கடவுளை மற..மனிதனை நினை..

06 May 2010

நாயே!

6:18:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments
தெரு நிசப்தமாக இருந்தது. ஒரு நாயின் கதறல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆமாம் குமரன் வீட்டு நாய்தான் அது. குமரன் கண்களில் கண்ணீருடன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். தன் வீட்டு நாய் ஈன்ற மூன்று கண் திறக்காத குட்டிகளைப் பிரித்து ஊருக்கு வெளியில் விட்டு வந்து விட்டான்.


குட்டிகளைப் பிரிந்த நாய்க் கதறிக் கொண்டே இருந்தது. அவன் அம்மாவிற்கு நாய் என்றாலேப் பிடிக்காது. எப்போதும் வசை பாடிக் கொண்டெ இருப்பாள். அவளால் தான் அவன் அந்தக் காரியத்தை செய்ய நேர்ந்தது.நாட்கள் உருண்டோடின. நாய் கதறலை நிறுத்தி தன் பணிகளில் வழக்கம் போல் ஈடு படத் தொடங்கியிருந்தது.

இவன் திண்ணையில் அமர்ந்து நாயின் கழுத்துப் பகுதியில் கை வைத்து தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அந்த சுகத்தில் அது பாதி உறங்கிப் போயிருந்தது.ஒரு சிறுவன் வேகமாக ஓடி வந்து "அண்ணே அக்காவ ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க. உங்கள உடனே வரச் சொன்னாங்க" என்று சொல்லி விட்டு உருவமில்லாத தன் வாகனத்திற்கு ஒலி எழுப்பி ஓட்டிச் சென்றான்.

அம்மாவிடம் விசயத்தை சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான். அந்த அரசு ஆஸ்பத்திரியை இருவரும் நெருங்கிய போது அம்மாவைக் கேட்டான்

"ஏம்மா நாமளே அவள எதாவது தனியார் ஆஸ்பத்திரில சேத்துருக்கலாம்ல?"

"போடா போக்கத்த பயலே! தொற சம்பாதிச்சு கொட்டுறதுல இந்த ஆஸ்பத்திரி நர்சுங்களுக்கே லஞ்சம் குடுக்க முடியாது.இதுல தனியாராம்" என்றதும் அவனிடமிருந்து பதில் இல்லை.

வாசலில் அமர்ந்திருந்த அவன் மாமியார், இவனைக் கண்டதும் வாயில் தன் புடவை முந்தானையை வைத்துப் பொத்திக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள். அதைக் கண்டதும் பதட்டத்துடன் வார்டுக்குள் ஓடினான்.அங்கு அவன் மனைவி மயக்க நிலையில் படுத்திருந்தாள். அருகிலிருந்த தொட்டிலில் கண் திறக்காத ஒரு பெண் குழந்தை இரு கைகளற்று கிடப்பதைப் பார்த்தான்.

கண்ணீருடன் வெளியில் வந்தான். "பொறந்தது பொட்டக் கழுத. இதுல கைய வேற காணும்" என புலம்பிக் கொண்டே வெளியில் வந்தாள் அந்த குமரனின் தாய்.

"தோ பாரு அவ எந்திரிச்சி பாக்குறதுக்குள்ள கொழந்தைய கொண்டு போயி எதாவது அனாத இல்லத்துல உட்டுரு. கையில்லாத பொம்பளப் புள்ளையை வளத்து கர சேக்க நம்மாள முடியாது" என வழக்கமான குரலில் கூறி விட்டு சென்றாள் அவன் தாய்.


அவனது இயலாமை அவனை எதிர்த்துப் பேச விடவில்லை. கண் திறவா அந்த பச்சைக் குழந்தையை எடுத்து சென்று ஒரு ஆஸ்ரம வாசலில் போட்டு விட்டு வீடு வந்து திண்ணையில் அமர்ந்தான்.அவன் வீட்டு நாய் அருகில் வந்து அமர்ந்து அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தது.

