புரட்சி! இது வெறும் சொல் அல்ல. இது பல முறை பல துறைகளிலும், மனிதர்களிலும் நடந்ததால் தான் நாம் இன்று இப்படி இருக்கிறோம். புரட்சி என்பது நடக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் குரங்காகவே இருந்திருப்போம். புரட்சி என்பது ஒன்று இன்னொன்றாக மாறுவதுதான். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பரிணாமம் கூட ஒரு புரட்சியால் நடந்ததுதான்.
ஆனால் இந்த புரட்சிகள் எதுவும் உடனுக்குடன் நடந்து விடும் ஒரு சாதாரண விடயமல்ல. இதற்கு பல ஆண்டுகள் ஏன் பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்காக புரட்சி பிரயோசனமற்றது என நினைப்பது முட்டாள்த்தனம். நாம் அனைவரும் பிறந்தவுடன் சம்பாதித்து திருமனம் செய்து பிள்ளை பெற்று விட முடியுமா?
அதற்கென நாம் குறைந்த படசம் பதினெட்டு ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். ஒரு தனி மனிதனின் வாழ்வியல் புரட்சிக்கே இத்தனை ஆண்டுகள் தேவைப்படும் போது சமூகத்தின் புரட்சிக்கு? ஆனால் இத்தகைய புரட்சிகள் ஒரு துறையிலோ அல்லது சமூகத்திலோ நடை பெறுவது அதை சார்ந்திருப்பவர்களின் ஒருமித்த புரிதலின் போதுதான் சாத்தியம். அதன் காலநிலையை நிர்ணயிப்பதும் அதுவே.
நமக்கு ஒரு அமைப்பு பிடிக்காவிட்டாலும் நாம் அதிலிருந்து கொண்டுதான் அதனை வெறுத்தொதுக்க முடியும். காரணம் நமது வாழ்வாதாரம் அந்த அமைப்பிற்குள் முடக்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக சொன்னால் நம்மை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை நம்மில் எத்தனை பேருக்கு பிடிக்கும்? இல்லை என்றாலும் அதற்குள் இருந்து கொண்டு தானே அதனை எதிர்க்கிறோம்.
அதை விடுத்து இதனை விமர்சனம் செய்ய நீ இந்த பணியில் இருக்க கூடாது, நடிகனை விமர்சணம் செய்யக் கூடாது என்றால் மக்கள் அந்த அரசியலை நிச்சயம் எதிர்த்து கேள்வி கேட்க போவதில்லை. பொழுதுபோக்கு ஊடகங்களின் பிடியில் சிக்கிக் கொண்டு நாட்டின் விலைவாசி ஏற்றத்தை பற்றிக்கூட கேள்வி எழுப்பாமல் மனதிற்குள் புழுங்கி விட்டு அடுத்த படத்திற்கு டிக்கெட் எடுக்க செல்லும் முட்டாள்களாகத்தான் நாம் இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.
மானாட மயிலாட மாராட்டமும், மட்டைபந்து விளையாட்டும், எந்திரன் போன்ற படங்களும் முக்கியமாக படும் அளவிற்கு இந்த விலைவாசி ஏற்றமும், காமன்வெல்த் சுரண்டல்களும், அரசியல் ஊழல்களும், போபாலும் பெரிதாகப் படுவதில்லை நமக்கு. இவற்றைப் பற்றி எழுதியவர்கள் எத்தனை பேர்? இது போன்ற செயலகளை எதிர்த்து பதிவிட்டால் அவனுக்கு பெயர் புரட்சியாளன் அல்லது கம்யூனிஸ்ட்.
புரட்சி என்பது அவ்வளவு எளிதான வார்த்தையாகிப் போய் விட்டது. அதன் உள் அர்த்தம் சென்று பார்த்தால் அது எவ்வளவு பெரிய விடயம் என்பது புரியும். அதனால் நான் புரட்சி பேசுகிறேன் என யாரும் சொல்லி விடாதீர்கள். அதற்கு நான் தகுதியற்றவன். நான் எழுதுவதெல்லாம் என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் வெளிப்பாடு. நான் புரிந்து கொண்ட சிலவற்றை சிலருக்காவது எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம். அவ்வளவே!
இதற்கு பெயர்தன் புரட்சி என நீங்கள் கருதினால் அது முழுக்க முழுக்க உங்கள் முட்டாள்தனமே. அப்புறம் சிலர் கூறியது எழை கஷ்டபட்டு உழைத்து வந்து களைப்பை நீக்க எந்திரன் படம் பார்க்கின்றான். அந்த உரிமை கூட அவனுக்கில்லையா? என்று.
நிச்சயம் இருக்கிறது. ஆனால் அந்த பொழுது போக்கில் அவன் மூழ்கி விடாமலிருக்க வேண்டும். அவனது களைப்பிற்கு அது ஒரு தற்காலிக ஆறுதல் தரலாம். அந்த தற்காலிக ஆறுதலானது அவனது நிரந்தர ஆறுதலைத் தடை செய்கிறது.
அந்த பொழுதுபோக்கை விடுத்து தனது இந்த நிலைக்கு என்ன காரணம் என அவன் சிந்திக்கத் தொடங்கினால் அது ஒரு வித புரட்சியாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நிரந்தரத் தீர்வும் கிட்டுவது நிச்சயம். ஆனால் அவற்றிற்கு தடைக்கல்லாக இருக்கும் பல விடயங்களில் இந்த சினிமாவும் ஒன்று என்பதை விட முக்கியமான் ஒன்று என சொல்லலாம்.
அப்புறம் "திரையுலகை எதிர்த்து கோசமிடும் நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகளெல்லாம் நீங்கள் ஓட்டுப்போட்ட அரசியல்வாதிகளிடம்" என சில கருத்துரைகள் வந்திருந்தன.
"நீங்கள் ஓட்டு போட்ட" என்பதே சமூகத்தைதான் குறிக்கிறது. அந்த சமூகத்தில் சம்மந்தப்பட்ட கட்சிக்கு ஓட்டு போடவில்லையென்றாலும் நாமும் இருக்கிறோம். அது ஏன் "நீங்கள் ஏன் இதை பற்றி எழுதவில்லை?" என கேட்கிறீர்கள். நீங்களே எழுதலாமே!. ஊழல்களுக்கெதிராக கேள்வி கேட்க வேண்டியது பொது மக்களாகிய நாம் எனும் போது அது ஏன் இன்னொருவரைக் கேர்ட்கிறீர்கள்? நீங்களே செய்யலாமே.
காரணம் புரிகிறதா? உங்களையெல்லாம் கட்டிப்போட்டு வைத்திருப்பது இது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் தான். அலுவலில் அதிக நேரப் பணியா? யோகா செய் ஏன் அதிக நேரப்பணி என யோசிக்காதே! விலைவாசி ஏற்றமா? ஏன் என யோசிக்காதே மானாட மயிலாட பார். இத்தகைய கொள்கைகள் தான் நம் அனைவரையும் சிந்திக்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறது.
என்னை கம்யூனிஸ்ட் என்றோ புரட்சிக்காரன் என்றோ யாரும் சொல்ல வேண்டாம். அந்த வார்த்தைகளுக்கு இன்னும் கூட எனக்கு முழு அர்த்தம் தெரியாது. அப்படியெல்லாம் அழைப்பதற்கு நான் தகுதியற்றவன். என்னுடைய புரிதல்களும், நான் பிறந்த இந்த சமுதாயத்தின் அவலங்கள் குறித்தவை மட்டுமே என்னுடைய பதிவுகள்.
அனைவருக்கும் நன்றி!