வைத்தே நாயகன் அழிக்கப் படும் "சுப்ரமணியபுரம்" க்ளைமேக்ஸ் என படம் முழுக்க கமர்சியலாக வந்திருக்கிறது. வேறொன்றும் சொல்லிக் கொள்வதற்கு இல்லை.