"ஏண்டா நாயே! ஒரு போக்கத்தப் புள்ளைய உட்டுட்டு வந்துட்டு என்னடா அழுக? எந்திரிச்சி உள்ள வாடா"

என்ற அவன் தாயின் குரல் உள்ளிருந்து கேட்டது.யதேச்சையாய்த் திரும்பியவன் தன் நாயைப் பார்த்தான். கண்களில் நீர் அருவி போல் கொட்டத் தொடங்கியது. எதுவும் புரியாமல் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தது அந்த நாய்.


28 விவாதங்கள்:

பிரபாகர் said...

நல்லாருக்கு புலிகேசி!

ரசித்த வரிகள்:

//உருவமில்லாத தன் வாகனத்திற்கு ஒலி எழுப்பி ஓட்டிச் சென்றான்.//

//இந்த ஆஸ்பத்திரி நர்சுங்களுக்கே லஞ்சம் குடுக்க முடியாது.இதுல தனியாராம்//

பிரபாகர்...

Unknown said...

நல்ல கதை..

சசிகுமார் said...

நண்பரே நல்ல சிறுகதை , சூப்பராக இருக்கிறது . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Paleo God said...

கதை அருமை புலவரே!

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்க்கையின் பிம்பத்தை அழகாகச் சொல்கிறது கதை..

அருமை நண்பா..

RJ Dyena said...

அருமை...
அசத்தி விட்டீர்கள்...
அருமையான வார்த்தைப் பிரயோகம்

ஈரோடு கதிர் said...

நல்லாயிருக்கு கதை

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அசத்தல் புலவரே

dheva said...

பின்னூட்டம் எழுதுவதற்கு... கூட வார்தைகள் கிடைக்காத அளவிற்கு...கனத்துப் போகிறது இதயம்! தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு படைப்பும்...பாரட்டுதலுக்குரியது....! இந்த படைப்பும் கூட..... நண்பரே...!

பனித்துளி சங்கர் said...

அந்த ஐந்தறிவு நாயிக்கு இருக்கும் உணர்வுகள்கூட இதுபோன்ற மனித சென்மங்களுக்கு இல்லாமல் போனதை நினைத்தால் இதயம் கருகும் வாடை நாசி எட்டுகிறது . அருமையான கதை . பகிர்வுக்கு நன்றி !

எல் கே said...

அருமை

Chitra said...

நெகிழ வைக்கும் கதைக்கு - பாராட்டுக்கள்!
200 followers - வாழ்த்துக்கள்!

vasu balaji said...

நல்லாருக்கு புலிகேசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு

கண்ணகி said...

சில நிஜங்கள் சுடும்...

Unknown said...

நல்லாருக்கு புலிகேசி...மனதை தொட்டுவிட்டது

அகல்விளக்கு said...

கனத்துப் போகிறது நெஞ்சம்....

Yoganathan.N said...

நெஞ்சை உரைய வைத்தது உங்கள் கதை... :(

க.பாலாசி said...

நல்ல நடையில் சமுதாயத்தின் வலி... கதையாக....

அருமை நண்பரே....

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு. ஆனா இந்த விஷயத்துல குமரனின் முடிவை கொஞ்சம் பாஸிட்டிவ்வா முடிச்சிருக்கலாம்.

தமிழ் அமுதன் said...

அருமை..!

malar said...

மனம் கனத்த வரிகள்....நிரம்ப....

சுசி said...

வார்த்தைகள் வரல..

கதையோட கரு கனம்.

ஹேமா said...

ஐயோ...
என்று மட்டும் சொல்ல வந்தது !

Menaga Sathia said...

மனதை தொட்ட கதை!!

Yoganathan.N said...

@விக்னேஷ்வரி

பாஸிட்டிவ் முடிவு இந்த அளவுக்கு ஒரு தாக்கத்தைத் தரக்கூடும் என்பது சந்தேகமே, என்னைப் பொருத்தவரை...

கமலேஷ் said...

மிகவும் அழகான கதை..
வலி நிறைந்த கரு...
நல்ல எழுத்து நடை....
தொடருங்கள் நண்பரே...

Thenammai Lakshmanan said...

படிக்கும்போதே கஷ்டமா இருந்துச்சு புலிகேசி